வாழை மரங்களில் வாழைத்தார் தண்டு பகுதியில் வெளி வருவதற்கான காரணங்களும் அதை சரி செய்யும் வழிமுறையும்
வாழை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல், விவசாயிகளுக்கு மிக சவாலாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பூச்சி நோய் தாக்குதல், ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள், நிலவும் அசாதாரண தட்பவெப்ப சூழ்நிலை, தவறான பருவத்தை தேர்வு செய்து நடவு செய்தல், ஊட்டச்சத்து சரிவிகித இன்மை, பயிர்களில் உற்பத்தியாகும் வளர்ச்சி ஊக்கியில் மாறுதல் மற்றும் சில காரணங்களால் சில பயிர் வினையியல் மாறுபாட்டின் அறிகுறிகள் ஏற்படுகிறது.
இதனை ஆங்கிலத்தில் Physiological Disorder என அழைப்பார்கள். வாழை பயிரில் தோன்றும் ஒரு வகையான பயிர் வினையியல் அறிகுறிதான் மேற்கண்ட புகைப்படத்தில் காணப்படுவது. இதனை ஆங்கிலத்தில் Choke throat என்று அழைப்பார்கள். வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
Choke throat பயிர் வினையியல் மாறுபாட்டின் அறிகுறிகள்:
- வாழை மரத்தில் பூக்கள் வெளிவர இருக்கும் தருணத்தில் கணு இடைவெளி குறைந்து காணப்படும்.
- இதனால் பயிரின் கழுத்துப் பகுதியில் திசுக்கள் மிக இறுகி காணப்படும்.
- இலை காம்புகளின் நீளம் குறைந்தும், அது தண்டுடன் இணையும் இடத்தில் சற்று அகலமாகவும் இருப்பதால் மேலும் கழுத்துப் பகுதியில் திசுக்கள் இறுகி காணப்படும்.
- அதன் காரணமாக கழுத்து அல்லது உச்சிப் பகுதியில் இருந்து வெளிவர இருக்கும் பூ காம்பு வெளிவர இயலாத சூழ்நிலை ஏற்படும்.
- இதன் காரணமாக பூ காம்பு தண்டுப் பகுதியின் ஏதேனும் ஒரு இடத்தில் இலை உறைகளை கிழித்து வெளியே வரும்.
- இவ்வாறு வெளிவரும் பூக்காம்பில் குறைந்த அளவு காய் பிடிப்பு மட்டுமே காணப்படும். சில நேரங்களில் முற்றிலும் காய் பிடிப்பதில்லை.
- பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மற்றும் சில அறிகுறிகள் பயிரின் குருத்துப் பகுதியில் காணப்படும். மேலும் ஒழுங்கற்ற வடிவில் காய்கள் உருவாகும்.
- இவ்வாறு வெளிவரும் வாழைத்தார், தலைப்பகுதியில் இருந்து சற்று விலகி இருப்பதால் எளிதில் அதிக வெப்ப நிலைக்கு உட்பட்டு பாதிப்படையும்.
பயிர் வினையியல் மாறுபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்:
- பூ காம்பு வெளிவரும் நேரத்தில் காணப்படும் குறைந்த வெப்பநிலை.
- அதிக காற்று ஈரப்பதம்
- நீண்ட நாட்களுக்கு மேகமூட்டமான சூழ்நிலை அல்லது மிதமான மழைப்பொழிவு காணப்படுதல்.
- பயிர்களுக்கு போதிய வெப்பநிலை கிடைக்காமல் நிழற்ப்பாங்கான இடத்தில் வளருதல்.
- ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் அதிகம் காணப்படும்.
- அதிக மற்றும் தொடர்ச்சியான மண் ஈரப்பதம், வயலில் நீர் தேங்கி காணப்படுதல் மற்றும் போதிய வடிகால் வசதியின்மை.
- பராமரிப்பு குறைபாடு
- போதுமான அளவு ஊட்டச்சத்து கொடுக்காதது.
இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்:
- சரியான நடவு பருவத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- அதாவது பூ காம்பு வெளிவரும் நேரத்தில் சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை திகழ கூடாது.
- போதுமான அளவு சூரிய ஒளி மற்றும் வெப்ப கால அளவு கிடைக்கப் பெற வேண்டும்.
- உகந்த ரகங்களை தேர்வு செய்ய வேண்டும் அதாவது சற்று உயரமாக வளரக்கூடிய ரகங்கள்.
- வடிகால் வசதியை மேம்படுத்துதல்.
- நீண்டகால வறட்சி மற்றும் அதற்குப் பிறகு நீர் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
- சரிவிகித முறையில் ஊட்டச்சத்துக்களை கொடுத்து வர வேண்டும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy