காய்கறி பயிர்களில் நூற் புழு தாக்குதலும் அதன் மேலாண்மையும்
|நூற் புழுக்கள் எவ்வாறு இருக்கும்:
- நூற் புழுக்கள் மண்புழு போன்ற உடலமைப்பை கொண்டது. இது மண், தண்ணீர், செடிகள், நுண்ணுயிர்கள், மனிதர்கள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றில் வாழும். இதன் பெரும்பான்மையான ரகங்கள்/வகைகள் கண்ணுக்குத் தெரியாது.
- பயிர்களை தாக்கக்கூடிய நூற் புழுக்கள் மண் புழுவை போன்று உருண்டை வடிவிலும் அதன் இரு முனைகளும் கூர்மையாகவும் இருக்கும். இதன் நீளம் சுமார் 1-3 மில்லி மீட்டர் வரை இருக்கும்.
- மற்ற விலங்குகளைப் போன்று இதற்கும் பெரும்பான்மையான உடல் உறுப்புகள் உண்டு ஆனால் சுவாச மற்றும் ரத்த ஓட்ட உறுப்புகள் இருக்காது.
- பெரும்பான்மையான புழுக்களின் முன் பகுதி/ முகப்பு பகுதியில் ஊசி போன்ற அமைப்பை கொண்டிருக்கும். இதை பயன்படுத்தி தான் பயிர்களை தாக்குகிறது.
- இதில் ஆண் மற்றும் பெண் புழுக்கள் இரண்டும் காணப்படும். ஆண் புழுக்களின் துணை இன்றி பெண் புழுக்கள் இனப்பெருக்கம் அடையும் தன்மை கொண்டது.
- நூற் புழுக்களின் ரகம் மற்றும் அது வசிக்கும் சூழ்நிலையை பொறுத்து ஒரு பெண் புழு 200 முதல் 800 முட்டைகளை இடும். இதனால் சராசரியாக முப்பது நாட்கள் வரை இருக்கும் அதுவும் வகையைப் பொருத்தது.
நூற் புழுக்கள் செடிகளை எவ்வாறு தாக்குகிறது:
- நூற் புழுக்கள் பயிர்களை இரண்டு வகையாக தாக்குகிறது. அதை பற்றிய விரிவாக பார்ப்போம்.
- வேரின் மேற்பரப்பில் தாக்குதல்:
- நூற் புழுக்கள் அதன் முகத்து பகுதியில் கொண்டிருக்கும் ஊசி போன்ற அமைப்பை வைத்து வேர் பகுதியை துளைத்து ஒருவித நொதியை செலுத்தி அங்கு இருக்கும் ஊட்டச்சத்துக்களை சிதைத்து சத்துக்களை உறுஞ்சி கொண்டு வாழ்கிறது.
- இதில் காணப்படும் சிலவகை நூற் புழுக்கள் செடிகளின் இலைப்பகுதி, பூ மற்றும் காய் பகுதிகளையும் உண்டு வாழும். அதனை Foliar நூற் புழுக்கள் என்று கூறுவார்கள்.
- ஆனால் பயிர்களின் வேர் பகுதியை நாம் ஆய்வு படுத்தினால் அதில் நூற் புழுக்கள் இருக்காது இது மண்ணில் தான் வாழும். எனவே நாம் மண்ணை பரிசோதித்தால் இதனை கண்டுபிடித்து விடலாம்.
- வேர்களின் உட்பகுதியை தாக்குதல்:
- இந்த வகை நூற் புழுக்கள் வேர் பகுதியை துளைத்த உள்ளே சென்று அங்கேயே தங்கிவிடும். இதனால் வேர்ப்பகுதியில் சிறு சிறு முடிச்சுகள் மற்றும் வேர்களில் வெடிப்பும் காண இயலும். சில வகை நூற் புழுக்கள் ஒரே இடத்திலும் மற்றவை அங்கும் இங்கும் வேரில் சென்று ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ளும்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- வேர்களில் வேர் முடிச்சுகள் மற்றும் வெடிப்புகள் காணப்படும்.(அனைத்து வகை நூற் புழுக்களுக்கும் பொருந்தாது)
- தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து வேர் முடிச்சிகளின் எண்ணிக்கை மற்றும் அளவு காணப்படும்.
- புதிய வெள்ளை வேர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து அல்லது சில நேரங்களில் புதிதாக உருவாகாமல் இருக்கும்.
- கிழங்கு வகை பயிர்களை தாக்கும்போது கிழங்குகள் ஒழுங்கற்ற வடிவில் காணப்படும்.
- தீவிரமாக பாதிக்கப்பட்ட வேர்கள் சிறிய மற்றும் பெரிய வேர் முடிச்சுகளால் நாளடைவில் சிதைந்து விடும்.
- வேர்கள் பழுப்பு முதல் காவி நிறத்தில் மாறி பின்னர் செடிகள் வாடி இறந்து விடும்.
- தரை மட்டத்திற்கு மேல் உள்ள செடியின் பாகங்கள் பார்ப்பதற்கு நீர் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது போன்று தோன்றும்.
- ஆரம்ப நிலை அறிகுறியாக பயிர் வளர்ச்சி குன்றியும் இலைகள் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.
- இளம் இலைகளின் ஓரங்கள் வெளிர் சிகப்பு நிறத்தில் காணப்படும்.
- முதிர்ந்த இலைகளின் ஓரங்களில் வெளிர் பழுப்பு நிறத்தில் கருகி காணப்படும்.
- பூக்களின் எண்ணிக்கை அளவு மற்றும் காய் பிடிப்பு திறன் குறைந்து காணப்படும்.
- மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் அதன் தரமும் குறையும்.
- தீவிரமாக தாக்கப்படும் போது செடிகள் இறந்து விடும்.
கட்டுப்படுத்தும் முறைகள்:
- நூற் புழுவினால் பாதிக்கப்படாத விதைகள்/கன்றுகள்/நாற்றுகள் தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
- நூற் குழுவிற்கு புழுவிற்கு எதிர்ப்பு திறன் கொண்ட பயிர்கள் அல்லது இரகங்களை தேர்வு செய்து பயிரிடலாம்.
- நூற் புழுவால் பாதிக்கப்பட்ட வயலில் விதைகள், செடிகள் அல்லது மரங்களை நடும் முன் நிலத்தில் டிரைகோடெர்மா ஹர்சியானம் மற்றும் சூடோமோனஸ் ஆகியவற்றைத் தெளித்து நிலத்தை நேர்த்தி செய்யலாம்.
- கோடை பருவத்தில் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை ஆழமாக அதாவது குறைந்தபட்சம் 20 சென்டிமீட்டர் ஆழத்தில் உழவு செய்வதால் மண்ணில் காணப்படும் நூற் புழுக்களின் பல்வேறு வாழ்க்கை படிநிலைகள் வெப்பத்தினால் இறக்கும் வாய்ப்புகள் அதிகம்.
- பாதிக்கப்பட்ட வயலில் இருந்து மண்/ நீர்/ செடிகள் வேறு வயலுக்கு செல்லா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லை எனில் மற்ற வயலுக்கும் பரவிவிடும்.
- நூற் புழுக்கள் பாதிக்காத/தாங்கி வளரக்கூடிய பயிர்களான வெங்காயம், எள், சோளம், பயிறு வகைகள் மற்றும் கீரை வகை பயிர்களை தேர்வு செய்து பயிர் சுழற்சி செய்ய வேண்டும்.
- கடைசி உழவின் போது ஏக்கர் ஒன்றிற்கு 3-6 கிலோ கார்போயூரான் + 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு (அ) புங்கம் புண்ணாக்கு இட்டு உழுதல் அவசியம்.
- இயற்கை விவசாயத்திற்கு ஏக்கர் ஒன்றிற்கு நன்கு மக்கிய தொழு உரம் 8 டன்கள் மற்றும் தலா 2 கிலோ சூடோமோனஸ் புளூரெசன்ஸ் + டிரைகோடெர்மா ஹர்சியானம் + Paecilomyces lilacinous மற்றும் போச்சோனியா கலந்து அடியுரமாக பயன்படுத்தலாம்.
- நிலத்தின் தன்மை மற்றும் ஊட்டச்சத்துக்கள் சரியாக இருக்க வேண்டும் அதற்கு போதுமான அளவு இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை மாறும்.
- மேலும் ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு எளிதில் கிடைக்கப்பெறும் இதனால் செடிகள் நோய் மற்றும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு தன்மையை பெறும்.
- நூற் புழுக்கள் தாக்குவதற்கு முன்னதாக சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் 5 கி/ லிட்டர் மற்றும் டிரைக்கோடெர்மா ஹர்சியானம் 5 மி.லி./ லிட்டர் தண்ணீரில் கலந்து 30 நாட்களுக்கு ஒருமுறை தௌிக்க வேண்டும்.
- மேற்கண்ட உயிர் பூச்சிக்கொல்லிகளை சொட்டு நீர் பாசனம் அல்லது வேர்களில் ஊற்றலாம்.
- தாவரங்களில் / செடிகளில் குன்றிய வளர்ச்சி மற்றும் மஞ்சள் நிற இலைகள் காணப்படும் போது 10 லிட்டர் தண்ணீருக்கு தலா 50 கிராம் டிரைகோடெர்மா ஹர்சியானம், Paecilomyces lilacinus மற்றும் போச்சோனியா கலந்து மாலை வேலையில் செடிகளின் வேர் பகுதி முழுவதும் நனையும் படி ஊற்றி விடவும்.
- மேலே கூறியவற்றை குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒரு முறை என பின்பற்ற வேண்டும்.
- மாதம் ஒரு முறை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் தலா ஒரு லிட்டர் Paecilomyces lilacinous மற்றும் போச்சோனியா வாய்க்கால் வழியாக அல்லது சொட்டுநீர் பாசனத்தில் கொடுக்கலாம்.
- நன்மை பயக்கும் நூற்புழுக்களான ஸ்பெல்ணெர்னேமா மற்றும் ஹெட்டெரோஸ்டிடிஸ் போன்ற சில வகையான நூற்புழுக்களை வயலில் பெருக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- Neoseiulus spp போன்ற வேட்டையாடும் பூச்சிகளை கவருவதால் நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
- Fluopyrum - 2.5 ml/ lit - என்ற அளவில் வேரில் ஊற்றி ஆறு மாதங்கள் வரை மண்ணை கிளறாமல் இருப்பதால் நூற் புழுக்களை அழிக்கலாம்.
- வேம்பு மற்றும் பூண்டு சாறுகளை வேரில் ஊற்றுவதாலும் நூற் புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
- சாமந்தி அல்லது கடுகு போன்ற பயிர்களை ஊடு பயிர் அல்லது வரப்பு ஓரங்களில் வளர்ப்பதால் இவை நூற் புழுக்களை கவர்ந்து பயிர்களில் ஏற்படுத்தும் தாக்குதலை குறைக்கும்.
இது போன்ற விவசாயம் சார்ந்த தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD
0 Comments:
கருத்துரையிடுக