தோட்டக்கலைப் பயிர்களில் பழ ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|- தோட்டக்கலை பயிர்களில் குறிப்பாக பழ பயிர்களில் பழ ஈ தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பீடு மற்றும் தரத்தில் ஏற்படும் பாதிப்பு கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை, பல்வேறு சூழ்நிலைகளை தாங்கி வளரும் பூச்சிகளின் தகவமைப்பு, வேகமான இனப்பெருக்க திறன் மற்றும் பல்வேறு பயிர்களை உண்டு வாழும் திறன் என பல காரணங்களால் பழ ஈக்களை கட்டுப்படுத்துவது சற்று சவாலாக இருக்கிறது.
- தோட்டக்கலை பயிர்களில் பழ ஈக்கள் தாக்குதலால் 40 முதல் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடும், தரத்தில் குறைவும் ஏற்படுகிறது.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- பழ தோட்டம் மற்றும் மரங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும் இதனால் பழ ஈக்களின் வாழ்க்கை சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்தி கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம்.
- மரத்திலிருந்து உதிர்ந்த பழங்கள் அல்லது பாதிக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழிக்க வேண்டும். இதனால் இதில் இருக்கும் முட்டை மற்றும் இளம் புழுக்களை முற்றிலும் அழிக்கலாம். அதாவது பாதிக்கப்பட்ட பழங்களை அரைத்து குழி தோண்டி புதைக்க வேண்டும். இதனால் கண்டிப்பாக முட்டை மற்றும் இளம் புழுக்கள் அழியும்.
- அல்லது பாதிக்கப்பட்ட பழங்களை பிளாஸ்டிக் பையில் இறுக்கமாக கட்டி வைப்பதால் நாளடைவில் அது அழிந்துவிடும்.
- அல்லது இந்த பழங்களை தோட்டத்திலிருந்து சற்று தொலைவில் நன்கு காய வைத்து மற்ற கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.
- பழ தோட்டத்தில் குப்பைகள், களைகள் இல்லாதவாறு சுத்தமாக வைப்பதுடன் பழ ஈக்கள் தாக்காத பயிர்களை ஊடுபயிராக பயிரிடலாம்.
- பழ ஈக்களின் தாக்குதலை தாங்கி வளரக்கூடிய பழ செடிகள் அல்லது ரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம். ஈக்கள் பழங்களில் முட்டை இடுவதை தவிர்க்க சிறு காயக இருக்கும்போது அதனை பிளாஸ்டிக் பை/காகிதம் பயன்படுத்தி சுற்றிக் கட்டி விடலாம். இந்த முறை சற்று அதிக செலவினம் ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும் பயனளிக்க கூடியதாகும். எனவே குறைந்த நிலப்பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயிகள் இதனை பின்பற்றலாம்.
- சாகுபடி செய்யும் பழ மரங்களை தாக்கும் ஈக்கள் இனத்தைப் பொறுத்து ஒட்டுண்ணி குளவி மற்றும் பூஞ்சைகளை பயன்படுத்தி பழ ஈக்களை கட்டுப்படுத்தலாம். இந்த முறை ஒவ்வொரு பயிருக்கு ஏற்றவாறு மாறுபடும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
- இயற்கை பூச்சிக்கொல்லி திரவங்களான Beauveria bassiana, Metarhizium anisopliae, Isaria fumosorosa முதலியவற்றை தெளிப்பதால் 55 முதல் 70% வரை பழ ஈக்களை கட்டுப்படுத்த முடியும்.
- மரங்களில் காய்கள் பழுக்கும் முன்னதாக அதாவது 100% பச்சை நிறத்தில் இருக்கும் பொழுது அறுவடை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் இளம் புழுக்கள் கூட்டுக் புழுவாக மாறாமல் தடை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். காய்கள் நிறம் மாறும் பொழுது அதில் இருக்கக்கூடிய இளம் புழுக்கள் பழத்தின் உட்பகுதி மற்றும் தோல் பகுதியை உண்டு துளையிட்டு வெளிவந்து தரையில் விழுந்து கூட்டு புழுவாக மாறுகிறது. இதனால் முதிர்ந்த பழ ஈக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவே தோப்பில் பழங்களை பழுக்க விடாமல் முன்னதாக அறுவடை செய்ய வேண்டும்.
- அதேபோன்று காய்களின் செல் சுவர்களை கடினப்படுத்த தேவையான ஊட்டச்சத்துக்கான கால்சியம், மெக்னீசியம், சிலிகான், மாங்கனிசு போன்ற ஊட்டச்சத்துக்களை முறையாக கொடுக்க வேண்டும்.
- நாம் தேர்வு செய்யும் ரகங்களின் செல் சுவர்கள் அதிக கடினத் தன்மை கொண்ட ரகமாக இருந்தால் பழ ஈக்கள் அதில் முட்டை இட வாய்ப்புகள் குறைகிறது. முதிர்ந்த பழ ஈக்களை அதிக அளவில் கவர்ந்து அழிக்க இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தலாம்.
- நாம் சாகுபடி செய்யும் பயிருக்கு ஏற்றவாறு இன கவர்ச்சி பொறி கிடைக்கப்பெறுகிறது. அதேபோன்று கவர்ச்சி பொறிகளை தயார் செய்து வயலில் அங்கங்கே வைத்து முதிர்ந்த பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
- கோடை பருவத்தில் இரண்டு மரங்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் உழவு செய்வதால் மண்ணில் இருக்கும் கூட்டுப் புழுக்களை அதிக வெப்ப நிலைக்கு உட்படுத்தி சீர்குலைக்கலாம். வயலில் கவர்ச்சி பொறி அல்லது பொறி பயிர்களை சாகுபடி செய்யலாம்.
- அறுவடை செய்த பழங்களை அதன் தன்மைக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட வெப்பநிலை கொண்ட நீரில் நேர்த்தி செய்து பின்பு சேமித்து வைக்க வேண்டும்.
- ஆரம்ப நிலை தாக்குதல் அல்லது தாக்குதலுக்கு முன்னதாக தொடர்ச்சியாக வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளித்து வருவதால் இதன் தாக்குதலை தவிர்க்கலாம் என பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
- தாய் அந்தப் பூச்சிகளை அதிக அளவு கவர்ந்து அழிக்க Fish meal trap எனப்படும் கருவாட்டு பொறியையும் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு சிறிய டப்பாவில் கருவாட்டு உடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் பூச்சி மருந்து கலந்து வயலில் ஆங்காங்கே கட்டி வைப்பதால் பூச்சிகள் கவர்ந்து இறந்துவிடும். இதனை ஏக்கருக்கு 20 முதல் 25 எண்கள் பயன்படுத்த வேண்டும் மேலும் அவ்வப்போது கருவாட்டை மாற்றி கட்ட வேண்டும்.
- ரசாயன மருந்துகளை பயன்படுத்த விரும்பினால் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் இரண்டுமே சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். (10 லிட்டர் தண்ணீருக்கு)
- Imidacloprid - 10 மில்லி
- Emamectin+ imidacloprid- 5 கிராம்+ 10 மில்லி
- Imidacloprid+ acetamaprid - 10 மில்லி+ 10 கிராம்
- Phenthoate - 15-25 மில்லி
- Spirotetramet+imidacloprid - 10-20 மில்லி
- Spinosad - 5-8 மில்லி
- இவை அனைத்தும் ஆரம்ப நிலை தாக்குதலின் போது பயன்படுத்தக்கூடிய ரசாயன மருந்துகளாகும் தீவிரமாகும் போது அதற்கு ஏற்றவாறு மருந்துகளை தேர்வு செய்ய வேண்டும்.
இது போன்ற வேளாண் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA