google-site-verification: googled5cb964f606e7b2f.html வாழை பயிருக்கு என்ன உரம் எப்போது இடலாம்... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 13 அக்டோபர், 2025

வாழை பயிருக்கு என்ன உரம் எப்போது இடலாம்...

வாழை சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை என்பது மிகவும் இன்றியமையாதது ஏனெனில் வாழை மரங்கள் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொன்டு அதற்கேற்றவாறு மகசூலை கொடுக்கவல்லது. வாழை பயிர் கிடைக்கப்பெறும் சூரிய ஒளி, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை பயன்படுத்தி வளர்சியை துரிதப்படுத்தி அதிக அளவு மகசூலை தரும். மண்ணின் தன்மை மற்றும் வளத்திற்கு ஏற்றவாறு மண் பரிசோதனை அடிப்படையில் சரிவிகித முறையில் ஊட்டச்சத்து இடுவது மகசூலை மேம்படுத்துவதுடன் மண் வளத்தை பாதுகாக்கும்.

வாழை பயிர் அதிக அளவு எடுத்துக்கொள்ளக்கூடிய ஊட்டச்சத்துக்கள் வரிசையில் சாம்பல் சத்து முதலிடத்திலும் அதற்கு அடுத்தப்படியாக தழைச்சத்து, கால்சியம், மெக்னீசியம், போரான், மாங்கனிசு மற்றும் இதர ஊட்டச்சத்துகள் திகழ்கின்றன.

  • நடவு செய்யும்பொழுது குழி ஒன்றிற்கு நன்கு மட்கிய தொழுஉரம் 10 கிலோ மற்றும் 250 கிராம் வேப்பம்புன்னாக்கு ஆகியவற்றை மேல்மண்னுடன் கலந்து இடவேண்டும்.
  • கண்டிப்பாக மட்காத தொழு உரத்தை(குப்பை) பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் மட்காத குப்பை வேர்வளர்ச்சியை பாதிப்பதுடன் பூச்சி நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும்.
  • ஊடுபயிர் சாகுபடி செய்ய விரும்புபவர்கள் கடைசி உழவின் போது அடிஉரமாக ஏக்கருக்கு குறைந்தபட்சம் 4 டன் நன்கு மட்கிய தொழுஉரம் இடவேண்டும்.
  • நடவு செய்த இரண்டு மாதங்களுக்கு இரசாயன உரங்கள் இடக்கூடாது. இந்த நேரத்தில் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிழங்கிலிருந்து கிடைக்கும்.
  • போதிய வேர்வளர்ச்சி காணப்படும் 3 ம் மாதத்திலிருந்து இரசாயன உரம் இடலாம்.
  • வருடத்திற்கு ஒரு மரத்திற்கு சராசரியாக 180-210 கிராம் தழைச்சத்து (இலைக்காக சாகுபடி செய்யப்படும் இடத்தில் தேவையின் அடிப்படையில் சன்று கூடுதலாக கொடுக்கலாம்), மணிச்சத்து 40-50 கிராம் மற்றும் பொட்டாசியம் சத்து 600-800 கிராம் இடவேண்டும்.
  • இரண்டாம் நிலை பேரூட்டச்சத்துக்களான கால்சியம், மெக்னிசியம் , சல்பர் ஆகியவற்றை மரம் ஒன்றிற்கு 100-150 கிராம், 30-50 கிராம் மற்றும் 15-20 கிராம் முறையே இட வேண்டும்.
  • நுண்ணுட்டச்சத்துக்களை தேவையின் அடிப்படையில்  கண்டிப்பாக இட வேண்டும்.

உரங்கள் (கிராம் /மரம்)

3 ம் மாதம்

5 ம் மாதம்

7 ம் மாதம்

யுரியா

100

200

150

சூப்பர் பாஸ்பேட்

200

100

-

மூரிஏட் ஆப் பொட்டாஷ்

250

350

350

டி.எ.பி

50

-

-

(ஒரு வருடத்திறகு ஒரு மரத்திற்கு தேவையான உத்தேச அளவு)

  • உரமிடும்பொழுது பரிந்துரைக்கப்பட்ட இரசாயன உரங்களுடன் தேவையான அளவு தொழுஉரம் கலந்து இட்டு தண்டு பகுதியிலிருந்து சுமார் 2 அடி தள்ளி இட்டு நீர்பாய்ச்ச வேண்டும். 
  • 2,4 மற்றும் 6ம்  மாதங்களில் உயிர் உரங்கள் அல்லது கடல்பாசி உரங்கள் அல்லது ஹீயுமிக் அமிலத்தை வேர் வழியாக கொடுப்பதன் மூலம் மண்ணிலிருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் எளிதில் பயிர்களுக்கு ஏற்ற வடிவில் கிடைக்க உதவி புரியும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts