google-site-verification: googled5cb964f606e7b2f.html தென்னையில் குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 13 அக்டோபர், 2025

தென்னையில் குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

    தற்பொழுது திகழும் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை அதாவது மிதமான வெப்பநிலை, அதிக காற்று ஈரப்பதம்,  அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் மேக மூட்டமான சூழ்நிலை தென்னையில் குருத்தழுகல் நோய் பரவலாக காணப்படுகிறது. 

    பூஞ்சை தொற்றால் ஏற்படும் இந்த குருத்தழுகல் நோய் இளம் வயது கன்றுகள் மற்றும் பராமரிப்பு இல்லாத மரங்களை வெகுவாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தும். நோய் தாக்குதலால் பயிர்கள் இறந்து விடுவதை விட, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.

    நோய் தாக்குதலால் இளம் கன்றுகள் இறப்பதும், காய்ப்பில் உள்ள மரத்தில் ஏற்படும் நோய் தொற்றால் அதிக அளவு காய்கள் உதிர்வதை காண இயலும். பருவமழை காலங்களில் இந்த நோய் தொற்று அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • குருத்துப் பகுதியில் அழுகல் ஏற்படுவதால் இளம் இலைகள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறி வெளுத்து காணப்படும்.
  • நாளடைவில் இந்த இலைகள் கருகியது போன்ற காட்சியளிக்கும்.
  • பாதிப்படைந்த குருத்து இலைகளை  இழுத்தால் கையோடு வந்துவிடும்.
  • குருத்துப் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகுவதால் சிதைந்து நிறம் மாறி இளம் சிகப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும். 
  • பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசும்.
  • குருத்துப் பகுதியில் உள்ள திசுக்கள் தொடர்ச்சியாக அழுகுவதால் படிப்படியாக அடுத்தடுத்த இலைகள் மேல்புறத்தில் இருந்து அழுகி இறந்துவிடும். 
  • தீவிர தாக்குதலின் போது குருத்துப் பகுதி சாய்ந்து விடும்.  

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தொடர்ச்சியாக நோயின் தாக்குதல் தென்படுகிறதா என்பதை ஆய்வு செய்து வர வேண்டும்.
  • குறிப்பாக நோய் தாக்குதல் பிரதானமாக காணப்படும் காலமான ஜூலை முதல் நவம்பர் வரை.
  • போதுமான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இலை, பன்னாடை, மட்டை அல்லது மரத்தின் இதரப் பகுதிகள் வயலில் ஆங்காங்கே இட்டு அழுகுவதை தவிர்க்க வேண்டும்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாரம் ஒரு முறை Bacillus மற்றும் pseudomonas தலா 10 கிராம் கலந்து குருத்துப் பகுதியில் ஊற்ற வேண்டும்.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் பத்து லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு என்ற மருந்தை கலந்து குருத்துப் பகுதியில் நன்கு தெளிக்கவும்.
  • முழுமையாக பாதிப்படைந்த மரங்களை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். 
  • நோய் தாக்கப்பட்ட குருத்து இலைகளில் வயலில் இடக்கூடாது. இது மேலும் நோய் பரவுவதற்கு வழிவகுக்கும்.
  • நோய் தாக்குதல் காரணமாக குருத்துப் பகுதியில் காண்டாமிருக வண்டு அல்லது சிகப்பு கூன் வண்டு தாக்குதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
  • நோய் தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து இரசாயன மருந்தை வேர் வழியாக செலுத்தி நோயை கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts