google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 29 டிசம்பர், 2023

முந்திரியில் தேயிலை கொசுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முந்திரியில் தேயிலை கொசு:

   முந்திரியை தாக்கக்கூடிய சாறு உறிஞ்சி பூச்சிகளில் மிக முக்கியமானதாக தேயிலை கொசு கருதப்படுகிறது. ஏனெனில் இதனால் 40 முதல் 50 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

   இந்தியாவில் மூன்று வகையான கொசுக்கள் தேயிலையை தாக்கினாலும் தென்னிந்தியாவில் ஹீலோவெல்டிஸ் ஏன்டோனி என்ற கொசு தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பூச்சியின் விவரம்:

முட்டை:

   சிறிய முட்டைகள் தளிர்கள், இலைகள், பூ கொத்துகளின் தண்டுகள் மற்றும் இலைக் காம்புகளில் தனித்தனியாக அல்லது இரண்டு முதல் ஐந்து குழுக்களாக காணப்படும்.

இளம் புழுக்கள்:

   8-10 நாட்களுக்கு பிறகு வெளிவரும் இளம் புழுக்கள் தளிர்கள் மற்றும் இளம் பழங்களை உண்டு செழிப்பாக வளர்கிறது.

https://www.eagri.org/eagri50/ENTO331/lecture18/cashew_002.html

வளர்ந்த பூச்சிகள்:

   வெளிர் சிகப்பு முதல் பழுப்பு நிறத்தில் கருப்பு  தலையுடனும், முதுகுப் பகுதியில் குமில் போன்ற அமைப்பும் காணப்படும். இதன் மொத்த வாழ்நாள் 24- 30 நாட்களாகும்.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இது சாற்றை உறிஞ்சும் பகுதியில் வெளிர் நிற புண்கள் காணப்படும். நாளடைவில் இது வெளிர் கருப்பு நிறத்தில் மாறும்.
  • இலைக் காம்பு மற்றும் இளம் காய்/பழங்களில் இருந்து காவி நிற திரவம் வெளிவரும்.
  • நாளடைவில் தளிர் மற்றும் இலைகளில் உள்ள புண்கள் பெரிதாகி, ஒன்றிணைந்து கருகி காணப்படும்.
  • பூ மற்றும் பூங்கொத்துகளில் ஏற்படும் தாக்குதலால் கருகி பின் கருகல் நோய் போன்று காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • இந்த கொசுக்கள் விரும்பி உண்ணக்கூடிய பயிர்களான கொய்யா, பருத்தி, மகோகனி, வேப்பமரம், முருங்கை, மிளகு, நாவல் மற்றும் திராட்சை போன்ற பயிர்கள் முந்திரி செடிகளுக்கு அருகாமையில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
  • பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வளரக்கூடிய களைச் செடிகளை அவ்வப்போது சுத்தம் செய்து ஊடு பயிர் செய்ய வேண்டும். மேலும் தகவலுக்கு
  • https://researchjournal.co.in/online/RKE/RKE%2012(2)/12_1-3.pdf
  • தீவிரமாக தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழிக்கவும்.

  • எதிர்ப்பு திறன் கொண்ட ரகத்தை தேர்வு செய்து பயிரிடலாம்.
  • இவ்வகை கொசுக்களுக்கு எதிராக தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தால் தயார் செய்யப்பட்ட Beauveria bassiana எனப்படும் உயிர் பூச்சிக்கொல்லியை அக்டோபர் முதல் டிசம்பர் காலங்களில் தெளிக்கலாம்.
  • சிலந்தி, எறும்பு மற்றும் பருத்தி கறை பூச்சிகளின் நடமாட்டத்தை அதிகரிப்பதால் இவ்வகை கொசுக்களை கட்டுப்படுத்தலாம்.
  • புங்கம் விதை சாறு அல்லது புங்கம் இலைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்யை தெளிப்பதால் கொசுக்களை எளிதில் விரட்டுவது உடன் அழிக்கவும் செய்யலாம்.
  • கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லிகளில்  ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் தெளிக்கலாம்.
  • Lambda cyhalothrin- 1.2 ml per lit water
  • Beta cyfluthrin+ Imidacloprid - 1 ml per litre water
  • Buprofezin - 3 ml per lit water 
  • Thiamethoxam - 1 g per litre water
  • Triazophose - 1 ml per lit water
மேலும் விபரம் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

வியாழன், 28 டிசம்பர், 2023

செண்டு மல்லியில் வாடல் மற்றும் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை

செண்டு மல்லியில் வாடல் மற்றும் வேர் அழுகல் நோய்கள் :

   இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உதிரி மலர்களில் முக்கிட இடத்தை வகிக்கும் செண்டு மல்லியானது தன்னுள் பல்வேறு பூஞ்சாணம், பாக்டீரியா, நூற்புழுக்களுக்கு எதிரான மூலக்கூறுகளை கொண்டிருந்தாலும் இதன் சாகுபடியில் பரவலாக வேர் அழுகல் நோய்கள் காணப்பட்டு வருகிறது.

ஏன் நோய் தாக்குதல் :

  • பூஞ்சாணத்தால் பாதிக்கப்பட்ட மண்
  • இந்நோய் தாக்குதலுக்கு உகந்த இரகங்கள் பயிரிடுவதாலும்
  • போதுமான வடிகால் வசதி இல்லாத நிலங்களிலும் 
  • முறையற்ற தரை வழி நீர்பாய்ச்சல்
  • உகந்த தட்ப வெப்ப சூழ்நிலை காரணிகள் அமைவதாலும்
  • பாதிப்பு ஏற்படுத்தும் பூங்சாணங்கள், Phytophthora, Rhizoctonia, Sclerotia, Pythium 

தாக்குதலின் அறிகுறிகள் :

  • நாற்றுகள் முளைப்பதற்கு முன்பு (அல்லது) விதை முளைத்த பிறகு அழுகி இறக்கிறது.
  • வயல்களில் நடவு செய்த பிறகு, தரை மட்டத்தில் உள்ள தண்டுகளில் பழுப்பு நிற புண்கள் தென்படும்.
  • நாளடைவில் புண்கள் பெரியதாக தண்டு முறிவிற்கு காரணமாகிறது.
  • வேர்களையும் தாக்குவதால் குன்றிய வளர்ச்சி மற்றும் மஞ்சள் நிறத்தில் மாறி வாடி விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • சூரிய ஒளி அல்லது Formalin கொண்டு மண்ணை நேர்த்தி செய்தல் (கிரிமிகளை அழித்தல்)
  • 2-3 வருடங்களுக்கு மாற்று பயிரிடுதல்
  • நல்ல வடிகால் வசதியுடன் பயிரிடுதல்
  • மேட்டுபாத்தி அமைத்து நாற்று விடுதல் மற்றும் நாற்றுகளின் வேர்களை நடவு செய்வதற்கு முன்பு உயிர் பூஞ்சாண கொல்லிகளில் நனைத்து நடுதல்.
  • நோய்களை தாங்கி வளரக்கூடிய இரகங்களான பிரெஞ்சு செண்டுமல்லி மற்றும் குட்டையான இரகங்களை தேர்வு செய்து பயிரிடுதல் உகந்தது.
  • சூடோமோனஸ், ட்ரைகோடெர்மா, VAM மற்றும் வெர்ட்டிசீலியம் முதலிய உயிர் பூஞ்சாண நோய் கொல்லிகளை கொண்டு தொழு உரத்தில் ஊட்டமேற்றி இடுதல்
  • பாத்தி அமைத்து பயிரிடாமல் மேடு மற்றும் சால் முறையில் பயிரிடுதல் நல்லது.
  • நன்கு இடைவெளிகளில் நடுவதால் பக்க கிளைகளின் வளர்ச்சியினால் நோய் தாக்குதலை தாங்கி வளரும் தன்மை கிடைக்கும்
  • மழை நாட்களில் COC+Sulphate கலந்து வயலில் இடுவதால் நோய் பரவுதல் தடுக்கப்படும்.
  • நுண்ணீர்/ சொட்டு நீர் பாசன முறையில் நீர் பாய்ச்சுவதால் நோயை தவிர்க்கலாம்.
  • கீழ்க்காணும் உயிர் பூஞ்சாண கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை  15 நாட்களுக்கு ஒருமுறை  வேரில் ஊற்றலாம்.
  • Cardendzim+ Mancozeb - 3 g/lit water
  • Copper hydroxide – 2.5 g/ lit water
  • Metalaxyl + Mancozeb -2.5 g/ lit water
  • Thiophenate methyl -2.5 g/ lit water
  • அல்லது கீழ்க்கண்ட இரசாயன பூஞ்சாண கொல்லிகளில் ஏதெனும் ஒன்றை இலையில் தௌிக்க பயன்படுத்தலாம்.
  • Fosetyl Aluminium – 2.5 g/lit water
  • Fosetyl Aluminium + Flucopicolite -2.5g/ lit water
  • Zineb -2-4 g/ lit water
  • Copper hydroxide – 1 g/ lit water
இது போன்ற வேளாண்மை தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன் பெறலாம்.

புதன், 27 டிசம்பர், 2023

மிளகாயில் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

    தக்காளி மற்றும் வெங்காயம் காய்கறிகள்  நமது அன்றாட சமையல் பயன்பாட்டிற்கு இன்றியமையாததாகும். அதே போன்று தான்  மிளகாயும். மிளகாய் பச்சையாகவும், காயவைத்தும் மற்றும் பொடியாக்கியும் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதன் சாகுபடி என்பது தவிர்க்க இயலாதது.

    மிளகாய் பயிரை பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் தாக்கினாலும் ஒரு சில நோய் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் மட்டுமே விவசாயிகள் சவால்களை எதிர் கொள்கிறார்கள். அவ்வாறு விவசாயிகளுக்கு சவாலான நோயாக திகழ்வது வாடல் நோய். Fusarium oxysporum, F.solani, F.moniliforme போன்ற பல்வேறு வகை பூஞ்சானத்தால் இந்நோய் ஏற்படுகிறது.

தாக்குதல் எப்போது காணப்படும்:

  • இந்த வகை நோய் மண் மூலம் பரவுவதால் இதன் நோய் காரணிகள் மண்ணில் புதைந்து காணப்படும்.
  • காற்றில் அதிக ஈரப்பதம் நிலவும் போது.
  • தொடர் வறட்சிக்கு பிறகு அதிக நீர் பாய்ச்சுதல்.
  • செடிகளின் வேர்ப்பகுதியில் இறுக்கமான மண் தன்மை நிலவுதல்.
  • அதிகமான ஈரப்பதம் தொடர்ச்சியாக நிலவுதல்.
  • அதிக வெப்பநிலை நிலவும் போது நீர் பாய்ச்சுதல்.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • தாக்குதலின் ஆரம்ப நிலையில் செடிகளின் அடி இலைகள் சற்று மஞ்சள் நிறமாக மாறி பின்னர் உதிரும்.
  • உற்று நோக்கினால் இலைகள் சற்று உலர்ந்த மாதிரி காணப்படும்.
  • இலைகள் மேல் நோக்கி சுருங்கி பின்னர் உதிரும்.
  • நாளடைவில் இளம் இலைகளும் உதிர ஆரம்பிக்கும்.
  • தீவிர தாக்குதலின் போது இலை முழுவதுமாக உதிர்ந்து செடியின் தண்டு மற்றும் கிளைகள் மட்டும் காணப்படும்.
  • இந்த தண்டு மற்றும் கிளைகள் சுருக்கம் அடைந்து செடிகள் இறந்து விடும். தண்டைப் பிளந்து பார்க்கும் போது வெளிர் சிகப்பு நிற மாற்றத்தை காணலாம்.
  • சில நேரங்களில் வேர்ப் பகுதியும் நிற மாற்றத்துடன் காணப்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • சில மிளகாய் ரகங்கள் இந்த பூஞ்சான நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்டுள்ளதால் அவற்றை தேர்வு செய்து பயிரிடலாம்.
  • கோடை காலங்களில் நிலத்தை ஒற்றை கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். இதனால் மண்ணில் காணப்படும் பூஞ்சானங்கள் அதிக வெப்ப நிலைக்கு உட்பட்டு இறந்துவிடும். அதாவது 38-40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை நிலவும் போது இவை இறந்துவிடும்.
  • தொடர்ந்து ஒரே வயலில் ஒரே பயிரை பயிரிடாமல் மாற்றுப் பயிர் மற்றும் மாற்று நிலங்களில் சாகுபடி மேற்கொள்வதால் நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • எந்தப் பருவத்தில் பயிரிடுகிறோம் என்பதை பொறுத்து நோய் தீவிரம் மாறுபடும்.
  • மழை காலங்களில் பயிரிடும் போது மேட்டு பாத்தி அல்லது முகடு கரை அமைத்து பயிரிடலாம்.
  • மண்ணின் கார அமிலத்தன்மை இந்த நோய் தாக்குதலை தீவிரப்படுத்தும். அதாவது கலர்/உவர்ப்பு நிலங்களில் இதன் தாக்குதல் அதிகம் காணப்படும்.
  • உழவு செய்வதற்கு முன் அடி உரமாக ஏக்கருக்கு ஐந்து கிலோ காப்பர் சல்பேட் இடுவதாலும் இதன் தாக்குதலை மட்டுப்படுத்தலாம்.
  • ட்ரைக்கோடெர்மா ஹர்சியானும் மற்றும்  ட்ரைக்கோடெர்மா விரிடே போன்ற பூஞ்சான கொல்லிகள் இந்த நோயை அழிக்கும் வல்லமை படைத்ததால் இதனை தொடர்ச்சியாக அடி உரமாகவும், வேரில் ஊற்றவும்  பயன்படுத்தலாம்.
  • நடவு மேற்கொண்ட நாள் முதல் மூன்று மாத காலங்களுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தலா 50 கிராம் ட்ரைக்கோடெர்மா ஹர்சியானும் மற்றும்  ட்ரைக்கோடெர்மா விரிடே ஐ 10 லிட்டர் தண்ணீருக்கு என்ற வீதம் கலந்து வேரில் ஊற்ற வேண்டும்.
  • அல்லது கீழ்க்கண்ட ஏதேனும் பூஞ்சான கொள்ளிகளில் ஒன்றை நோய் தாக்குதலின் போது வேரில் ஊற்ற வேண்டும்.

  • Cabendazim+Mancozeb- 30 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Metalaxyl- 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Copper oxychloride -30 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Thiophenate methyl - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
  • Fosetyl alluminium - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
இதுபோன்று விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

செவ்வாய், 26 டிசம்பர், 2023

வெண்டையில் சாம்பல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

வெண்டை பயிரில் சாம்பல் நோய்:

  • இந்தியாவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் காய்கறி பயிர்களில் வெண்டை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பல்வேறு நோய்கள் வெண்டை பயிரைத் தாக்கினாலும் அவற்றில் சாவலானதாகவும், தீவிர மகசூல் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சாம்பல் நோய் திகழ்கிறது. 
  • பல்வேறு ஆய்வு அறிக்கைகளில் இந்நோயினால் 70-80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் என கூறப்படுகிறது.

நோய் காரணங்கள்:

  • இரகத்தின் தரம்
  • பயிரின் வயது மற்றும் பராமரிப்பு முறைகள்
  • தட்ப வெப்ப சூழ்நிலைகள்
  • வயதான செடிகளை விட இளம் செடிகள் பாதிப்புக்கு உகந்தது.
  • செப்டம்பர் முதல் ஜனவரி மாத காலங்கள் மற்றும் குறைந்த இரவு வெப்பநிலை பாதிப்புக்கு ஏற்ற பருவம்.
  • காற்றின் ஈரப்பத அளவு, செடிகளின் இடைவெளி, இலைப்பரப்பளவு, மற்றும் காற்றோட்டம் முதலியன நோய்த் தாக்குதலை நிர்ணயிக்கிறது.

அறிகுறிகள்:

  • வெள்ளை முதல் சாம்பல் நிற புள்ளிகள் அல்லது திட்டுகள் போன்ற வளர்ச்சி இலையின் இரு பகுதியிலும் காணப்படும்.
  • இது ஆரம்பத்தில் வெள்ளை நிறத்திலும், பின்னர் சற்று மஞ்சள் முதல் பழுப்பு நிறத்திலும் தீவிரமடைந்து கருமை நிறத்தில் தோற்றமளிக்கும்.
  • இந்நோயானது இளம் தண்டு, மொட்டு, பூக்கள் மற்றும் சிறிய காய்களையும் தாக்குகிறது.
  • பாதிக்கப்பட்ட மொட்டுகள் விரிவடையாமல் அல்லது முன்னுக்கு பின்னாக விரிவடைந்து காய் பிடிக்கும் திறனை இழக்கிறது.
  • தீவிரமராக பாதிக்கப்பட்ட இலைகள் இளம் பழுப்பு நிறத்தில் மாற்றமடைந்து பின்னர் உதிரும்.
  • இலை உதிர்வதால் உணவு தயாரித்தல் குறைந்து பயிர்களில் 50% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. கவனிப்பற்ற பயிர்கள் 80% வரை மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.
  • நோய்கள் பாதிக்கப்படும் இளம் காய்கள் உருவம் சிதைந்து சந்தை மதிப்பை இழக்கிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட அரசு / தனியார் நிறுவனங்ளில் இரகங்கள் பல உள்ளன. அவற்றை தேர்வு செய்து பயிரிடுதல் நல்லது.
  • பருவத்திற்கு ஏற்றவாறு பயிர் இடைவெளி, உரமிடுதல், களைகளை அகற்றுதல் மற்றும் பயிர் சுழற்சி மேற்கொள்ளுதல் அவசியமாகும்.
  • தழைச்சத்து உர பயன்பாட்டை பருவத்திற்கு ஏற்றவாறு திட்டமிடுதல்.
  • குளிர் பருவங்களில் தெளிப்பு நீர் பயன்பாட்டை தவிர்த்தல்.
  • காலை வேளைகளில் நீர் பாய்ச்சுவதால் இலைகளில் உள்ள ஈரப்பதம் மாலை நேரத்திற்குள் காய்ந்து விடும். இல்லையெனில் இலை பூஞ்சாண வளர்ச்சிக்கு உதவும்.
  • ஆரம்ப கால நோய் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட இலைகளை மட்டும் அகற்றுதல் உகந்தது.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளை அறவே அகற்றி அப்புறபடுத்துதல் சிறந்தது.
  • டிரைக்கோடெர்மா விரிடி (அல்லது) சூடோமோனஸ் புளுரசன்ஸ் - 4 கிராம்/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பதால் நோய் தாக்குதலின் பரவுதல் வீதம் ஓரளவிற்கு மட்டுப்படுத்தப்படுகிறது.
  • நன்கு புளித்த மோர் 2-5 மி.லி/ லிட்டர் தண்ணீரில்  கலந்து தெளிப்பதால் நோய் பரவுதல் தவிர்க்கப்படுகிறது.
  • ஒரு சில ஆய்வுகளில் சமையல் சோடாவடன் சமையல் எண்ணெய் கலந்து தெளிப்பதாலும் பரவுதல் தடுக்கப்படுகிறது என கூறப்படுகிறது.
  • சென்னா இலை/ விதை கரைசல் 1% (அல்லது) வேப்ப எண்ணெய் இலை கரைசல் 3% முதலியனவும் தெளிக்கலாம்.
  • தாக்குதல் தீவிரமடையம் போது கீழ்க்கண்ட பூஞ்சாண கொல்லிகளில் ஏதேனும் ஒன்று/ இரண்டு சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.
  • Dinocap                      -               1 ml/ lit. water
  • Propiconazole            -               1 ml/ lit. water
  • Hexaconazole             -               1 ml/ lit. water
  • Tridemorph                 -               0.5-1 g/ lit. water
  • Wettable sulphur        -               3 g/ lit. water
  • Propineb                    -               2.5 g/ lit. water
இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


நெற்பயிரில் புகையான் எனப்படும் தத்துப்பூச்சியை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

நெல் பயிரில் பழுப்பு நிற தத்துப்பூச்சி (புகையான்):

வாழ்க்கைச் சுழற்சி:

முட்டை

-

வெள்ளை நிற முட்டைகள் பயிரின் தூர் பகுதியில் தொகுதிகளாக காணப்படும்.

இளம் பூச்சி    

-

ஆரம்பத்தில் வெள்ளை நிறத்திலும் பின்னர் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

தத்துப்பூச்சி

-

மஞ்சள் முதல் கரும்பழுப்பு நிறத்தில் காணப்படும்.

அறிகுறிகள் :

  • வயலில் நீர்மட்டம் தேங்கியிருக்கும் தண்டு பகுதியில் இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் ஒட்டிக் கொண்டிருப்பதை காணலாம்.
  • இது தண்டு பகுதியை துளைத்து உண்ணுவதால் போதுமான நீர் மற்றும் ஊட்டச்சத்து இன்றி பழுப்பு நிறத்தில் மாற்றம் அடையும்.
  • நாளடைவில் இப்பயிர்கள் திட்டு திட்டுகளாக பழுப்பு நிறத்திலிருந்து காய்ந்த நிறத்தில் மாறும். 
  • பின்னர் வாடி பயிர்கள் சாயும்.
  • கருப்பு நிற சாம்பல் தண்டு பகுதிகளில் தென்படும்.

தாக்குதலுக்கு உகந்த நிலை :

  • அடர் நடவு, காற்றோட்டம் இன்மை
  • பயிர்கள் கரும்பச்சை நிறத்தில் காணப்படுதல்.
  • கதிர்கள் வெளிவரும் தருணங்கள் மிகவும் உகந்தது.
  • அதிகப்படியான நீர்ப்பாய்ச்சல்
  • மிதமான தட்பவெப்ப நிலை
  • பயிர்கள் அதிகபடியான நிழலில் இருக்கும் தருணம்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • பயிர் நடவு செய்யும் போது நன்கு இடைவெளி விட்டு நடவும். நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி படுவதால் இதன் தாக்குதல் இருக்காது.
  • தழைச்சத்து உர பயன்பாட்டை குறைத்து சாம்பல் சத்து மற்றும் துத்தநாக உர பயன்பாட்டை அதிகப்படுத்தவும்.
  • உள்ளூர் நெல் இரகங்கள் பொதுவாக இப்பூச்சிக்கு எதிர்ப்புத் திறன் உடையதாக இருக்கும்.
  • ஒவ்வொரு 2-3 மீட்டர் நடவு செய்த பிறகும் 30 செ.மீ இடைவெளி விடுவதால் தாக்குதல் குறைவதுடன் பயிரை ஆய்வு செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
  • நடவு வீதிகள் காற்று வீசும் திசைக்கு நேர் திசையில் இருக்க வேண்டும்.
  • களைகள் இன்றி வயலை பராமரித்தல் மிகவும் அவசியம்.
  • விளக்குபொறி ஏக்கருக்கு 5 எண்கள் அல்லது மஞ்சள் ஒட்டு பொறி 20 எண்கள் வைக்கலாம்.
  • அதிகம் நீர்பாய்ச்சி பின்னர் நிலத்தினை உலர விடுவதால் இளம் பூச்சியை மூழ்கடித்து அழிக்கலாம்.
  • நீரில் நீந்தும் பூச்சி வகைகள், வண்டுகள் மற்றும் சிலந்தி வகை பூச்சிகள் நன்மை பயக்கும். இவைகள் தென்படும் போது பூச்சிகொல்லி தெளிப்பதை தவிர்க்கலாம்.
  • பயிர்களில் கதிர்கள் வரவிருக்கும் தருணத்தில் வேப்பஎண்ணெய் விதை கரைசல் அல்லது புங்கம் அல்லது வெற்றிலை கரைசல் தெளிப்பதால் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • ஆரம்ப தாக்குதலின் போது Metarhizium -2-3 g/ litter தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
  • கீழ்க்கண்ட பூச்சி கொல்லிகளில் ஏதேனும் ஒன்று இரண்டை சுழற்சி முறையில் தெளிக்கலாம்.
  • Imidacloprid – 1-2 ml / Lit water
  • Acephate - 2.5 g/ Lit water
  • Triflunezopyrim – 1-2 ml / Lit water
  • Buprofezin – 2 ml/ Lit water
  • Dinotefuran – 2.5 g/ Lit water
  • Fibronil -2.5 ml/ Lit water
  • Pymetrozine – 1 g/ Lit water.
இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.




சனி, 23 டிசம்பர், 2023

குளிர்காலத்தில் மல்லிகை சாகுபடியை ஊக்குவிக்கும் வழிமுறை

குளிர்காலத்தில் மல்லிகை உற்பத்தியில் ஏற்படும் சவால்களும் சாத்தியக் கூறுகளும்:

சாகுபடியில் ஏற்படும் சவால்கள்:

  • பொதுவாக மல்லிகை உற்பத்தி தமிழகத்தில் ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து செப்டம்பர் முதல் வாரத்திற்குள் முடிவடைந்து விடுகிறது.
  • மல்லிகை அதிக வெப்பநிலையில் தாங்கி வளரக் கூடியதாக இருப்பதால் குளிர்ந்த வெப்பநிலை மற்றும் பனி பொழிவு காரணமாக அதன் வளர்ச்சி, இலைப் பரப்பளவு, உணவு தயாரிக்கும் அளவு மற்றும் பூ உற்பத்தி முதலியன குன்றியே காணப்படுகிறது.
  • குளிர்காலங்களில் போதுமான சூரிய ஒளி அளவு மற்றும் அதன் தீவிரம் (Intensity) குறைவாகவே இருப்பதால் அதன் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது.
  • மல்லிகை செடிகள் ஈரப்பதத்தினை விரும்பினாலும் செடி புதர்களிலிருந்து வெளியேறும் வெப்பம் காற்றை உலர்த்தி தாவரங்களுக்கு அழுத்தத்தினை ஏற்படுத்துகின்றன.
  • இது புதிய தளிர்கள் மற்றும் பூ பிடித்தலை குறைக்கும்.
  • போதுமான கவாத்து மற்றும் அதன் பின்பு பின்பற்றப்பட வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மேலாண்மை கடை பிடிக்காததாலும் பூக்கும் திறன் குறையும்.
  • பொதுவாக வெப்பத்துடன் கூடிய குளிர் காலத்தில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் தீவிரமாக இருப்பதால் மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

மேலாண்மை தொழில் நுட்பங்கள்:

  • செப்டம்பர் மாத இறுதியில் தரையிலிருந்து 40 முதல் 60 செ.மீ. உயரத்தில் செடிகளை கவாத்து செய்தல் வேண்டும்.
  • போதுமான காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி படுவதற்காக செடிகள் அகலமாக உள்ள தருணத்தில் பக்கவாட்டிலும் கவாத்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • கவாத்து செய்யும் போது காய்ந்த பகுதிகள், பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட பகுதிகளை அகற்றுதல் அவசியம்.
  • கவாத்து செய்த பிறகு 1 லிட்டர் தண்ணீரில் 3 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடு மருந்தை கலந்து செடிகளை நன்கு நனைத்தல் வேண்டும்.
  • கவாத்து செய்யும் முன்னர் போதுமான அளவு மக்கிய தொழு உரம், DAP மற்றும் நுண்ணூட்ட உரங்களை (மண் பரிசோதனை அடிப்படையில்) இடுதல் வேண்டும்.
  • அல்லது பரிந்துரைக்கப்பட்ட தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 60:120:120 கிராம்/ செடி என்ற விகிதத்தில் பிரித்து இட வேண்டும்.
  • செயற்கை உரங்களை இடுவதற்கு முன் தொழு உரங்களை உயிர் உரங்கள் கொண்டு ஊட்டமெற்றி இடவும்.
  • சொட்டு நீர் பாசன வசதியுடைய வயல்களில் CaNo3 மற்றும் Fno3 நீரில் கரையும் உரத்தினை ஒரு நாட்களிலும் மற்றொரு நாள் நுண்ணூட்டம் மற்றும் Humic acid ஐ சொட்டு நீரில் இட வேண்டும். 
  • கவாத்து செய்த 15 நாட்களுக்கு ஒரு முறை இதனை மூன்று முறை இடுவதால் துளிர் மற்றும் மொட்டு வளர்ச்சி போதுமானதாக இருக்கும்.
  • கவாத்து செய்து துளிர் வரும் தருணத்தில் Cycocel / Mepiquat chlorite தேவையான அளவு தெளிப்பதால் இரண்டாம் நிலை துளிர்களை தூண்டுவதுடன் பூ பிடித்தலை அதிகப்படுத்துகிறது.
  • வயலைச் சுற்றி இடுப்பளவிற்கு நிழல் வலைகளை கட்டி விடுவதால் பனி மற்றும் ஈரமான காற்று தவிர்க்கப்படுகிறது.
  • கவாத்து செய்த 35-45 நாட்களில் போதுமான பொட்டாஷ் உரமிடுதல், NAA அமிலத்தை தெளிப்பதால் கிளைப்பிரிதல், பூப்பிடித்தலை ஊக்குவித்தல் மற்றும் பூவின் அளவு பெரிதாகவும் காணப்படும்.
  • மொட்டு வரும் போது Znso4 + Mgso4 + Fso4 வாரம் ஒருமுறை தெளிக்கவும்.
இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.


எலுமிச்சையில் பேன் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை

எலுமிச்சையில் பேன் தாக்குதல்:

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலையின் மேற்பரப்பில் மஞ்சள் நிற அல்லது ஆரஞ்சு நிற புள்ளிகள் உருவாகின்றன. நாளடைவில் இதன் அளவு பெரிதாகி புள்ளிகள் கொத்து கொத்தாக காணப்படும்.
  • நோய் தொற்று தீவிரமடையும் போது இலைகள் துரு பிடித்தது போன்று காணப்படும். தூரத்திலிருந்து பார்க்கும்போது தெளிவாக இத்தகைய இலைகள் தென்படும்.
  • பாதிக்கப்பட்ட பழத்தின் வடிவம் சற்று மாறுபடும். மேலும், 1/3 பங்கு பழத்தில் மேற்பரப்பு மஞ்சள் நிறத்திலிருந்து துரு நிறத்திருக்கு மாறுதல் அடையும்.
  • பின்னர் இதில் பரவலாக வெடிப்புகள் காணலாம்.
  • பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் பழங்களை உற்று நோக்கும் போது பின்னிய வலை போன்று காட்சியளிக்கும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட பழங்கள் மற்றும் இழைகள் முதிர்ச்சிக்கு முன்பே உதிரும்.
  • இதனால் ஒட்டு மொத்த செடியின் ஆரோக்கியமும் வீரியமும் குறையும்.
  • கடுமையான தொற்று நோய்களில் இலையின் அடிப்பகுதியில் இப்பூச்சிகள் வலையமைப்பு ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • நீர் பற்றாக்குறை பொதுவாக பேன் தாக்குதலை ஊக்குவிக்கும். குறிப்பாக கோடை காலங்களில் சரியான இடைவெளியில் நீர் பாய்ச்சலை உறுதிப்படுத்தவும்.
  • காய்ப் பிடிப்பு தருணத்தில் வேப்ப எண்ணெய் விதை கரைசல் 5% -ஐ 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பதால் தாக்குதலை தடுக்கலாம்.
  • வேப்ப எண்ணெய் 3% 15 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதால் பரவுதலை தடுக்கலாம்.
  • ஆமணக்கு, கொன்றை மற்றம் காட்டு வேம்பு போன்ற செடிகள் இந்த வகை பூச்சிகளின் தாக்குதலுக்கு உகந்ததாக இருப்பதால், இவை வயல்களுக்கு அருகாமையில் இருப்பதை தவிர்க்கவும்.
  • கிச்சிலி மற்றும் நாரத்தை போன்ற செடிகளை வேர் செடிகளாக பயன்படுத்தி ஒட்டு கட்டுவதால் இந்த வகை பூச்சிகளை தாங்கி வளரும்.
  • உதிர்ந்த இலைகள் மற்றும் பழங்களை அவ்வப்போது அகற்றுவதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை கவாத்து செய்து அழிக்கவும்.
  • கரும்புள்ளிச் செவ்வண்டு மற்றும் கண்ணாடி இறக்கைப் பூச்சி போன்ற வேட்டையாடும் பூச்சிகள் எண்ணிக்கையை நிலத்தில் அதிகப்படுத்தவும்.
  • கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் தெளிக்கலாம்.

1. Propargite - 2ml/ lit. water

2. Spiromesifen - 1 ml/ lit. water

3. Fenpyrixymate -1.5 ml/ lit. water

4. Triazophose - 1 ml/ lit. water

5. Etofazole - 1 ml/lit.water

இது போன்ற விவசாயம் தொடர்பான தகவல்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD



வெள்ளி, 22 டிசம்பர், 2023

வாழையில் தண்டுகளை துளைக்கும் வண்டுகளை கட்டுப்படுத்தும் முறைகள்

வாழையில் தண்டுகளை தாக்கும் கூன் வண்டு:

வாழை சாகுபடியில் முதன்மை வகித்து வரும் இந்தியாவில் கடந்த சில வருடங்களாக கூன் வண்டு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. 10-90% மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும் வல்லமை படைத்த இவ்வண்டானது எளிதில் அழிக்க முடியாதவை.

வாழ்க்கைச் சுழற்சி:

  • முட்டை - தரைமட்டத்தில் உள்ள வாழை மட்டைகளில் தனிதனியாக இடப்படுகிறது. இதன் வாழ்நாள் 3-8 நாட்கள்
  • புழு - நல்ல சதைப்பற்றுடன் வெளிர் மஞ்சள் முதல் வெள்ளை நிறத்தில் வெளிர் சிவப்பு நிற தலையுடன் காணப்படும்.
  • கூட்டுப்புழு - பழுப்பு நிறத்தில் நார் போன்று இலையுறை/குப்பைகளில் தென்படும்.
  • வண்டு - கருமை நிறத்தில் நீண்ட வளைந்த மூக்குடன் காணப்படும். இதன் வாழ் நாள் 6-10 மாதம்.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் செடிகள் (3-5 மாதம்) இதன் தாக்குதலுக்கு உகந்தது.
  • இவ்வண்டுகள் எளிதில் தாக்கக்கூடிய இரகங்களான பூவன், நேந்திரன், கதளி போன்ற இரகங்கள் பயிரிடுவதை தவிர்க்கலாம்.
  • இளம் புழுக்கள் இலையுறைகளில் வட்ட வடிவில் துளையிட்டு எச்சங்களை வெளிதள்ளும்.
  • மிகவும் சிறிய துளைகள் இலையுறைகளில் தென்படும்.
  • இளம் சிவப்பு முதல் பழுப்பு நிற திரவம் தரைமட்டத்தில் காணப்படும்.
  • கவனிப்பற்ற நிலையில் இவ்வண்டு தண்டுகளை உண்பதால் குன்றிய வளர்ச்சி, இலைகள் பழுப்பு நிறத்தில் மாற்றமடைதல், வாடல் மற்றும் குறைவான காய்பிடிப்பு திறனை காணலாம்.
  • பலத்த காற்று வீசினால் மரம் சாய்தல்
  • துளைகளை சுற்றி பழுப்பு நிறத்தில் இலையுறைகள் மாற்றமடைவதால் நோய் தாக்குதல் போன்று காட்சியளிக்கும்.
  • தீவிரமராக பாதிக்கப்பட்ட வயல்களிலிருந்து வாடை வெளிவரும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • எதிர்ப்பு திறன் கொண்ட இரகங்களை பயிரிடலாம்(Rasthali, Ney poovan, Dwarf banana, Playankonden, Karpuravalli)
  • வாழை கட்டையை நடவு செய்வதற்கு முன் வேர்கள் மற்றும் பட்டைகளை அகற்றி, நேர்த்தி செய்து நட வேண்டும்.
  • நடவு செய்யும் போது குழி ஒன்றிற்கு பியூராடன் -20 கிராம் + வேப்பம் புண்ணாக்கு -500 கிராம் + Fibronil -20 கிராம் இடவும்
  • 45 நாட்களுக்கு ஒருமுறை பக்கங்களை அகற்றுவதுடன் களைகள் இன்றி வயலை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
  • நடவு செய்த 4-5 மாதங்களிலிருந்து பிரதி மாதமும் (7-ம் மாதம் வரை) Metarhizum anisopliae + Beaveria bassiana தண்டுகளில் ஊற்றுவதால் 70% வரை பூச்சி தாக்குதலை தவிர்க்கலாம்.
  • காய்ந்த இலைகளை அகற்றி அழித்தல் வேண்டும்.
  • ஆரம்ப காலத்தில் இலையுறையில் குருனை மருந்தினை மணலில் கலந்து இடுவதால் தாக்குதலை குறைக்கலாம்
  • Celphos மாத்திரையை 2 எண்/ செடி வீதம் பயன்படுத்தலாம்.
  • Dichlorovos (அல்லது) Chlorpyriphose 2.5 ml/ லிட்டர் தண்ணீரில் கலந்து வேரில் ஊற்றலாம். (அல்லது) தரையிலிருந்து ஒரு அடி உயரத்தில் இலையுறையில் ஊசியில் செலுத்தலாம்.
  • தீவிரமாக தாக்கப்பட்ட (அல்லது) காய் அறுவடை செய்த பயிர்களை முழுமையாக அகற்றுதல் நல்லது.
  • இலையுறை கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தலாம். (25-30/ ஏக்கர்.

புதன், 20 டிசம்பர், 2023

மல்லிகையில் வெண் பட்டு சிலந்தியை கட்டுப்படுத்தும் முறைகள்

மல்லிகையில் வெண்பட்டுச் சிலந்தி:

பயிரைத் தாக்கக்கூடிய சிலந்தி வகையில் இந்த இனம் மிகவும் சிறிய உடலமைப்பைக் கொண்டது. 50% வரை மகசூல் இழப்பு ஏற்படுத்தும் திறன் உடையது. இதன் தாக்குதல் வடகிழக்கு பருவ மழையின் போது அதிகமாக காணப்படும்.

வாழ்க்கைச் சுழற்சி:

மற்ற சிலந்திகளிலிருந்து இதனை வேறுபடுத்த எளிதாக இவை இரண்டு ஜோடி கால்களை மட்டும் கொண்டிருக்கும். 0.1 முதல் 0.5 மி.மீ உடலமைப்புக் கொண்டது. இப்பூச்சிகள் மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படும்.

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் இலைகள், குருத்துகள் மற்றும் இளம் தண்டுகளையும் தாக்குகிறது.
  • இப்பூச்சிகள் இலையின் மேல்புறத்தில் சாற்றை உறிஞ்சி ஒருவிதமான நஞ்சை செலுத்துவதால் இலைகளில் மாறுதல் ஏற்படுகிறது.
  • குன்றிய வளர்ச்சி மற்றும் பூப்பிடித்தல்.
  • இலைகள், மென்மையான தண்டுகள், பூ மொட்டுகளில் வெண்பட்டு/ முடி போன்ற வளர்ச்சியை காணலாம். (எரினியம்)
  • நாளடைவில் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒருங்கிணைந்து பின்னிய வலை போன்று காட்சியளிக்கும். பின்னர் இப்பகுதிகள் காய்ந்து உதிரும்.
  • எரினியம் இலையின் இருபுறத்திலும் காணப்படும்.
  • இலைகள் ஒருங்கிணைந்து பின்னர் பழுப்பு நிறத்தில் மாறுதல் அடையும்.
  • மொட்டுகள் சரியாக விரிவடையாமலும், வளர்ச்சி குன்றியும் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள் :

  • தாக்கப்பட்ட பகுதிகளை சேகரித்து அழிக்கவும்.
  • இப்பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட பாரி, முல்லை இரகத்தினை பயிரிடலாம்
  • ஊடு பயிரிடுதல் மற்றும் களைகள் மூலமாக பரவுவதால், இதனை தவிர்க்கவும்.
  • மாலை நேரங்களில் தெளிப்பு நீர் பாசனம் பயன்படுத்துவதால் பரவுதல் சதவீதத்தினை குறைக்கலாம்.
  • ஏக்கருக்கு 200 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 3% வேப்ப எண்ணெய் தெளிப்பதால் தாக்குதலை கட்டுக்குள் வைக்கலாம்.
  • சல்பர் மற்றும் அடுப்பு சாம்பல் முதலியவற்றை அவ்வப்போது செடிகளில் தெளிக்கலாம்.
  • தாக்குதலின் ஆரம்ப காலத்தில் பவர் தெளிப்பான் கொண்டு நீரால் செடிகளை கழுவி விட வேண்டும்.
  • Triazophos 1.50 ml/ lit + வேப்ப எண்ணெய் 5ml/ lit கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.
  • கீழ்க்காணும் பூச்சிக்கொல்லிகள் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் தெளிக்கலாம்
  • Fenazaquin - 2ml/ lit
  • Propargite - 2ml/ lit (or) Abamectin
  • Spiromesifen - 1ml/ lit
  • Diafenthiuron - 1g/ lit
  • Fenpyroximate- 1ml/lit
  • Exodus - 1ml/ lit 

திங்கள், 18 டிசம்பர், 2023

எலுமிச்சையில் காணப்படும் சொறிநோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

எலுமிச்சையில் பாக்டீரியா சொறிநோய் :

அறிகுறிகள் :

  • இந்நோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இலைத்துளைகள், செடிகளில் ஏற்படும் காயங்கள் வழியாக நுழைகிறது.
  • இலைகள், காய் மற்றும் தண்டுகளில் நுழைந்து அதன் பகுதியை உண்ண ஆரம்பித்து பின்னர் இனப்பெருக்கமடைந்து நிலை கொள்கிறது.
  • பொதுவாக இலைகளில் சற்று உயர்ந்த வட்ட வடிவில் அல்லது ஓவல் வடிவத்தில் சொறி போன்ற புண்களை தோற்றுவிக்கிறது. முதிர்ச்சி அடைந்த புண்கள் சற்று பெரியதாகவும், அதனை சுற்றி வெண்ணிற / மஞ்சள் நிற விளிம்புகள் காணப்படும்.
  • பழங்களும் இவ்வகை பாக்டீரியாவால் பாதிப்படைகிறது. பழங்களில் காணப்படும் புண்களால் சந்தை மதிப்பு குறைகிறது. ஆனால் சொறி போன்ற புண்கள் மேலோட்டமானவை மட்டுமே. இதனால் சதை பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.
  • கடுமையாக பாதிக்கப்பட்ட இலைகள் மற்றும் பழங்கள் இரண்டுமே முதிர்ச்சியடையும் முன்பே உதிரும்.
  • பாதிக்கப்படும் இலைகள் சிதைந்து உதிர்வதால் பூ பிடிக்கும் திறன் குறைந்து மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
  • இலைகள், தண்டுகள் மற்றும் கிளைகளிலும் சொறிபுண்கள் காணப்படுகிறது. இவை நீள் வடிவ தோற்றத்தில் இருக்கும்.

பாதிப்புக்கு உகந்த நிலை :

  • சற்று சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலை இதன் தாக்கத்திற்கு உகந்தது. (25-30•C).
  • அதிக காற்றின் ஈரப்பதம் மற்றும் மழைப்பொழிவு பாக்டீரியா தாக்குவதற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது.
  • மழைநீர் இதன் பரவுதலுக்கு உதவுகிறது.
  • மழை, பணி அல்லது நீர் பாசனத்தால் செடிகளில் ஏற்படும் நீடித்த ஈரத்தன்மை பாக்டீரியா செடிகளில் நுழைவதற்கு ஏற்புடையதாகும்.
  • எலுமிச்சை மிகவும் பாதிக்கக்கூடிய இனமாகும்.
  • பராமரிப்பற்ற செடிகள், மிதமான காற்று, மிதமான ஈரப்பதம், அடர் நடவு ஆகியவை நோய் தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலைகள்.
  • மகசூல் இழப்பீடு 10-30% வரை ஏற்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதிகள், உதிர்ந்த இலை, பழங்கள் மற்றும் சிறு தண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • நன்கு இடைவெளி இட்டு நடுவதால் போதுமான சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் கிடைக்கப்பெறுவதால் இந்நோயின் தாக்குதல் குறையும்.
  • நோய்த் தாக்குதல் இல்லாத செடிகளை தேர்வு செய்து நடுதல் மிகவும் அவசியமாகும்.
  • கவாத்து சரியான முறையில் மேற்கொள்ளப்படும் செடிகளில் நோய்த் தாக்குதல் மிகவும் குறைவாகவே காண்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்நோய் தாக்குதலுக்கு தாங்கி வளரக் கூடிய PKM -1 இரகத்தினை பயிரிடலாம்.
  • காப்பர் ஆக்ஸி குளோரைடு -25 கி/ லிட்டர் தண்ணீர் அல்லது காப்பர் ஹைட்ராக்ஸைடு -1 கி/ லிட்டர் தண்ணீர் + Streptomycin - 0.2 கி/ லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
  • NSKE - 5% தெளிக்கலாம்.
  • கவாத்து மேற்கொண்டு பின்னர் Pseudomonas (0.5%) தெளிப்பதால் நோய் பரவுதல் தடுக்கப்படும்.

இது போன்ற தகவல் மற்றும் விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD




சனி, 16 டிசம்பர், 2023

கொய்யாவில் நூற்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கொய்யாவில் நூற்புழு மேலாண்மை (மெலாய்டோனகனி): 

   இந்தியாவில் சுமார் 26 இலட்சம் எக்டர் நிலப்பரப்பில் கொய்யா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக அனைத்து வகையான மண்ணிலும் வளரகூடிய திறன் படைத்த இவை உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அதிகமாக பயிரடப்பட்டுள்ளது. 

   இவற்றை பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் தாக்கினாலும் நூற் புழு தாக்குதல் தற்போது அதிகமாக காணப்படுகிறது. இதனால் 40-70% வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

வாழ்க்கைச் சுழற்சி:

முட்டை - முதிர்ந்த பெண் நூற் புழு சுமார் 500-1000 முட்டைகளை மண்ணில் இடும்.

இளம் புழு - இளம் புழுக்கள் தண்ணீர் மூலமாக பரவி உகந்த செடிகளின் வேர்களை துளைத்து நிலையான இருப்பிடத்தை உருவாக்கும்.

தாக்குதலில் அறிகுறிகள்:  

  • பார்ப்பதற்கு நீர் மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது போன்று தோன்றும்.
  • இளம் இலைகளின் ஓரங்கள் வெளிர் சிகப்பு நிறத்தில் காணப்படும்.
  • முதிர்ந்த இலைகளின் ஓரங்களில் வெளிர் பழுப்பு நிறத்தில் கருகி காணப்படும்.
  • பூக்களின் எண்ணிக்கை அளவு மற்றும் காய் பிடிப்பு திறன் குறைந்து காணப்படும்.
  • மகசூல் இழப்பு ஏற்படுவதுடன் அதன் தரமும் குறையும்.
  • கண்களுக்கு புலப்படும் அளவில் வேர்களில் முடிச்சுகள் உருவாகும்.
  • புதிய வெள்ளை வேர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து அல்லது உருவாகமல் இருக்கும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட வேர்கள் சிறிய மற்றும் பெரிய வேர் முடிச்சுகளால் நாளடைவில் சிதைந்து விடும்.
  • வேர்கள் பழுப்பு முதல் காவி நிறத்தில் மாறி பின்னர் செடிகள் வாடி இறந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • நூற் புழுவால் பாதிக்கப்படாத கன்றுகளைத் தேர்வு செய்து நட வேண்டும்.
  • நூற் புழுவிற்கு எதிர்ப்பு திறன் கொண்ட கொய்யா இரகங்களை தேர்வு செய்து பயிரிடவும்.
  • நூற் புழுவினால் பாதிக்கப்பட்ட செடிகளை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட வயலில் உள்ள மண்ணை வேறு வயலுக்கு செல்லா வண்ணம் தடுக்க வேண்டும்.
  • கடைசி உழவின் போது ஏக்கர் ஒன்றிற்கு 3-10 கிலோ கார்போயூரான் + 200 கிலோ வேப்பம்புண்ணாக்கு (அ) புங்கம் புண்ணாக்கு இட்டு உழுதல் அவசியம்.
  • இயற்கை விவசாயத்திற்கு ஏக்கர் ஒன்றிற்கு நன்கு மக்கிய தொழுஉரம் 8 டன்கள் மற்றும் தலா 2 கிலோ சூடோமோனஸ் புளூரெசன்ஸ் + டிரைகோடெர்மா ஹர்சியானம் + Paecilomyces Lilacioun கலந்து அடியுரமாக பயன்படுத்தலாம்.
  • ஆரம்ப நிலை தாக்குதலின்போது சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் 5 கி/ லிட்டர் மற்றும் டிரைக்கோடெர்மா ஹர்சியானம் 5 மி.லி./ லிட்டர் தண்ணீரில் கலந்து 30 நாட்களுக்கு ஒருமுறை தௌிக்க வேண்டும்.
  • மேற்கண்ட உயிர் பூஞ்சானத்தை சொட்டு நீர் பாசனம் அல்லது வேர்களில் ஊற்றலாம்.
  • தாவரங்களில் / செடிகளில் குன்றிய வளர்ச்சி மற்றும் மஞ்சள் நிற இலைகள் காணப்படும் போது செடி ஒன்றிற்கு 50-60 கிராம கார்போப்யூரான் இடவும் அல்லது குழி ஒன்றிற்கு வேப்பம்புண்ணாக்கு 500 கிராம மற்றும் டிரைகோடெர்மா 25 கி (அ) கார்போப்யூரான் 50 கி கலந்து இடவும்.
  • நன்மை பயக்கும் நூற்புழுக்களான ஸ்பெல்ணெர்னேமா மற்றும் ஹெட்டெரோஸ்டிடிஸ் போன்ற சில வகையான நூற்புழுக்களை வயலில் பெருக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • Neoseiulus spp போன்ற வேட்டையாடும் பூச்சிகளை கவருவதால் நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.
  • Fluopyrum - 2.5 ml/ lit - என்ற அளவில் வேரில் ஊற்றி ஆறு மாதங்கள் வரை மண்ணை கிளறாமல் இருப்பதால் நூற்புழுக்களை அழிக்கலாம்.
  • நடவு செய்யவிருக்கும் குழிகளில் பர்ப்பூரியோசிலியம் லில்லியேசினஸ் கொண்டு ஊட்டமெற்றிய தொழு உரங்களை இடுதல் நல்லது.
  • வேம்பு மற்றும் பூண்டு சாறுகளை வேரில் ஊற்றுவதால் நூற் புழுக்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்டவை.
  • சாமந்தி அல்லது கடுகு போன்ற பயிர்களை ஊடு அல்லது வரப்பு ஓரங்களில் நடுவதால் இவை நூற்புழுக்களை கவர்ந்து கொய்யாவில் ஏற்படுத்தும் தாக்குதலலை குறைக்கும்.

இது போன்ற விவசாயம் சார்ந்த தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...


வியாழன், 14 டிசம்பர், 2023

பயிர்களை தாக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

காய்கறிகளில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் :

 சக்கரவள்ளிக் கிழங்கு/ வெள்ளி, வெள்ளை ஈ என்றழைக்கப்படும் இவை பெரும்பான்மையான காய்கறிகள், பழங்கள் மற்றும் பசுமை குடிலில் சாகுபடி செய்யப்படும் பயிர்கள் மற்றும் பல்வேறு வேளாண்மை பயிர்களிலும் தாக்குதலை ஏற்படுத்துகிறது. 

 மிதமான வெப்பநிலை இதன் தாக்குதலுக்கு உகந்தது. பயிர்களை பொருத்து மகசூல் தாக்குதல் 20-60% வரை ஏற்படுத்துகிறது.

வாழ்க்கைச் சுழற்சி:

முட்டை - துளிர் மற்றும் இளம் இலைகளின் கீழ் புறத்தில் வெளிர் மஞ்சள் நிறத்தில் முட்டைகளை கொத்தாக (150 எண்கள்) இடுகின்றன. பின்னர் இவை பழுப்பு நிறத்திற்கு மாறுகிறது. இதன் வாழ்நாள் 7-10 நாட்கள்.

நிம்ப்கள் - இவைகளும் சாறை உறிஞ்சும்.

கூட்டுப்புழு - வெளிர் பழுப்பு நிறத்தில் செடிகளிலும் மண்ணிலும் காணப்படும்.

இளம்பூச்சிகள் - வெள்ளை நிறத்தில் காணப்படும். இதன் உடல்பரப்பில் மஞ்சள் முதல் வெள்ளை நிற தூள்கள் காணப்படும்.

தாக்குதலின் அறிகுறிகள்:  

  • பூச்சிகள் இலைகளின் கீழ்ப்பகுதியில் சாற்றை உறிஞ்சுவதால் மிகவும் சிறிய மஞ்சள் நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.
  • நாளடைவில் இப்புள்ளிகள் விரிவடைந்து மஞ்சள் திட்டுகளாக காணப்படும்.
  • இலைகள் உருக்குலைந்து தீவிரமாக தாக்கப்பட்ட செடிகள் முற்றிலும் மஞ்சள் நிறமாகி சற்று காய்ந்து உதிரும்.
  • செடிகள் வளர்ச்சி குன்றியும், இலைகள் மேற்புறமாக சுருண்டும் காணப்படும்.
  • இவை தேன்துளிகளை சுரப்பதால் இலைகளின் மேற்பரப்பு, தண்டு மற்றும் பழங்களின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சாணங்களை தோற்றுவிக்கும்.
  • பல்வேறு வகையான பயிர்களில் வைரஸ் நோய்களை இது பரப்புகிறது. (உதாரணம் - கத்தரி, தக்காளி, மரவள்ளி, வாழை, வெண்டை, மிளகாய், பருத்தி மற்றும் இதர பயிர்கள்)

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • பயிர் நடவு செய்யும் போது சரியான பருவத்தில் தேர்வு செய்ய வேண்டும்.
  • அதிக அளவு உரமிடுவதை தவிர்க்கவும்.
  • நன்கு இடைவெளி விட்டு நடுவதால் இதன் தாக்கம் குறையும். (காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி செடிகளில் ஊடுருவினால் தாக்குதல் குறையும்) 
  • Monocrotophos, Cypermethin, Quinalphos போன்ற பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதை தவிர்க்கவும். இந்த வகை மருந்துகளுக்கு வெள்ளை ஈக்கள் எதிர்ப்புத் திறன் கொண்டுள்ளது.
  • களைகள் இன்றி பராமரித்தல், வயலை சுற்றி சூரியகாந்தி அல்லது பூச்செடிகளை நடலாம். (மஞ்சள்)
  • வைரஸ் பாதிப்பில் செடிகள் மஞ்சள் நிறத்தில் மாறுதல், குறைந்த பூ மற்றும் காய்ப்புத் திறன், மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
  • மஞ்சள் ஒட்டு பொறி ஏக்கருக்கு 20 எண்களை செடிகளின் மட்டத்திற்கு கட்டவும்.
  • இயற்கை பூச்சி உண்ணிகளான குளவி மற்றும் வண்டுகளை வயல்களில் அதிகப்படுத்தவும்.
  • களைச் செடிகளான துத்தி மற்றும் வெண்டை இனத்தை சார்ந்த மற்ற பயிர்களை அகற்றவும்.
  • வேப்பங் கொட்டைச்சாறு 5%- ஐ 5 மி.லி. / லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம். அல்லது நித்திய கல்யாணி இலைச்சாறு அல்லது நொச்சி இலைச்சாறு 5% தெளிக்கலாம்.
  • கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை சுழற்சி முறையில் தெளிக்கலாம்.

1. Afidopyropen – 2 ml/ lit

2. Diafenthiuron- 1g/ lit

3. Flonicamid – 2 ml/ lit

4. Imidacloprid + Spirotetramat – 1 ml/ lit.

5. Spiromesiefen –1 ml/lit.

6. Acetamaprid – 1 g/lit.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD 

புதன், 13 டிசம்பர், 2023

மல்லிகை மொட்டு துளைப்பானை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

மல்லிகையில் பொங்கு துளைப்பான்:

 வாசனை மலர்களில் மிகவும் முதன்மையான ஒன்றாக கருதப்படும் மல்லிகை பயிர் ‘கடவுளின் பரிசு” என்றழைக்கப்படுகிறது. உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 12,000 எக்டர் நிலப்பரப்பில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 
 மல்லிகை பயிரை தாக்கக்கூடிய பூச்சிகளில் மிக முக்கியமானதாக மிட்ஜ் பூச்சியும் அதனைத் தொடர்ந்து பொங்கு துளைப்பான் திகழ்கிறது. இவ்வகை புழுக்களால் சுமார் 40-70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிட தக்கது.  

வாழ்க்கைச் சுழற்சி:

முட்டை - தாய் பூச்சிகள் மொட்டுகளில் முட்டைகளை தனி தனியாக இடுகிறது. வெண்ணிறமாக காணப்படும். ஆயுட்காலம் - 3-4 நாட்கள் ஆகும்.

புழு - இளம் புழுக்கள் வெளிர் மஞ்சள் நிறத்துடன் கருப்பு நிற தலையுடன் காணப்படும். இதன் ஆயுட்காலம் 11-12 நாட்கள்.

கூட்டுப் புழு  -கூட்டுப் புழுக்கள் இலை, மொட்டு, மண்ணில் மற்றும் இலை காம்புகளில் காணப்படும். இதன் ஆயுட்காலம் 5-6 நாட்கள் ஆகும்.

அந்துப்பூச்சி- வெண்ணிறம் முதல் வெளிர் மஞ்சளில் காணப்படும். இவைகளின் இறக்கைகளில் பழுப்பு நிறக் கோடுகளை காணலாம்.

தாக்குதலின் அறிகுறிகள்:  

  • இளம் புழுக்கள் மொட்டுகளைத் துளைத்து அதன் உட்பகுதிகளை உண்ணும்.
  • இதனால் மொட்டுகளில் சிறிய துளைகள் ஏற்படும். பின்னர் இதன் வழியாக வெளியே வந்து அடுத்த மொட்டுகளை தாக்கும்.
  • நாளடைவில் மொட்டுகள் வெளிர் சிகப்பு நிறத்தில் மாறி பின்னர் உதிரும்.
  • தீவிரமாக பாதிக்கப்படும் நிலையில் 2-3 மொட்டுகள் இணைந்து வலைப்பின்னல் போன்று காட்சியளிக்கும்.
  • இதன் தாக்குதல் ஆகஸ்ட் முதல் நவம்பர் மாத காலங்களில் அதிகமாக இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • வாரம் ஒருமுறை பாதிக்கப்பட்ட பூக்ககளை/ பகுதிகளை சேகரித்து அழிப்பதால் இளம் புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.
  • சரியான இடைவெளியில் கன்றுகளை நடுதல் மற்றும் தருணத்தில் கவாத்து மேற்கொள்ளுதல் அவசியம்.
  • வெயில் காலங்களில் நிலத்தினை கிளறி விடுவதால் மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.
  • Carbofuran குருணையை செடி ஒன்றிற்கு 40 கிராம் என்ற அளவில் இட்டு நீர்ப் பாய்ச்சுதல் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.
  • களைகள் மற்றும் இதர குப்பைகள் இல்லாமல் நிலத்தை பராமரிக்க வேண்டும்.
  • வேப்பெண்ணெய் கொட்டை விதை 5% சாற்றை 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பதால் 30-40% வரை தாக்குதலை குறைக்கலாம்.
  • தைலப்புல் அல்லது காட்டாமணக்கு எண்ணெய் 0.5-1% தெளிப்பதால் பூச்சி தாக்குதல் 20% வரை குறைக்கப்படும்.
  • Helilure இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 5 எண்கள் (அ) விளக்கு பொறி 1 எண். வைப்பதால் தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • பேசில்லஸ் துர்ஞ்சியன்ஸ் 0.1% மற்றும் பேவேரியா பேஸியானா 0.1 சுழற்சி முறையில் தெளிப்பதால் மட்டும் தாக்குதல் சதவீதம் மிகவும் குறைவு (15-16%)
  • கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்றை நடவு செய்த 15 நாட்களிலிருந்து மாதம் இரு முறை தெளிப்பதால் பூச்சித் தாக்குதலை குறைக்கலாம்.
  • Chlorantraniliprole - 0.6 ml/ Lit. 
  • Spinosad - 0.5 ml/ Lit. 
  • Thiacloprid - 2 ml/ Lit. 
  • Fenvalarate- 1ml/ Lit. 
  • Diflubenzuron - 0.5 g/ Lit. 
  • Novaluron + Emamectin - 4.5 ml/ Lit. 
இது போன்ற தகவல் மற்றும் விவசாயம் தொடர்பான சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்... https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD 

செவ்வாய், 12 டிசம்பர், 2023

முருங்கையில் பழ ஈக்களை கட்டுப்படுத்தும் முறைகள்

முருங்கையில் காய் ஈ : 

இந்தியாவை தாயகமாக கொண்ட முருங்கையானது தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கேரளாவில் பெரும்பான்மையாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 

தமிழகத்தில் தொன்று தொட்டு காணப்படும் பல பல்லாண்டு முருங்கை இரகங்கள்-மூலனூர், வலைப்பாடி, செம்முருங்கை, யாழ்ப்பாணம், கொடிக்கால், பாலமேடு மற்றும் இதர. பராமரிப்பற்ற சாகுபடியால் 70% வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும்.

வாழ்க்கைச் சுழற்சி:

முட்டை- ஈக்கள் வெள்ளை நிற உருளை வடிவ முட்டைகளை தனித்தனியாக அல்லது 3-4 குழுக்களாகவே காய்களில் இடுகின்றன. இதன் ஆயுட்காலம் 3-4 நாட்கள்.

இளம் புழுக்கள்- இதன் ஆயுட்காலம் 18-25 நாட்கள்.

கூட்டுப்புழு- வளர்ச்சியடைந்த கிரீம் நிற புழுக்கள் மண்ணில் 5-9 நாட்கள் கூட்டுப்புழுவாக காணப்படும்.  

முதிர்ந்த ஈக்கள்- மஞ்சள் நிற சிறிய ஈக்கள் சிகப்பு நிற கண்களுடன் காணப்படும். இதன் நடமாட்டம் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலங்களில் அதிகமாக காணப்படும். இதன் இறக்கைகள் உடலை விட பெரியதாக இருக்கும்.

தாக்குதலின் அறிகுறிகள்:  

  • இளம்புழுக்கள் (Maggots) மென்மையான இளம் காய்களின் முனையில் துளைகளை இட்டு நுழையும்.
  • புழுக்கள் காய்களின் உட்பகுதியை உண்ணும்.
  • இதனால் காய்களில் இருந்து தேன் போன்ற திரவம் வடிவதால் இதன் சந்தை மதிப்பு குறைகிறது.
  • நாளடைவில் காய்களின் நுனியிலிருந்து மேல்புறமாக காய்ந்து கொண்டே வரும்.
  • காய்கள் சுருக்கத்துடன் உட்பகுதி சில நேரங்களில் அழுகி காணப்படும் அல்லது காய்ந்து பின்னர் பிளவு அடையும்.
  • தீவிரமாக தாக்கப்பட்ட வயல்களில் ஒரு காயிலிருந்து சுமார் 20-28 இளம் புழுக்களை காணலாம்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • 7 நாட்களுக்கு ஒரு முறை பாதிக்கப்பட்ட மற்றும் உதிர்ந்த காய்களை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • வெயில் காலங்களில் பயிர் இடைவெளியில் போதுமான வேப்பம் புண்ணாக்கு இட்டு உழுவதால் கூட்டுப்புழுக்களை கொன்று காய் ஈ உருவாவதை தவிர்க்கலாம்.
  • காய்களின் 20-30 நாட்களில் மாலத்தியான் அல்லது டைகுளோராவாஸ் தெளித்து காய்களை நெருக்குவதை தவிர்க்கலாம்.
  • காய்கள் உருவான 50 நாட்களில் நிம்பிடின் 3 மி.லி./ ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.
  • ஈக்களை விரட்ட citronella, வினிகர் அல்லது யூகலிப்டஸ் எண்ணெய்களில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம் அல்லது கவர்ச்சி பொறிகளை பயன்படுத்தலாம்.
  • வயலில் களைகள் மற்றும் இதர குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • Thiamethoxam ஐ தீவிர தாக்குதலின் போது மண்ணில் இட்டு நீர் பாய்ச்சலாம்.
  • சற்று நொதித்த தக்காளி பழச் சாற்றுடன் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியை கலந்து ஆங்காங்கே வைப்பதால் ஈக்கள் கவர்ந்து அழிக்கப்படும்.
  • செவ்வந்தி (அ) பூண்டு போன்ற பயிர் ஊடு பயிரிடுவதால் இந்த ஈக்களின் தாக்கத்தை குறைக்கலாம்.
  • கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்றை நடவு செய்த 15 நாட்களிலிருந்து மாதம் இரு முறை தெளிப்பதால் பூச்சித் தாக்குதலை குறைக்கலாம்.
  • Emamectin benzoate - 0.25 g / Lit. 
  • Spinosad - 0.20 ml/ Lit. 
  • Fenthion - 0.5 ml/ Lit. 
  • Dichlorovas - 0.5 g/ Lit. 
  • Malathion - 3ml/ Lit. 
  • Spirotetramet + Imidacloprid - 2 ml/ Lit.
  • Deltamethrin - 2.5 ml/ Lit. 




லாபகரமான எண்ணெய் பனை சாகுபடி

பணப்பயிராக மாறிவரும் எண்ணெய் பனை:

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளை தாயகமாக கொண்ட எண்ணெய் பனை சிவப்பு எண்ணெய் பனை எனவும் அழைக்கப்படுகிறது. தற்பொழுது இது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.

எண்ணெய் பனை சாகுபடி செய்தல் விவசாயிகளுக்கு         எவ்வாறு லாபகரமான பயிராக திகழ்கிறது:

  • எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மத்திய மாநில அரசு நிதி உதவியுடன் தற்சமயம் குறைந்த செலவில் தோட்டம் அமைக்க சரியான தருணம் இது.
  • ஊடு பயிர் செய்தல் மற்றும் பராமரிப்பிற்கும் அரசிடமிருந்து போதுமான சலுகைகள் தற்பொழுது கிடைக்கப்பெறுகிறது. இதனால் உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு மிகவும் குறைகிறது.
  • விவசாயிகளுக்கு நன்மை பயக்குவதுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல் இதன் இடுபொருள்களை சார்ந்து இயங்கக்கூடிய தொழில் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பை அதிகரிக்கிறது.
  • எண்ணெய் பனை உற்பத்தியில் இந்தியா தற்சார்பை நோக்கி பயணிப்பதால் நுகர்வோர்களுக்கு குறைந்த விலையில் சமையல் எண்ணெய் கிடைக்கப்பெறும்.
  • விவசாயிகள் இதனை முதன்மை பயிராகவும் மேலும் மூன்று முதல் நான்கு வருடங்களுக்கு ஊடுபயிர் செய்வதால் வருமானம் இரட்டிப்பாகும்.
  • பெரிய விவசாயிகளுக்கு குறைந்த செலவில் பயிர் செய்திட ஏதுவானதாக எண்ணெய் பனை திகழ்கிறது.
  • குறைந்தபட்ச ஆதார விலை போன்று இந்தப் பயிருக்கு VGF-Viability Gap Funding என்ற முறையில் ஆதார விலை கிடைத்திட அரசு வழிவகை செய்துள்ளது. எனவே இப்பயிரினல் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
  • 30 வருடங்கள் வரை குறைந்த செலவில் நிலையான வருமானம் பெறலாம்.
இவற்றையெல்லாம் எவ்வாறு நேரடியாக உறுதி செய்வது:
  • சமையல் எண்ணெய் பயன்பாட்டினை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் எண்ணெய் பனை சாகுபடி பரப்பினை அதிகரித்து உற்பத்தியை பெருக்கிட பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. அதில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் எண்ணெய் பனை திட்டத்தில் மட்டும் கீழ்க்கண்ட இனங்களில் மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
  • மானிய விலையில் தரமான எண்ணெய் பனை நாற்றுகள் வினியோகம் செய்யப்படுகிறது.
  • ஊடு பயிர் செய்வதற்கும் பராமரிப்பு மேற்கொள்வதற்கும் மானியங்கள் வழங்கப்படுகிறது.
  • விதைத்தோட்டம் மற்றும் நாற்றங்கால்கள் அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது.
  • எண்ணெய் செடிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திடவும் மானியம் வழங்கப்படுகிறது.
  • ஆழ்துளை அல்லது திறந்தவெளி கிணறுகள் அமைத்திடவும், மழை நீர் சேகரிப்பு குளங்கள் வெட்டிடவும் மானியம் தரப்படுகிறது.
  • மண்புழு உர கூடாரங்கள் அமைக்க மத்திய மாநில அரசுகள் உதவுகிறது.

  • இதைத் தவிர பல்வேறு இயந்திரங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
  • இவை மட்டும் இல்லாமல் இன்னும் பல இனங்களில் அரசு உதவி புரிகிறது.

அரசின் உதவிக்கரம் நீட்டப்படுமா? எண்ணெய் பனை லாபகரமான பயிர் தான் என்பதை உறுதி செய்திட சில மறைமுக அதிகாரப்பூர்வ தகவல்கள்:
 

  • சமையல் பயன்பாட்டிற்கு உலகிலேயே அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. எனவே இதன் தேவை எப்பொழுதும் குறைய போவதில்லை.
  • இந்தியாவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் எண்ணெய் பனைகளில் இருந்து தயாரிக்கப்படும் பாமாயில் எண்ணெய்யின் பயன்பாடு சுமார் 55 லிருந்து 60% ஆகும். பயன்பாட்டின் சதவீதம் குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். ஆனால் இவற்றைத் தவிர்க்க முடியாது.
  • பல்லாண்டு எண்ணெய் வித்து பயிர்களில் மிகவும் அதிகமாக மகசூல் தரக்கூடியது இப்பயிராகும்.
  • இந்தியாவின் ஆண்டு பாமாயில் எண்ணெய் தேவை சுமார் 250 லட்சம் டன் உள்ளது.
  • தற்பொழுது இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 125 முதல் 130 லட்ச டன்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த தேவையில் 50 சதவீதம் மட்டுமே ஆகும். மீதமுள்ள தேவைகளை இந்தியா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது இதன் சராசரி மதிப்பு சுமார் 80000 கோடியாகும். எனவே இதன் தேவை குறைந்தாலும் மதிப்பு குறைய போவதில்லை.
  • மேலும் மறைமுகமாக பாமாயில் பல்வேறு எண்ணெய்களில் கலப்பு செய்து விற்பனை செய்யப்படுகிறது.
  • 2015- 16 ஆண்டுகளில் இந்தியாவில் வசிக்கும் தனி நபருக்கு ஆண்டுக்கு 19.10 கிலோ வரை பாமாயில் கிடைக்கப்பெற்றது. ஆனால் தற்பொழுது இது 18 புள்ளி 20 கிலோவாக குறைந்துள்ளது. எனவே சாகுபடி செய்வது லாபகரமானது.
  • பாமாயிலில் உள்ள Vit-A, Oleic acid, Linoleic acid மற்றும் Beta carotene சரியான அளவில் பயன்படுத்தும் போது மனிதர்களுக்கு உகந்ததே ஆகும்.
  • இது மட்டும் அல்லாமல் எண்ணெய் பனை விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆனது சோப்பு, சலவை பவுடர், தலைக்கழுவு உதவும் நீர்மம், அழகு சாதன பொருட்கள் மற்றும் சில நாடுகளில் பயோடீசல் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதன் பயன்பாட்டை நம்மால் தவிர்க்க இயலாது.
  • இவைகளின் தேவையை உணரும் போது குறைந்த பரப்பளவில் மிகுந்த உற்பத்தியை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தில் உள்ளதால் இப்பயிரை சாகுபடி செய்தல் முக்கியமானதாகும். சுமார் 4-5 டன் பாமாயில் மற்றும் 0.4-0.5 டன் எண்ணெய் பனை கர்னல் எண்ணெய் ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிலிருந்து பெறலாம்.
  • மற்ற எண்ணெய் வித்து பயிர்களை விட இதில் சுமார் ஐந்து மடங்கு அதிகமான விளைச்சல் பெறப்படுகிறது. எனவே அரசு இப்பயிரை ஊக்குவிப்பதில் தவறில்லை.

கவனிக்கப்பட வேண்டியவை:

  • தரமான கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
  • இப்பயிரின் நீர் தேவை சற்று அதிகம் அதாவது 200 - 300 லிட்டர் ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது.
  • நடவு செய்த 3-4 வருடங்களுக்கு மகசூல் பெற இயலாது.
  • மகரந்தச் சேர்க்கை மற்றும் காய்ப்பு திறன் மிகவும் முக்கியமானதாகும்.
  • வளமான செடிகளை உருவாக்கிட முதல் மூன்று வருடங்களுக்கு பயிரில் தோன்றும் பூக்களை அகற்ற வேண்டும்.
  • சந்தைப்படுத்துதல்.

மேற்கொள்ளப்பட வேண்டியவை:

  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக கன்றுகளை பெறும் போது அவற்றின் தரம் உறுதியானதாக இருக்கும்.
  • பயிரின் நீர் தேவையை சரியாக பூர்த்தி செய்திட சொட்டுநீர் பாசனத்தை அமைத்து சரியாக பராமரித்தால் மட்டுமே போதுமானதாகும்.
  • இதைத் தவிர்க்கும் பொருட்டு அரசு ஊடு பயிர் செய்திட உதவுகிறது.
  • மூன்று வருடங்களுக்குப் பிறகு பண்ணையில் மகரந்தச் சேர்க்கை ஏற்படுத்தும் வண்டுகளை விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இதை சரியான முறையில் மேற்கொள்ள அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை அணுகலாம்.
  • அரசு, விவசாயி மற்றும் தனியார் நிறுவனங்கள் சேர்ந்து ஒப்பந்தங்கள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

முடிவுரை:

இவற்றின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், இதன் பயன்பாட்டினை தொலைநோக்குப் பார்வையில் சிந்திக்கும் போதும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பார்க்கும் போதும் மேலும் கிடைக்கப்பெறும் கிடைக்கபெறும் தகவல்களை கூர்ந்தாய்வு செய்யும்போதும் எண்ணெய் பனை சாகுபடி செய்தல் ஒரு லாபகரமான பயிராகவே கருதப்படுகிறது.

Recent Posts

Popular Posts