தென்னையில் போரான் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்
|முன்னுரை:
- தென்னை சாகுபடியில் பிரதானமாக தழைச்சத்து,மணிச்சத்து, சாம்பல் சத்து, போரான், மாங்கனிசு மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் குறைபாட்டு அறிகுறிகள் தென்படுகிறது. இதில் நுண்ணூட்ட சத்தான போரான் தென்னையின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் அறிகுறிகளை வெளிப்படுத்துவதுடன் மகசூல் இழப்பீட்டை பெரிய அளவில் ஏற்படுகிறது.
- இயற்கையாகவே மண், தண்ணீர், பாறை, மணல் போன்றவற்றில் போரான் ஊட்டச்சத்து மிகக் குறைந்த அளவில் உள்ளது. எனவே இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மையான மண் வகைகளில் போரான் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாகவே கருதப்படுகிறது.
தென்னையில் சாகுபடியில் போரான் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட காரணங்கள்:
- தேவையான அளவு போரான் ஊட்டச்சத்து இடாமல் இருத்தல்.
- தொடர் மழையினால் மண்ணில் இருக்கக்கூடிய போரான் வேர்களுக்கு கிடைக்காத வண்ணம் மண்ணுக்கு அடியில் செல்லுதல்.
- மணல் அமைப்பு உடைய மண் வகைகளில் போரான் கிடைக்கப் பெறாத வண்ணம் இருத்தல்.
- மண்ணின் கார அமிலத்தன்மை அதிகமாக இருத்தல். அதாவது pH 7.5க்கு மேல் செல்லும் பொழுது இதன் பற்றாக்குறை தென்படும்.
- தொடர்ச்சியாக பயிரை வறட்சியில் அல்லது நீர் பற்றாக்குறையில் விடும் பொழுது மண்ணில் இருக்கக்கூடிய போரான் ஊட்டச்சத்து செடிகளுக்கு கிடைக்காமல் மண் துகள்களுடன் ஒட்டிக் கொள்ளுதல்.
- அதிகளவு பொட்டாசியம் மற்றும் கால்சியம் ஊட்டச்சத்து இடுவதால் போரான் செடிகளுக்கு கிடைக்கப் பெறாது.
போரான் பற்றாக்குறையின் அறிகுறிகள்:
இலைப் பகுதியில் காணப்படும் அறிகுறிகள்:
- பொதுவாக போரான் ஊட்டச்சத்து பயிர்களில் அதிக அளவு ஊடுருவி செல்வதில்லை எனவே இதன் பற்றாக்குறை பயிரின் குருத்துப் பகுதியில் அதிகம் தென்படுகிறது.
- முழுமையாகத் திறக்கப்படாத நுனி இலைகள் வளைந்து நெளிந்து காணப்படுதல்.
- இந்த இலைகளின் நடு நரம்பு மற்றும் இலை காம்பும் வளைந்து நெளிந்து காணப்படும்.
- குருத்துப் பகுதியில் தோன்றும் இலைகளின் எண்ணிக்கை குறைவதுடன் இலை காம்பின் நீளம் குறைந்து காணப்படும். அரிதாக குருத்துப் பகுதியில் குறைந்த நீளம் மற்றும் குறைந்த இடைவெளியில் அதிக எண்ணிக்கையிலான ஓலைகளை காண இயலும்.
- ஓலைகளின் ஒரு பக்கத்தில் உள்ள இலைகள் ஊக்கு போன்று வளைந்து காணப்படும் இதில் சில நேரங்களில் பிசின் காணப்படலாம். மிகவும் அரிதாக இலைகள் இரண்டு முறை வளைந்து இரண்டு ஊக்குகள் இருப்பது போன்று காட்சி அளிக்கும்.
- சில நேரங்களில் ஓலைகளில் உள்ள அனைத்து இலைகளும் உதிர்ந்து குச்சி போன்று காட்சியளிக்கும். ஓலைகளின் ஒரு புறத்தில் உள்ள இலைகள் மட்டும் கூட உதிரும்.
- ஓலைகளின் நுனிப்பகுதி கருகி ஒடிந்து தொங்கும்.
- ஓலைகள் விசிறி அமைப்பு போன்றும், படகு அமைப்பு போன்றும், துடைப்பம் போன்றும், மீன்களின் எலும்பு அமைப்பு தோன்றும் கூட சில நேரங்களில் அறிகுறிகள் காணப்படலாம்.
பாலை மற்றும் காய்களில் தோன்றும் அறிகுறிகள்:
- குருத்துப் பகுதியில் குன்றிய வளர்ச்சி காணப்படும், குருத்துப் பகுதி ஒரு புறமாக சாய்தல்.
- குருத்து பகுதியில் அழுகல் அல்லது காய்தல் தென்படலாம்.
- பாலையில் உள்ள பூங்கொத்துகளில் எண்ணற்ற கிளைகள் அடர்த்தியாக தோன்றும்.
- சிதைவடைந்த பூங்கொத்து காணப்படுதல்.
- பாலை விரிந்தவுடன் பூங்கொத்துகள் கருப்பு நிறமாக மாற்றமடைந்து உதிர்தல்.
- பூங்கொத்துகளில் மிக குறைந்த எண்ணிக்கையில் பெண் மலர்கள் காணப்படுதல்.
- குரும்பை உதிர்தல் ஒரு சில குரும்பை மட்டுமே காணப்படுதல்.
- ஒல்லி காய்கள் தோன்றுதல்.
- காய்களில் பருப்புகள் இல்லாமல் இருத்தல், அரைகுறையாக உருவாதல் அல்லது ஒழுங்கற்ற வடிவில் உருவாதல்.
- மட்டையில் வெடிப்புகள் தோன்றுதல்.
- மட்டையில் வெடிப்புகள் இல்லையெனில் உரித்த காய்களில் வெடிப்புகள் காணப்படலாம். இந்த வெடிப்புகள் நீள் வட்ட வடிவில் இருக்கும்.
- மட்டையில் திட்டு திட்டாக கருப்பு நிற மாற்றத்தை காண இயலும்.
- பருப்புகள் நிறமாற்றம் அடைதல், ஒழுங்கற்ற வடிவ காய்கள், பாலையில் சிறிய மற்றும் பெரிய காய்கள் ஒரே நேரத்தில் தென் படுதல்.


இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்....
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக