google-site-verification: googled5cb964f606e7b2f.html மண் வளத்தை பாதுகாக்கும் வேஸ்ட் டீகம்போசர் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 23 ஏப்ரல், 2024

மண் வளத்தை பாதுகாக்கும் வேஸ்ட் டீகம்போசர் தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை

முன்னுரை:

  • மண் நமது பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வேர்கள் சுவாசிக்க காற்று, தேவையான தண்ணீர் மற்றும் பயிர்களின் வேர்கள் இறுக்கமாக பிடித்து வளர உதவி புரிகிறது.

  • வளமான மண் வளமான பயிரை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வளமான மண் பயிர்களுக்கு தேவையான சராசரி கார அமிலத்தன்மை, ஊட்டச்சத்துக்கள், காற்றோட்ட வசதி, கரிம கார்பன்கள், நன்மை செய்யக்கூடும் நுண்ணுயிரிகளை கொண்டிருக்க வேண்டும். இவை அனைத்தும் மண்ணிற்கு கிடைக்க வேஸ்ட் டீகம்போசர் (Waste Decomposer)பயன்படுத்தினால் சாத்தியமாகும்.

வேஸ்ட் டீகம்போசர் (Waste Decomposer) என்றால் என்ன...

  • வேஸ்ட் டீகம்போசர் என்பது நாட்டு பசு மாட்டு சாணத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பல்வேறு வகை நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை கொண்ட கலவையாகும். இது National Center for Organic Farming என்ற மத்திய நிறுவனத்தால் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது மக்கக்கூடிய வேளாண் கழிவு/ உரங்களை மக்க வைத்தல், உயிர் உரமாகவும் மற்றும் உயிர் பூஞ்சான கொல்லியாகவும் செயல்படுகிறது.
  • 30 கிராம் எடை உடைய வேஸ்ட் டீகம்போசரின் விலை சுமார் 100 ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் 10000 டன் எடையுடைய குப்பைகளை மக்கச் செய்யலாம்.

இதை எவ்வாறு தயார் செய்ய வேண்டும்...

1. 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் ட்ரம்மில் தண்ணீர் நிரப்பி கொள்ளவும். அதில் இரண்டு கிலோ நாட்டு வெல்லம் கரைத்து வைத்திருந்த நீரை ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.

2. இதில் வேஸ்ட் டீகம்போசர் 30 கிராம் ஐ கைப்படாமல் எடுத்து டிரம்மில் உள்ள நீரில் கலந்து நன்கு கலக்கி விடவும். கையில் எடுத்து பயன்படுத்தினால் அதில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை பாதிப்படையும்.

3. இதை துணியை வைத்து மூடி இறுக்கி கட்டி நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும்.

4. இதனை தினமும் காலை மற்றும் மாலை வேளையில் குச்சியை  பயன்படுத்தி நன்கு கலக்கி விட வேண்டும். சுமார் ஏழு தினங்களுக்கு பிறகு வேஸ்ட் டீகம்போசர்  தயாராகிவிடும். இதன் மேல் இருக்கும் வெள்ளை நிற நுரை மற்றும் அதன் நறுமணத்தை வைத்து தயார் நிலையில் உள்ளதை கண்டுபிடித்து விடலாம்.

இதை பயன்படுத்தும் விதம் மற்றும் நன்மைகள்:

மக்க வைத்தல்:

நிழற்பாங்கான இடத்தில் மக்கக்கூடிய பண்ணை கழிவுகள் அல்லது வேளாண் கழிவுகளை சுமார் 20 சென்டிமீட்டர் உயரத்திற்கு நிரப்பி அதன் மேல் தயார் செய்த டீகம்போசரை நன்றாக தெளிக்க வேண்டும். இன்று மீண்டும் 20 சென்டிமீட்டர் உயரத்திற்கு மட்டும் குப்பைகள்/கழிவுகளை பரப்பி விட்டு அதன் மேல் டீகம்போசரை நன்றாக தெளிக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று அடுக்கு வரை குப்பைகளை இதுபோன்று பரப்பி விட்டு வாரம் ஒரு முறை நன்றாக கிளறி விட வேண்டும். தேவை இருப்பின் அவ்வப்போது கரைசலை தெளித்துக் கொள்ளலாம். சராசரியாக 60% வரை ஈரப்பதம் குப்பைகளில் இருக்க வேண்டும். சுமார் 40 முதல் 45 நாட்களில் குப்பைகள் நன்கு மக்கி விடும் பின்பு இதனை பயன்படுத்தலாம்.

உரமாகவும் மற்றும் மண் மண் வளத்தை மீட்கவும் பயன்படுத்துதல்:

  • தயார் செய்த வேஸ்ட் டீகம்போசரை ஏக்கருக்கு 200 லிட்டர் வரை என அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
  • இதை பயன்படுத்தினால் சுமார் 21 நாட்களுக்கு ரசாயன உரங்களை மண்ணிற்கு கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

  • இது மண் மற்றும் மண்ணில் காணும் மக்கக்கூடிய பொருட்களை சிதைத்து மண்ணின் கார அமில தன்மையை சரி செய்கிறது. இதனால் அநேக ஊட்டச்சத்துக்கள் செடிகள் எடுத்துக் கொள்ளும் வடிவில் விரைவில் மாற்றம் அடைந்து செடிகளுக்கு கிடைக்கப்பெறுகிறது.
  • இதனை 15 முதல் 30 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தலாம் தேவையின் அடிப்படையில்.

  • ஆறு மாதங்களுக்கு வேஸ்ட் டீகம்போசரை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் ஒரு ஏக்கரில் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான மண் புழுக்களை மண்ணில் உருவாக்க இயலும்.
  • இதை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது அதிக உரம் மற்றும் பூஞ்சான கொல்லி பயன்பாட்டினால் மண்ணிற்கு ஏற்பட்ட தீங்குகள் 90% வரை நீங்க பெறும்.

விதை நேர்த்தியாக பயன்படுத்துதல்:

இதை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்வதால் அதிக முளைப்பு திறன் மற்றும் ஒருமித்த நேரத்தில் விதைகள் முளைப்பதை 98 சதவீத வரை அடைய முடிகிறது.

பயிர் பாதுகாப்பிற்கு பயன்படுத்துதல்:

  • பயிர்களில் காணப்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்சான நோய்களை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி வைரஸ் தாக்குதலையும் எதிர்த்து உதவி புரிகிறது.
  • ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் இதனை முறையாக பயன்படுத்தினால் சுமார் 15 சதவீதம் வரை மகசூல் அதிகரிப்பை நாம் காண இயலும்.
  • 10 லிட்டர் தண்ணீருக்கு 50 முதல் 100 மில்லி வரை பயன்படுத்தலாம் பத்து நாட்கள் இடைவெளியில்.

இதன் பயன்பாட்டில் கவனிக்கப்பட வேண்டியவை:

  • நம்பகத் தன்மையுடைய நிறுவனம் அல்லது விவசாயிகளிடமிருந்து(இரண்டாம் நிலை கரைசல்) டீகம்போசரை பெற வேண்டும்.
  • நீர் வழியாக கொடுக்கும் பொழுது போது போதுமான ஈரப்பதம் நிலத்தில் இருக்க வேண்டும்.
  • கொடுக்கப்பட்ட நிலத்தில் குறைந்தபட்ச அளவிலாவது ஈரப்பதம் தொடர்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இலை வழியாக தெளிக்கும் போது கண்டிப்பாக மாலை வேலையில் மட்டும் தான் தெளிக்க வேண்டும். பயிரின் தன்மை மற்றும் சூழ்நிலையை பொறுத்து தெளிக்கும் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

மேலும் தகவல் மற்றும் அன்றாட விவசாய பணி தொடர்பான சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்....
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts