மிளகாயில் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முன்னுரை:
தக்காளி மற்றும் வெங்காயம் காய்கறிகள் நமது அன்றாட சமையல் பயன்பாட்டிற்கு இன்றியமையாததாகும். அதே போன்று தான் மிளகாயும். மிளகாய் பச்சையாகவும், காயவைத்தும் மற்றும் பொடியாக்கியும் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதன் சாகுபடி என்பது தவிர்க்க இயலாதது.
மிளகாய் பயிரை பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் தாக்கினாலும் ஒரு சில நோய் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் மட்டுமே விவசாயிகள் சவால்களை எதிர் கொள்கிறார்கள். அவ்வாறு விவசாயிகளுக்கு சவாலான நோயாக திகழ்வது வாடல் நோய். Fusarium oxysporum, F.solani, F.moniliforme போன்ற பல்வேறு வகை பூஞ்சானத்தால் இந்நோய் ஏற்படுகிறது.
தாக்குதல் எப்போது காணப்படும்:
- இந்த வகை நோய் மண் மூலம் பரவுவதால் இதன் நோய் காரணிகள் மண்ணில் புதைந்து காணப்படும்.
- காற்றில் அதிக ஈரப்பதம் நிலவும் போது.
- தொடர் வறட்சிக்கு பிறகு அதிக நீர் பாய்ச்சுதல்.
- செடிகளின் வேர்ப்பகுதியில் இறுக்கமான மண் தன்மை நிலவுதல்.
- அதிகமான ஈரப்பதம் தொடர்ச்சியாக நிலவுதல்.
- அதிக வெப்பநிலை நிலவும் போது நீர் பாய்ச்சுதல்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- தாக்குதலின் ஆரம்ப நிலையில் செடிகளின் அடி இலைகள் சற்று மஞ்சள் நிறமாக மாறி பின்னர் உதிரும்.
- உற்று நோக்கினால் இலைகள் சற்று உலர்ந்த மாதிரி காணப்படும்.
- இலைகள் மேல் நோக்கி சுருங்கி பின்னர் உதிரும்.
- நாளடைவில் இளம் இலைகளும் உதிர ஆரம்பிக்கும்.
- தீவிர தாக்குதலின் போது இலை முழுவதுமாக உதிர்ந்து செடியின் தண்டு மற்றும் கிளைகள் மட்டும் காணப்படும்.
- இந்த தண்டு மற்றும் கிளைகள் சுருக்கம் அடைந்து செடிகள் இறந்து விடும். தண்டைப் பிளந்து பார்க்கும் போது வெளிர் சிகப்பு நிற மாற்றத்தை காணலாம்.
- சில நேரங்களில் வேர்ப் பகுதியும் நிற மாற்றத்துடன் காணப்படும்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- சில மிளகாய் ரகங்கள் இந்த பூஞ்சான நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்டுள்ளதால் அவற்றை தேர்வு செய்து பயிரிடலாம்.
- கோடை காலங்களில் நிலத்தை ஒற்றை கலப்பை கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். இதனால் மண்ணில் காணப்படும் பூஞ்சானங்கள் அதிக வெப்ப நிலைக்கு உட்பட்டு இறந்துவிடும். அதாவது 38-40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை நிலவும் போது இவை இறந்துவிடும்.
- தொடர்ந்து ஒரே வயலில் ஒரே பயிரை பயிரிடாமல் மாற்றுப் பயிர் மற்றும் மாற்று நிலங்களில் சாகுபடி மேற்கொள்வதால் நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.
- எந்தப் பருவத்தில் பயிரிடுகிறோம் என்பதை பொறுத்து நோய் தீவிரம் மாறுபடும்.
- மழை காலங்களில் பயிரிடும் போது மேட்டு பாத்தி அல்லது முகடு கரை அமைத்து பயிரிடலாம்.
- மண்ணின் கார அமிலத்தன்மை இந்த நோய் தாக்குதலை தீவிரப்படுத்தும். அதாவது கலர்/உவர்ப்பு நிலங்களில் இதன் தாக்குதல் அதிகம் காணப்படும்.
- உழவு செய்வதற்கு முன் அடி உரமாக ஏக்கருக்கு ஐந்து கிலோ காப்பர் சல்பேட் இடுவதாலும் இதன் தாக்குதலை மட்டுப்படுத்தலாம்.
- ட்ரைக்கோடெர்மா ஹர்சியானும் மற்றும் ட்ரைக்கோடெர்மா விரிடே போன்ற பூஞ்சான கொல்லிகள் இந்த நோயை அழிக்கும் வல்லமை படைத்ததால் இதனை தொடர்ச்சியாக அடி உரமாகவும், வேரில் ஊற்றவும் பயன்படுத்தலாம்.
- நடவு மேற்கொண்ட நாள் முதல் மூன்று மாத காலங்களுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தலா 50 கிராம் ட்ரைக்கோடெர்மா ஹர்சியானும் மற்றும் ட்ரைக்கோடெர்மா விரிடே ஐ 10 லிட்டர் தண்ணீருக்கு என்ற வீதம் கலந்து வேரில் ஊற்ற வேண்டும்.
- அல்லது கீழ்க்கண்ட ஏதேனும் பூஞ்சான கொள்ளிகளில் ஒன்றை நோய் தாக்குதலின் போது வேரில் ஊற்ற வேண்டும்.
- Cabendazim+Mancozeb- 30 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Metalaxyl- 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Copper oxychloride -30 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Thiophenate methyl - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
- Fosetyl alluminium - 25 கிராம் 10 லிட்டர் தண்ணீருக்கு
இதுபோன்று விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
0 Comments:
கருத்துரையிடுக