தென்னை சாகுபடியில் இலை கருகல் நோய் மேலாண்மை
|
அக்டோபர் 22, 2025
In நோய் மேலாண்மை |
முன்னுரை:
- தென்னை சாகுபடி செய்யப்படும் அநேக இடங்களில் காணப்படும் ஒரு பொதுவான நோயாக கருதப்படும் இந்த இலை கருகல் நோய் Lasiodiplodia theobromae எனப்படும் பூஞ்சை தாக்குதலால் ஏற்படுவதாகும்.
- வருடம் முழுவதும் நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடிய இந்த பூஞ்சை தாக்குதலால் 15 முதல் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் அபாயம் உள்ளது.
நோய் தாக்குதலின் அறிகுறிகள்:
- இலை மற்றும் காய்களில் நோய் தாக்குதல் அறிகுறி காணப்படும்.
- சிறு கன்றுகள் முதல் காய்ப்பில் உள்ள பெரிய மரங்கள் வரை அனைத்து வயதுடைய தென்னை மரங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி அறிகுறிகளை தோற்றுவிக்கும்.
- ஆரம்ப நிலை அறிகுறியாக வட்ட முதல் ஒழுங்கற்ற வட்ட வடிவில் சிறிய இலை புள்ளிகள் காணப்படும். நாளடைவில் இது ஒன்றோடு ஒன்று இணைந்து கருகல் நோயாக மாறும்.
- மரத்தின் அடி இலைகள் ஆரம்பத்தில் அறிகுறிகளை தோற்றுவிக்கும். நாளடைவில் மேல்நோக்கி அடுத்தடுத்த இலைகளுக்கு அறிகுறிகள் பரவுவதை காண இயலும்.
- கருகல் நோயின் விளிம்புகளில் தெளிவான கோடுகள் தெரிவதை காண இயலும்.
- ஓலைகள் நுனியில் இருந்து மேலோக்கி கருக ஆரம்பித்து இலை பரவி முழுவதும் கருகி காணப்படும்.
- பூங்கொத்து மற்றும் காய்களிலும் இலை கருகல் நோயின் அறிகுறி காணப்படும்.
- காய்களின் நுனிப்பகுதியில் பழுப்பு நிறத்தில் நிறம் மாற்றம் காணப்படுவதுடன் அதன் விளிம்புகள் வளைந்து நெளிந்து காணப்படும்.
- இந்த வழியாக பூஞ்சை காயின் உள் நுழைந்து அழுகல் நோயை ஏற்படுத்தும்.
- இவ்வாறு பாதிப்படைந்த காய்கள் சில நேரங்களில் சுருங்கி, வளைந்து நெளிந்து காணப்படுவதுடன் முதிர்ச்சி அடையும் முன்னரே உதிர்ந்து விடும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- நோயால் பாதித்த மரத்தின் இரண்டு அல்லது மூன்று அடி இலைகளை தண்டுப் பகுதியிலிருந்து சுமார் இரண்டு அடி தள்ளி வெட்டி வயலை விட்டு அப்புறப்படுத்தவும்.
- அதேபோன்று நோய் தாக்கி உதிர்ந்த காய்கள் மற்றும் பூங்கொத்துகளை முழுமையாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
- ஏனெனில் பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மற்ற இடங்களுக்கு காற்று வழியாக இந்த பூஞ்சைகள் பரவும் தன்மை உடையது.
- போதுமான அளவு ஊட்டச்சத்து மற்றும் தண்ணீர் கொடுக்க வேண்டும் ஏனெனில் பராமரிப்பு அல்லாத மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மிக எளிதில் நோய் தாக்குதலுக்கு உட்படும்.
- நோயால் பாதிப்படைந்த மரங்களுக்கு தலா 200 கிராம் Pseudomonas மற்றும் bacillus ஆகியவற்றை 25 கிலோ நன்கு முக்கிய தொழு உரம் மற்றும் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து இடவும்.
- மரத்தின் வயதிற்கு ஏற்ப தலா 20 முதல் 50 மில்லி Pseudomonas மற்றும் bacillus ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீரில் கலந்து மரம் ஒன்றிற்கு நன்கு தெளிக்க வேண்டும்.
- ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் Carbendazim+ Mancozeb அல்லது Copper Oxychloride பத்து லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்.
- பரிந்துரைக்கப்பட்ட அளவில் ஊட்டச்சத்துக்களை கொடுத்து வர வேண்டும். தேவையின் அடிப்படையில் பொட்டாசியம் ஊட்டச்சத்தை சற்று கூடுதலாக தரலாம்.
- வேர் வழியாக மருந்துகளை செலுத்த விரும்பினால் Hexaconazole இரண்டு முதல் ஐந்து மில்லி வரை பயிரின் வளர்ச்சிக்கு ஏற்ப கொடுக்கலாம்.


0 Comments:
கருத்துரையிடுக