இலாபம் தரும் சவுக்கு மரம் சாகுபடி
முன்னுரை:
குறைந்த நாட்களில் செலவில்லாமல் மர பயிர் சாகுபடி செய்து லாபம் ஈட்ட நினைக்கும் விவசாயிகளுக்கு சவுக்கு மரம் சாகுபடி செய்வது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. காகிதம் தயாரித்தல், மரச்சாமான்கள் தயாரித்தல், விறகு, மரக்கட்டை என பல்வேறு பயன்களை கொண்டுள்ள சவுக்கு மர சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஏன் சாகுபடிக்கு உகந்தது:
- அனைத்து மண் வகைகளிலும் வளரும்
- குறைந்த சாகுபடி செலவினம்
- வேலையாட்கள் பெரிய அளவில் தேவையில்லை
- நீர் தேவை மிகவும் குறைவு
- எளிதில் விற்பனை செய்ய இயலும்
- வனவிலங்குகள் தொல்லை இல்லை
- நோய் அல்லது பூச்சி தாக்குதல் இல்லை
- சராசரி விலை கிடைக்கப் பெறுகிறது.
ரகம் தேர்வு செய்தல்:
- பல்வேறு நாட்டு, ஒட்டு மற்றும் கலப்பின ரகங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து முழு விலையிலும் மானிய விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் அதிக உற்பத்தி திறன் கொண்ட ரகத்தை தேர்வு செய்வது மிகவும் சிறந்தது. நாட்டு சவுக்கு மற்றும் இந்தோனேசிய வகை ரகங்கள் கொண்டு கலப்பினம் அல்லது ஒட்டுக் கட்டிய ரகங்களை முறையாக தேர்வு செய்து பயிரிடுவதால் நல்ல விளைச்சல் பெற இயலும்.
- குறிப்பாக TNPL நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படும் கலப்பின ரகங்கள் நல்ல மகசூல் கொடுக்கக் கூடியதாக திகழ்கிறது எனவே இதனையும் தேர்வு செய்து நடவு செய்யலாம்.
நிலம் தயார் செய்தல்:
இரண்டு முறை கலப்பை உழவு செய்து பின்னர் ரோட்டா வேட்டர் பயன்படுத்தி மண் கட்டிகளை உடைக்க வேண்டும்.
பயிர் இடைவெளி:
இரண்டு வரிசைக்கு இடைப்பட்ட இடைவெளி ஐந்து முதல் ஆறு அடி எனவும் இரண்டு கன்றுகளுக்கு இடைப்பட்ட இடைவெளி மூன்று முதல் மூன்று அடி வரை இருக்கலாம். இதன் மூலம் ஏக்கருக்கு சுமார் 2500 மரங்கள் பெற இயலும்.
குழி எடுத்தல்:
30 சென்டிமீட்டர் நீளம், அகலம் மற்றும் ஆழம் உடைய குழிகளை தயார் செய்து 15 நாட்கள் ஆற விட வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு நன்கு மக்கிய தொழு உரம், உயிர் உரங்கள், VAM மற்றும் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இடவேண்டும்.
நடவு செய்தல்:
போதுமான நீர் வசதி இருந்தால் எப்போது வேண்டுமானாலும் நடவு செய்யலாம். மன வரி பூமியில் நடவு செய்ய விரும்பினால் பருவ மழை காலத்தில் நடவு மேற்கொள்ளலாம்.
களை மேலாண்மை:
ஆரம்ப காலத்தில் களை மேலாண்மை மிகவும் அவசியம். அதாவது முதல் வருடம் சுமார் 4 முறையாவது களையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உர மேலாண்மை:
இந்த மரம் வளிமண்டலத்தில் இருக்கும் தழைச்சத்தை கிரகிக்கும் தன்மை உடையது அதற்கேற்றவாறு உரமிடுதலை திட்டமிடலாம். வருடத்திற்கு இரண்டு முறை போதுமான அளவு ஊட்டச்சத்து பருவமழை தருணத்தில் கொடுக்க வேண்டும்.
சொட்டுநீர் பாசனம் அமைத்தல்:
சொட்டுநீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்வதால் வேலையாட்கள் குறைக்கப்படுகிறது, களைகள் அதிகம் வளர்வதில்லை, நீர் தேவையும் குறைவு, அனைத்து வகையான நிலங்களுக்கும் உகந்தது, நீரில் கரையும் உரங்களை கொடுக்க இயலும். இதனால் நல்ல மகசூல் எதிர்பார்க்கலாம்.
நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:
இதில் பெரிய அளவு நோய் அல்லது பூச்சி தாக்குதல் இருப்பதில்லை அவ்வாறு இருந்தால் அதனை எளிதில் இயற்கை முறையில் கட்டுப்படுத்தி விடலாம்.
ஊடுபயிர் இடுதல்:
அனைத்து வகையான காய்கறி பயிர்கள், நிலக்கடலை,உளுந்து, எள், பயிறு வகை பயிர்கள் என குறைந்த வாழ்நாள் கொண்ட அனைத்து பயிர்களையும் முதல் ஒரு வருடம் சாகுபடி செய்யலாம்.
அறுவடை மற்றும் விளைச்சல்:
அதிக வாழ்நாள் திறன் கொண்ட பயிராக இருந்தாலும் சுமார் மூன்று முதல் நான்கு வருடங்களில் நாம் அறுவடை செய்து லாபம் ஈட்டலாம். கலப்பின கன்றுகளை பயன்படுத்தும் பொழுது ஏக்கருக்கு சுமார் 60 முதல் 70 டன் வரை மகசூல் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் பொழுது ஏக்கருக்கு குறைந்தபட்சம் 3 லட்சம் வரை நிகர லாபம் எடுக்க இயலும்.
இது போன்ற வேளாண் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக