தற்சமயம் (பருவமழை) மஞ்சள் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...
|
அக்டோபர் 23, 2025
In நோய் மேலாண்மை |
தற்சமயம் (பருவமழை) மஞ்சள் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...
முன்னுரை:
சாகுபடியில் உள்ள மஞ்சள் பயிரில் பருவமழை காரணமாக பல்வேறு ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் மற்றும் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதனால் பயிர் வளர்ச்சி பாதிப்படைந்து பயிர்கள் இறக்கும் சூழ்நிலை காணப்படுகிறது. இவற்றை கவனமுடன் கையாண்டு பயிரை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனேக இடங்களில் பயிரில் காணப்படும் பிரச்சனைகள்...
- தழைச்சத்து பற்றாக்குறை
- மெக்னீசியம் பற்றாக்குறை
- இரும்பு சத்து பற்றாக்குறை
- வேர், கிழங்கு மற்றும் தண்டு அழுகல் நோய்
- இலைப்புள்ளி நோய்
- இலை கருகல் நோய்
பிரச்சனைகளுக்கான காரணங்கள்:
1. தொடர்ச்சியான மழை
2. அதிக மண் ஈரப்பதம்
3. மிதமான காற்று ஈரப்பதம்
இது போன்ற காரணிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சத்துக்கள் கிடைப்பதை தடை செய்வதோடு நோய் தாக்குதலை ஊக்குவிக்கிறது.
சரி செய்யும் வழிமுறைகள்:
சத்துக்கள் பற்றாக்குறை:
- தற்சமயம் மஞ்சள் பயிரில் அநேக இடங்களில் தழைச்சத்து, சாம்பல் சத்து,மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு காணப்படுகிறது.
- அதிக மண் ஈரப்பதம் காரணமாக வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைப்பதில்லை இதனால் ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதில்லை தொய்வு ஏற்படுகிறது.
- அதிக மழைப்பொழிவு காரணமாக மண்ணில் இருக்க கூடிய ஊட்டச்சத்துக்கள் கரைந்து பயிர்களுக்கு கிடைக்காத வண்ணம் மண்ணுக்கு அடியில் அல்லது வயலை விட்டு வெளியே சென்றிருக்கலாம்.
- எனவே வடிகால் வசதியை முறைப்படுத்தி விட்டு ஊட்டச்சத்துக்களை இலை வழியாக கொடுத்து வருவது சால சிறந்தது.
- மழைக்காலம் முடியும் தருணத்தில் மண்ணில் உரம் இடுவது சிறந்தது.
- போதிய ஊட்டச்சத்து கொடுக்கப்படவில்லை எனில் கண்டிப்பாக மகசூல் ஏற்பட வாய்ப்புள்ளது.
வேர், கிழங்கு மற்றும் தண்டு அழுகல் நோய்:
- தொடர்ச்சியான மண் ஈரப்பதம் காரணமாக கிழங்கு, வேர் மற்றும் தண்டு பகுதியில் அழுகல் நோயை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சை மண்ணில் உருவாகலாம்.
- Pythium, Phytophthora மற்றும் Fusarium போன்ற நோய் காரணிகள் பயிரை தாக்கி அழுகல் நோயை ஏற்படுகிறது.
- நோய் தாக்குதலால் பாதிப்படைந்த பயிரின் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி கருகி இறந்துவிடும். தீவிர நோய் தாக்குதலின் பொழுது கிழங்கு முழுவதும் அழுகும் அபாயம் உள்ளது.
- இதனை சரி செய்ய வடிகால் வசதியை சீர் செய்து வயலில் நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும்.
- இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் பத்து லிட்டர் தண்ணீரில் தலா 100 மில்லி Trichoderma, Bacillus, Metarhizium (அழுகிய பகுதியில் புழுக்கள் இருந்தால் மட்டும்) மீன் அமிலம் மற்றும் Humic அமிலம் ஆகியவற்றை கலந்து வேர்ப்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும்.
- ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். Carbendazim + Mancozeb / Metalaxyl+ Mancozeb/ Copper Oxychloride / Copper hydroxide
இலைப்புள்ளி மற்றும் கருகல் நோய்:
- தற்பொழுது திகழும் சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி மற்றும் கருகல் நோய் காணப்படுகிறது.
- இந்த நோய்கள் Colletotrichum மற்றும் Taphrina போன்ற நோய் காரணிகளால் ஏற்படக் கூடியதாகும்.
- இந்த நோயை கட்டுப்படுத்த வடிகால் வசதியை சீர் செய்தல், வயலை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், தீவிரமாக பாதிப்படைந்த இலைகளை சேகரித்து அப்புறப்படுத்துதல் போன்ற அடிப்படை விஷயங்களை செய்ய வேண்டும்.
- இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் இலை வழியாக Pseudomonas 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்து வர வேண்டும். இதனுடன் மீன் அமிலம் அல்லது இ எம் கரைசல் அல்லது பஞ்சகாவியா அல்லது கடல்பாசி கலந்து தெளிக்கலாம்.
- ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் Mancozeb அல்லது Copper Oxychloride பத்து லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் என்ற அளவில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy





0 Comments:
கருத்துரையிடுக