மரவள்ளி பயிரை தொடர் மழையில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்
|முன்னுரை:
- மரவள்ளி பயிரானது எந்த அளவிற்கு தண்ணீரை விரும்புகிறதோ அதே அளவிற்கு அதிக அளவு தண்ணீர் விடும் பொழுது பாதிப்புக்கு உள்ளாகிறது. மேலும் இது தரைமட்டத்திற்கு கீழ் இருக்கக்கூடிய கிழங்கு பகுதியை மகசூலாக அடிப்படையாகக் கொண்டுள்ளதால் தொடர்ச்சியாக ஈரப்பதம் இருத்தல் அல்லது அதிக நீர் தேங்குவது பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- தொடர்ச்சியாக அதிக ஈரப்பதம் அல்லது நீர் தேங்கி இருப்பதால் போதுமான காற்று மண்ணிற்கு உள் அதாவது வேர் பகுதிக்கு செல்வதில்லை. இதனால் மண்ணில் இருக்கும் காற்றை வேர்கள் விரைந்து பயன்படுத்துவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இவ்வாறு சுமார் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நீடிக்கும் பொழுது அழுகல் நோய், வளர்ச்சி தடைபடுதல், ஊட்டச்சத்து கிடைக்காமல் இருத்தல், பயிர் வாடுதல் போன்ற அறிகுறிகளை நாம் காண இயலும்.
- பொதுவாக எந்த ஒரு பயிரிலும் மண்ணில் நீர் தேங்கி இருப்பதால் ஏற்படும் அறிகுறிகள் இரண்டு முதல் மூன்று நாட்களில் தென்படும். மரவள்ளி பயிரை பொருத்தவரையில் வயலில் நீர் தேங்கி இருந்தால் மூன்று முதல் நான்காவது நாட்களில் அதன் அறிகுறிகள் நம் கண்களுக்கு வெளிப்படையாக தெரியவரும். அழுகல் நோய் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகிய இரண்டும் தான் இதில் கவனிக்கப்பட வேண்டியவை அவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
அழுகல் நோய்:
- ஒன்று முதல் மூன்று மாத பயிரில், விதைக்குச்சி அல்லது வேர் பகுதி அல்லது கழுத்து பகுதி ஆகிய இடங்களில் அழுகல் தென்படும்.
- இதனால் ஒழுங்கற்ற இலை வளர்ச்சி மற்றும் இலை மஞ்சள் நிறமாதல் நாளடைவில் செடிகள் இறந்துவிடும்.
- மூன்று முதல் ஐந்து மாதங்கள் வயதுடைய பயிர்களில் அடி இலைகள் மஞ்சள் நிறமாதல், இலைகள் வாடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.
- ஆறு மாதங்களுக்கு மேல் வயது உடைய பயிர்களில் ஆரம்ப வளர்ச்சியில் இருக்கும் கிழங்குகள் பாதிக்கப்பட்டு அழுகல் ஏற்படும் இதனால் இலைப் பகுதியில் அறிகுறிகள் தென்படும். கழுத்துப் பகுதியிலும் அழுகல் நோய் ஒரு சில இடங்களில் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.
- பொதுவாக அழுகல், இந்த பயிரில் பல வகை பூஞ்சனங்களால் தாக்குவதால் ஏற்படுகிறது எனவே இதனை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊட்டச்சத்து பற்றாக்குறைகள்:
- நமது குழுவில் நான் பலமுறை கூறியது உண்டு எந்த ஒரு பயிரிலும் வேர் பகுதிக்கு காற்றோட்டம் இல்லை எனில் கண்டிப்பாக ஊட்டச்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள் காணப்படும் என.
- மரவள்ளியில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறை செடிகளின் அடி இலைகளில் தென்படும். உதாரணத்திற்கு அடி இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிறம் மாற்றம் காணப்பட்டால் அது மெக்னீசியம் பற்றாக்குறை.
- கால்சியம், மாங்கனிசு, போரான், இரும்பு, காப்பர், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறை அறிகுறிகள் செடிகளின் நுனிப்பகுதியில் உள்ள இலைகளில் காணப்படும்.
- இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நடப்பு கோடை மழையில் இருந்து பயிர்களை காக்க நாம் எந்த வகையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிந்து கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
- இதைத் தவிர பல்வேறு வழிகளிலும் பயிர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது உதாரணத்திற்கு பயிர்கள் ஒரு புறமாக சாய்தல், இதர நோய் மற்றும் பூச்சி தாக்குதல் தென்பட வாய்ப்புள்ளது.
இதிலிருந்து பயிர்களை காக்க பொதுவான சில வழிமுறைகள்:
- ரசாயன உரம் இடுவதை தவிர்க்கவும்.
- இயற்கை வழி தயாரிப்பு பொருட்களான பஞ்சகாவியா, மீன் அமிலம், அமிர்த கரைசல் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
- நல்ல வடிகால் வசதி ஏற்படுத்தவும்.
- முன்னெச்சரிக்கையாக அழுகல் நோயை கட்டுப்படுத்த Trichoderma மற்றும் Pseudomonas ஆகியவற்றை ஏக்கருக்கு தலா 1.5 லிட்டர் நீரில் விடலாம் அல்லது வேர் பகுதியில் ஊற்றலாம்.
- பயிர்களுக்கும் அதன் வேர்களுக்கும் வெப்பத்தை அளிப்பதற்கு சல்பேட் உரம் இடலாம்.
- மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை வயலில் இருந்து அகற்றலாம்.
- தொழு உரம் அல்லது மண்புழு உரத்துடன் இயற்கை வழி பூஞ்சான மற்றும் பூச்சி கொல்லிகளை பயன்படுத்தி ஊட்டமேற்றி இடலாம்.
- தொடர்ச்சியாக அதிக ஈரப்பதம் அல்லது நீர்த்தேக்கம் இருக்கும் சூழ்நிலையில் VAM நன்மை செய்யும் பூஞ்சானம் சிறப்பாக செயல்பட்டு ஒருவித அமினோ அமிலங்களை பயிர்களுக்கு அளித்து பயிர் செழிப்பாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே பருவ மழைக்கு முன்னதாக ஏக்கருக்கு நான்கு கிலோ வீதம் VAM இடுவது மிகவும் உகந்தது.
- அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை வேர்ப்பகுதியில் ஊற்றலாம். Carbendazim + Mancozeb / COC /Copper hydroxide / Metalaxyl + Mancozeb / Thiophanate methyl / Fosetyl Aluminum etc..
- மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு நமது குழுவில் இணைந்து பயன்படுத்தலாம்.
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக