google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்: பூச்சி மேலாண்மை

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

பூச்சி மேலாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூச்சி மேலாண்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 20 மார்ச், 2025

தக்காளி பயிரில் ஊசித்துளைப்பான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • தற்சமயம் சாகுபடியில் இருக்கும் தக்காளி பயிரில் பரவலாக ஊசித்துளைப்பான் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.
  • இந்தப் புழு தாக்குதலால் ஒருபுறம் பயிரின் வளர்ச்சி தடைபடுவதுடன் நேரடியாக காய் அல்லது பழங்களில் சேதத்தை ஏற்படுத்துவதால் மகசூல் பெரிய அளவு இழப்பீடு ஏற்படும். 
  • பிரதானமாக தக்காளிப் பயிரை பாதித்தாலும் இதர ஒரு சில பயிர்களிலும் இதன் தாக்குதல் காணப்பட வாய்ப்புள்ளது.

தாக்குதலின் அறிகுறிகள்: 

  • மிகச் சிறிய உடல் அமைப்பு உடைய தாய் அந்து பூச்சிகள் அதிக அளவு முட்டைகளை பயிரின் இளம் குருத்து பகுதி, இளம் இலைகள், தண்டுப்பகுதி மற்றும் காய்களின் காம்பு பகுதியில் முட்டைகளை இடுகிறது. குறைந்த நாட்களில் அதிக இனப்பெருக்க திறன் இருப்பதால் தொடர்ச்சியாக புழு தாக்குதல் காணப்படும் குறிப்பாக கோடை பருவத்தில்.
  • முட்டையில் இருந்து வெளிவரும் இளம் புழுக்கள் இலை சுரங்க ஈக்களின் தாக்குதல் போன்றே இலைகளில் பச்சயத்தை உண்ணும். 
  • இதனால் பாதிப்படைந்த இலையின் பகுதிகள் ஆரம்ப நிலையில் சற்று வெளிர் நிலத்திலும் நாளடைவில் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

  • இது ஆரம்பநிலை அறிகுறியாகும். இதன் காரணமாக பயிர்களின் வளர்ச்சி தடைப்பட்டு உற்பத்தி திறன் குறையும்.
  • நாளடைவில் இல்லம் புழுக்கள் காய்களை துளைத்து உண்ணும் இதனால் இரண்டாம் நிலை நோய் தாக்குதலாக அழுகை நோயும் ஏற்படலாம்.
  • இளம் புழுக்கள் சுமார் ஒரு வார காலம் வரை பயிரைத் தாக்கும் பின்பு கூட்டு புழுவாக மாறி மண்ணில் விழுந்து விடும்.
  • இலை மற்றும் காய்களில் மட்டும் தாக்குதலை ஏற்படுத்தாமல் தீவிர தாக்குதலின் போது குருத்துப் பகுதி தண்டு பகுதி மற்றும் பூக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை படைத்தது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஏனெனில் இந்தப் புழுக்கள் ஒரு சில களை பயிர்களையும் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • ஏக்கருக்கு 100 கிலோ விதம் வேப்பம் புண்ணாக்கு இட்டு மண்ணை கிளறி விடலாம் இதன் மூலம் கூட்டுப் புழுக்களை அழிக்க முயற்சி செய்யலாம். 
  • மேலும் மண்ணில் மிதமான ஈரப்பதம் காணப்படும் பொழுது  நீர்ப்பாசனம் வழியாக ஏக்கருக்கு அதிகபட்சமாக மூன்று லிட்டர் வரை மெட்டாரைசியம் செய்யும் உயிரியல் திரவத்தை விடலாம்.
  • தீவிரமாக பாதிப்படைந்த காய்களை சேகரித்து வயலுக்கு வெளியில் நன்கு காய வைத்து அதனை கால்நடைகளுக்கு கொடுக்கலாம் 
  • மஞ்சள் ஒட்டு பொறியை ஏக்கருக்கு 12 வீதம் பயிரின் கிடை மட்டத்திற்கு கட்டுவதன் மூலம் தாய் அந்து பூச்சிகளை ஓரளவிற்கு அழிக்க இயலும். 
  • இந்த வகை புழுக்களுக்காக பயன்படுத்தப்படும் இன கவர்ச்சி பொறி வாங்கி ஏக்கருக்கு 12 வீதம் நிறுவலாம். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் கண்டிப்பாக ஏழு நாட்களுக்கு ஒரு முறை Bacillus thuringiensis திரவத்தை ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் மாலை வேளையில் தெளிக்க வேண்டும். 
  • இரண்டாம் நிலை தாக்குதலாக பழத்தில் அழுகல் நோய் காணப்பட்டாலும் அதை கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளிப்பு பயனுள்ளதாக அமையும். 
  • ஒட்டுண்ணி அட்டைகள் கிடைக்கப் பெற்றால் அதனை ஏக்கருக்கு பத்து அட்டைகள் வீதம் 21 நாட்கள் இடைவெளியில் கட்டலாம். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம். Chlortraniliprole/ Cyantraniliprole/ Lamba cylithrin/ Indoxacarb/ Flubendamide/ Spinotoram 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். 

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


 

வியாழன், 6 மார்ச், 2025

கொடி காய்கறி பயிர்களில் சிவப்பு பூசணி வண்டு தாக்குதலும் அதன் மேலாண்மையும்...

முன்னுரை: 

  • கொடி காய்கறி பயிர்களான பரங்கி, பூசணி, சுரை, பீர்க்கன், புடலை, வெள்ளரி, பாகல் மற்றும் பல்வேறு காய்கறிகள் நாம் அன்றாட வாழ்வில் பிரதானமாக உண்ணக்கூடிய காய்கறி பயிராக திகழ்வதால் இதன் சாகுபடி வருடம் முழுவதும் காணப்படுகிறது.
  • கோடைகாலத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறி பயிர்களுக்கு குறிப்பாக கொடி காய்கறி பயிர்கள் நல்ல விலையில் விற்கப்படுவதால் தற்சமயம் பல்வேறு இடங்களில் பொடி காய்கறிகள் சாகுபடிகள் உள்ளது. 
  • கொடி காய்கறி பயிர்களில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் தற்சமயம் சாகுபடி உள்ள பயிர்களில் சிகப்பு பூசணி வண்டு தாக்குதல் காணப்படுகிறது.
  • இந்தப் பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் மேலாண்மையை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்ப்போம். இந்த வண்டுகளில் பல்வேறு இனங்கள் உள்ளன இவை ஒவ்வொன்றும் நிறத்தில் சற்று வேறுபடும்.

வாழ்க்கை சுழற்சி:

  • முட்டை- தனியாக அல்லது கொத்தாக மண் அல்லது செடிகளின் தண்டுப் பகுதியில் இடப்படுகிறது.
  • இளம்புழுக்கள்- 10 முதல் 15 நாட்கள் கழித்து முட்டையிலிருந்து வெளிவரும் Grub என்று அழைக்கப்படும் இளம் புழுக்கள் வேர்களை பாதிக்கும் திறனுடையது. இதன் வாழ்நாள் சுமார் ஒரு மாதம் வரை இருக்கும். 
  • கூட்டுப்புழு- இளம் புழுக்கள் கூட்டுப்புழுக்களாக மாறி சுமார் 10-15 நாட்கள் வரை இந்த நிலையில் இருக்கும் பின்பு வண்டுகளாக மாறும். 
  • வண்டு- வண்டுகள் பயிரின் மேற்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் இதன் மொத்த வாழ்நாள் 60 முதல் 85 நாட்கள். 

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பயிரின் இலை, தண்டுப் பகுதி, காய்கள் மற்றும் சில நேரங்களில் வேர் பகுதியை தாக்கும். 
  • இளம் புழுக்கள் வேர்கள், மற்றும் மண்ணில் காணப்படும் காய்களையும் உண்ணுவதால் வேர்ப்பகுதியில் அழுகல் உருவாகலாம். 
  • தீவிர தாக்குதலின் போது செடிகள் காய்ந்து இறந்துவிடும் அபாயமும் உள்ளது.
  • இலை, பூக்கள், மொட்டுக்கள் மற்றும் காய்களை  உண்பதால்  இலைகளில் துளைகள் மற்றும் சல்லடை போன்ற அறிகுறிகளை தோற்றுவிக்கும். 
  • இதனால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பீடு ஏற்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

  • ஒருமுறை கொடி காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களை நன்கு சுத்தம் செய்துவிட்டு பின்பு சாகுபடி செய்ய வேண்டும்.
  • வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இல்லாதவாறு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடி உரமாக வேப்பம் புண்ணாக்கு கண்டிப்பாக இடவேண்டும். 
  • அவ்வப்போது பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும் மண்ணை கிளறி விட வேண்டும் இதனால் முட்டைகளை அழிக்கலாம். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீர் வழியாக ஏக்கருக்கு ஒரு லிட்டர் மெட்டாரைசியம் மற்றும் டிரைக்கோடெர்மா கொடுக்க வேண்டும்.
  • இதன் மூலம் வேர் அழுகல் நோயை தவிர்க்கலாம் மற்றும் முட்டைகளை அழித்து தாக்குதலை குறைக்கலாம்.
  • இயற்கை பூச்சி விரட்டி திரவங்களான பத்திலை கசாயம் /ஐந்திலை கசாயம்/இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசல்/ புகையிலை கரைசல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிப்பதன் மூலம் வண்டுகள் எளிதில் வயலை விட்டு வெளியேறி விடும்.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் ஏக்கருக்கு நான்கு கிலோ விதம் Fibronil குருணை இடலாம். 
  • இலை வழியாக தெளிப்பதற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் பயன்படுத்தலாம்.
  • Malathion, Dimethoate, Spinosad, Phenthoate, Cyantraniliprole

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


திங்கள், 27 ஜனவரி, 2025

வேம்பு கரைசல் (Neemastra) தயாரிப்பு முறையும் பயன்பாடுகளும்...

 

முன்னுரை:

  • சாயன பூச்சி மருந்துகளுக்கு மாற்றாகவும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க பொருளாகவும் வேப்ப இலை திகழ்வதால் இயற்கை விவசாயத்தில் பூச்சி விரட்டிகள் தயாரிப்பில் வேப்ப இலை மற்றும் வேப்பங்கொட்டை பிரதான பங்கு வகிக்கிறது. 
  • வேப்ப இலைகளில் உள்ள பல்வேறு மூலக்கூறுகள் நோய் பூஞ்சைகளின் வளர்ச்சி தடை செய்வதாலும் மற்றும் தீமை செய்யும் பூச்சிகளை விரட்டி அடிக்க பயன்படுத்த படுவதாலும் இதை எவ்வாறு தயாரிப்பது என்பதை பற்றி நான் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும்.
  • வேப்ப இலைகளில் உள்ள அஜடிரக்டின், நிம்பின், சலன்னின், மெளியான்றில் போன்ற பல்வேறு மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் ஒரு விதமான பணிகளை மேற்கொள்வதால் இயற்கை விவசாயத்தில் வேப்ப இலை இன்றி அமையாதாக திகழ்கிறது. 

தேவையான இடுபொருட்கள்: 

1. 5 கிலோ வேப்ப இலை 

2. 10 லிட்டர் நாட்டு பசு கோமியம் 

3. இரண்டு கிலோ நாட்டு பசு சாணம் 

4. 200 லிட்டர் தண்ணீர்

5. 250 லிட்டர் கொள்ளளவு உடைய டிரம்

தயாரிக்கும் முறை: 

  • வேப்ப இலை மற்றும் அதன் உடன் கூடிய சிறு சிறு கிளைகளை அப்படியே அல்லது சிறிதாக நறுக்கி ட்ரம்மில் உள்ள 200 லிட்டர் தண்ணீரில் இடவேண்டும்.
  • பின்பு இதில் 10 லிட்டர் நாட்டு பசு கோமியத்தை ஊற்ற வேண்டும். பிறகு இரண்டு கிலோ சாணத்தை நன்றாக கரைத்து அதில் ஊற்றி வலது புறமாக கலக்க வேண்டும். 
  • இந்தக் கலவையை நிழற்பாங்கான இடத்தில் துணி அல்லது கோணி பயன்படுத்தி இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். 
  • சுமார் 48 மணி நேரம் கழித்து இந்த கலவையை எடுத்து நன்றாக வடிகட்டி பயிரில் தெளிக்கலாம். இதனை சுமார் மூன்று முதல் நான்கு மாதம் வரை பாதுகாப்பாக வைத்திருந்து பயன்படுத்தலாம்.

பயன்கள்: 

  • இலைபேன், அஸ்வினி, தத்துப்பூச்சி வெள்ளை ஈக்கள் போன்ற சாறு உறிஞ்சு பூச்சிகள் இளம் பயிர்களை பாக்காத வண்ணம் பாதுகாக்கிறது.
  • பூச்சிகளின் முட்டை, லார்வாக்கள் மற்றும் பியூப்பாவின் வளர்ச்சியை தடுத்து அவற்றின் நிலையை சீர்குலைக்கிறது.
  • இளம் புழுக்களின்   தோலுரித்தல் நிகழ்வை தடை செய்வதால் பூச்சிகளின் இனப்பெருக்கம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
  • பூச்சிகளுக்கு இடையே இனச்சேர்க்கை விகிதத்தை குறைக்கிறது.
  • இளம் பூச்சிகள் பயிரை உண்பதில் இருந்து தடுக்கிறது.
  • பூச்சிகள் முட்டையிடுவதை குறைப்பதால் தாக்குதல் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
  • மேலும் இது பயிர்களுக்கு ஒரு சில ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது. 

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வியாழன், 9 ஜனவரி, 2025

தென்னையில் கருந்தலைப்புழு மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை

தென்னையில் கருந்தலைப்புழு மேலாண்மை...

  • இலை உண்ணும் புழு அல்லது கருந்தலைப்புழு என்று அழைக்கப்படும் இந்த புழுவானது ஒருவகை பட்டாம்பூச்சி இனத்தின் இளம் பருவம் ஆகும். புழு பருவம் மட்டுமே சேதப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பிரதானமாக தென்னை பயிரையும் தென்னை மரம் சாகுபடி இல்லாத இடங்களில் பரவலாக பனை மரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் உடையது.
  • தென்னை மரங்களில் வருடம் முழுவதும் இதன் தாக்குதல் பரவலாக காணப்பட்டாலும் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை அமையும் பொழுது அதிக அளவில் இனப்பெருக்கம் அடைந்து மிகப்பெரிய அளவு பாதிப்பை ஏற்படுத்தும். 
  • பருவமழை முடியும் தருவாயில் இருந்து வசந்த காலம் மற்றும் கோடை பருவத்திற்கு இடைப்பட்ட காலத்தில் திகழும் சாதகமான வெப்பநிலை மற்றும் காற்று ஈரப்பதம் காரணமாக அதிக அளவு இனப்பெருக்கம் அடைந்து பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும். 
  • இலங்கையில் தென்னை மரங்களில் முதன் முதலில் பதிப்பை ஏற்படுத்திய இந்தக் கருந்தலைப் புழுக்கள் ஆரம்ப காலத்தில் பனை மரத்தை உண்டு சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
  • பெரும்பான்மையான பனை வகை மரம் மற்றும் செடிகளை மாற்றுப் பயிராக கருந்தலைப் புழுக்கள் உணவாக எடுத்துக் கொள்கிறது இதில் அழகு தாவரம் மற்றும் பாக்கு மரங்களும் உட்பட. 

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

தாய் அந்தப் பூச்சிகள் இரவு நேரத்தில் இலையின் அடிப்பிறத்தில் முட்டைகளை இடுகிறது இந்த முட்டைகள் சுமார் மூன்று முதல் ஏழு நாட்களுக்குப் பிறகு வெடித்து புழுக்களை வெளிவிடுகிறது.
பாதிப்பை ஏற்படுத்தும் இந்த கருந்தலைப்புழுக்களின் இளம் புழுக்கள் சுமார் 40 முதல் 45 நாட்கள் பல தோல் உரித்தல் நிகழ்வின் மூலம் உயிர் வாழ்வதால் அதிக அளவு சேதத்தை ஏற்படுகிறது.இதன் மொத்த வாழ்நாள் சுமார் 60 முதல் 75 நாட்கள் ஆகும்.

தாக்குதலின் அறிகுறிகள்: 

  • இலையின் அடிப்பகுதியில் பச்சயத்தை உண்ணுவதால் இலைகள் எரிந்தது போன்ற அறிகுறிகளை தோற்றுவிக்கும். 
  • ஆரம்ப நிலையில் மரத்தின் வெளி இலைகளில் பாதிப்பை ஏற்படுத்தி படிப்படியாக அடுத்தடுத்த இலைகளுக்கு பரவும். 
  • தாக்குதல் தீவிரமடையும் போது பாதிப்படைந்த அடி இலைகள் காய்ந்து தொங்கும்.
  • தென்னங் குலைகள் விரைப்புத்தன்மை இல்லாமல் சற்று தொங்கும். மேலும் குரும்பை உதிர்தலும் காணப்படும்.
  • இலையின் அடி புறத்தில் எச்சங்களால் ஆன கூட்டின் உட்பகுதியில் புழுக்கள் காணப்படும். 
  • தீவிர நிலை தாக்குதலின் போது இலைகள் மட்டுமின்றி இலை காம்பு, பாலை மற்றும் காய்களிலும் பாதிப்பை காண இயலும்.
  • இதனால் இலைகளில் பச்சையத்தின் அளவு குறைந்து மரங்களின் உணவு உற்பத்தி திறன் குறைவதால் விளைச்சலில் இழப்பு ஏற்படுகிறது.தீவிரமாக பாதிப்படைந்த மரங்களில் சுமார் 45 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது இந்த மகசூல் இழப்பீடு சுமார் மூன்று வருடம் வரை காணப்படும்.


கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பாதிப்படைந்த இரண்டு முதல் மூன்று வெளி இலைகளை சேகரித்து அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும். 
  • முன்னெச்சரிக்கை அல்லது ஆரம்ப நிலை தாக்குதலின் போது  முட்டை அல்லது லார்வா ஒட்டுண்ணி அட்டைகளை எக்டருக்கு 3000 வீதம் கட்டலாம்.
  • ஒட்டுண்ணி அட்டைகளை மரத்தின் வெளி இலைகளில் கட்டுவது சிறந்தது.
  • முட்டை அல்லது லார்வா ஒட்டுண்ணிகளை தாக்குதலின் ஆரம்ப நிலையில் பயன்படுத்துவதன் மூலம் சுமார் 60 முதல் 90 நாட்களுக்கு பிறகு 75-80 சதவீதம் வரை புழுக்களை கட்டுப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது எனவே அதற்கு ஏற்றவாறு முன்னெச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டும்.
  • ஜனவரி முதல் மே மாதம் வரை தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிப்பதற்கு ஏதுவாக ஏக்கருக்கு ஒரு எண் வீதம் விளக்கு பொறி பயன்படுத்தலாம்.
  • பூண்டு மற்றும் வேப்பிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்பு கரைசல்களை இலை வழியாக தெளிக்கலாம். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்வதை தவிர்த்து இயற்கை உரங்களை அடிப்படையாக வைத்து சாகுபடி செய்யும் போது இதன் தாக்குதல் குறைந்தே காணப்படுகிறது. 
  • தாய் அந்து பூச்சியினால் சுரக்கப்படும் Tricosatrine மூலக்கூறு பொருளை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும் இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தியும் இதன் தாக்குதலை வெகுவாக குறைக்கலாம்.
  • சிறிய மரங்களை தாக்கும் பொழுது ஆரம்ப காலகட்டத்தில் Bt தெளிப்பதாலும் இதன் பரவுதலை குறைக்கலாம். 
  • அல்லது Chlortraniliprole / Dichlorovos/ Quinalphose/ Malathion போன்ற ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். 
  • வேர் அல்லது தண்டு வழியாக ரசாயன மருந்துகளை கொடுப்பதால் சுமார் 6 மாதங்கள் வரை அதன் எச்சங்கள் மரத்தில் இருப்பதால் முடிந்த அளவு வேர் வழியாக கொடுப்பதை தவிர்க்கலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX



திங்கள், 23 டிசம்பர், 2024

நத்தைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

முன்னுரை:

  • மழைக்காலங்களில் நத்தைகள் நடமாட்டம் அதிகம் தென்படுவது வழக்கமான ஒன்றுதான். 
  • சாகுபடி செய்யும் வயல்களில் நத்தைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன தொடர்ச்சியான மண் ஈரப்பதம், பயிர்களின் இலைப் பகுதியில் காணப்படும் ஈரப்பதம், வயலில் அதிகம் குப்பை காணப்படுதல், வயலில் நீர் தேங்கி இருத்தல், மக்காத இலை மற்றும் சாணம் மண்ணில் காணப்படுதல் என பல காரணங்களை கூறலாம்.
  • மக்காத நிலையில் காணப்படும் பொருட்களை உண்ணுவதற்காக நத்தைகள் அதிகம் காணப்பட்டு மிக வேகமாக பெருக்கம் அடைந்து நாளடைவில் இலை மற்றும் பூக்களையும் பாதித்து சேதப்படுத்துகிறது.
  • நத்தைகள் மிக நீண்ட நாட்கள் வாழும் திறன் உடையதால் இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம் இல்லை பயிர்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

  • நத்தைகள் பொதுவாக மாலை நேரத்தில் அதிகம் செயல்படுவதால் மாலை வேளையில் கையால் சேகரித்து அழிப்பது சிறந்த முறையாக கருதப்படுகிறது. 
  • நன்கு புளித்த மோர் அல்லது தயிரை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதை நிலத்தில் ஆங்காங்கே தரை மட்டத்திற்கு மாலை நேரத்தில் புதைத்து வைக்க வேண்டும்.
  • மறுநாள் காலையில் இதில் இருக்கும் நத்தைகளை கையால் சேகரித்து அழிக்க வேண்டும். 
  • அதேபோன்று ஆல்கஹால் பயன்படுத்தியும் கவர்ச்சி பொறி தயார் செய்து நத்தைகளை கவர்ந்து அழிக்கலாம். 
  • வயலில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். 
  • வயலில் இருக்கும் குப்பைகளை  அப்புறப்படுத்தி சுத்தமாக பராமரித்தால் இதன் நடமாட்டம் படிப்படியாக குறையும். 
  • பறவைகள், எலிகள் கோழி போன்றவைகள் நத்தைகளை சேதப்படுத்தி இறக்கச் செய்வதால் இந்த வழிமுறையும் பின்பற்ற வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும். 
  • போதுமான காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை செடிகளுக்கு கிடைக்க பெற வழிவகை செய்யலாம். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் புகையிலை கரைசல் தயார் செய்து தெளிக்கலாம் அல்லது 3G கரைசலும் தெளிக்கலாம் இவை நத்தைகளை விரட்ட உதவி புரியும். 
  • காப்பர் சல்பேட் போதுமான அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் மணல் கலந்து வயலை சுற்றி இடுவதால் நத்தைகள் உடலில் காப்பர் வினைபுரிந்து அதனை விரட்ட உதவி புரியும். 
  • வயதில் கல் உப்பு அங்கங்கே வைத்தல் அல்லது பயிர்களை சுத்தி வைப்பதன் மூலம் நத்தைகளை விரட்ட இயலும். 
  • வயலில் பயிர் இல்லாத இடத்தில் அதிக முள் காணப்படும் பயிரின் கிளைகளை உடைத்து ஒரு சில இடங்களில் வைப்பதன் மூலம் நத்தைகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுவதை தடுக்கவும் ஒரு சில நத்தைகள் இறக்கவும் இது உதவி புரியும்.
  • Metaldehyde எனப்படும் மருந்தை பயன்படுத்தி பொறிகள் தயார் செய்து வைப்பதன் மூலம் இதனை உண்டு நத்தைகள் இறந்துவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • அழுகிய பப்பாளி பழத்தை சிறிய கிண்ணத்தில் வைத்து  நத்தைகளை கவர்ந்து அழிக்கலாம். 
  • இதுபோன்று எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது. 
  • இலை வழியாக தெளிக்க 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி டைக்ளோராவாஸ் எனும் மருந்தை தெளிக்கலாம்.
  • Metaldehyde எனப்படும் மருந்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட Snaikill குருணையை வாங்கி கைப்பிடி அளவு வயலில் ஒரு சில இடங்களில் வைப்பதால் இதனை உண்டு மிக விரைவாக நத்தைகள் இறந்துவிடும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

புதன், 13 நவம்பர், 2024

பழ ஈக்களின் கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்கள்...

    சுமார் 50-க்கும் மேற்பட்ட பயிர்களை தாக்கும் பழ ஈக்களை அவ்வளவு எளிதாக கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த ஈக்களின் செயல்திறன் பண்புகள் மற்றும் வாழ்க்கை சுழற்சியை பற்றி தெரிந்து கொண்டால் இதனை கட்டுப்படுத்துவதில் இருக்கும் சிரமங்கள் சற்று விலக வாய்ப்புள்ளது. ஆண்டு முழுவதும் பழ ஈக்கள் பயிர்களை தாக்கினாலும் நாம் இருக்கும் தற்போதைய பருவம் மிகவும் உகந்தது. 

  • வடகிழக்கு பருவமழை காலத்தில் இதன் வாழ்க்கை சுழற்சி சற்று குறைவு அதாவது சராசரியாக 15 முதல் 18 நாட்கள். இதனால் அடுத்தடுத்த சந்ததிகளை கட்டுப்படுத்துவதில் நமக்கு பின்னடைவு ஏற்படும். 
  • ஆனால் கோடைகாலத்தில் இதன் வாழ்நாள் சற்று அதிகம் அதாவது ஒரு மாதம் வரை எனவே அதன் வாழ்க்கை படிநிலைகளை நாம் எளிதில் அழிக்க இயலும்.
  • பொதுவாக இந்த ஈக்கள் பயிர்களின் அடி இலைகளின் கீழ்  கீழ்புறத்திலும், வயலில் காணப்படும் குப்பைகள், களைகள், இதர பயிர்களின் இலைகளுக்கு கீழ்ப்புறமாக இருப்பதால் இவை எளிதில் நம் கண்ணுக்கு புலப்படுவதில்லை. 
  • அதிக மழை மற்றும் வெப்பம் இந்த ஈக்களுக்கு உகந்ததில்லை எனவே கதகதப்பு தன்மை இருக்கக்கூடிய இடங்களான பயிரின் அடி இலைகள் மற்றும் மேலே குறிப்பிட்டவாறு அதன் வாழ்க்கையை கழிக்கிறது. 
  • இதனால் மருந்து தெளித்தால் தாய் பூச்சிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை, மேலும் ஈக்கள் அதன் நுண்ணுணர்வு சக்திகள் மூலம் மருந்து தெளிக்கும் போது அந்த வயலில் இருந்து மற்ற வயல்களுக்கு சென்று விடுகிறது.
  • ஈக்கள் முட்டைகளை இளம் காய்கள் அல்லது பழங்களின் தோளிலிருந்து சுமார் 5 மில்லி மீட்டர் ஆழத்தில் இடுவதால் நாம் தெளிக்க கூடிய ரசாயன அல்லது இயற்கை வழி திரவங்கள் பெரும்பாலும் முட்டைகளை அழிப்பதில்லை. 
  • முட்டைகள் இடப்பட்ட சில மணி நேரங்களில் வெடித்து புழுக்களாக மாறுவதால் முட்டைகளை அழிப்பதற்கு போதுமான கால அவகாசம் நமக்கு கிடைப்பதில்லை. 
  • இந்த பருவத்தில் ஈக்கள் மிக வேகமாக அதாவது அதிக முட்டை இடம் திறந்து கொண்டது சராசரியாக 25 முதல் 30 முட்டை ஒரு நேரத்தில் இடுவதால் புழுக்களின் எண்ணிக்கை அதிகம் காணப்படும்.
  • இளம் புழுக்கள் அதிக நாட்கள் உயிர் வாழும் திறன் உடையது சராசரியாக ஒரு வாரம் முதல் 15 நாட்கள் வரை. எனவே இதன் பாதிப்புகள் அதிகம் இருப்பதை நம்மால் தவிர்க்க இயலாது. 
  • புழுக்கள் பழம் அல்லது காய்களுக்கு உள்ளே சென்று சேதத்தை ஏற்படுத்துவதால் நாம் தெளிக்க கூடிய மருந்து அந்த அளவிற்கு ஆழமாக சென்று குழுக்களை அழிப்பது மிக கடினம். 
  • பெரும்பான்மையாக இதன் தாக்குதலின் அறிகுறிகளை நம்மால் கணிக்க இயலவில்லை. அதாவது புழுக்கள் காய்களை உண்டு சேதத்தை ஏற்படுத்துவதால் இரண்டாம் நிலை பூஞ்சை தொற்றுகள் அந்த இடத்தில் ஏற்பட்டு வெளிப்புறத்தில் நோய் தாக்குதல் போன்ற அறிகுறி நமக்கு காணப்படும். 
  • இதனால் பல நேரங்களில் நாம் பூச்சிக் கொல்லிக்கு பதிலாக நோய் மருந்துகளை தெளித்து வருவதால் கட்டுப்படுத்துவதில் சற்று பின்னடைவு ஏற்படுகிறது.
  • நாம் பெரும்பான்மையாக பயிரின் மேற்பரப்பிலே கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மேற்கொள்வதால் தரையில் இருக்கக்கூடிய கூட்டு புழுக்களை நாம் மறந்து விட்டோம். எனவே உரிய வழியை கூட்டுப் புழுக்களையும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுப் புழுக்களில் இருந்து வெளிவரும் தாய் பூச்சிகள் அடுத்த 10 நாட்களில் முட்டையிட ஆரம்பித்து விடுகிறது. சராசரியாக தாய் அந்து போச்சு சுமார் ஆயிரம் முட்டைகள் வரை இடம் திறன் படைத்தது. 
  • முதிர்ந்த தாய் பூச்சிகள் அதிக வாழ்நாள் வரை வாழும் திறன் உடையது அதாவது 10 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை கூட.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


புதன், 6 நவம்பர், 2024

நெல் பயிரில் முள் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

 

நெல் சாகுபடியில் பல்வேறு சவால்கள் இருந்தாலும் தொடர்ச்சியான நோய் மற்றும் பூச்சி தாக்குதல் என்பது தவிர்க்க இயலாது ஒன்று. தற்போது சாகுபடியில் இருக்கும் நெல் பயிரில் ஒரு சில இடங்களில் ஹிஸ்பா (Hispa) எனப்படும் முள் வண்டு இளம் பயிர்களில் பரவலாக காணப்படுகிறது. எனவே இதனைப் பற்றி நாம் தெளிவாக தெரிந்து கொள்வது அவசியமாகும். 

தாக்குதலின் அறிகுறிகள்: 

  • இளம் புழுக்கள் மற்றும் அந்து பூச்சிகள் ஆகிய இரண்டு நிலைகளும் பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய திறன் உடையது.
  • இளம் பருவத்தில் இருக்கக்கூடிய நெல் பயிர்களின் தாள்களில் மூன்றில் இரண்டு பங்கில் தாக்குதலை காண இயலும். 
  • புழுக்கள் இலைகளை துளைத்தும் அந்து பூச்சிகள் நரம்புகளுக்கு இடையே காணப்படும் பட்சயத்தை சுரண்டி உண்ணுவதால் திட்டு திட்டாக வெள்ளை நிற கண்ணாடி போன்ற அமைப்பை காண இயலும். 
  • இலைகளின் மேற்பரப்பில் சதுர வடிவில் வெள்ளை திட்டுக்கள் கண்ணாடி ஜன்னல் போன்ற அமைப்புடன் காணப்படும்.இதன் அறிகுறிகளை பார்ப்பதற்கு இலை சுருட்டு புழு தாக்குதல் போன்றே காணப்படும்.
  • தீவிரமாக பாதிக்கப்படும் போது அந்த இலைகள் வாடி உதிரும் நிலை ஏற்படலாம். 
  • தீவிர தாக்குதலின் போது வயலை பார்த்தால் தீயினால் எரிந்தது போன்ற காட்சி அளிக்கும். 
  • வண்டுகள் நேரடியாக பச்சயத்தை உண்ணுவதால் பயிர்களின் உணவு உற்பத்தி தீரன் குறைந்தும் எதனால் வளர்ச்சி மற்றும் மகசூட்டில் பின்னடைவு ஏற்படும். 

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி: 

    இலையின் நுனியில் காணப்படும் சிறு வெடிப்புகளில் தாய் அந்தப் பூச்சிகள் முட்டைகளை இடுகிறது. முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள் மஞ்சள் முதல் வெள்ளை நிறத்தில் காணப்படும். நீல நிற முதல் கருப்பு நிறத்தில் மிக சிறிய சதுர வடிவில் காணப்படும் தாய் அந்து பூச்சிகளின் உடல் பாகங்கள் முழுவதும் முட்களை காண இயலும் எனவேதான் இதனை முள் வண்டு என்று அழைக்கிறோம்.

தாக்குதலுக்கான உகந்த சூழ்நிலைகள்: 

        பொதுவாக மழைக்காலத்தில் இந்த வண்டுகளின் எண்ணிக்கை அதிகம் காணப்படும். அதிக அளவு தழைச்சத்து உரம் இடுதல், அடர் நடவு, தொடர்ச்சியான மழைப்பொழிவு, குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக களைகள் காணப்படுதல் வண்டு தாக்குதலை ஊக்குவிக்கும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • பருவ மழை காலங்களில் நெல் சாகுபடி செய்யும் பொழுது போதுமான அளவு இடைவெளி விட்டு நடவு செய்யவும். 
  • தொழு உரத்தினை அடி உரமாக பயன்படுத்தும் பொழுது உயிர் உரங்கள் உடன் Mettarhizum ஏக்கருக்கு ஒரு கிலோ விதம் கலந்து இடவேண்டும். 
  • வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இல்லாதவாறு சுத்தமாக பராமரிக்க வேண்டும். களைகள் இருந்தால் கண்டிப்பாக வண்டு தாக்குதலை அதிகப்படுத்தும்.
  • தழைச்சத்து உரத்தினை பரிந்துரைக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிர்களுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய பொட்டாசியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவு கொடுக்க வேண்டும்.
  • முந்தைய பயிர் நெல்லாக இருந்தால் அதன் கழிவுகளை நன்கு மட்க செய்து பின்பு சாகுபடி செய்ய வேண்டும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட இலைகளை மூன்றில் ஒரு பங்கு அகற்றி வயலில் இருந்து அப்புறப்படுத்தலாம். இதன் மூலம் இளம் புழு மற்றும் முட்டைகளை அழிக்க இயலும்.
  • பூச்சி சேகரிக்கும் வலைகளை பயன்படுத்தி அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். 
  • பொதுவாக வண்டுகளை  அழிக்க இயலாது எனவே பூச்சிவிரட்டி திரவங்கள் மூலம் விரட்டுவதால் இனப்பெருக்கத்தை வெகுவாக குறைக்கலாம். 
  • இயற்கை பூச்சி உண்ணிகளை அதிகப்படுத்துவதால் இதன் புழு மற்றும் முட்டைகளை அழிக்கலாம். உதாரணத்திற்கு நாவாய் பூச்சி
  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் புகையிலை, கசாயம் கற்பூர கரைசல், வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை விதை கரைசல், பத்திலை கசாயம், 3G கரிசல் போன்ற இடு பொருட்களை பயன்படுத்தி பூச்சிகளை விரட்டலாம்.
  • அல்லது வாரம் ஒரு முறை Mettarhizum உயிர் பூச்சிக் கொல்லியை இலை வழியாக மாலை நேரத்தில் தெளித்து வரலாம். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தெளிக்கலாம். 
    • Lambda cychlothrin

    • Thiamethaxam 
    • Malathion
    • Quinalphos 
    • Fibronil+imidacloprid

        மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA




சனி, 26 அக்டோபர், 2024

கொடி காய்கறி பயிர்களில் பழ ஈ மேலாண்மை...

முன்னுரை:

  • கொடி காய்கறி பயிர்களான பாகல், பீர்க்கன், புடல், சுரைக்காய், வெள்ளரி, தர்பூசணி, முலாம்பழம் போன்ற பயிர்களில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் ஆண்டு முழுவதும் பயிர்களில் சேதத்தை விளைவித்து சுமார் 60 முதல் 65 சதவீதம் வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவது இந்த பழ ஈக்கள் தான்.
  • இந்தப் பழ ஈக்களின் தாக்குதல் கோடை பருவங்களில் அதிகம் தென்பட்டாலும் ஆண்டு முழுவதும் பயிர்களை பாதிக்கும் திறன் படைத்தது. இதை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
  • காய்கறி பயிர்கள் மட்டுமின்றி பல்வேறு பழ வகை பயிர்களிலும் சேதத்தை ஏற்படுத்துகிறது.  உதாரணத்திற்கு மா, பப்பாளி, கொய்யா.இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் தொடர்ச்சியாக மருந்துகளை தெளித்தாலும் பூச்சி தாக்குதல் குறைவதில்லை. எனவே ஒருங்கிணைந்த முறையில் இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

  • முதிர்ந்த ஈக்கள் காய்களின் மீது மிக சிறிய துளை இட்டு சதைப் பகுதியில் சுமார் 6 முதல் 10 முட்டையை இடுகிறது. 
  • இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த முட்டைகள் இளம் புழுக்களாக மாறும் இதுதான் காய்களில் சேதாரத்தை ஏற்படுத்தும்.
  • சுமார் ஒரு வாரம் கழித்து இந்த இளம் புழுக்கள் கூட்டுப்புழுவாக மாறி காய்கறிகளில் இருந்து கீழே விழுந்து தரையில் காணப்படும். 
  • சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு கூட்டுப் புழுவில் இருந்து முதிர்ந்த ஈக்கள் வெளிவந்து சுமார் ஒரு மாத காலம் வரை வாழும்.

பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:


  • பாதிக்கப்பட்ட காய்களின் மேற்பரப்பில் சிறிய புள்ளி போன்ற சொரசொரப்பான அமைப்பு காணப்படும். 
  • காய்கள் நன்கு முதிர்ச்சி அடையும் முன்னதாக உதிரும் நிலை ஏற்படலாம். 
  • காய்கள் அழுகுதல் சில நேரங்களில் தென்படும். 
  • பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அதனை உடைத்து பார்த்தால் அதன் உட்பகுதியில் புழுக்கள் இருப்பதை காணலாம். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • சேதாரத்தை விளைவிக்கும் இளம் புழுக்கள் மற்றும் முட்டையிடும் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தினால் சேதாரத்தை தவிர்க்கலாம் அதற்கான ஒருங்கிணைந்த முறையில் பார்ப்போம்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் மேலும் உதிர்ந்த காய்களை உடனடியாக சேகரித்து வயலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
  • கூட்டுப் புழுக்களை அழிக்க ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு அல்லது வெப்பம் கொட்டை இடலாம் ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் குருணை வடிவில் கிடைக்க பெறும் Chlorpyriphos மருந்தை மணலுடன் கலந்து பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தெளித்து பின்னர் நீர் பாய்ச்சுவதால் கூட்டுப்புழுவை அழிக்கலாம்.
  • மஞ்சள் நிற ஒட்டுப்பொறி பயன்படுத்தி முதிர்ந்த பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

  • ஊடுபயிர் சாகுபடி செய்தல், வரப்பு பயிராக பீர்கன் சாகுபடி செய்தல், நச்சு தீனி தயாரிப்பு செய்து வைத்தல், இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்துதல், கருவாட்டு பொறி தயார் செய்து வைத்தல் போன்ற பல்வேறு பொறிகளை பயன்படுத்தி கவர்ந்து அழிக்கலாம்.
  • இனக்கவர்ச்சி பொறி என்பது ரசாயனத்தால் உருவாக்கப்பட்ட மாத்திரையை பயன்படுத்தி ஆண் ஈக்களை கவர்ந்து அழிப்பதாகும்.தரையில் இருக்கும் கூட்டு புழுக்களை அழிக்க Mettarhizum உயிர் பூச்சிக்கொல்லியையும் பயன்படுத்தலாம்.

    • இயற்கை வழியில் தயார் செய்யப்படும் பூச்சி விரட்டி திரவங்கள் உதாரணத்திற்கு 3g கரைசல், புகையிலை கரைசல், பத்திலை கசாயம் போன்றவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம் அல்லது இயற்கை வழி உயிர் பூச்சி கொல்லிகளான Beaveria bassiana மற்றும் Bacillus thuringiensis கலந்து தொடர்ச்சியாக தெளித்து வரலாம்.

    • பழ ஈக்களை கட்டுப்படுத்தும் திறன் படைத்த ஒரு சில ரசாயன மருந்துகள் உள்ளது அதனை தேர்வு செய்து தேவை இருப்பின் தெளிக்கலாம். 
    • Spinosad / Spirotetramet + imidacloprid / Deltamethrin/ Thiamethoaxam + Lambda cyclothrin / Fibronil + imidacloprid

    *மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு... https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


    புதன், 4 செப்டம்பர், 2024

    தென்னை சாகுபடியில் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

    கரையான் தாக்குதலின் அறிகுறிகள்:

    • நாற்றுப் பண்ணைகளில் செடிகளின் குருத்துப் பகுதி மஞ்சள் நிறமாக மாறி பின்னல் வாடி விடும்.
    • சில நேரங்களில் பராமரிப்பு இல்லாத மாற்று வழி கரையான்கள் நெற்றுகளின் வெளிப்புறம் மற்றும் வேர் பகுதியை பாதிப்பதால் செடிகள் வாடி விடும்.
    • மரத்தின் தண்டு பகுதியில் மண்ணால் ஆன படலம் காணப்படும்.
    • அதேபோன்று மெல்லிய மண்ணால் ஆன பாதை போன்ற அறிகுறிகளும் தென்படும். 
    • தீவிர தாக்குதலின் போது தண்டுப் பகுதியில் உள்ள பட்டையை உண்டு பின் திசு பகுதியை சென்றடையும்.




    கரையான் தாக்குதலுக்கான காரணங்கள்: 

    • தோப்புகளை சுத்தமாக பராமரிக்காதது. 
    • குறிப்பாக உதிர்ந்த இலை, சிறை, நெற்றுகள் முதலியவற்றை அகற்றாமல் இருத்தல். 
    • குப்பைகளை தோப்பிற்குள் சேமித்து வைத்தல். 
    • நீண்ட நாட்களுக்கு தொழு உரத்தினை தோப்பில் குவித்து வைத்திருத்தல்.
    • பண்ணை பணிகளின் போது தண்டு மற்றும் வேர் பகுதியை சேதப்படுத்துவதால் அதிலிருந்து வெளியேற்றப்படும் திரவம் கரையான்களை ஈர்க்கும்.
    • அதிக வறட்சி மற்றும் முறையற்ற வடிகால் வசதி கரையான் தாக்குதலை ஊக்குவிக்கும்.

    தென்னையில் கரையானை தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

    • தோப்புகள் அல்லது நாற்றுப் பண்ணைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக உதிர்ந்த மட்டைகள், காய்கள், இறந்த மரத்தின் பாகங்கள் மற்றும் சிறைகளை அப்போது சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
    • தென்னை தோப்பு அல்லது அதற்கு அருகில் கரையான் புற்றுகள் தென்பட்டால் அதை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற மழைகாலங்களில் புற்றுக்களின் மேல் பகுதியை மட்டும் சற்று அகற்றிவிட்டு பள்ளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தினால் தொடர்ச்சியாக நீர் தேங்கி மொத்த புற்றும் அழியும். 
    • இதைத் தவிர பல்வேறு ரசாயன மருந்துகள் உள்ளது அதனை பயன்படுத்தியும் புற்றில் உள்ள கரையான்களை முற்றிலும் அழிக்கலாம். அவ்வாறு செய்யும்போது ராணி கரையான் பூச்சியை கண்டறிந்து அழிக்க வேண்டும்.
    • நெற்றுகளை நாற்று விடும் பொழுது அதன் கழுத்துப் பகுதி தரைமட்டத்திற்கு மேல் இருக்கும்படி உதவி செய்ய வேண்டும். 
    • நாற்றுப் பண்ணையில் நாம் அதிக அளவு மணல் பயன்படுத்துவதால் அதில் கரையான் தாக்குதல் அதிகம் காணப்படும் அதை உடனுக்குடன் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். 
    • நாற்றுப் பண்ணையில் இயற்கை பொருட்களை வைத்து மூடாக்கு அமைத்திருந்தால் மூடாக்கில் கரையான் தாக்குதல் உள்ளதா என அவ்வப்போது கண்டறிய வேண்டும். 
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரத்தின் தண்டுப் பகுதியில் அதாவது தரையில் இருந்து 2-3 மீட்டர் உயரத்திற்கு வேப்ப எண்ணையை தடவி விடலாம். அல்லது முந்திரி கொட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் கரையான்களுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. 
    • Copper sulphate அல்லது Chlorpyriphos போன்ற ரசாயனங்களை பயன்படுத்தியும் கரையான்களை கட்டுப்படுத்தலாம்.
    • நாற்றுப்பண்ணை அல்லது நிலத்தில் நடவு செய்வதற்கு முன்னதாக மெட்டாரைசியம் அல்லது இரசாயன குருணை வடிவில் கிடைக்கக்கூடிய மருந்துகளான Chlorpyriphos/Fibronil தேவையான அளவு இட்டு பின்பு நடவு செய்ய வேண்டும். 
    • நடவு செய்த பிறகு செடிகளின் கழுத்து பகுதியில் அல்லது தரையில் கரையான் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக imidacloprid /Chlorpyriphos பரிந்துரைக்கப்பட்ட அளவில் மேற்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும்.
    • வேர்ப்பகுதியில் நல்ல காற்றோட்டம் கிடைக்க வேண்டும் அதற்கு ஏற்றவாறு நடவு செய்வதற்கு முன்னதாக இடு பொருட்கள்  பயன்படுத்த வேண்டும்.
    • நடவு செய்வதற்கு முன்னதாக தேவையான அளவு மணல், சாம்பல் மற்றும் உப்பு கலந்து இடவேண்டும். இதில் மணல் நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்தி வேர் வளர்ச்சி ஊக்கப்படுத்துகிறது. உப்பு மண்ணின் தன்மையை மாற்றி அமைத்து ஊட்டச்சத்து கிடைக்க வழிவகை செய்கிறது. சாம்பல் ஆரம்ப காலத்தில் தேவைப்படும் பொட்டாசியம் சத்தை கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை பயிர்களுக்கு தருகிறது.

    இது போன்ற வேளாண் தகவல் மற்றும் பயிர் சாகுபடி சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம். 

    https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

    வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

    மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்...

    முன்னுரை: 

    • தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பெரும்பான்மையான மக்காச்சோள பயிர் நடப்பு பருவத்தில் தான் சாகுபடி செய்யப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மானாவாரி மற்றும் இறவையில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. பெரும்பான்மையான விவசாயிகள் நல்ல விலை கிடைப்பதால் இதனை பயிர் செய்து செய்து வருகிறார்கள் இதில் சாகுபடி செலவை அதிகப்படுத்தி மகசூலை குறைக்கும் பிரதான பூச்சியாக படைப் புழு காணப்படுகிறது. 
    • இதன் தாக்குதலால் சராசரியாக 10 முதல் 35% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. பராமரிப்பு அற்ற நிலத்தில் 100% வரை மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.இதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை விரிவாக பார்ப்போம். 

    புழு தாக்குதலின் அறிகுறிகள்:

    இந்தப் புழு தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்ததாக கருதப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் விதை முளைத்த பத்து நாட்களில் இருந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    • இளம் புழுக்கள் அதாவது பச்சை நிற புழுக்கள் இலையின் ஒரு புறத்தில் உள்ள திசுக்களை உண்டு சல்லடை போன்ற அமைப்பை ஏற்படுத்தும் ஆனால் மறுபுறத்தில் பச்சையம் காணப்படும். 
    • இரண்டு மற்றும் மூன்றாம் தோல் உரித்தல் நிகழ்வின்போது பயிரை கடித்து உண்டு துளைகளை ஏற்படுத்தும்.
    • நடுப் பகுதியில் இருக்கும் குருத்துப் பகுதியை உண்டு காயம் ஏற்படுத்துவதால் இலைகள் விரிந்த பிறகு பரவலாக துளைகள் காணப்படும்.
    • பெரிய புழுக்கள் சிறிய புழுக்களை உண்ணும் திறன் உடையதால் பயிரில் இரண்டு முதல் மூன்று புழுக்கள் மட்டுமே காணப்படும்.
    • முதிர்ந்த புழுக்கள் இலைகளை கடித்து உண்ணுவதால் மைய நரம்பு மற்றும் இலை காம்பு மட்டுமே மீதம் இருக்கும்.
    • உண்ட இலைப் பகுதியின் எச்சங்களை பயிர்கள் மற்றும் தரையில் காண இயலும்.
    • பயிரின் குருத்துப் பகுதியை துளைத்து உண்ணுவதால் குருத்துகள் வளராமல் வளர்ச்சி தடைப்படும். 
    • தீவிரமாக பாதிக்கப்பட்ட பயிரில் குருத்துப் பகுதி இல்லாமல் தண்டுப் பகுதியிலிருந்து கிளை உருவாகும் ஆனால் இதில் மகசூல் கிடைப்பது மிகவும் அரிது. 
    • பூ மற்றும் கதிர் பகுதியையும் இந்த புழுக்கள் உண்ணும் 

    புழுவின் வாழ்க்கை சுழற்சி:

    இந்தப் படைப்பு புழு கோடைகாலத்தில் 30 நாட்களிலும் மற்ற பருவத்தில் 60 முதல் 90 நாட்கள் வரையும் வாழும் தன்மை படைத்தது. 


    முட்டை: 

    தாய் அந்துப் பூச்சிகள் சுமார் 150 முதல் 200 முட்டைகளை கொத்தாக இலை மற்றும் பயிரின் குருத்துப் பகுதியில் இடுகிறது. இதன் வாழ்நாள் சுமார் மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும். ஒரு தாய் அந்து பூச்சி அதன் வாழ்நாளில் சுமார் 1500 முதல் 2000 முட்டைகளை இடும் திறன் படைத்தது.

    இளம் புழுக்கள்: 

    முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் சுமார் 6 தோல் உரித்தல் நிகழ்வை மேற்கொள்ளும். ஆரம்ப நிலையில் பிச்சை நிற உடம்பையும் கருப்பு நிற தலைப் பகுதியையும் கொண்டிருக்கும். இரண்டாவது தோல் உரித்தல் நிகழ்வின்போது இதன் தலை சற்று ஆரஞ்சு நிறத்தில் மாற்றமடையும். மூன்றாவது தோல் உரித்தல் நிகழ்வின்போது உடம்பு காவி நிறமாக மாறும். நான்கு முதல் ஆறாவது நிகழ்வின் போது தலைப்பகுதி சிகப்பு முதல் பழுப்பு நிறத்தில் மாறும் உடம்பு பகுதியில் கோடுகள் மற்றும் புள்ளிகள் உருவாகும். இதன் வாழ்நாள் சுமார் 15 முதல் 30 நாட்கள் வரை நீடிக்கும்.

    கூட்டுப்புழு: 

    சிகப்பு நிற கூட்டு புழு பெரும்பான்மையாக மண்ணில் ஐந்து சென்டிமீட்டர் ஆழம் வரை காணப்படும். இதன் வாழ்நாள் கோடை பருவத்தில் 8 முதல் 10 நாட்களும் இதர பருவத்தில் 20 முதல் 30 நாட்களும் இருக்கலாம். 

    தாய் அந்து பூச்சி:

    இது பத்து முதல் 20 நாட்கள் வரை வாழும் தன்மை உடையது.தாய் அந்தப் பூச்சி இரவு நேரத்தில் மட்டுமே முட்டையிடும் இது பழுப்பு நிறத்தில் காணப்படும். 

    கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

    • தொடர்ச்சியாக ஒரே வயலில் மக்காச்சோளம்  பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். 
    • கோடை உழவு கண்டிப்பாக செய்ய வேண்டும். இதன் மூலம் படைப் புழுவின் முட்டை மற்றும் கூட்டு புழுக்களை அதிக வெப்பநிலை மற்றும் பறவைகளுக்கு இரையாக்கி அழிக்கலாம்.
    • குறைந்தது 18 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை கோடை உழவு செய்து மண்ணை நன்கு ஆற விட வேண்டும்.
    • கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ விதம் இடித்த வேப்பம் கொட்டைகள் அல்லது வேப்பம் புண்ணாக்கு இடலாம்.
    • விதைகள் நடவு செய்வதற்கும் முன்னதாக வரப்பு பயிராக அல்லது பாதுகாப்பு பயிராக ஆமணக்கு, துவரை அவரை, சூரியகாந்தி, தட்டப்பயிறு அல்லது தங்கள் பகுதிக்கு ஏற்ற ஏதேனும் ஒரு  மூன்று வரிசையில் நடவு செய்ய வேண்டும்.
    • விதை விதைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக பரப்பு பயிர் சாகுபடி செய்வது சாலச் சிறந்தது. 
    • விதைகளை Cyantraniliprole என்ற மருந்தை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம் இதனால் 25 நாட்கள் வரை புழு தாக்குதல் வராமல் தடுக்கலாம். 
    • ஏக்கருக்கு ஐந்து முதல் 8 எண்கள் இன கவர்ச்சி பொறி பயன்படுத்தி புழுக்களின் நடமாட்டத்தை கண்டறிவதுடன் கவர்ந்து அழிக்கலாம்.
    • கண்டிப்பாக விளக்கு பொறி ஏக்கருக்கு ஒரு எண் விதம் வாங்கி பயன்படுத்த வேண்டும். தாய் அந்த பூச்சிகள் இரவில் மட்டுமே முட்டையிடும். 
    • வயலை சுற்றி சிறிதாக குழி வெட்டி அதில் தண்ணீர் மற்றும் மருந்து ஊற்றி வைப்பதால் மற்ற வயல்களில் இருந்து புழுக்கள் வயலுக்குள் நுழைவதை தவிர்க்கலாம். 
    • அதேபோன்று ஏக்கருக்கு ஐந்து முதல் எட்டு எண்கள் இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தலாம்.
    • ஒரே நேரத்தில் சாகுபடி செய்ய இருக்கும் மொத்த நிலத்திலும் விதைகளை விதைக்க வேண்டும் இதனால் முழு தாக்குதலை வெகுவாக குறைக்கலாம். 
    • பயிரின் குருத்துப் பகுதியில் மணல் அல்லது அடுப்பு சாம்பல் தூவி விடுவதால் ஓரளவிற்கு பூச்சி கடிப்பதை தவிர்க்கலாம்.
    • மணல் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை 9:1 என்ற சதவீதத்தில் கலந்து குருத்துப் பகுதியில் இடலாம்.
    • ஆரம்ப காலத்தில் வயலில் ஆங்காங்கே குச்சிகளை நட்டு வைப்பதால் அதில் பறவைகள் உட்கார்ந்து புழுக்களை உண்ணும்.
    • பயிர் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருந்து தொடர்ச்சியாக Metarhizium anisopliae மற்றும் Beauveria bassiana ஆகியவற்றை லிட்டருக்கு தலா 5 கிராம் கலந்து வாரம் ஒரு முறை தெளித்து வர வேண்டும். 
    • தாக்குதல் இல்லாத போது வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை விதை கரைசல், 3 G கரைசல், பத்திலை அல்லது ஐந்திலை கரைசல் அல்லது கிடைக்க பெறும் இயற்கை வழி தயாரிப்பு இடுபொருட்களை பயன்படுத்தி தாக்குதலை தவிர்க்கலாம். 
    • இவை அனைத்தையும் முயற்சி செய்து வர வேண்டும் முடியாத பட்சத்தில் மட்டுமே ரசாயன மருந்து தெளிக்கலாம்... தெளிக்கும் பொழுது தேர்வு செய்யப்படும் மருந்து, நிறுவனம் மற்றும் அதன் அளவு ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவும். 
    • கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். 
    • Emammectin benzoate - 8 கிராம்
    • Novuluron- 10 மில்லி
    • Thiamethaxam+ Lambada cychlothrin - 10 மில்லி 
    • Tetraniprole - 10 மில்லி
    • Chloratranliniprole - 6 மில்லி
    • Thiodicarb - 10 கிராம்
    • Spinotorom - 10 மில்லி
    • Spinosad -5 மில்லி

    இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். 

    https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


    வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

    தென்னையில் சிகப்பு கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

    முன்னுரை: 

    • தென்னை சாகுபடியில் பல்வேறு பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் காணப்பட்டாலும், பூச்சி தாக்குதலினால் மகசூல் மற்றும் பயிர்/மரம் இழப்பீடு காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூன் வண்டு தாக்குதலால் பெரிய அளவில் காணப்படுகிறது.
    • தென்னை, எண்ணெய் பனை, பாக்கு, பேரிச்சை, அலங்கார தாவரங்கள் என 25 மேற்பட்ட பனை வகை பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் படைத்தது. 
    • சிகப்பு கூன் வண்டு இளம் மரங்களில் அதாவது 20 வருடங்களுக்கு குறைவான வாழ்நாள் கொண்ட மரங்களில் இதன் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
    • இந்தியாவில் தென்னை மற்றும் பாக்கு பயிரில் பிரதான பூச்சியாகவும் அரேபிய நாடுகளில் பேரிச்சை மற்றும் அழகு தாவரங்களில் தாக்கும் பிரதான பூச்சியாக திகழ்கிறது.
    • தாக்குதலின் தீவிரம் மற்றும் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பொறுத்து சராசரியாக 50% வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துகிறது.

    தாக்குதலுக்கான உகந்த சூழ்நிலை: 

    • பராமரிப்பு அல்லாத தோப்புகள் 
    • பாதித்த மரம் அல்லது மரத்தின் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்காமல் இருத்தல்.
    • இளம் மரங்களில் ஏற்படும் காயங்கள். மரத்தின் காயங்களில் இருந்து வெளிவரும் திரவம் பெண் வண்டுக்களை இனப்பெருக்கத்திற்காக கவர்வது போன்று இருப்பதால் பெண் வண்டுக்கள் மரத்தின் பாதித்த இடத்தில் முட்டைகளை இடுகிறது. அது அடித்தண்டு பகுதியாக இருந்தாலும் சரி அல்லது தண்டு அல்லது குருத்துப் பகுதியாக இருந்தாலும் சரி.
    • அடித்தண்டு அல்லது வேர் பகுதியில் ஊடுபயிர் அல்லது களை எடுத்தலின் போது ஏற்படும் காயங்கள் வழியாக.
    • காண்டாமிருக வண்டால் தென்னையில் ஏற்படும் காயங்கள் மூலமாகவும்,
    • மேலோட்டமாக அல்லது ஆழம் இல்லாமல் தென்னங் கன்றுகளை நடவு செய்வதால்.
    • சில நேரங்களில் இயற்கையாகவே தண்டுப் பகுதியில் பிளவுகள் காணப்படும் இதன் வழியாகவும் தாக்குதல் அல்லது முட்டை இடுதல் நிகழ்வு நடைபெறலாம்.
    • பொதுவாக சிகப்பு கூன் வண்டுகள் முட்டையிடவோ அல்லது தாக்குதலை ஏற்படுத்தவோ பயிர்களில் காயங்களை உண்டாக்குவதில்லை.

    பூச்சி தாக்குதல் பரவும் விதம்:

    பாதிக்கப்பட்ட மரங்கள் அல்லது மரத்தின் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்காமல் இருப்பது இதன் பரவுவதற்கான பிரதான காரணமாகும்.

    கூன் வண்டு தாக்குதல் இல்லாத தோப்புகளில் இனக்கவர்ச்சி பொறியை வைப்பதால் மற்ற வயல்களில் இருந்து நமது தோப்பிற்கு வண்டு தாக்குதல் ஏற்படுகிறது. 

    பூச்சியின் வாழ்க்கை சுழற்சி: 

    முட்டை: 

    பெண் வண்டுகள் மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகள், வெடிப்புகள்,பிளவுகள், இலைக் காம்பு மற்றும் குருத்து போன்ற இடத்தில் 200-300 நீள் வட்ட வடிவ வெள்ளை நிற மூட்டைகளை இடுகிறது.

    இளம் புழுக்கள்:

    சுமார் 3-5 நாட்களுக்குப் பிறகு முட்டைகள் பொரித்து இளம் புழுவாக மாறுகிறது. இதனை ஆங்கிலத்தில் கிரப்(Grub) என்று கூறுவார்கள். கால்கள் இல்லாத இளம் புழுக்கள் மரத்தின் மென்மையான திசுக்களை உண்டு சக்கையை வெளியேற்றுகிறது. சுமார் 50 மில்லி மீட்டர் நீளம் வரை வளரும்.பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து சாறு வடிதல் மற்றும் சக்கை வெளியேறுதலை காண இயலும்.வெள்ளை நிற உடம்பு பகுதியையும் காவி நிற தலைப் பகுதியையும் கொண்டிருக்கும்.

    கூட்டு புழு: 

    சுமார் 1-3 மாத வயதுடைய இளம் கூட்டு புழுவாக மாறுகிறது. இந்த கூட்டுப் புழுக்கள் மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் தென்படும். 

    முதிர்ந்த புழுக்கள்:

    15 முதல் 25 நாட்கள் வயதுடைய கூட்டுப் புழுவில் இருந்து பண்டு வெளியேறும்.சிகப்பு நிறத்தில் நீண்ட மூக்குடன் காணப்படும். இதன் முதுகு பகுதியில் 6 புள்ளிகள் இருக்கும்.

    தாக்குதலின் அறிகுறிகள்:


    • மரத்தின் அடித் தண்டு, தண்டுப் பகுதி, இலை காம்பின் அடிப்பகுதி மற்றும் குருத்துப் பகுதியில் சிறிய துவாரங்கள் காணப்படும்.
    • துளைகள் காணப்படும் பகுதியில் இருந்து சாறு  வடிதலை காண இயலும்.
    • இளம் புழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதியை தொடர்ச்சியாக உண்ணுவதால் துளைகள் வழியாக சக்கை வெளியேறுவதை காணலாம்.
    • தண்டுப் பகுதியை உண்ணுவதால் பயிருக்கு செல்ல வேண்டிய உணவு மற்றும் தண்ணீர் தடைபடுவதால் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதை காண இயலும்.
    • குருத்துப் பகுதியை துளைத்து உண்ணுவதால் கொண்டைப் பகுதி பலம் இழந்து சாய்ந்து விடுகிறது.இலையின் காம்பு பகுதியில் துளையிட்டு உண்பதால் இலைகள் உதிர்வதையும் காணலாம்.
    • அடித்தண்டு பகுதியில் நம் கண்ணிற்கு புலப்படாதவாறு புழுக்கள் உண்ணுவதால் மரம் சாய்ந்து விடுகிறது.
    • மரத்தின் தண்டுப் பகுதியில் இதன் தாக்குதல் காணப்பட்டால் புழுக்கள் இறையும் சத்தம் கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

    கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

    • தென்னை மரங்களின் அடித் தண்டு, தண்டு பகுதி மற்றும் குருத்து பகுதியில் காயங்கள் ஏற்படாதவாறு பராமரிக்க வேண்டும்.
    • மரங்களின் இளம் பருவத்தில் அதாவது குறைந்தது 10 வருடங்கள் வரை கூன்  வண்டு தாக்குதலில் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதை தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டும்.
    • மரத்தில் ஏதேனும் காயங்கள் தென்பட்டால் உடனடியாக தார் அல்லது பயன்படுத்தப்பட்ட இயந்திர எண்ணெய்யை தடவி விட வேண்டும்.
    • மரத்தின் அடித் தண்டு அல்லது தண்டுப் பகுதியில் சாறு வடிதல் தென்பட்டால் உடனடியாக ஏதேனும் பூஞ்சான மருந்தை தடவி விடலாம் அல்லது தெளிக்க வேண்டும். 
    • காண்டாமிருக வண்டு தாக்காத வண்ணம் பராமரிக்கப்பட வேண்டும் ஏனெனில் இந்த வண்டு தாக்கிய பகுதிகளில் சிகப்பு கூன் வண்டு முட்டை இட அதிக வாய்ப்புகள் உள்ளது.
    • தீவிரமாக பாதிக்கப்பட்ட மரத்தை வேர்ப்பகுதியோடு முழுமையாக அப்புறப்படுத்தி வெட்டி கொளுத்தி விட வேண்டும் ஏனெனில் வண்டுகளின் இளம் புழுக்கள் அதில் இருக்க வாய்ப்புகள் உண்டு.
    • மேலும் கூன் வண்டு உணவுக்காக மற்றும் இனப் பெருக்கத்திற்காக பாதிக்கப்பட்ட மரத்தையே தேர்வு செய்யும். 
    • தென்னந்தோப்பை களைகள், குப்பைகள் அல்லது காய்ந்த மட்டையில் அதிகம் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். ஏனெனில் இது புழுக்கள் மறைந்து வாழ வழிவகை செய்யவும்.
    • எக்காரணத்தைக் கொண்டும் பண்ணை உபகரணங்கள், இயந்திரங்கள் அல்லது கால்நடைகள் மரங்களை காயப்படுத்தாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.
    • தென்னை மரங்களின் அடித் தண்டு பகுதியில் மண், தொழு உரம் அல்லது மூடாக்கு போன்றவற்றை இடாமல் தெளிவாக இருக்கும் படி வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் வண்டு தாக்குதலை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க இயலாது.
    • காண்டாமிருக வண்டு, குருத்து அழுகல்,வேர் வாடல் போன்ற நோய் அல்லது பூச்சிகள் தாக்காதவாறு பராமரிக்க வேண்டும் இவை அனைத்தும் மறைமுகமாக கூன் வண்டு தாக்குதலை ஊக்கப்படுத்தும்.
    • வண்டு தாக்குதல் ஏற்படாத வண்ணம் பயிரை பாதுகாக்க மாதம் ஒரு முறை இலையின் குருத்து பகுதியில் இடித்த வேப்பங்கொட்டை அல்லது வேப்பம் புண்ணாக்கு உடன் சம அளவு மணல் கலந்து மரம் ஒன்று இருக்கு அரை கிலோ விதம் இடவேண்டும். 
    • அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இலை இடுக்குகளில் நாப்தலின் உருண்டைகளை இட்டு அதன் மேல் கைப்பிடி அளவு மணல் இடவேண்டும்.
    • அல்லது மாதம் ஒருமுறை 1:40 என்ற அளவில் Chlorantraniliprole மருந்தையும் மணலையும் கலந்து மரம் ஒன்று இருக்கு 200 முதல் 300 கிராம் இட வேண்டும்.
    • கூன் வண்டு தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்ப நிலையிலேயே ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி Imidacloprid என்ற மருந்தை வேர் அல்லது தண்டு வழியாக செலுத்தலாம் இல்லையெனில் குருத்து பகுதியில் உற்ற வேண்டும்.
    • குருத்துப் பகுதியை பாதுகாக்க இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும். அதேபோன்று அடித்தண்டு பகுதியை பாதுகாக்க மாதம் ஒருமுறை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி Chlorpyriphos கலந்து தண்டு மற்றும் அடித்தண்டு பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும்.
    • அல்லது Imidacloprid/Chlorpyriphos/Spinosad மருந்தை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தண்டுப் பகுதியில் ஊசியை பயன்படுத்தி செலுத்தலாம்.
    • ஏக்கருக்கு ஒரு எண் சிவப்பு கூன் வண்டு இனக்கவர்ச்சி பொறி வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
    • அதேபோன்று தென்னை ஓலை பொறி தயார் செய்து ஏக்கருக்கு 20 வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.

    இது விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

    https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

    Recent Posts

    Popular Posts