வாழை பயிரில் துரு இலைபேன் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முன்னுரை:
- இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் பழங்களில் குறைந்த செலவில் மனிதர்களுக்கு அதிக அளவு ஊட்டச்சத்துக் கொடுக்கக்கூடிய பழமாக வாழை திகழ்கிறது.
- வாழை உற்பத்தி போதுமான அளவு இருந்தாலும் தரமான காய்களை உற்பத்தி செய்வதில் சற்று பின்னடைவு காணப்படுகிறது. பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் வாழை சாகுபடியை பாதித்தாலும் காய்களின் தரத்தை மிகவும் பாதிக்க கூடியதாக சிகப்பு துரு இலைபேன் திகழ்கிறது.
- இந்த வகை இலைபேன் தாக்குதலால் மகசூலின் அளவு, சுவை மற்றும் ஊட்டச்சத்து விகிதத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:
முட்டை:
வெளிர் வெள்ளை நிறமுடைய முட்டைகளை தண்டு பகுதி, குருத்துப் பகுதி, பூக்கள் மற்றும் சிறு காய்கள் என பல்வேறு இடங்களில் இடுகிறது.
இளம் புழுக்கள்:
வெளிர் மஞ்சள் நிறத்தில் உடைய இளம் புழுக்கள் செடிகளின் பல்வேறு பகுதியில் இருந்து சாற்றை உறிஞ்சும்.
கூட்டுப் புழு:
முதிர்ந்த இளம் புழுக்கள் கூட்டு புழுவாக மாறி மண்ணில் விழுந்து விடுகிறது.
முதிர்ந்த பேன்:
இது செடிகளில் இருந்து சாதகமான பகுதியில்(இலையுறை, இலைகள், பூக்கள் மற்றும் காய்கள்) சாற்றை உறிஞ்சும். இதன் அளவு சுமார் 1 முதல் 1.5 மில்லி மீட்டர் அளவு மட்டுமே இருப்பதால் கண்ணுக்கு தெரிவது சற்று கடினம்.சராசரியாக இதன் மொத்த வாழ்நாள் 28 முதல் 30 நாட்கள் ஆகும். எனவே ஒரு வருடத்தில் பலமுறை பல எண்ணிக்கையில் பெருக்கம் அடைகிறது.
தாக்குதலின் அறிகுறிகள்:
- இதன் இளம் புழுக்கள் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் பயிர்களை தாக்கி சாற்றை உறிஞ்சும் திறன் படைத்தது.தண்டுப் பகுதியில் உள்ள இலை உறைகளின் அடிப்புரத்தில் சாற்றை உறிஞ்சுவதால் அதன் மேற்புறத்தில் வெளிர் சிகப்பு நிற மாற்றத்தை காண இயலும்.
- அதேபோன்று இலைகளின் அடி புறத்தில் சாற்றை உறிஞ்சுவதால் மேல் புறத்தில் நிறம் மாற்றம் காண இயலும்.
- பூக்கள் விரிவடையும் முன்னதாக மஞ்சரியில் காணப்படும் இலை உறையின் அடி புறத்தில் இதன் தாக்குதலால் வெளிர் நிறமாற்றத்தை காணலாம்.
- பூக்கள் மற்றும் இளம் காய்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தங்கி சாற்றை உறிஞ்சுவதால் இளம் முதல் முதிர்ந்த காய்களில் இதன் அறிகுறிகள் காணப்படும்.
- இதனால் காய்களில் துரு பிடித்தது போன்ற சொரசொரப்பான சிவப்பு நிற அமைப்பு காணப்படும். நாளடைவில் இந்த காய்களில் வெடிப்பு தோன்றும்.
- இலைகளில் மஞ்சள் நிறமாக மாறுதல், உருமாற்றம் அடைதல் மற்றும் உதிர்தல் போன்ற அறிகுறிகளும் காணப்படும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- இலை பேன்கள் பறக்கும் தன்மை கொண்டிருந்தாலும் பாதிக்கப்பட்ட பயிர் மூலமாகவே மற்ற இடங்களுக்கு அதாவது இளம் கன்றுகள் வாயிலாக பரவுகிறது.எனவே பாதிக்கப்பட்ட வயலில் இருந்து இளம் கன்றுகள்/ கட்டைகளை கண்டிப்பாக தேர்வு செய்யக்கூடாது.ஒருவேளை தேர்வு செய்தால் அதனை சுடு தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் நடவு செய்ய வேண்டும்.
- மீண்டும் மீண்டும் ஒரே வயலில் வாழை சாகுபடி செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- வழக்கமாக சாகுபடி செய்யும் ரகத்தை தவிர்த்து புதிய ரகத்தை தேர்வு செய்து பயிரிடலாம்.
- அடி உரமாக ஏக்கருக்கு இரண்டு முதல் நான்கு டன் நன்கு மக்கிய தொழு உரம் இடும் பொழுது அதனுடன் மூன்று கிலோ Metarhizium மற்றும் ஒரு கிலோ Trichoderma ஆகிய இரண்டையும் கலந்து சுமார் 18-20 நாட்கள் ஊட்டமேற்றி பின்பு இட வேண்டும்.
- அல்லது ஏக்கருக்கு 200 கிலோ இடித்த வேப்பங்கொட்டை இட வேண்டும் அல்லது வேப்பம் புண்ணாக்கு இடலாம்.
- பயிர் இடைவெளி வழக்கத்திற்கு மாறாக சற்று அதிக இடைவெளி பயன்படுத்தி நடவு செய்வதால் துரு இலைபேன் இனப்பெருக்கத்திற்கு தேவைப்படும் சாதகமான சூழ்நிலையை தவிர்க்கலாம்.
- நன்மை செய்யும் பூச்சியான கண்ணாடி இறக்கை பூச்சி, பொறி வண்டு போன்றவற்றை வயல்களில் அதிகப்படுத்த ஊடு பயிராகவும் வரப்பு பயிராகவும் பூ வகை பயிர்களை சாகுபடி செய்யலாம்.
- வயலில் கண்டிப்பாக களைகள் அல்லது முந்தைய பயிர்களின் எச்சங்கள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும்.
- ஆறு மாதங்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக வாழை மரத்தில் துரு இலைபேன் தாக்குதலின் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை காண வேண்டும்.
- அவ்வாறு தென்படும் பட்சத்தில் ஆரம்ப கட்டத்திலேயே அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 100 gauge தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பயன்படுத்தி தார் பகுதியை மூடி வைக்கலாம். ஆனால் இதில் தொடர்ச்சியாக தாக்குதல் உள்ளதா என்பதை கவனித்து வரவேண்டும்.
- ஆறு மாதங்களுக்கு பிறகு மாதம் ஒருமுறை ஏக்கருக்கு இரண்டு முதல் நான்கு கிலோ Fibronil குருணைகள் அல்லது Mettarhizum இட்டு நீர் பாய்ச்சுவதால் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.
- அதேபோன்று இழை வழியாக Fibronil என்ற மருந்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி அல்லது Verticillium lecanii 18 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வருவதால் இதன் தாக்குதலை வெகுவாக குறைக்கலாம்.
- தண்டுப் பகுதியில் spirotetramet+imidacloprid என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்தியும் இதன் தாக்குதலை குறைக்கலாம்.
- அதேபோன்று மஞ்சரியில் 500 மில்லி தண்ணீரில் 0.3 மில்லி imidacloprid கலந்து ஊசி மூலம் செலுத்துவதால் 75% துரு இலைபேன் தாக்குதலை குறைக்கலாம்.
- தொடர்ச்சியாக வயலை ஆய்வு செய்து அறிகுறிகள் தென்பட்டால் இலைபேனை கட்டுப்படுத்தும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.
இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக