கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போஸர்) நுண்ணூட்டக் கலவை தயாரித்தல்
|கழிவு சிதைப்பான் (வேஸ்ட் டீகம்போஸர்) நுண்ணூட்டக் கலவை தயாரித்தல்:
- நாம் ஏற்கனவே வேஸ்ட் டீகம்போசர் அதாவது கழிவு சிதைப்பான் என்றால் என்ன அதை எவ்வாறு தயார் செய்ய வேண்டும். அதன் பின்னர் உள்ள அறிவியல் பூர்வமான செயல்பாடுகள் மற்றும் பயன்படுத்தும் விதத்தைப் பற்றி விரிவாக பார்த்தோம் தற்பொழுது அதை பயன்படுத்தி எவ்வாறு நுண்ணூட்ட கலவை தயார் செய்வது என்று பார்ப்போம்.
- இதன் அடிப்படையான விஷயம் என்னவென்றால் புரதம், நன்மை செய்யும் நொதிகள், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானிய வகைகள் அல்லது உணவுப் பொருட்களை கழிவு சிதைப்பான் உடன் கலந்து நொதிக்க விடுவதால் இதில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நுண்ணுயிரிகளால் சிதைக்கப்பட்டு எளிதில் பயிர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. இதனால் குறைந்த செலவில் இயற்கை முறையில் அதிக பயன்களை நாம் பெற இயலும்.
- 200 லிட்டர் கழிவு சிதைப்பான் நுண்ணூட்டக் கலவை தயாரிக்க சுமார் 190-200 லிட்டர் வேஸ்ட் டீகம்போசர் மற்றும் பல்வேறு பொருட்களை பயன்படுத்தி கீழ்க்கண்டவாறு தயார் செய்யப்படுகிறது.
தயாரிக்கும் முறை:
- ஏதேனும் மூன்று எண்ணெய் வித்து பயிர்களின் விதைகள் தலா ஒரு கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக நமது பகுதிகளில் கிடைக்கப்பெறும் விதைகளை எடுப்பது சால சிறந்தது. இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதுடன் விலையும் சற்று குறைவாக கிடைக்கும். உதாரணத்திற்கு நிலக்கடலை, எள், சூரியகாந்தி, ஆமணக்கு மற்றும் சோயா விதைகள்.
- அதேபோன்று ஏதேனும் மூன்று பயிறு வகை பயிர்களின் விதைகளை தலா ஒரு கிலோ எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு உளுந்து, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு, துவரை அல்லது கிடைக்க பெறும் விதைகள்.
- நுண்ணூட்ட கலவையில் இரும்பு ஊட்டச்சத்தின் தேவையை நிவர்த்தி செய்ய நான்கு முதல் ஐந்து இரும்பு ஆணிகள் அல்லது சிறிதளவு இரும்பு குப்பைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தாமிர ஊட்டச்சத்தின் தேவையை நிவர்த்தி செய்ய தாமிர கம்பி (ஒயர்கள்) அல்லது செப்பு நாணயம் அல்லது செப்பு பாத்திரங்களின் சிதைந்த பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதேபோன்று துத்தநாக ஊட்டச்சத்திற்காக துத்தநாகத்தால் செய்யப்பட்ட பேட்டரி (மின்கலம்) இரண்டு அல்லது மூன்று எண்கள் பயன்படுத்தலாம்.
- கைவசம் உள்ள அனைத்து விதைகளையும் நன்றாக அரைத்துக் கொண்டு அதனை 200 முதல் 250 லிட்டர் வேஸ்ட் டீகம்போசரில் கொட்டி நன்றாக கலக்கி விட வேண்டும்.
- பின்னர் இரும்பு துகள்கள், தாமிர கம்பி மற்றும் துத்தநாக பேட்டரி ஆகியவற்றை வேஸ்ட் டீகம்போசரில் ஒன்றன்பின் ஒன்றாக கலந்து நன்றாக கலக்கி விட வேண்டும்.
- கலவை தயார் செய்திருக்கும் டிரம்மை நிழற்பாங்கான இடத்தில் வைத்து அதனை பருத்தி துணியினால் இறுக்கமாக மூடி வைத்து தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை நன்றாக கலக்கி விட வேண்டும்.
- சுமார் பத்து தினங்களில் வேஸ்ட் டீகம்போசர் நுண்ணூட்டக் கலவை தயாராகிவிடும்.
பயன்படுத்தும் முறை:
- இதனை நீர்ப்பாசனம் வழியாக கொடுக்க ஏக்கருக்கு 150 லிட்டர் தண்ணீருடன் 50 லிட்டர் நுண்ணூட்ட கலவையை கலந்து மண்ணில் மிதமான ஈரப்பதம் இருக்கும் போது ஊற்றி விட வேண்டும்.
- இலை வழியாக தெளிக்க 10 லிட்டர் தண்ணீருக்கு 75 முதல் 100 மில்லி கலந்தது மாலை வேளையில் தெளிக்கலாம்.
இதனை நாம் பயன்படுத்தும் நிலம் மற்றும் பயிர்களின் தன்மையை பொறுத்து இடு பொருட்களை மாற்றிக் கொள்ளலாம் அவ்வாறு மாற்றும் போது நொதிப்பதற்கான சூழலை உருவாக்கி கொடுக்க வேண்டும். இது காய்கறி பயிர்கள் சாகுபடி செய்பவர்களுக்கும் மாடி தோட்டம் அமைத்துள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...