google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்: மற்றவைகள்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

மற்றவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மற்றவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜூலை, 2026

இயற்கை துப்புரவாளர்கள் – சாண வண்டு

முன்னுரை:

இயற்கை சூழலில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் இயற்கை சமநிலையைப் பேணுவதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்கிறது. அவ்வாறு இயற்கையின் ஒரு அற்புத படைப்பாக திகழ்வதுதான் இந்த சாண வண்டு  (Dung Beetle) என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இதுவும் சாதாரண பூச்சி வகையில் ஒன்றுதான். அளவில் சிறியதாக இருந்தாலும் இதன் உழைப்பு உன்னதமாக கருதப்படுகிறது. இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் முக்கிய பணியை செய்வதால் இதனை சூற்றுச்சூழலின் பொறியாளர்/இயற்கையின் துப்புரவாளர்கள் /சாணம் உருட்டு வண்டு என அழைக்கப்படுகிறது.

உடலமைப்பு மற்றும் இனப்பெருக்கம்:

மற்ற பூச்சி இனங்களை போன்றே இதன் உடலமைப்பும் தலை, மார்பு மற்றும் வயிறு என மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். வயிற்றின் சராசரி நீளம் 0.5 செ.மீ ஆகும். தலையில் கண்கள் மற்றும் விசிறி போன்ற உணர்கொம்புகள் இருக்கும். மார்பு பகுதியில் கடினமான இளங்கொம்பும் ஆறு கால்களும் உள்ளன. முன்னங்கால்கள் சிறியதாகவும் பின்னங்கால்கள் பெரியதாகவும் காணப்படும். பின்னங்கால்களால் தான் சாணியை உருட்டி செல்கின்றன. வயிறு உணவு செரிப்பதற்கு உதவி புரிகிறது.

இவற்றின் முன்பகுதி மண்வெட்டி போன்ற அமைப்புடன் காணப்படும். இது சாணத்தை உருட்ட உதவுகிறது. இவை கருப்பு, பழுப்பு, பச்சை, நீலம் போன்ற வண்ணங்களில் காணப்படுகிறது. அவற்றின் நெற்றியில் காணப்படும் மண்வெட்டி போன்ற அமைப்பு சாணம் அள்ள மட்டுமின்றி நிலத்தில் சுரங்கம் தோண்டப் பயன்படுகிறது. பெயருக்கு ஏற்றவாறு சாணத்தை மட்டுமே உண்ணும், அதுவும் இலைத்தழைகளை உண்ணும் விலங்குகளின் (ஆடு, மாடு, குதிரை, யானை) சாணத்தினையே விரும்பி உண்ணும். இவை சாணத்தை ஒரு பந்தாக உருட்டி அதில் முட்டையிடும், முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் இந்த சாணத்தை உண்டு வளரும், இவை சுமார் 3 மில்லி மீட்டர் அளவிலிருந்து 3 செ.மீ அளவு வரை காணப்படுகிறது. சாணி வண்டில் இதுவரை சுமார் 7000 வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. சாணி வண்டுகள் கூட்டமாக வாழும் நல்ல மோப்ப சக்தி உடையது. 

மழைபொழிவு காலத்தில் சாணி வண்டுகள் இனப்பெருக்கத்திற்கான தனது துணையை தேடும். அளவில் பெரிதான சாணி உருண்டையை உருட்டி பெண் வண்டை கவரும். ஆண் மற்றும் பெண் வண்டுகள் ஒரே வளைக்குள் வாழ்ந்து முட்டையிடும். முட்டையிலிருந்து வரும் இளம் புழுக்கள் சாணியை உண்டு வண்டாக வெளியே வரும். இவ்வண்டுகளின் ஆயுள் காலம் 2-3 மாதம், சில வண்டுகள் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

முக்கிய வகைகள்

1.  உருட்டும் சாண வண்டு

·சாணத்தை உருண்டையாக உருட்டி எடுத்துச் செல்கின்றன.

பாதுகாப்பான இடத்தில் புதைத்து அதில் முட்டையிடும்.

2.   தோண்டும் சாண வண்டு

· சாணத்தின் கீழ் சுரங்கம் தோண்டி அதில் முட்டையிடும்.

3.   சாணத்தின் உள்ளே வாழும் வண்டு

·சாணத்தின் உள்ளேயே வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றன.

விவசாயத்தில் இதன் நன்மைகள்:

  • சாணத்தை மண்ணுக்குள் கொண்டு செல்வதால் கரிமச்சத்து அதிகரிக்கும். மேலும் நுண்னுயிரிகளின் பெருக்கம் நன்றாக இருக்கும்.
  • சுரங்கம் தோண்டுவதால் நீர் பிடிப்பு திறன் மற்றும் பயிரின் வேர் வளர்ச்சி மேம்படும்.
  • சாணம் மண்ணில் மட்குவதால் ஊட்டச்சத்துகள் மீண்டும் மண்னிற்கு திரும்புகின்றன.
  • சாணத்தில் முட்டையிடும் ஈக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் இனப்பெருக்கம் தடைபடும்.
  • சாணத்தில் இருக்கும் விதைகள் மண்ணுககுள் கொண்டு செல்வதால் உயிரினப் பல்வகைமை அதிகரிக்கும்.
  • மண்ணின் காற்றோட்டத்தை அதிகரிக்கின்றன.

பாதுகாப்பின் அவசியம்:   

          இன்றைய தீவிர வேளாண்மையில், கால்நடைகளுக்கு அதிக அளவில் வழங்கப்படும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகளின் எச்சங்கள் சாணத்தில் இருப்பதால் பல சாண வண்டுகள் உயிரிழக்கின்றன. இதனால் சாண வண்டு இனங்கள் பல பகுதிகளில் குறைந்து வருகின்றன. எனவே அவற்றைப் பாதுகாப்பது சுற்றுச்சூழலுக்கும் விவசாயத்திற்கும் மிகவும் அவசியம்.

முடிவுரை

        சாண வண்டு என்பது சாணத்தை உருட்டும் ஒரு சாதாரண G+ச்சி அல்ல. அது இயற்கையின் துப்புரவாளன், மண் வளத்தை மேம்படுத்தும் உயிரியல் பொறியாளர், ஊட்டச்சத்து மறுசுழற்சியாளர் மற்றும் விவசாயிகளின் மறைமுக நண்பன். மண்ணின் ஆரோக்கியம் பயிர் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதில் இதன் பங்கு அளப்பரியது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/EgQS1wsMcxcA6hZjRcmwyS?s=cl&p=a&ilr=1&amv=1

வியாழன், 26 மார்ச், 2026

தீமை செய்யும் பூச்சிகளை பொறி கலங்க வைக்கும் பொறிவண்டு


 *🐞முன்னுரை* :

தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்த இயற்கை தந்த கொடை தான் நன்மை செய்யும் பூச்சிகள். தீமை செய்யும் பூச்சிகளை நன்மை செய்யும் பூச்சிகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செலவை குறைக்கலாம். குமிழ் வடிவில் இருக்கும் தாய் அந்தப் பூச்சிகள் பல்வேறு நிறங்களில் உள்ளன. 

 *🐞🐛வாழ்க்கை சுழற்சி* :




  • முட்டை மஞ்சள் நிறத்தில் குவியலாக இலைகள் அடிப்பகுதியில் இடப்படும். 
  • சுமார் மூன்று முதல் ஐந்து நாட்களில் முட்டையில் இருந்து வெளியே வரும் இளம் புழுக்கள் பார்ப்பதற்கு கருப்பு நிறத்தில் முதலை போன்று காட்சியளிக்கும்.
  • ஆரம்பத்தில் தீமை செய்யக்கூடிய பூச்சிகளின் முட்டைகளையும் பின்பு அஸ்வினி பூச்சியை உண்ணும் திறன் உடையது. இதன் மொத்த வாழ்நாள் சுமார் 15 நாட்கள். இந்த காலகட்டத்தில் சுமார் 500 அஸ்வினி பூச்சியை உண்ணும்.
  • பின்பு கூட்டு புழுவாக மாறி பின்னர் தாய் அந்து பூச்சியாக மாறும். 
  • தாய் வண்டுகள் மிக ஆக்ரோஷமாக அஸ்வினியை பிடித்து உண்ணும். இது சராசரியாக 50 முதல் 100 அஸ்வினியை தினம் தோறும் உண்ணும். 
  • பொறி வண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றை நிறம், முதுகு பகுதியில் காணப்படும் புள்ளி அல்லது கோடு மற்றும் உணர்கொம்பு நீளத்தை பொறுத்து வகைப்படுத்துவார்கள்.

 🦟🦗*எதை கட்டுப்படுத்தும்:*

பொறி வண்டுகளுக்கு மிகவும் பிடித்த உணவு அஸ்வினி. இதைத் தவிர சாறு உறிஞ்சும் பூச்சிகளான மாவு பூச்சி, செதில் பூச்சி, செம்பேன், பேன் மற்றும் வெள்ளை ஈக்களை உண்டு வாழும்.

🌱 *வயலில் ஏன் அவசியம்:*

  • இயற்கை முறையில் பூச்சி கட்டுப்பாடு 
  • ரசாயன மருந்து செலவு குறைவு 
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு 
  • விளைச்சல் அதிகரிப்பு 

 🌻*பொறி வண்டை எவ்வாறு அதிகரிப்பது:*

  • தீமை செய்யக்கூடிய பொறி வண்டுகளும் உள்ளன. முதுகுப்பகுதியில் 12 புள்ளிகளுக்கு குறைவாக உள்ள அனைத்து வண்டுகளும் நன்மை செய்யக்கூடிய பொறி வண்டுகளே.
  • வண்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரசாயன மருந்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • இயற்கை இடுபொருள்களான பஞ்சகாவியா தெளிப்பதன் மூலம் வண்டுகளின் வயலில் ஈர்க்கப்படும். 
  • ஊடுபயிராகவோ அல்லது கலப்பு பயிராகவோ அல்லது வரப்பு பயிராகவோ தட்டைப்பயிறு அல்லது சாமந்தி பயிரிட வேண்டும். 
  • குறைந்தபட்ச அளவில் அஸ்வினி பூச்சி நமது பயிர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் அப்போது மட்டுமே பொறி வண்டுகள் வயலுக்குள் வரும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு நமது குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE?mode=gi_t


புதன், 11 பிப்ரவரி, 2026

தற்சமயம் மா சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை

தற்சமயம் சாகுபடியில் உள்ள மா மரங்களில் சுமார் 40 சதவீதம் (பகுதிக்கு ஏற்ப மாறுபடும்) வரை பூக்கள் எடுத்துள்ளதை நாம் அறிவோம். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். 

💧நீர் மேலாண்மை:

1. மிக காய்ச்சலும் பாய்ச்சலமாக நீர் விட வேண்டும். 

2. அதிக நீர்ப்பாசனம் இளம் இலைகளை ஊக்குவிக்கும் இதனால் பூ பிடிக்கும் திறன் குறையும்.

3. பெரும்பான்மையான மரங்கள் காய் பிடிக்கும் தொடங்கும் தொடங்கும் தருணத்தில் நீர் விடலாம்.

4. அதிக வெப்பநிலை காரணமாக மரங்கள் சோர்வடையும் நேரத்தில் சிறிதளவு நீர் பாய்ச்சலாம். 

5. அளவுக்கு அதிகமான நீர் பற்றாக்குறை ஏற்பட்டால்  மகரந்த சேர்க்கையில் பாதிப்பு ஏற்படும்.

6. நீண்ட இடைவெளிக்கு பிறகு திடீரென அளவுக்கு அதிகமாக  நீர் பாய்ச்சினால் பூக்கள்  உதிர வாய்ப்புகள் உள்ளது. 

🥭ஊட்டச்சத்து மேலாண்மை:

1. தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். அல்லது மிக மிக குறைவாக கொடுக்கலாம்.

2. அதிக தழைச்சத்துக் கொடுத்தால் சுமார் 40% வரை பூக்கள் உருவாவதை குறைக்கும்.

3. கால்சியம் மற்றும் போரான் ஊட்டச்சத்துக்களை இழை வழியாக தெளிக்கலாம்.

4. இவை இரண்டும் பூக்களின் ஆரோக்கியத்தை   உறுதிப்படுத்தும். 

5. இதனால் பூ மற்றும் காய்  உதிர்வு குறையும், மகரந்த சேர்க்கை அடைந்த  பூக்கள் காயாக மாறும். 

🌺பூப்பிடித்தலை ஊக்குவித்தல்:

1. பூ பிடித்தலை ஊக்குவிக்க இயற்கையாகவே பயிரில் வளர்ச்சி ஊக்கிகள் உற்பத்தியாகும்.

2. மா போன்ற அதிக பூக்கும் திறன் உடைய மரங்களில்  இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படும் வளர்ச்சி ஊக்கி போதுமானதாக இருக்காது. 

3. இந்த தருணத்தில் நாம் இடைவெளியாக தேவையான வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டும்.

4. இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் பஞ்சகவ்யா அல்லது தேமோர் கரைசல் தெளிக்க வேண்டும். 

5. இரசாயன முறையில் தெளிக்க NAA பத்து லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி + போரான் + ஒட்டும் திரவம் ஆகியவற்றை கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

6. Cytocyme அல்லது Homobrassinolide அல்லது  கடல்பாசி உரம் அல்லது humic அமிலம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றையும்   தெளிக்கலாம்.

🥭காய் பிடிப்பு திறனை மேம்படுத்துதல்:

1. தேனீக்களின் நடமாட்டத்தை அதிகரிக்க ரசாயன மருந்துகள் தெளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

2. வயலில் களைகள் இருந்தால்  அதை அழிக்க ரசாயன மருந்துகள் எதுவும் தெளிக்க வேண்டாம். 

3. களைச் செடிகளில் பூக்கள் இருந்தால் நன்மை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் தேனீக்களின் வருகை  அதிகரிக்கும்.

4. ஏக்கருக்கு நான்கு எண் தேனீ பெட்டிகள் ஆங்காங்கே வைக்க வேண்டும். 

5. போரான் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் தெளிக்க வேண்டும்.

6. மேலும் பூச்சி நோய் கட்டுப்பாடு மிக அவசியம். 

🪰பூச்சி மேலாண்மை: 

1. தற்சமயம் தத்துப்பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. 

2. இவை  பூங்கொத்துகளில் சாற்றை உறிஞ்சுவதால் கருகல் ஏற்படுகிறது.

3. மேலும்  கரும்பூஞ்சன நோய் தொற்றும் ஏற்படும்.

4. மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்ட பூங்கொத்துகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். 

5. தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த பூச்சி விரட்டி திரவம் அல்லது உயிரில்  பூச்சிக்கொல்லியை பயன்படுத்தலாம்.

6. இதர புழு பூச்சிகளை கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும்.

🌳நோய் மேலாண்மை:

1. பூங்கொத்து உருக்குலைவு மற்றும் பூங்கொத்து கருகல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. 

2. இந்த இரண்டு நோய்க்குமே மிக தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதியை அப்புறப்படுத்திவிட்டு சூடோமோனஸ் தெளிக்க வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு  இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE?mode=gi_t


செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

பார்த்தீனியம் களையும் அதன் மேலாண்மையும்...

  • பார்த்தீனியம் செடிகளின் விதைகள் மண்ணில் பல வருடங்கள் கெடாமல் இருக்கும். சாதகமான சூழ்நிலை அமையும் போது விதைகள் முளைத்து வருகிறது. 
  • சராசரியாக 40 முதல் 45 நாட்களில் செடிகள் பூ பிடிக்கிறது. ராபி பருவத்தில் மட்டும் 30 முதல் 35 நாட்களில் பூ பூக்கிறது. 
  • ஒரு பார்த்தீனியம் செடி சராசரியாக அதன் வாழ்நாளில் 15000 முதல் 18000 வரை விதைகளை உற்பத்தி செய்கிறது.
  • இந்த விதைகள் வெடித்து காற்றின் மூலமாகவும் கால்நடை மூலமாகவும் மனிதர்களின் செயல்பாடு காரணமாகவும் மிக எளிதாக பரவுகிறது. 
  • இதனை பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள் உதாரணத்திற்கு கேரட் புல், காங்கிரஸ் களை.
  • பார்த்தீனியம் செடிகளின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. எனவே இதை அப்புறப்படுத்தும் போது செடிகளை தொடாமல் இருப்பது நல்லது. 
  • இதன் விரைந்து வளரும் தன்மை, அதிக வறட்சி அதிக மழை போன்ற சாதாரண சூழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன், இதன் இனப்பெருக்க வேகம் போன்ற காரணத்தினால் மண்ணில் இருக்கக் கூடிய ஊட்டச்சத்துக்களை விரைந்து எடுத்துக்க கூடியது இதனால் செடிகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கப் பெறுவதில்லை.
  • இச்செடிகளில் இருந்து சுரக்கப்படும் வேதியல் பொருட்கள் பயிரின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது. 
  • பயிர்களுக்கு தேவைப்படும் மிக முக்கிய ஊட்டச்சத்துக்கான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் இந்த பார்த்தீனியம் செடியில் இருப்பதால் இதனை மக்க வைத்து பயன்படுத்துவதால் உரப் பயன்பாட்டை குறைக்கலாம். 
  • பல்வேறு ஆய்வு அறிக்கையின்படி பார்க்கும் பொழுது பார்த்தீனியம் செடிகளை மக்க வைத்து பயன்படுத்துவதால் இது மண்புழு உரத்திற்கு ஈடான ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பது தெரிய வருகிறது. 
  • பார்த்தீனியம் களையை கட்டுப்படுத்த மிதமான ஈரப்பதம் இருக்கும் பொழுது களை முளைப்பதற்கு முன்னதாக தெளிக்க கூடிய களை கொல்லிகளை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு Atrazine, Oxyflurofen, Pendimethlin, Metolachlor ஏதேனும் ஒன்றை தேவையான அளவு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து களைகள் முளைப்பதற்கு முன்பதாக தெளிக்கலாம்.
  • செடிகள் பூ பூப்பதற்கு முன்பதாக வேரோடு பிடுங்கி எடுப்பதால் வெகுவாக அதன் எண்ணிக்கையை வயலில் இருந்து குறைக்கலாம். 
  • 10 லிட்டர் தண்ணீருக்கு 200 முதல் 250 கிராம் உப்பு மற்றும் சிறிதளவு சோப்பு துண்டு ஆகியவற்றை கலந்து செடிகள் பூ பூப்பதற்கு முன்பு தெளிப்பதால் ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம். 
  • களைகள் முளைத்த பிறகு தெளிப்பதற்கு பல்வேறு களை கொல்லிகள் உள்ளது. உதாரணத்திற்கு Glyphosate, Gulfosinate ammonium, Metribuzine, 2,4-D முதலியவற்றை பயன்படுத்தலாம் பயிர்கள் இல்லாத நிலத்திற்கு மட்டும். 
  • பார்த்தீனியம் அதிகம் வளரும் நிலத்தில் தொடர்ச்சியாக இது பூ பூப்பதற்கு முன்பாக வேரோடு பிடுங்கி மண்ணில் இட்டு உழவு செய்வதால் நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும். அவ்வாறு 20 நாட்களுக்கு ஒரு முறை பின்பற்ற வேண்டும். 
  • சோளம், தட்ட பயிறு, பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்வதால் இதனை நிலத்திலிருந்து வெகுவாக குறைக்கலாம். மாற்று பயிராக சாமந்தி பயிரிடும்போது இதனால் சுரக்கப்படும் திரவத்தால் இதன் விதைகள் மற்றும் செடிகள் பாதிக்கப்படுகிறது.

  • மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE?mode=gi_t

புதன், 22 அக்டோபர், 2025

பருவ மழை காலங்களில் வாழை சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...

பருவ மழை காலங்களில் வாழை சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...

    முக்கனிகளில் ஒன்றான வாழை பயிரானது இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் பழப்பயிரில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பயிராக கருதப்படுகிறது. வாழை மரங்கள் மென்மையான வேர் அமைப்புடையதாக திகழ்வதால் பருவமழை காலங்களில் தொடர் மழை அல்லது அதிக காற்று காரணமாக மரங்கள் சாய நேரிடலாம். குறிப்பிட்ட சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மரங்கள் சாய்வதை சற்று குறைக்கலாம்.

  • வடிகால் வசதியை மேம்படுத்தி நீர் தேங்கி நிற்பதை தவிர்க்க வேண்டும். 
  • வாழைக் கன்றுகளுக்கு மண் அணைக்க வேண்டும். இதன் மூலம் வேர்கள் மண்ணை இறுகப் பிடித்துக் கொண்டு அதிக காற்று நேரத்தில் சாயாமல் இருக்க உதவி புரியும்.
  • மேட்டுப்பாத்தியில் நடவு செய்திருந்தால் அதன் உயரத்தை சற்று அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் வரிசைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் எளிதில் நீர் ஓடி வழிந்து விடும். 
  • நோய் அல்லது பூச்சி தாக்கல் பாதிக்கப்பட்ட அடி இலைகளில் ஒன்று அல்லது இரண்டினை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு மேல் இலைகளை அப்புறப்படுத்தவே தவிர்க்க வேண்டும். 
  • கன்றுகளின் உச்சிப் பகுதியில் உள்ள இலைகளை சற்று கிழித்து விடலாம் இது காற்று எளிதில் நுழைந்து வர உதவி புரியும். இதனால் பயிர்கள் சாய்வதை தவிர்க்கலாம். 
  • தார் தள்ளிய  மரங்களுக்கு கண்டிப்பாக மூங்கில் கலிகளை பயன்படுத்தி முட்டுக் கொடுக்க வேண்டும்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் காய்ந்த இலை அல்லது தண்டு பகுதி வயலில் அழுகுவதை தவிர்க்க வேண்டும். 
  • தற்சமயம் திகழும் தட்பவெப்ப சூழ்நிலை வேர் அழுகல், வாடல் நோய், தண்டு அழுகல் நோய், மஞ்சள் மற்றும் கருப்பு இலை புள்ளி நோய் உருவாக வாய்ப்புகள் உள்ளது. அதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தற்போது கிடைக்கப்பெறும் ஈரப்பதத்தை பயன்படுத்தி மண்ணில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் பூஞ்சான  மற்றும் பூச்சிக்கொல்லி திரவங்களை பயன்படுத்த வேண்டும். 
  • இது பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தடுக்க உதவி புரியும் மேலும் மண்ணின் வளத்தை அதிகரிக்கும். 
  • கண்டிப்பாக தற்போது மண்ணைக் கிளறி ரசாயன அல்லது இயற்கை உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும்.
  • ரசாயன உரங்கள் இடுவதால் மிக எளிதில் கரைந்து வயலை விட்டு வெளியேறலாம் அல்லது மண்ணில் ஆழமாக சென்று பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் நிலத்தடி நீருடன் கலக்கும். 
  • மண்ணைக் கிளறுவதால் வேர்களின் பிடிப்பு திறன் சற்று குறையும். இந்த மரங்கள் அதிக காற்று வீசும் போது எளிதில் சாயலாம். 
  • மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உதாரணத்திற்கு வரப்புகளை உயர்த்துதல், மூடாக்கு இடுதல் மற்றும் இதர. 
  • இதை அனைத்தும் பின்பற்றிய பிறகும் அதிக காற்று காரணமாக மரங்கள் சாய்ந்தால் உடனடியாக தங்களது பகுதி தோட்டக்கலை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 
  • இதன் மூலம் சாய்ந்த மரங்களுக்கு இழப்பீடு பெற வாய்ப்புள்ளது. அரசு வழிகாட்டு நெறிமுறையின் அடிப்படையில். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் மண்ணில் அமோனியம் சல்பேட் இடலாம். இது ஊட்டச்சத்து ஆகவும், நோய் பரவலை தடுக்கவும், காற்றில் உள்ள வெப்பநிலையை எடுத்து பயிர்களுக்கு கொடுக்கும் உதவி புரியும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy?mode=wwc


புதன், 15 அக்டோபர், 2025

தென்னை மரத்தில் பூஞ்சை - பாசி வளர்ச்சி (Lichens) மற்றும் அதன் மேலாண்மை...

தென்னை மரத்தில் பூஞ்சை - பாசி வளர்ச்சி (Lichens) மற்றும் அதன் மேலாண்மை...

  • தென்னை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதலை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் பருவ மழை காலங்களில் தென்னை மரத்தின் தண்டு பகுதியில் நோய் போன்ற காட்சி அளிக்கும் பூஞ்சை - பாசி வளர்ச்சியை பற்றி நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். 
  • லிச்சென் (Lichen) என்பது பூஞ்சை மற்றும் பாசிகள் இணைந்து வளரும் அமைப்பாகும். இந்த உயிரினம் அடர் காடுகளில் மரத்தின் தண்டு பகுதி, பாறைகள், மண் மற்றும் இதர பொருட்களில் வளர்வதை நாம் காண இயலும்.
  • இதில் காணப்படும் பூஞ்சை காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை எடுத்து வளரும். பாசிகள் இதில் வளர்ந்து கிடைக்கப்பெறும் வெப்பநிலையை பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்து பூஞ்சைகளுக்கு கொடுத்து வாழும்.
  • பல நூறு வகையான லிச்சென்கள் உள்ளன அவற்றில் குறிப்பிட்ட சில வகை குடும்பத்தில் காணப்படும் பேரினங்கள் மற்றும் சிற்றினங்கள் மட்டுமே இந்தியாவில் தென்னை மரத்தின் தண்டு பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன Graphina, Leptogium, Lecanora, Pyxine, Myriotrema, Porina. லிச்சென்கள் பல்வேறு நிறம் மற்றும் வடிவில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

லிச்சென் வளர்வதற்கான சாதகமான சூழ்நிலை:

  • தொடர்ச்சியான மழை 
  • அதிக காற்று ஈரப்பதம் 
  • அளவுக்கு அதிகமான நிழல்
  • போதிய காற்றோட்டம் இன்மை 
  • அடர் நடவு 
  • பராமரிப்பு இல்லாத தோப்புகள்

லிச்சென் வளர்ச்சி காரணமாக ஏற்படும் பாதிப்புகள்:

  • லிச்சென்கள் நேரடியாக மரங்களை பாதிப்பதில்லை ஏனெனில் இதற்கு தேவையான தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தென்னை மரங்களை கிடைப்பதில்லை. 
  • நேரடியாக பயிர்களை பாதிக்காவிட்டாலும் கவனிக்கப்படவில்லை எனில் இந்த பூஞ்சை பாசி வளர்ச்சி படிப்படியாக பரவி மரத்தின் இலை பகுதியை தாக்கினால் பயிர் வளர்ச்சி தடைபடுவதுடன் மகசூல் இழப்பீடும் ஏற்படும். 
  • மேலும் இது இதர பூச்சி நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • மரங்களுக்கு உரிய நேரத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீர் கொடுத்து முறையாக பராமரிக்க வேண்டும். 
  • ஒன்று அல்லது இரண்டு ஓலைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் போதிய வெப்பநிலை மற்றும் காற்றோட்டம் மரத்தின் தண்டு பகுதிக்கு கிடைக்கும்.
  • பாதிக்கப்பட்ட தோப்புகளில் பல்லாண்டு பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்ய வேண்டும்.
  • ஆரம்ப நிலை வளர்ச்சியின் பொழுது தண்ணீரைப் பீச்சி அடித்து இதனை அப்புறப்படுத்தலாம்.
  • இந்த பூஞ்சை பாசிகளை கண்டிப்பாக சுரண்டி எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • சுரண்டி எடுத்த பிறகு இந்த பகுதியில் போர்டோ கலவை அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு உடன் ஓட்டு பசை கலந்து தெளிக்க வேண்டும்.
  • தேவையின் அடிப்படையில் இந்த தெளிப்பை இரண்டாவது முறை தெளிக்க வேண்டும். 
  • பிறகு தண்டு பகுதியில் சுண்ணாம்பு பூச வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


தென்னை சாகுபடியில் பருவ மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...


தென்னை சாகுபடியில் பருவ மழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...

    பருவமழை காலங்கள் பொதுவாக பயிர் வளர்ச்சிக்கு சாதகமாகவே திகழ்கின்ற மேலும் நிலத்தடி நீரை மேம்படுத்துகிறது. இருப்பினும் அளவுக்கு அதிகமான மழை, நீர்த்தேக்கம், காற்று, தொடர்ச்சியான மண் ஈரப்பதம் ஆகியவை பயிர் வளர்ச்சியை பாதிப்பதுடன் பூச்சி நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும். அதற்கு உதாரணமே"தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம்" என்ற பழமொழி ஆகும்.

தென்னை போன்ற பல்லாண்டு பயிர்களில் பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது சால சிறந்தது. 

  • வடிகால் வசதியை சீரமைத்து நீர் தேங்குவதை தவிர்க்கவும். 
  • தென்னை மரத்தின் அடித்தண்டு பகுதியில் அதாவது கழுத்துப் பகுதியில் கண்டிப்பாக நீர் தேங்கா கூடாது. 
  • எனவே அடித்தண்டு பகுதியில் மிதமான அளவில் மண் அணைப்பது உகந்தது. 
  • தொடர்ச்சியாக நீர் தேங்குவதால் ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறி மற்றும் வேர் சார்ந்த அழுகல் நோய் ஏற்படலாம் இதன் மூலம் பெரிய அளவில் மகசூல் இழப்பீடு ஏற்படும். 
  • வட்டப்பாதையில் மூடாக்கு அமைத்து கிடைக்கப்பெறும் நீரை நிலத்தடியில் சேமிக்கலாம். 
  • மூடாக்கிற்கு காய்ந்த மட்டைகள், தூளாக்கப்பட்டு மக்க வைத்த மட்டை தூள்கள், தேங்காய் மட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதன் மூலம் மண்ணின் அரிப்பை தடுக்கலாம். 
  • நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம் இடலாம். இது நீர் பிடிப்பு திறனை மேம்படுத்தும். 
  • பருவமழை காலங்களில் ரசாயன உரங்கள் இடுவதை தவிர்க்கலாம். ஏனெனில் ரசாயன உரங்கள் எளிதில் கரைந்து வேர்களுக்கு கிடைக்காத வண்ணம் ஆழமாக செல்லலாம். 
  • அல்லது அதிக மழைப்பொழிவு காரணமாக வயலில் இருந்து வெளியே அடித்து செல்ல வாய்ப்புகள் உள்ளன. 
  • ரசாயன உரம் இட முன் பருவ அல்லது பின் பருவ மழை காலங்களை மிக நேர்த்தியாக பயன்படுத்தலாம். இந்த நேரங்களில் நமக்கு தேவையான மண் ஈரப்பதம் இருக்கும் 
  • பருவமழை காலங்களில் நல்ல ஈரப்பதம் இருப்பதால் உயிர் உரங்கள் அதிக அளவு பயன்படுத்தலாம் இது மண்ணில் பல்கி பெருகும். 
  • பருவமழை முடிந்த பிறகு மண்ணின் கார அமிலத்தன்மையை ஆய்வு செய்து அதனை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில் அதிக மழை பெய்தால் ஊட்டச்சத்துக்கள் கரைந்து வெளியேறும் இதனால் அமில காரத் தன்மையில் கண்டிப்பாக மாற்றம் காணப்படலாம். 
  • இளம் தென்னங்கன்றுகள் மற்றும் பராமரிப்பு இல்லாத தென்னந்தோப்புகளில் குருத்தழுகல் நோய் ஏற்பட அதிகமாக வாய்ப்பு உள்ளது அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவும். 
  • பருவமழை காலங்களில் மரத்திற்கு அருகாமையில் ஆழமாக உழவு செய்வதை தவிர்க்கலாம். இது வேர்களை காயப்படுத்தும் இதனால் நோய் தாக்குதல் மிக எளிதில் ஏற்படலாம். 
  • மேலும் இதன் காரணமாக வேர்கள் மண்ணை இறுக்கமாக பிடித்து கொண்டிருக்கும் சூழல் குறையும். இது போன்ற நேரங்களில் அதிக காற்று அடித்தால் மரங்கள் சாய் வாய்ப்புள்ளது. 
  • தண்டு மற்றும் அடித்தண்டு பகுதியில் தொடர்ச்சியாக ஈரப்பதம் காணப்பட்டால் பூஞ்சை மற்றும் பாசி வளர்வதை காண இயலும். அவ்வாறு தென்பட்டால் உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு சுண்ணாம்பு அடித்து விடவும். 
  • காய்ந்த நிலையில் இருக்கும் அடி இலைகளை மரத்தின் தண்டு பகுதியில் இருந்து இரண்டு அடி தள்ளி வெட்டி அப்புறப்படுத்தலாம். 
  • மரத்தின் கொண்டைப் பகுதியில் காணப்படும் பன்னாடை, காய்ந்த மட்டைகள் மற்றும் குரும்பைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்தலாம். ஏனெனில் இது குருத்துப் பகுதியில் நோய் தாக்குதல் அல்லது பூச்சி தாக்குதலை ஊக்கப்படுத்தலாம்.
  • தோப்பில் காணப்படும் மட்டைகளை சேகரித்து வரப்பில் அடுக்கி வைக்க வேண்டும். மழை நேரங்களில் உதிர்ந்த மட்டைகள் நிலத்தில் அழுகினால் நோய் மற்றும் வண்டு தாக்குதல் வர வாய்ப்புள்ளது. 
  • ஆனா வரி தோப்புகளில் ஆங்காங்கே சிறு சிறு குழிகளை வெட்டி மழை நீரை சேகரித்து நீர்மட்டத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம். 
  • வானிலை அறிக்கையை பின்பற்றி அதற்கு ஏற்றவாறு அறுவடை பணியை செய்ய வேண்டும். அதிக காற்று அல்லது மழை பெய்யக்கூடும் என கருதப்படும் நேரத்தில் மரம் ஏறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 
  • மரங்களுக்கு காப்பீடு செய்து வைப்பது மிக மிக சிறந்தது.
  • வட்டப்பாத்திகளுக்கு இடைப்பட்ட பகுதியில் கிடைக்க பெறும் மழை நீரை பயன்படுத்தி பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழவு செய்யலாம். இது மண் வளத்தை மேம்படுத்தும்.
  • தஞ்சாவூர் வாடல், வேர் வாடல் மற்றும் அழுகல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதன் அறிகுறிகளை தொடர்ச்சியாக கண்காணிக்கவும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

சனி, 30 ஆகஸ்ட், 2025

வாழை மரங்களில் வாழைத்தார் தண்டு பகுதியில் வெளி வருவதற்கான காரணங்களும் அதை சரி செய்யும் வழிமுறையும்

    வாழை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல், விவசாயிகளுக்கு மிக சவாலாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  பூச்சி நோய் தாக்குதல்,  ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்,  நிலவும் அசாதாரண தட்பவெப்ப சூழ்நிலை, தவறான பருவத்தை தேர்வு செய்து நடவு செய்தல், ஊட்டச்சத்து சரிவிகித இன்மை,  பயிர்களில் உற்பத்தியாகும் வளர்ச்சி ஊக்கியில் மாறுதல் மற்றும் சில காரணங்களால் சில பயிர் வினையியல் மாறுபாட்டின் அறிகுறிகள் ஏற்படுகிறது. 

    இதனை ஆங்கிலத்தில் Physiological Disorder என அழைப்பார்கள். வாழை பயிரில் தோன்றும் ஒரு வகையான பயிர் வினையியல் அறிகுறிதான் மேற்கண்ட புகைப்படத்தில் காணப்படுவது. இதனை ஆங்கிலத்தில் Choke throat என்று அழைப்பார்கள். வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். 

Choke throat பயிர் வினையியல் மாறுபாட்டின் அறிகுறிகள்:

  • வாழை மரத்தில் பூக்கள் வெளிவர இருக்கும் தருணத்தில் கணு இடைவெளி குறைந்து காணப்படும். 
  • இதனால் பயிரின் கழுத்துப் பகுதியில் திசுக்கள் மிக இறுகி காணப்படும்.
  • இலை காம்புகளின் நீளம் குறைந்தும், அது தண்டுடன் இணையும் இடத்தில் சற்று அகலமாகவும் இருப்பதால் மேலும் கழுத்துப் பகுதியில் திசுக்கள் இறுகி காணப்படும். 
  • அதன் காரணமாக கழுத்து அல்லது உச்சிப் பகுதியில் இருந்து வெளிவர இருக்கும் பூ காம்பு வெளிவர இயலாத சூழ்நிலை ஏற்படும். 
  • இதன் காரணமாக பூ காம்பு தண்டுப் பகுதியின் ஏதேனும் ஒரு இடத்தில் இலை உறைகளை கிழித்து வெளியே வரும்.
  • இவ்வாறு வெளிவரும் பூக்காம்பில் குறைந்த அளவு காய் பிடிப்பு மட்டுமே காணப்படும். சில நேரங்களில் முற்றிலும் காய் பிடிப்பதில்லை. 
  • பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மற்றும் சில அறிகுறிகள் பயிரின் குருத்துப் பகுதியில் காணப்படும். மேலும் ஒழுங்கற்ற வடிவில் காய்கள் உருவாகும். 
  • இவ்வாறு வெளிவரும் வாழைத்தார், தலைப்பகுதியில் இருந்து சற்று விலகி இருப்பதால் எளிதில் அதிக வெப்ப நிலைக்கு உட்பட்டு பாதிப்படையும். 

பயிர் வினையியல் மாறுபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • பூ காம்பு வெளிவரும் நேரத்தில் காணப்படும் குறைந்த வெப்பநிலை.
  • அதிக காற்று ஈரப்பதம் 
  • நீண்ட நாட்களுக்கு மேகமூட்டமான சூழ்நிலை அல்லது மிதமான மழைப்பொழிவு காணப்படுதல். 
  • பயிர்களுக்கு போதிய வெப்பநிலை கிடைக்காமல் நிழற்ப்பாங்கான இடத்தில் வளருதல். 
  • ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் அதிகம் காணப்படும். 
  • அதிக மற்றும் தொடர்ச்சியான மண் ஈரப்பதம், வயலில் நீர் தேங்கி காணப்படுதல் மற்றும் போதிய வடிகால் வசதியின்மை.
  • பராமரிப்பு குறைபாடு 
  • போதுமான அளவு ஊட்டச்சத்து கொடுக்காதது.

இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்: 

  • சரியான நடவு பருவத்தை தேர்வு செய்ய வேண்டும். 
  • அதாவது பூ காம்பு வெளிவரும் நேரத்தில் சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை திகழ கூடாது. 
  • போதுமான அளவு சூரிய ஒளி மற்றும் வெப்ப கால அளவு கிடைக்கப் பெற வேண்டும்.
  • உகந்த ரகங்களை தேர்வு செய்ய வேண்டும் அதாவது சற்று உயரமாக வளரக்கூடிய ரகங்கள்.
  • வடிகால் வசதியை மேம்படுத்துதல்.
  • நீண்டகால வறட்சி மற்றும் அதற்குப் பிறகு நீர் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 
  • சரிவிகித முறையில் ஊட்டச்சத்துக்களை கொடுத்து வர வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

புதன், 23 ஜூலை, 2025

பூஞ்சானக் கொல்லிகள் தெளிக்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை...

பூஞ்சானக் கொல்லிகள் தெளிக்கும் பொழுது கவனிக்கப்பட வேண்டியவை...

  • பயிர்களின் தேவையை அறிந்து அல்லது நோய் அல்லது பூச்சிகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு உரிய மருந்துகளை தேர்வு செய்ய வேண்டும். 
  • மருந்துகள் அல்லது வளர்ச்சி ஊக்கிகளை வாங்குவதற்கு முன்னதாக நாம் வாங்கும் கடை அரசின் மூலம் உரிய அனுமதி பெற்று இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். 
  • நல்ல நிறுவனத்தின் பொருளை தேர்வு செய்ய வேண்டும்.
  • பொருட்களை வாங்கும் பொழுது அதன் தரம், காலாவதி நாள் மற்றும் லேபிள் உள்ளதா என்பதை ஆராய்ந்து வாங்க வேண்டும். 
  • மருந்துகள் அல்லது வளர்ச்சி உக்கிகளை தெளிப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட அளவில் நீரில் கலந்து மாலை அல்லது காலை வேளையில் தெளிக்க வேண்டும். 
  • மாலை அல்லது காலை வேளையில் தெளிப்பதன் மூலம் மருந்துகள் அதிக வெப்பநிலை காரணமாக ஆவியாகி வீணாவதை தடுக்கலாம். 
  • மேலும் இந்த நேரத்தில் இலை துளைகளின் செயல்பாடுகள் மிகுந்து காணப்படுவதால் மருந்துகள் எளிதில் இலைகளால் எடுத்துக் கொள்ளப்படும்.
  • மருந்துகளை தெளிப்பவர்கள் முக கவசம் மற்றும் இதர உரிய பாதுகாப்பு அம்சங்களுடன், காற்று வீசும் திசையில் சென்று தெளிக்க வேண்டும். 
  • தெளிக்கும் பொழுது வரிசை வரிசையாக சென்று இருபுறமும் உள்ள பயிர்களுக்கு தெளிப்பதன் மூலம் மருந்துகள் முழுமையாக பயிர்களை சென்றடைவதை உறுதிப்படுத்தலாம். 
  • மருந்து அல்லது வளர்ச்சி ஊக்கி தெளிக்க உரிய தெளிப்பான் தேர்வு செய்து, மருந்துகள் இலையின் மேற்புறம் அல்லது அடிப்புரத்தில் பனித்துளி மாதிரி படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு தெளிக்கும் பொழுது  மருந்தின் செயல்பாடு மேம்படும்.
  • நோய் மற்றும் பூச்சிகளின் பாதிப்பு காரணிகள் பெரும்பான்மையாக இலைகளின் அடிபுரத்தில் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு தெளிப்பு மேற்கொள்ள வேண்டும்.
  • தெளிப்பு மேற்கொண்டதில் இருந்து குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் மழை பொழிவு இல்லாமல் இருந்தால் மருந்துகள் நன்றாக செயல்படும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம். https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


புதன், 25 ஜூன், 2025

மணல் சார்ந்த மண் பூமியில் சாகுபடி செய்யும் போது கவனிக்கப்பட வேண்டியவை

  • அதிக மணல் தன்மையுடைய மண்ணில் அனைத்து வகையான பயிர்களையும் சாகுபடி செய்வது கடினமாகும். இது மட்டுமின்றி மண்ணில் துகள்களுக்கு இடைப்பட்ட இடைவெளி அதிகமாக இருப்பதால் ஊட்டச்சத்துக்கள் எளிதில் மண்ணுக்கு அடியில் சென்று பயிர்களுக்கு எட்டாத வண்ணம் சென்றுவிடும். 
  • தண்ணீரும் அதே போன்று தான் ஆழமாக சென்று விடுவதால் பயிர்களால் எடுத்துக் கொள்ள முடியாது இதனால் மீண்டும் மீண்டும் அதாவது குறுகிய இடைவெளியில் நாம் நீர் பாய்ச்சல் வேண்டிய தேவை இருக்கும். எனவே இந்த மண்ணை மேம்படுத்தி சாகுபடிக்கு கொண்டு வர கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.

வழிமுறைகள்:
மக்கிய உரங்களை இடுதல்:

  • இங்கு மக்கிய உரங்கள் என்பது கால்நடை தொழு உரம், பண்ணை கழிவு உரம், மண்புழு உரம் மற்றும் கிடைக்கப்பெறும்  மட்கு பொருளை பயன்படுத்தலாம்.
  • இவ்வாறு இடும் பொழுது மணல் துகள்களுக்கு இடைப்பட்ட இடைவெளி குறைவதால் இவை எளிதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நீரை தக்க வைத்துக் கொள்கிறது. 
  • இதன் மூலம் பயிர்களுக்கு போதுமான அளவு சத்துக்களும் நீரும் கிடைக்கப் பெறுவதுடன் நல்ல வேர் வளர்ச்சி காணப்பட்டு வேர்கள் மண்ணை இறுக பற்றி நன்கு வளரும்.
  • இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் பயிர்களின் வேர் அமைப்புக்கு ஏற்றவாறு தொழு உரங்களை குறிப்பிட்ட அளவிற்கு ஆழமாக இடவேண்டும்.

இயற்கை நிலப் போர்வை அமைத்தல்:

  • பண்ணையில் கிடைக்கப்பெறும் பொருட்களை பயன்படுத்தி இயற்கை முறையில் நிலப் போர்வை அமைக்கலாம். உதாரணத்திற்கு வைக்கோல், பயிர் கழிவுகள், தீவனக் கழிவுகள், களைகள் மற்றும் இதர. 
  • இதன் மூலம் தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆவியாகி வீணடிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. அவர் தடுக்கப்படும் பொழுது பயிர்கள் இதனை எடுத்துக் கொள்ளப் போதிய நேரம் இருக்கும்.
  • இது மட்டுமின்றி மண் அரிப்பு தடுக்கப்படும் மற்றும் களைகள் முளைப்பது வெகுவாக குறையும்.
  • நாளடைவில் இந்த இயற்கை வழி நிலப் போர்வை படிப்படியாக மக்கும் பொழுது  ஊட்டச்சத்துக்கள் மண்ணில் அதிகரிக்கும்.

இதர மண்ணை இடுதல்:

  • மணல் பாங்கான மண் தன்மையை மேம்படுத்த மிதமான அளவு கருப்பு மண் அல்லது வண்டல் மண்ணை இட்டு உழவு செய்ய வேண்டும். 
  • இதன் மூலம் நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறனை மேம்படுத்தலாம். 
  • அளவுக்கு அதிகமாக இடக்கூடாது இது மண்ணை மேலும் இறுக செய்துவிடும்.

பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்தல்:

  • பசுந்தாள் பயிர்களை மிக நெருக்கமாக சாகுபடி செய்து மடக்கி உழவு செய்ய வேண்டும்.
  • இதன் வேர்கள் மேல் மண்ணை மிக இறுக்கமாக பிடித்து வைத்து இருப்பதுடன் தழைச்சத்து உரத்தை நிலை நிறுத்திக் கொடுக்கும்.
  • இவற்றை மடக்கி உழவு செய்வதால் அதிக அளவு பயிர் கழிவுகள் மண்ணில் மக்குவதன் மூலம் நீர் மற்றும் ஊட்டச்சத்து பிடிப்பு திறன் மேம்படும். 

உர மேலாண்மை:

  • நீரில் கரையும் உரங்களை சிறிது சிறிதாக பிரித்துக் கொடுக்கலாம். 
  • அல்லது ஊட்டச்சத்துக்களை பொறுமையாக கரையை செய்து பயிர்களுக்கு கொடுக்கும் உரங்களை பயன்படுத்தலாம். 
  • தேவைக்கு ஏற்ப இலை வழியாக ஊட்டச்சத்துக்களை தெளித்து வர வேண்டும்.

நீர் மேலாண்மை:

  • வாய்க்கால் வழி பாசனத்தை தவிர்க்க வேண்டும். இது நீர் தேவையை அதிகரிக்கும்.
  • சொட்டுநீர் பாசனம் மூலம் நீர் பாய்ச்சுவது மிகவும் உகந்தது.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

வெள்ளி, 23 மே, 2025

தென்னை சாகுபடியில் கோகோகான் உயிரியல் திரவத்தின் முக்கியத்துவமும் தயாரிப்பு முறையும்

    தென்னை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும், பிரதான நோய்களாக வேர் வாடல் மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய் காணப்படுகிறது. இந்த இரண்டு நோய்களும் மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவதுடன் பயிர் இறந்து விடுவதால் ஒட்டுமொத்த உற்பத்தியும் பாதிக்கும் அபாயம் உள்ளது. 

 இந்த நோய்களை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டாலும் முன்னெச்சரிக்கையாக அல்லது ஆரம்ப நிலை அறிகுறிகள் காணப்படும் பொழுது தென்னை மரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் கோகோகான் (Cococon) பயன்படுத்துவதன் மூலம் ஆரம்ப நிலையில் காணப்படும் நோய்களை  கட்டுப்படுத்துவதுடன் பயிர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து அளித்து நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும். 

கோகோகான் உயிரியல் திரவத்தை தயார் செய்யும் வழிமுறைகள்:

  • 200 லிட்டர் கொள்ளளவு உடைய ட்ரம்மில் 150 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • இதில் 10 கிலோ நாட்டுச் சர்க்கரை, 5 லிட்டர் தயிர் மற்றும் 500 கிராம் சமையல் உப்பு ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி விட வேண்டும். 
  • இந்த கலவையில் 5 லிட்டர் தாய் கோகோகான் கலவையை கலந்து நன்கு கலக்கி விட வேண்டும். 
  • இந்தக் ட்ரம்மை சாக்கு பை பயன்படுத்தி மூடி நிழலில் வைக்க வேண்டும். 
  • தினசரி குறைந்தது இரண்டு முதல் மூன்று முறை சுத்தமான மூங்கில் கழியை பயன்படுத்தி நன்கு கலக்கி விட வேண்டும். 
  • 7 நாட்களுக்கு பிறகு இதில் இருக்கக்கூடிய நுண்ணுயிர் கலவை நன்கு வளர்ந்து விடும் பிறகு இதனை பயிர்களுக்கு பயன்படுத்தலாம். 
  • தயார் செய்த கலவையில் இருந்து இரண்டு லிட்டர் எடுத்து 8 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மரத்திற்கு 10 லிட்டர் வீதம் மிதமான ஈரப்பதம் இருக்கும் பொழுது வேர் பகுதியில் ஊற்ற வேண்டும். 
  • இந்த நுண்ணுயிர் கலவையை இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என தொடர்ச்சியாக பயன்படுத்தலாம். 
  • இந்த நுண்ணுயிர் கலவையை பயன்படுத்தும் போது ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். 

பயன்கள்:

  • பயிர்களுக்கு தேவையான    சத்துக்களை எளிதில் கிடைக்கச் செய்கிறது. 
  • மரங்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கும். 
  • நல்ல பயிர் வளர்ச்சி காணப்படும்.
  • காய் பிடிப்பு திறன் மேம்பட்டு காணப்படும்.
  • மண்ணில் நன்மை செய்யக்கூடிய உயிரினங்களின் எண்ணிக்கை மேம்பட்டு காணப்படும். 
  • நீண்ட கால அடிப்படையில் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை அளிக்கும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை

இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிப்பில் கவனிக்கப்பட வேண்டியவை...

  • ரசாயன களைக்கொல்லிக்கு மாற்று இயற்கை வழியில் இல்லை என்றாலும், ஓரளவிற்கு களைகளை கட்டுப்படுத்த இயற்கை வழி தயாரிப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். 
  • இயற்கை முறையில் களைக்கொல்லி தயாரிக்க 10 லிட்டர் தண்ணீரில் 3 கிலோ சுண்ணாம்பை கலந்து ஒரு இரவு அதாவது 10 முதல் 12 மணி நேரம் காத்திருக்கவும்.
  • இதிலிருந்து தெளிந்த சுண்ணாம்பு தண்ணீரை மட்டும் பிரித்து எடுத்து அதில் நான்கு கிலோ கல்லு உப்பை நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு இந்த கலவையில் 3 லிட்டர் மாட்டு கோமியத்தை கலந்து இதனை நன்கு வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். 
  • இந்த கரைசலில் இரண்டு லிட்டர் வேப்ப எண்ணெய் கலந்து 10 முதல் 15 காத்திருந்தால் கரைசலின் மேலே ஆடை தோன்றும். இதனை நீக்கிவிட்டு கரைசலை கலைகளில் தெளிக்கலாம். 
  • இயற்கையின் முறையில் தயாரித்தாலும் இந்த களைக்கொல்லி கரைசலை தொடர்ச்சியாக வயலில் தெளிக்கும் பொழுது மண்ணின் மீது உப்பு போன்ற படலம் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • இந்த களைக்கொல்லி கரைசலை அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்த இயலாது குறிப்பாக காய்கறிகள், தானிய வகை பயிர்கள், நெல் போன்ற குறைந்த வாழ்நாட்கள் உடைய பயிர்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
  • பல்லாண்டு தாவரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இதனை பயன்படுத்தலாம் குறிப்பாக பழத்தோட்டங்கள், மரவகைப் பயிர்கள், மலைத் தோட்ட பயிர்கள் மற்றும் பல.
  • இந்த கரைசலை பயன்படுத்தி அனைத்து வகையான களைகளையும் கட்டுப்படுத்த இயலாது. குறிப்பிட்ட சில வகை கீரை வகை பயிர்களை மட்டும் கட்டுப்படுத்தும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


சனி, 26 ஏப்ரல், 2025

குறுவை பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்களும் அதன் பண்புகளும்

  • தமிழ்நாட்டில் நெல் சாகுபடியில் பல்வேறு பருவங்கள் இருந்தாலும் பிரதான பருவமாக குறுவை பருவம் திகழ்கிறது. குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. 
  • ஜூன்-ஜூலை மாதங்களில் தொடங்கும் குறுவை பருவம் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் முடிவதால் சுமார் 125 நாட்கள் வாழ்நாள் உடைய நெல் ரகங்கள் தேர்வு செய்து பயிரிடப்படுகிறது.
  • பொதுவாக இந்த பருவத்தில் போதுமான தண்ணீர் வசதி இருப்பதால் நேரடி நெல் விதைப்பு அல்லது புழுதி விதைத்து செய்யப்படுவதில்லை மாற்றாக, பெரும்பான்மையாக நடவு முறையே மேற்கொள்ளப்படுகிறது. இந்த குறுவை பட்டத்திற்கு ஏற்ற நெல் ரகங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

TPS-5

  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் திருப்பதிசாரம் ஆராய்ச்சி நிலையத்தால் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ரகம் குண்டு நெல் வகையைச் சார்ந்தது. 
  • இதன் சராசரி வாழ்நாள் 110 முதல் 115 நாட்கள் 
  • நெல் பயிர்கள் சாயாமல் இருப்பதுடன் அதிக விளைச்சல் தரக்கூடியது. ASD 16 ரகத்தை விட 10-15  சதவீதம் கூடுதல் விளைச்சல் தரும்.
  • சராசரி ஏக்கருக்கு 2500 கிலோ மகசூல் கிடைக்க வல்லது. 
  • ஓரளவிற்கு தண்டுப்புழு, புகையான் மற்றும் இலை சுருட்டு பூச்சிகளின் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் உடையது.

ASD -16

  • அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து 1986 ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ரகம் குண்டு நெல் வகையை சார்ந்தது.
  • இது மொத்த வாழ்நாள் 110 முதல் 115 நாட்களாகும். 
  • ஏக்கருக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவைப்படும். சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2000-2250 கிலோ கிடைக்கும். 
  • புகையான் பூச்சி தாக்குதலுக்கு ஓரளவிற்கு எதிர்ப்பு திறன் உடையது.

ADT-36

  • ஆடுதுறை நெல் ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெளியிடப்பட்ட இந்த ரகத்தின் மொத்த வாழ்நாள் சராசரியாக 110 முதல் 115 நாட்கள் ஆகும். 
  • இது நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்தது ஆகும். 
  • பல்வேறு வகையான இலை கருகல் நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உடையது மேலும் புகையான் பூச்சி தாக்குதலுக்கும் தாங்கி வளரும் தன்மை உடையது. 
  • இதன் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 1800 கிலோ ஆகும். 

ADT -37

  • இந்த நெல் ரகத்தின் சராசரி வாழ்நாள் 105 நாட்கள். 
  • குண்டு நெல் ரகத்தை சார்ந்த இந்த ரகம் அதிக விளைச்சல் தரக்கூடியது. 
  • நெல் பயிரில் தோன்றும் பல்வேறு நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன் உடையது. 
  • இதன் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2500 கிலோ ஆகும்.

ADT 43

  • நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்த இந்த ரகத்தின் சராசரி வாழ்நாள் 110 நாட்களாகும். 
  • சற்று உயரமாக அதிக எண்ணிக்கையிலான தூர்களுடன் காணப்படும்.
  • இதன் சராசரி விளைச்சல் 2300 கிலோ ஆகும்.

ADT 45

  • நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்த இந்த ரகத்தின் சராசரி வாழ்நாள் 110 நாட்களாகும். 
  • இந்த ரகத்தின் சராசரி விளைச்சல் 2500 கிலோ ஆகும்.
  • பல்வேறு நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன் உடையது குறிப்பாக புகையான் பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் உடையது.

MDU -5

  • 95 முதல் 100 நாட்கள் வாழ்நாள் உடைய நடுத்தர சன்ன நெல் ரகமாகும். 
  • தண்ணீர் பற்றாக்குறை காணப்படும் பகுதிகளுக்கு உகந்தது. 
  • ஏக்கருக்கு சுமார் 2000 கிலோ இதன் சராசரி விளைச்சல் ஆகும். 

MPR 404

  • மகேந்திரா என்று அழைக்கப்படும் இந்த ரகத்தின் சராசரி வாழ்நாள் 120 நாட்களாகும். 
  • இது குண்டு முதல் நடுத்தர நெல் வகையை சார்ந்த ரகம் எனவே நல்ல விளைச்சல் தரக்கூடியது. 
  • ஏக்கருக்கு சுமார் 20 கிலோ விதை அளவு மட்டுமே தேவைப்படும். 
  • இந்த ரகத்தின் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2500 கிலோ ஆகும். 

CO 51

  • 105 முதல் 110 நாட்கள் வயது கொண்ட இந்த ரகம் பல்வேறு நோய் மற்றும் பூச்சிகளை தாங்கி வளரும் தன்மை உடையது. 
  • இந்த ரகத்தின் சராசரி விளைச்சல் 2600 முதல் 2650 கிலோ ஆகும்.
  • நெல் பயிரை பிரதானமாக தாக்கும் பல்வேறு வகையான கருகல் நோய் மற்றும் புகையான் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் உடையது.

CO 45

  • நடுத்தர சன்ன நெல் வகையை சார்ந்த  இந்த ரகத்தின் மொத்த வாழ்நாள் 120 முதல் 125 நாட்களாகும். 
  • இந்த ரகம் 1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
  • பல்வேறு வகையான  கருகல் நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உடையதுடன் பூச்சி தாக்குதலை தாங்கி  வளரும் தன்மை உடையது.
  • இதன் சராசரி விளைச்சல் ஏக்கருக்கு 2500 கிலோ ஆகும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் (WhatsApp) குழுவில் இணைந்து பயன் பெறவும்.https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


திங்கள், 24 மார்ச், 2025

தென்னையில் இலை கருகல் ஏற்படுவதற்கான காரணங்களும் சரி செய்யும் வழிமுறையும்

தென்னையில் இலைக் கருகல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன....

  • வளம் குன்றிய தென்னங்கன்றுகளை தேர்வு செய்து நடவு செய்தல் 
  • தென்னங் கன்றுகளை அதிக ஆழமாக நடவு செய்வதால் வளர்ச்சி தடைப்பட்டு ஆரம்ப நிலையில் இலை கருகல் தென்படும்.
  • போதுமான தண்ணீர் இல்லாததால் தென்னங்கன்றுகள் மற்றும் இளம் வயது தென்னை மரங்களில் கருங்கல் தென்படும்.

  • மெக்னீசியம் மற்றும் மாங்கனிசு போன்ற ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இளம் கன்றுகளின் இலைகளில் கருகல் மற்றும் ஒழுங்கற்ற வடிவம் காணப்படலாம்.
  • அதேபோன்று நன்கு வளர்ந்த மரங்களில் இலை கருகல் தென்படுவதற்கு பிரதானமான காரணமாக பூஞ்சான நோய் திகழ்கிறது.
  • இந்த நோயினால் மரத்தின் அடிப்பகுதியில் உள்ள மூன்று முதல் நான்கு இலைகளின் நுனிப்பகுதியில் கருகல் காணப்படும். 
  • இது இலையின் நுனிப்பகுதியில் இருந்து அடி நோக்கி பரவும். 
  • இது மட்டும் இன்றி தண்டு மற்றும் இலைக்காம்பு பகுதியில் வெடிப்புகளும்,  அதிலிருந்து திரவம் வெளியேறுவதையும் காண இயலும்.

  • ஆனால் கடந்த ஆண்டு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணத்தினாலும் இலை கருகல் தென்பட்டது.

இதை சரி செய்யும் வழிமுறைகள்...

  • தரமான நாற்றுகளை தேர்வு செய்து நட வேண்டும்.
  • ஆழமாக நடவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • மண் இறுக்க தன்மையுடன் இல்லாமல் இருக்க போதுமான அளவு மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது புண்ணாக்கு வகைகளை இட வேண்டும்.
  • மண்ணில் உள்ள உரங்கள் மட்க வருடத்திற்கு இரண்டு முறை வேஸ்ட் டிகம்போசர் அல்லது ஈயம் கரைசல் பயன்படுத்த வேண்டும்.
  • போதுமான நுண்ணூட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி  செய்ய வேண்டும்.
  • பயிர்களை அதிக வளர்ச்சிக்கு படுத்தாமல் குறைந்தபட்ச நீர் தேவை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • இவை அனைத்தையும் கடைபிடித்தும் இலை கருகல் தென்பட்டால் நோய் காரணிகளாக இருக்கலாம்.
  • அதனை உறுதி செய்ய இலையின் நுனிப்பகுதியில் முக்கோண வடிவில் இலை கருகல் காணப்படும். மேலும் அதை உற்று கவனிக்கும் பொழுது தீயில் எறிந்து மீதமுடைய இலைகள் போன்று காணப்படும்.
  • இதனை இயற்கை வழி முறையில் கட்டுப்படுத்த Trichoderma harzianum மற்றும் Bacillus subtillis குறிப்பிட்ட இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த Hexaconazole என்ற மருந்தை 100 மில்லி தண்ணீரில் 5 மில்லி கலந்து வேர் வழியாக உட் செலுத்த வேண்டும். இதனை வருடத்திற்கு மூன்று முறையாவது பின்பற்ற வேண்டும்.

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

Recent Posts

Popular Posts