தக்காளியில் பாக்டீரியா வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முன்னுரை:
- தக்காளி சாகுபடி பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் குறிப்பிட்ட சில நோய் மற்றும் பூச்சி தாக்குதல்கள் மிக கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கும். அதில் முக்கியமான நோயாக பாக்டீரியா வாடல் நோய் திகழ்கிறது.
- தக்காளி மட்டுமின்றி கத்தரி, மிளகாய், வாழை, மஞ்சள் மற்றும் நிலக்கடலை போன்ற பயிர்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
- மண், முந்தைய பயிர் கழிவு எச்சங்கள் மற்றும் இதர பயிர்களின் வேர்களில் நீண்ட நாட்கள் வாழும் திறனுடையதால் இதனை கட்டுப்படுத்துவது சற்று சவாலானதாகவே திகழ்கிறது. இந்த நோய் தாக்கதலால் சுமார் 30 முதல் 70% வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் அபாயம் உள்ளது.
- மண்ணில் வாழக்கூடிய இந்த பாக்டீரியாக்கள், வேர்ப்பகுதியில் ஏற்படும் சிறிய காயங்கள் வழியாக உள்ளே சென்று ஊட்டச்சத்து மற்றும் நீர் கடத்தும் திசுக்களை அடைப்பதால் பயிர்களில் அறிகுறிகள் தோன்றும்.
நோயின் அறிகுறிகள்:
- வேர் மற்றும் அடித்தண்டு பகுதிகளில் நிற மாற்றம் காணப்படும். வேர் வழியாக வாஸ்குலர் திசுக்களில் உட்புகுந்து ஊட்டச்சத்து மற்றும் நீர் கடத்தும் திறனை படிப்படியாக குறைக்கும். இதனால் இளம் இலைகள் சற்று வாடியது போன்று காட்சியளிக்கும்.
- சாதகமான சூழ்நிலையின் பொழுது பயிரில் காணப்படும் மொத்த இலைகளும் வாடியது போன்று காட்சி அளிக்கும்.
- இலையில் எந்தவித நிற மாற்றமும் காணப்படாது இருப்பினும் பயிர்கள் திடீரென இருந்து விடும். பாதிக்கப்பட்ட செடியின் தண்டு பகுதிகளை பிளந்து பார்த்தல் அதில் பழுப்பு நிறம் மாற்றத்தை காண இயலும்.
- சில நேரங்களில் வேர்கள் மற்றும் அடித்தண்டு பகுதியில் அழுகல் அறிகுறி காணப்படலாம். தண்டுப் பகுதியை வெட்டி தண்ணீரில் வைத்தால் பாக்டீரியாக்களின் கசிவை தண்ணீரில் பார்க்கலாம்.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- ஒரே வயலில் மீண்டும் மீண்டும் தக்காளி அல்லது இதன் குடும்பத்தை சார்ந்த இதர பயிர்களை சாகுபடி செய்வதை தவிர்க்கவும். முந்தைய பயிர் கழிவுகளின் எச்சங்கள் வயதில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும்.
- தொழு உரத்துடன் சூடோமோனஸ் மற்றும் பேசில்லஸ் தேவையான அளவு கலந்து ஊட்ட மேற்றி இட வேண்டும்.
- இந்த நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு திறன் அல்லது தாங்கி வளரும் திறன் உடைய ரகங்களை தேர்வு செய்யவும்.
- தரமான நாற்றுகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். போதுமான அளவு இடைவெளி விட்டு நடவு செய்வதன் மூலம் நோய் தாக்குதலுக்கு காரணமான சூழ்நிலையை தவிர்க்கலாம்.
- வாய்க்கால் வழி நீர் பாசனத்தை தவிர்த்து சொட்டுநீர் பாசனம் பயன்படுத்தலாம்.நோய் தாக்குதல் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வர வேண்டும் தாக்குதல் தென்பட்டால் உடனடியாக அந்த பயிரை அகற்ற வேண்டும்.
- நோய் தாக்குதலை தவிர்க்க அல்லது கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒரு முறை என்ற அளவில் ஊற்ற வேண்டும்.
- சூடோமோனஸ் புளோரசன்ஸ்- 100 மில்லி, பேசில்லஸ் சப்டிலிஸ் - 100 மில்லி, Copper oxy chloride - 25 கிராம், Copper hydroxide - 20 கிராம், Streptomycin+ Tetracycline - 6 கிராம்
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்ட வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன் பெறவும். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX