google-site-verification: googled5cb964f606e7b2f.html தை பட்டம் மக்காச்சோளம் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 23 டிசம்பர், 2024

தை பட்டம் மக்காச்சோளம் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை

முன்னுரை:

தமிழ்நாட்டின் அநேக பகுதிகளில் தண்ணீர் வசதி இருக்கும் ஒரு சில  விவசாயிகள் வருகிற தை பட்டத்தில்(ஜனவரி - பிப்ரவரி) மக்காச்சோளம் சாகுபடி செய்ய விரும்புகிறார்கள். அவ்வாறு சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள் விதைப்பு மேற்கொள்வதற்கு முன் கீழ்கண்ட விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ரகம் தேர்வு செய்தல்: 

  • தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பெரும்பான்மையான மக்காச்சோள வீரிய ஒட்டு ரகங்கள் ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்திற்கு (ஜூன் ஜூலை மற்றும் செப்டம்பர் அக்டோபர்) உட்பட்ட காலங்களில் சாகுபடி செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது. அதாவது விதை சான்றிதழில் துறையால் எந்த பருவத்திற்கு இந்த ரகம் சாகுபடிக்கு உகந்தது என கூறியிருப்பார்கள்.  எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு ரகத்தை தேர்வு செய்தல் மிகவும் முக்கியம்.
  • சரியான பட்டம் பரிந்துரை செய்யப்படாமல் இருந்தால் அந்த ரகத்தை வாங்கி நாம் விதைப்பு மேற்கொண்டு ஏதேனும் பின் விளைவுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த ஒரு பதிலும் தர மாட்டார்கள். 
  • நாம் தேர்வு செய்துள்ள ரகத்தின் விதையை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது கடையில் மட்டும் தான் கண்டிப்பாக வாங்க வேண்டும். வாங்கும் போது ரகத்தின் பெயர், காலாவதி நாள், முளைப்பு திறன் எவ்வாறு உள்ளது, எந்த பருவத்திற்கு ஏற்றது என பல்வேறு விஷயங்களை நினைவில் வைத்து கொண்டு வாங்க வேண்டும்.

முளைப்பு திறன் கண்டறிதல்:

வாங்கிய விதையை சாகுபடிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக சிறிய பிளாஸ்டிக் தட்டில் மண்ணை எடுத்துக்கொண்டு சுமார் பத்து விதைகளை முளைப்புக்கு ஆட்படுத்த வேண்டும். முளைப்பு திறன் போதுமான அளவு இருந்தால் மட்டுமே வயலில் விதைக்க வேண்டும்.

விதைப்பு மேற்கொள்ளுதல்:

அதிக வெப்பநிலை நிலவுவதால் விதைகளை விதைத்து விட்டு பின்னர் நீர் விடுவதை தவிர்க்கவும். இன்று நீர் பாய்ச்சி விட்டு நாளை விதைப்பு மேற்கொள்வதால் அதிக மண் சூட்டினால் முளைப்பு திறனில் பின்னடைவு ஏற்படாமல் நன்றாக இருக்கும். மேலும் வயலில் அநேக விதைகள் முளைப்பு வரும் வரை போதுமான அளவு ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பயிர் இடைவெளி:

வழக்கத்திற்கு மாறாக சற்று அதிக இடைவெளி விடுவதால் போதுமான காற்றோட்ட வசதி இருக்கும். இதனால் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறையும்.

உரம் இடுதல்:

அதிக அளவில் இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் பயிர்கள் அதிக வெப்பநிலை மற்றும் பூச்சி தாக்குதலை சமாளித்து வளரும் தன்மை பெறும். உதாரணத்திற்கு மண்புழு உரம், கடல்பாசி உரம், உயிர் உரங்கள், தொழு உரம், ஊட்டமேற்றிய தொழு உரம், இயற்கை தயாரிப்புகள் (பஞ்சகாவியம், மீன் அமிலம் மற்றும் பல).

நீர் மேலாண்மை:

  • கண்டிப்பாக போதுமான அளவு நீர் விட வேண்டும் ஏனெனில் நாம் சாகுபடி செய்யும் அநேக ரகங்கள் எல்லாம் வீரிய ஒட்டு ரகம். எனவே அவற்றுக்கு அதிக அளவு நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும். போதுமான அளவு நீர் கிடைக்கப் பெறவில்லை எனில் ஏற்படும் அழுத்தத்தால் செடிகளில் பக்க கிளைகள் சில நேரங்களில் உருவாகும். இது மட்டுமின்றி ஒரே செடியில் மூன்று முதல் நான்கு கதிர்கள் வெவ்வேறு கணுக்களில் பகுதிகளில் உருவாகும். சில நேரங்களில் மட்டுமே இவை அனைத்தும் மணிகள் பிடிக்கும். ஏனெனில் பெரிய அளவில் மகசூல் இழப்பீடு ஏற்படும்.
  • விதைத்த 50 முதல் 75 நாட்கள் தண்ணீர் தேவைப்படும் மிக முக்கிய தருணம் அந்த நேரத்தில் எந்தவித தொய்வு இன்றி போதுமான அளவு நீர் கொடுக்க வேண்டும்.
  • செடிகள் பூக்கும் தருணத்தில் குறைந்தால் அளவிலாவது மழைப்பொழிவு இருக்க வேண்டும் இல்லையெனில் மணி பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டு மகசூல் குறையும் வாய்ப்புகள் உள்ளது. ரகத்தை பொறுத்து 55 முதல் 70 நாட்கள் வரை பூக்கும் தருணம் திகழும்.
  • பூக்கள் வெளிவர தொடங்கியது முதல் 10 நாட்கள் மகரந்த சேர்க்கை நடைபெறும் அப்போது கண்டிப்பாக மழை தேவைப்படும்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:

  • ஜனவரி மாதம் இறுதி முதலே அதிக வெப்பநிலை திகழ வாய்ப்புள்ளதால் சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் படை புழு தாக்குதல் அதிகம் தென்படும். அதை அவ்வப்போது கட்டுப்படுத்த வேண்டும் தவறினால் செடிகளின் குருத்து பகுதியை முழுவதும் சேதப்படுத்தி விடும்.
  • அறுவடை சமயத்தில் பருவமழை இல்லாதவாறு விதைப்பு செய்ய வேண்டும். இது போன்ற பல சவால்கள் தைபட்டம் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் போது ஏற்படும் இவற்றைக் கருத்தில் கொண்ட சாகுபடி மேற்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX



0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts