google-site-verification: googled5cb964f606e7b2f.html மார்ச் 2025 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 24 மார்ச், 2025

தென்னையில் இலை கருகல் ஏற்படுவதற்கான காரணங்களும் சரி செய்யும் வழிமுறையும்

தென்னையில் இலைக் கருகல் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன....

  • வளம் குன்றிய தென்னங்கன்றுகளை தேர்வு செய்து நடவு செய்தல் 
  • தென்னங் கன்றுகளை அதிக ஆழமாக நடவு செய்வதால் வளர்ச்சி தடைப்பட்டு ஆரம்ப நிலையில் இலை கருகல் தென்படும்.
  • போதுமான தண்ணீர் இல்லாததால் தென்னங்கன்றுகள் மற்றும் இளம் வயது தென்னை மரங்களில் கருங்கல் தென்படும்.

  • மெக்னீசியம் மற்றும் மாங்கனிசு போன்ற ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இளம் கன்றுகளின் இலைகளில் கருகல் மற்றும் ஒழுங்கற்ற வடிவம் காணப்படலாம்.
  • அதேபோன்று நன்கு வளர்ந்த மரங்களில் இலை கருகல் தென்படுவதற்கு பிரதானமான காரணமாக பூஞ்சான நோய் திகழ்கிறது.
  • இந்த நோயினால் மரத்தின் அடிப்பகுதியில் உள்ள மூன்று முதல் நான்கு இலைகளின் நுனிப்பகுதியில் கருகல் காணப்படும். 
  • இது இலையின் நுனிப்பகுதியில் இருந்து அடி நோக்கி பரவும். 
  • இது மட்டும் இன்றி தண்டு மற்றும் இலைக்காம்பு பகுதியில் வெடிப்புகளும்,  அதிலிருந்து திரவம் வெளியேறுவதையும் காண இயலும்.

  • ஆனால் கடந்த ஆண்டு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணத்தினாலும் இலை கருகல் தென்பட்டது.

இதை சரி செய்யும் வழிமுறைகள்...

  • தரமான நாற்றுகளை தேர்வு செய்து நட வேண்டும்.
  • ஆழமாக நடவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • மண் இறுக்க தன்மையுடன் இல்லாமல் இருக்க போதுமான அளவு மண்புழு உரம் அல்லது தொழு உரம் அல்லது புண்ணாக்கு வகைகளை இட வேண்டும்.
  • மண்ணில் உள்ள உரங்கள் மட்க வருடத்திற்கு இரண்டு முறை வேஸ்ட் டிகம்போசர் அல்லது ஈயம் கரைசல் பயன்படுத்த வேண்டும்.
  • போதுமான நுண்ணூட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி  செய்ய வேண்டும்.
  • பயிர்களை அதிக வளர்ச்சிக்கு படுத்தாமல் குறைந்தபட்ச நீர் தேவை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • இவை அனைத்தையும் கடைபிடித்தும் இலை கருகல் தென்பட்டால் நோய் காரணிகளாக இருக்கலாம்.
  • அதனை உறுதி செய்ய இலையின் நுனிப்பகுதியில் முக்கோண வடிவில் இலை கருகல் காணப்படும். மேலும் அதை உற்று கவனிக்கும் பொழுது தீயில் எறிந்து மீதமுடைய இலைகள் போன்று காணப்படும்.
  • இதனை இயற்கை வழி முறையில் கட்டுப்படுத்த Trichoderma harzianum மற்றும் Bacillus subtillis குறிப்பிட்ட இடைவெளியில் பயன்படுத்த வேண்டும்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த Hexaconazole என்ற மருந்தை 100 மில்லி தண்ணீரில் 5 மில்லி கலந்து வேர் வழியாக உட் செலுத்த வேண்டும். இதனை வருடத்திற்கு மூன்று முறையாவது பின்பற்ற வேண்டும்.

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

வெள்ளி, 21 மார்ச், 2025

தர்பூசணியில் தண்டு கருகல்(Gummy) நோய் மேலாண்மை...

  • தர்பூசணி சாகுபடி பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் கடந்த சில வருடங்களாக தண்டு கருகல் அதாவது ஒட்டும் தண்டு கருகல் Gummy stem blight எனப்படும் பூஞ்சான நோய் மிக அதிக அளவில் காணப்படுகிறது. 
  • இந்த நோய் மிக வேகமாக பரவுவதால் இதன் மூலம் இவர் 40 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. தர்பூசணி மட்டும் இல்லாமல் முலாம்பழம் பயிரையும் தாக்கும் திறனுடைய இந்த நோய் சில நேரங்களில் தண்டு அழுகல் நோய் எனவும் கூறப்படுகிறது.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை:

  • சராசரி வெப்பநிலை மற்றும் அதிக காற்று ஈரப்பதம் 
  • நீண்ட வறட்சிக்கு பிறகு அதிகப்படியான மழை 
  • பனிப்பொழிவு 
  • இலைகள் நீண்ட நேரமாக ஈரப்பதத்துடன் இருத்தல்

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த நோயின் ஆரம்ப நிலை அறிகுறியாக வட்ட முதல் நீள் பட்டத்தில் கருப்பு முதல் பழுப்பு நிற புள்ளிகள் இலையின் விளிம்புகளுக்கு அருகில் காணப்படும்.
  • நாளடைவில் இந்த புள்ளிகள் பெரிதாகி ஒன்று நான் ஒன்று இணைந்து கருகல் போன்ற அறிகுறியாக காணப்படலாம்.
  • இலை புள்ளியின் நடுப்பகுதி சற்று நீர்த்த நிறமாக மாறி நாளடைவில் உதிர்ந்து காணப்படும். 
  • இந்த நோய் தண்டு பகுதியில் தாக்குவதால் தண்டில் ஆரம்பத்தில் புள்ளிகள் தோன்றி நாளடைவில் கருகலாக மாறும். 
  • இதனால் தண்டுப் பகுதியில் வெடிப்பு காணப்பட்டு அதிலிருந்து வெளி சிகப்பு நிற ஒட்டு திரவம் வெளிவருவதை காண இயலும்.
  • இலைகள் அதிக அளவு கருகுவதால் பயிர் வளர்ச்சி தடைப்படும். 
  • தண்டுப் பகுதியில் பாதிப்பு ஏற்படும் தருணத்தில் மொத்த பயிலும் இறந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
  • கவனிப்பற்ற நிலையில் தீவிர நோய் தாக்குதலின் போது காய்களை தாக்கி அழுகலை ஏற்படுத்தும்.



கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்த நோய் பயிரின் அனைத்து வளர்ச்சி பருவத்திலும் தாக்குதலை ஏற்படுத்துவதால், தரமான விதை மற்றும் நாற்றுகளை தேர்வு செய்வது மிக அவசியம்.
  • நாற்றுப் பண்ணையில் இருந்து நாற்றுகளை கொள்முதல் செய்யும் பொழுது தண்டு கருகல் நோய் தாக்குதல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விதைகள் அல்லது நாற்றுகள் இயற்கை அல்லது இரசாயன பூஞ்சான கொல்லி  மருந்துகளை பயன்படுத்தி நேர்த்தி செய்து பின்னர் நடவு/விதைப்பு மேற்கொள்ள வேண்டும்.
  • முந்தைய பயிர்களின் கழிவுகளில் இந்த பூஞ்சைகள் நீண்டு வாழ்வதால் அதனை முற்றிலும் அகற்றுவது மிக அவசியம். 
  • இந்த நோய் தாக்காத இதர பயிர் வகைகளை சுழற்சி முறையில் சாகுபடி செய்வது சிறந்தது. 
  • கோடை பருவத்தில் தெளிப்பு நீர் பாசனம் வழியாக நீர் விடுவதை தவிர்க்கலாம்.
  • கொடி காய்கறி பயிர்கள் வயலில் தானாக முளைத்து வருவதை அவ்வப்போது அகற்ற வேண்டும். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து முன்னெச்சரிக்கை அடிப்படையில் சூடோமோனஸ் அல்லது பேசில்லஸ் தெளித்து வரவேண்டும். 
  • தீவிர நோய் தாக்குதலின் போது பாதிக்கப்பட்ட பயிர்களை அகற்றி அப்புறப்படுத்துவது நல்லது. 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் நோய் தாக்குதலின் தீவிரத்தை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை இலை வழியாக தெளிக்கலாம்.
    • Zineb
    • Chlorothalonil
    • Mancozeb
    • Azoxystrobin + Mancozeb
    • Azoxystrobin + Difenoconazole
    • Tebuconazole + Trifloxystrobin
    • Fluxapyroxad + Pyraclostrobin 
    • Boscalid + Pyraclostrobin 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் (WhatsApp) குழுவில் இருந்து பயன் பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வியாழன், 20 மார்ச், 2025

தக்காளி பயிரில் ஊசித்துளைப்பான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • தற்சமயம் சாகுபடியில் இருக்கும் தக்காளி பயிரில் பரவலாக ஊசித்துளைப்பான் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.
  • இந்தப் புழு தாக்குதலால் ஒருபுறம் பயிரின் வளர்ச்சி தடைபடுவதுடன் நேரடியாக காய் அல்லது பழங்களில் சேதத்தை ஏற்படுத்துவதால் மகசூல் பெரிய அளவு இழப்பீடு ஏற்படும். 
  • பிரதானமாக தக்காளிப் பயிரை பாதித்தாலும் இதர ஒரு சில பயிர்களிலும் இதன் தாக்குதல் காணப்பட வாய்ப்புள்ளது.

தாக்குதலின் அறிகுறிகள்: 

  • மிகச் சிறிய உடல் அமைப்பு உடைய தாய் அந்து பூச்சிகள் அதிக அளவு முட்டைகளை பயிரின் இளம் குருத்து பகுதி, இளம் இலைகள், தண்டுப்பகுதி மற்றும் காய்களின் காம்பு பகுதியில் முட்டைகளை இடுகிறது. குறைந்த நாட்களில் அதிக இனப்பெருக்க திறன் இருப்பதால் தொடர்ச்சியாக புழு தாக்குதல் காணப்படும் குறிப்பாக கோடை பருவத்தில்.
  • முட்டையில் இருந்து வெளிவரும் இளம் புழுக்கள் இலை சுரங்க ஈக்களின் தாக்குதல் போன்றே இலைகளில் பச்சயத்தை உண்ணும். 
  • இதனால் பாதிப்படைந்த இலையின் பகுதிகள் ஆரம்ப நிலையில் சற்று வெளிர் நிலத்திலும் நாளடைவில் பழுப்பு நிறத்திலும் காணப்படும்.

  • இது ஆரம்பநிலை அறிகுறியாகும். இதன் காரணமாக பயிர்களின் வளர்ச்சி தடைப்பட்டு உற்பத்தி திறன் குறையும்.
  • நாளடைவில் இல்லம் புழுக்கள் காய்களை துளைத்து உண்ணும் இதனால் இரண்டாம் நிலை நோய் தாக்குதலாக அழுகை நோயும் ஏற்படலாம்.
  • இளம் புழுக்கள் சுமார் ஒரு வார காலம் வரை பயிரைத் தாக்கும் பின்பு கூட்டு புழுவாக மாறி மண்ணில் விழுந்து விடும்.
  • இலை மற்றும் காய்களில் மட்டும் தாக்குதலை ஏற்படுத்தாமல் தீவிர தாக்குதலின் போது குருத்துப் பகுதி தண்டு பகுதி மற்றும் பூக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை படைத்தது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். ஏனெனில் இந்தப் புழுக்கள் ஒரு சில களை பயிர்களையும் தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • ஏக்கருக்கு 100 கிலோ விதம் வேப்பம் புண்ணாக்கு இட்டு மண்ணை கிளறி விடலாம் இதன் மூலம் கூட்டுப் புழுக்களை அழிக்க முயற்சி செய்யலாம். 
  • மேலும் மண்ணில் மிதமான ஈரப்பதம் காணப்படும் பொழுது  நீர்ப்பாசனம் வழியாக ஏக்கருக்கு அதிகபட்சமாக மூன்று லிட்டர் வரை மெட்டாரைசியம் செய்யும் உயிரியல் திரவத்தை விடலாம்.
  • தீவிரமாக பாதிப்படைந்த காய்களை சேகரித்து வயலுக்கு வெளியில் நன்கு காய வைத்து அதனை கால்நடைகளுக்கு கொடுக்கலாம் 
  • மஞ்சள் ஒட்டு பொறியை ஏக்கருக்கு 12 வீதம் பயிரின் கிடை மட்டத்திற்கு கட்டுவதன் மூலம் தாய் அந்து பூச்சிகளை ஓரளவிற்கு அழிக்க இயலும். 
  • இந்த வகை புழுக்களுக்காக பயன்படுத்தப்படும் இன கவர்ச்சி பொறி வாங்கி ஏக்கருக்கு 12 வீதம் நிறுவலாம். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் கண்டிப்பாக ஏழு நாட்களுக்கு ஒரு முறை Bacillus thuringiensis திரவத்தை ஏக்கருக்கு ஒரு லிட்டர் வீதம் மாலை வேளையில் தெளிக்க வேண்டும். 
  • இரண்டாம் நிலை தாக்குதலாக பழத்தில் அழுகல் நோய் காணப்பட்டாலும் அதை கட்டுப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளிப்பு பயனுள்ளதாக அமையும். 
  • ஒட்டுண்ணி அட்டைகள் கிடைக்கப் பெற்றால் அதனை ஏக்கருக்கு பத்து அட்டைகள் வீதம் 21 நாட்கள் இடைவெளியில் கட்டலாம். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம். Chlortraniliprole/ Cyantraniliprole/ Lamba cylithrin/ Indoxacarb/ Flubendamide/ Spinotoram 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். 

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


 

சனி, 8 மார்ச், 2025

மஞ்சள் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை-நடவு முதல் அறுவடை வரை

முன்னுரை:

  • பல்வேறு மருத்துவ குணங்களை உடைய மஞ்சள் சாகுபடி தமிழ்நாட்டின் பிரதான பயிர்களில் ஒன்றாக திகழ்கிறது. கிழங்கு வகையை சார்ந்த இந்த பயிர் நறுமணம் மற்றும் வாசனைக்காக உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ மற்றும் அழகு சாதன பொருள்கள் தயாரிப்பில் இதன் பயன் எண்ணிலடங்காதது.
  • தமிழ்நாட்டின் ஈரோடு தர்மபுரி சேலம் கிருஷ்ணகிரி நாமக்கல் என பல மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படும் மஞ்சள் பயிர் சாகுபடியை பற்றி விரிவாக பார்ப்போம்.

மண் மற்றும் தட்பவெப்ப நிலை: 

  • மஞ்சள் ஒரு வெப்பமண்டல பயிராக திகழ்வதால் சராசரி முதல் அதிக வெப்பநிலை  நிலவக்கூடிய தமிழ்நாட்டின் அநேக மாவட்டங்களில் மஞ்சள் சாகுபடி செய்யலாம். போதுமான நீர் வசதி இருப்பது மிக அத்தியாவசியம். 
  • பல்வேறு மண் அமைப்பிலும் வளரக்கூடிய மஞ்சள் பயிருக்கு நல்ல வடிகால் வசதியுடைய மணல் பாங்கான மண் மிகவும் உகந்தது.
  • களிமண் மற்றும் செம்மண் போன்ற பகுதியில் சாகுபடி செய்யும் பொழுது மண் இறுக்கத்தை போக்க போதுமான அளவு தொழு உரம் இட்டு சாகுபடி செய்யலாம்.
  • களர் மண்ணில் சாகுபடி செய்வதை தவிர்க்கலாம் மேலும் அமில காரத்தன்மை 5 முதல் 7.5 வரை இருக்கலாம். நீர் தேங்கும் அமைப்புடைய வயல்களை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். 

பருவம்: 

அந்தந்த மாவட்டத்தில் திகழும் தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடவு பருவம் தேர்வு செய்யப்படுகிறது. பொதுவாக மே இறுதியில் இருந்து ஜூன் இறுதிக்கு இடைப்பட்ட காலம் நடவு செய்வதற்கு உகந்தது. 

நிலம் தயாரித்தல்: 

  • மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரிய கலப்பையை தேர்வு செய்து கிழக்கு மேற்கு மற்றும் தெற்கு வடக்கு திசையில் உழுது மண்ணை தூளாக்கி பண்படுத்த வேண்டும் வேண்டும்.
  • கடைசி உழவு அல்லது ரோட்டாவேட்டர் மூலம் உழவு செய்வதற்கு முன்னதாக நன்கு மக்கிய தொழு உரத்தை ஏக்கருக்கு 4 டன் என்ற அளவிற்கு குறையாமல் அடி உரமாக இட வேண்டிய உரங்களை பயன்படுத்தி ஊட்டமேற்றி வேண்டும்.

பார் அமைத்தல்: 

  • ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முறையில் பார் ஆரம்பித்து சாகுபடி செய்யப்படுகிறது.
  • அகன்ற பாத்தி அமைத்தல், முகடு பள்ளம் முறையில் பார்கள் அமைத்து மற்றும் மேட்டுப்பாத்தி அமைத்தல் போன்ற பல்வேறு முறையில் சாகுபடி செய்யப்படுகிறது.
  • மண் அமைப்பு, நீர் இருப்பு திறன் மற்றும் நீர் பாசன முறை ஆகியவற்றிற்கு ஏற்றவாறு உகந்த பார் அமைக்கும் முறையை தேர்வு செய்யவும். 

விதை அளவு மற்றும் விதை நேர்த்தி: 

  • ஏக்கருக்கு சுமார் 800 முதல் 1000 கிலோ விதை மஞ்சள் தேவைப்படும். 
  • விதை மஞ்சள் நோய் அல்லது பூச்சி தாக்காத வயல்களில் இருந்து தரமானதாக தேர்வு செய்வது மிக அவசியம். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் ஒரு கிலோ விதை மஞ்சளுக்கு 4 கிராம் விரடி அல்லது சூடோமோனஸ் 10 என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து சுமார் 30 நிமிடம் உலர்த்தி பின் நடவு செய்ய வேண்டும். 
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் Carbendazim+ Mancozeb அல்லது COC மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி நேத்தி செய்து பின்பு நடவு செய்யலாம். 

பயிர் இடைவெளி: 

சாகுபடி செய்யப்படும் முறைக்கு ஏற்றவாறு வரிசை இடைவெளி 45-60 சென்டிமீட்டர் எனவும் பயிருக்கான  இடைவெளி 15-25 சென்டி மீட்டர் வரை இருக்கலாம்.

உர நிர்வாகம்: 

  • மண் பரிசோதனை அடிப்படையில் உரம் இடுவது மிக அவசியம். 
  • பொதுவாக பரிந்துரைக்க கூடிய உர அளவு/ ஏக்கர் - தழைச்சத்து- 60-70 கிலோ, மணி சத்து- 20-25 கிலோ, சாம்பல் சத்து- 40-45, நுண்ணூட்டச் சத்து- 10 கிலோ, கடலை/ஆமணக்கு புண்ணாக்கு-50 கிலோ, ஜிங் சல்பேட்- 15-20 கிலோ, இரும்பு சல்பேட் 25 கிலோ போன்ற உரங்களை ஐந்தாக பிரித்து நடவு செய்த 30 நாட்களில் இருந்து மாதம் ஒரு முறை விட்டு நன்கு நீர் பாய்ச்சவும். 
  • சொட்டுநீர் பாசனம் வழியாகவும் நீரில் கரையும் உரங்களை கரைத்து கொடுக்கலாம்.
  • நான் கொடுக்கும் ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு எளிதில் கிடைக்க ஏதுவாக மாதம் ஒருமுறை ஏக்கருக்கு மூன்று லிட்டர் Humic அமிலம்/ மூன்று லிட்டர் ஈயம் கரைசல்/ மூன்று லிட்டர் NPK உயிர் உரம்/200 லிட்டர் வேஸ்ட் டீ கம்போசர் கொடுக்க வேண்டும்.

ஊடு பயிரிடுதல்:

ஆரம்ப காலத்தில் குறைந்த வாழ்நாள் கொண்ட சின்ன வெங்காயம், முள்ளங்கி, கொத்தமல்லி மற்றும் கீரை வகை பயிர்களை சாகுபடி செய்யலாம். 

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை: 
கிழங்கு மற்றும் கழுத்து அழுகல் நோய்:

  • பயிரின் ஆரம்ப காலகட்டத்தில் கிழங்கு அல்லது கழுத்து அழுகல் நோய் தாக்குதல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இதன் பிரதான அறிகுறி இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் கருகி காணப்படுதல்.
  • இதனை கட்டுப்படுத்த T. viride அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு என்று மருந்து பரிந்துரைக்கப்பட்ட அளவில் கலந்து வேர்ப்பகுதியில் வாரம் ஒரு முறை என இரண்டு முறை ஊற்ற வேண்டும்.

இலைப்புள்ளி நோய்:

இந்த நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பார்க்கவும். 

மஞ்சள் கொப்புள நோய்:

இந்த நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பார்க்கவும். 

தண்டு துளைப்பான்: 

  • பயிரின் ஒரு சில இலைகள் மட்டும் சற்று மஞ்சள் நிறமாக மாறி கருவகுது இதன் அறிகுறியாகும்.
  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது Bacillus thuringiensis என்ற உயிரியல் 10 லிட்டர் தண்ணீருக்கு 70-100 மில்லி கலந்து தெளிக்க வேண்டும்.
  • தாக்குதல் அதிக அளவில் காணப்படும் பொழுது விளக்கு பொறி மாலை நேரத்தில் சுமார் ஒரு மணி நேரம் எரிய விட வேண்டும். இதன் மூலம் தாய் அந்த பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த  Emamectin/Novluron/ Chlortraniliprole/ Flubendamide/Spinosad/ Tetraniprole போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம். 

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


மஞ்சள் பயிரில் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • இதன் அறிகுறிகள்  அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகம் தென்படும். மிதமான வெப்பநிலை மற்றும் அதிக காற்று ஈரப்பதம் பனிப்பொழிவு ஆகியவை இலைப்புள்ளி நோய் உருவாவதற்கு சாதகமாக திகழும்.
  • நோயை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சை நாம் பயன்படுத்தும் விதை கருணை மூலமாகத்தான் நிலத்திற்கு வருகிறது. சாதகமான சூழ்நிலை அமையும் பொழுது பெருக்கமடைந்து தண்ணீர் காற்று மற்றும் பண்ணை பணிகளின் போது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது. எனவே ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக மஞ்சள் சாகுபடி செய்தால் இந்த நோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. 
  • சுமார் இரண்டு முதல் மூன்று சென்டிமீட்டர் நீளத்திற்கும் நான்கு முதல் ஐந்து சென்டிமீட்டர் அகலத்தில் ஒழுங்கற்ற வடிவில் புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும். 
  • இலைப் புள்ளியின் நடுப்பகுதி சாம்பல் நிறத்திலும் ஓரப்பகுதி பழுப்பு நிறத்திலும் காணப்படும். இலை புள்ளிகள் பிரதானமாக இலையின் விளிம்புகளில்  காணப்படும். இதை பார்ப்பதற்கு பொட்டாசியம் சத்து குறைபாடு அல்லது கருகல் நோய் போன்று இருக்கும். 
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட  இலைகளை சேகரித்து அப்புறப்படுத்தலாம். 
  • பயிரின் அடிப்பகுதியில் காணப்படும் முதிர்ந்த மற்றும் காய்ந்த இலைகளை அகற்றுவதால் நல்ல காற்றோட்டம் கிடைக்க பெறும். சூரிய ஒளி மற்றும் காற்று உட்புகுவதால் நோய் பரவுதல் தடுக்கப்படும். 
  • நீர்ப்பாச்சுதல் மருந்து தெளித்தல் போன்ற பண்ணை பணிகளை காலை நேரத்தில் மேற்கொள்ளாமல் மதியம் அல்லது மாலை வேளையில் செய்வதால் நோய் பரவுதலை குறைக்கலாம். 
  • உயிர் பூஞ்சான கொல்லியான Trichoderma மற்றும் Pseudomonas இந்த நோய்க்கு எதிராக திறன் பட செயல்படுவதால், இதனை வாரம் ஒரு முறை தொடர்ச்சியாக தெளித்து வர வேண்டும். 
  • நோய்கள் வருவதற்கு முன்னதாக அல்லது நோயின் ஆரம்ப நிலையில் Carbendazim/ Carbendazim+ Mancozeb /Propineb/COC போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பரிந்துரைக்கப்படும் அளவில் கலந்து தெளிக்கலாம். 
  • நோய் பரவுதல் அதிகமாக தென்படும் வேளையில் Propiconazole/ Difenoconazole/ Azoxystrobin + Mancozeb/ Metiram+ Pyroclosrobin போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தெளிப்பதன் மூலம் நோய் பரவுதலை தடுக்க இயலும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

 

மஞ்சள் பயிரில் இலை கொப்புள நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை: 

  • மஞ்சள் பயிரில் பிரதானமாக தோன்றும் நோய்களாக இலைப்புள்ளி நோய், கருகல், கொப்புள நோய் மற்றும் கிழங்கு அழுகல் நோய் திகழ்கிறது.
  • நாம் ஏற்கனவே இலைப்புள்ளி நோயைப் பற்றி விரிவாக பார்த்தோம். இந்த பதிவில் நடப்பு பருவத்தில் ஏற்படக்கூடிய மற்றொரு முக்கியமான நோயான இலை கொப்புள (Leaf blotch)நோயைப் பற்றி விரிவாக காணலாம். 

நோயின் அறிகுறிகள்:

  • இந்த நோயானது பெரும்பான்மையாக பயிரின் அடி பகுதியில் காணப்படும் இலைகளில் ஆரம்பமாகும். சுமார் ஒரு மில்லி மீட்டர் அகலம் உள்ள மிகச் சிறிய புள்ளி அடியில காணப்படும். இதனை இலையின் இரு புறங்களிலும் காண இயலும். 
  • ஆரம்பத்தில் புள்ளிகள் பழுப்பு நிறத்தில் உருவானாலும் பின்னர் சிகப்பு நிறமாக மாறும். எண்ணற்ற சிறு சிறு புள்ளிகள் மிக நெருக்கமாக இடையில் காணப்படுவதால் பார்ப்பதற்கு கருகல் நோய் போன்று தெரியும்.
  • எண்ணற்ற புள்ளிகள் இலையின் பெரும்பான்மையான பகுதியை சென்றடைவதால் இலைகளின் உற்பத்தித்திறன் பாதிப்படைந்து கண்டிப்பாக மகசூல் இழப்பீடு ஏற்படும். நன்கு பராமரிப்பு உடைய வயல்களில் இதனை எளிதில் கட்டுப்படுத்தி விடலாம் அதில் சுமார் 20% வரை மகசூல் இழப்பீடு ஏற்படும். ஆனால் போதுமான பராமரிப்பு இல்லாத வயல்களில் 50% வரை கூட மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும்.
  • இலையில் காணப்படும் புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து இலைகள் கருகி இறந்து விடும். இந்த நோய் அக்டோபர் நவம்பர் மாதங்களில் மிக அதிக அளவில் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த காலத்தில் திகழும் அதிக காற்று ஈரப்பதம், வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு இந்த பூஞ்சை உறக்க நிலையில் இருந்து வெளிவந்து மிக வேகமாக பெருக்கம் அடைய சாதகமாக திகழ்கிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்த நோயை கட்டுப்படுத்த தீவிரமாக பாதிக்கப்பட்ட இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • நிலத்தில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் மேலும் பயிர்களுக்கு போதுமான அளவு காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி அடிமட்ட இலைகள் வரை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். 
  • இந்த நோயானது பாதிக்கப்பட்ட கிழங்குகளில் இருந்து மற்றொரு வயலுக்கு செல்வதால் விதைக் கிழங்குகளை தேர்வு செய்யும் போது கவனம் தேவை. அதேபோன்று பாதிக்கப்பட்ட பயிரின் எச்சங்களில் இந்த பூஞ்சானம் நீண்ட நாட்கள் இருப்பதால் ஒரு முறை சாகுபடி செய்த பிறகு நிலத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். 
  • பயிர் சுழற்சி மற்றும் ஊடுபயிர் செய்வதால் இந்த நோய் பரவுதலை தடுக்க இயலும். 
  • நோய் தாக்குதலை தடுக்க அல்லது ஆரம்ப நிலையின் போது உயிர் பூஞ்சான கொல்லிகலான Pesudomonas மற்றும் Trichoderma ஆகியவற்றை தொடர்ச்சியாக தெளித்தும் பாசன நீர் வழியாகவும் கொடுத்து வர வேண்டும்.
  • வெங்காயம் ஊடுபயிராக இருக்கும் வயல்களில் அல்லது வெங்காய இலையை அரைத்து தெளிக்க கூடிய பயிர்களில் இந்த நோய் தாக்குதல் மிக மிக குறைவாகத்தான் காணப்படுகிறது எனவே இந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த முயற்சி செய்யலாம். 
  • பல்வேறு வகையான ரசாயன மருந்துகள் இந்த நோய்களுக்கு எதிராக திறன் பட செயல்படும் உதாரணத்திற்கு.. Azoxstrobin+ Tebuconazole, Triclostrobin +Tebuconazole, Flusilazole + Carbendazim போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் அல்லது இதுபோன்று பல மருந்துகள் உள்ளது அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம். 
  • இலையில் ஈரப்பதம் இருக்கும் போது வயலில் புகுந்து ஒரு வேலையும் செய்ய வேண்டும் இது மேலும் நோய் பரவுதலை அதிகப்படுத்தும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறுங்கள்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வெள்ளி, 7 மார்ச், 2025

வாழை பயிருக்கு தேவைப்படும் பிரதான ஊட்டச்சத்துக்களும் அதன் குறைபாட்டு அறிகுறிகளும்

  • வாழை சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை என்பது மிகவும் இன்றியமையாதது ஏனெனில் வாழை மரங்கள் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு வளமான மகசூலை கொடுக்க வல்லது.
  • வாழைப்பயிர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கிடைக்க பெறும் சூரிய ஒளி மற்றும் ஊட்டச்சத்துக்களை பயன்படுத்தி வளர்ச்சியை துரிதப்படுத்தி அதிகளவு மகசூலை தரவல்லது. எனவே மண் பரிசோதனை அடிப்படையில் சரிவிகித ஊட்டச்சத்து மேலாண்மை சிறந்த மகசூல் காண அடிப்படையாக திகழ்கிறது. 
  • வாழை பயிருக்கு பிரதானமாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டால் ஏற்படும்  அறிகுறிகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். 

சாம்பல் சத்து (பொட்டாசியம்):

  • வாழை தார்களில் உள்ள காய்களின் எண்ணிக்கை, அளவு, தரம் ஆகியவற்றை நிர்ணயிக்கிறது.
  • வாழைமரம் சரியான நேரத்தில் பூ பிடித்து தார் விடுவது பொட்டாசியத்தை பயன்படுத்தி தான்.
  • இதன் குறைபாட்டால் இலையின் விளிம்புகள் மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் கருகுதல், இலையில் கிழிதல், இலைகள் பாதியில் உடைந்து தொங்குதல், வாழைத்தார்கள் சிறிதாக இருத்தல், தார்களில் பழங்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல் என பல அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

தழைச்சத்து:

  • உடலும் உயிரும் போன்று தழைச்சத்து தான் பயிரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆதாரம்.
  • வாழைப் பயிரை பொறுத்த வரையில் முதல் ஐந்து மாதங்களில் போதுமான வளர்ச்சியை அடைய வேண்டும் இல்லையெனில் கண்டிப்பாக மகசூல் பின்னடைவு ஏற்படும். 
  • அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல் இதன் குறைபாட்டின் பிரதான அறிகுறி
  • போதுமான வளர்ச்சி இன்மை, குறைந்த எண்ணிக்கையிலான இலைகள், தண்டுப் பகுதியில் நிறம் மாற்றம் ஆகியவை தழைச்சத்து குறைபாட்டின் இதர அறிகுறிகளாகும். 

மெக்னீசியம்:

  • தண்டுப் பகுதியில் காணப்படும் இலை உறை சற்று விலகி காணப்படுதல் இதன்  குறைபாட்டு அறிகுறி.
  • வாழை மரத்தின் அடி இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிற மாற்றத்தை காண இயலும். இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால் இந்த ஊட்டச்சத்தின் குறைபாடு பொட்டாசியம் மற்றும் மாங்கனிசு ஊட்டச்சத்து பற்றாக் குறையின் அறிகுறிகள் போன்றே காணப்படும்.
  • இதை சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். ஏனெனில் இதுதான் வாழை காய்களின் எடையை நிர்ணயிக்கிறது.
  • பொட்டாசியம் உரத்தை அதிக அளவு கொடுத்தாலும் வாழை பயிரினால் இந்த ஊட்டச்சத்தை பயிர்களால் எடுத்துக் கொள்ள முடியாது.

கால்சியம்:

  • மரத்தின் நுனி இலைகளில் மஞ்சள் நிற மாற்றம் காணப்படும். நாளடைவில் இது கருகியது போன்று காட்சியளிக்கும்.
  • நுனி இலை போதுமான வளர்ச்சி இல்லாமல் குட்சி போன்று உருவாகும். 
  • முதிர்ந்த காய்களில் கால்சியம் குறைபாட்டால் வெடிப்புகள் தோன்றலாம்.

போரான் (Boron):

  • நுனி இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாக காட்சி அளிக்கும் சில நேரங்களில் நுனி இலைகள் ஒழுங்கற்று காணப்படுதல்
  • நுனி இலைகள் உள்புறமாக வளைதல், நாளடைவில் இந்த இலைகளின் விளிம்புகளில் பழுப்பு நிறமாக மாறி பின்பு காய்ந்து விடும்.   நரம்புகளுக்கு இணையாக வெள்ளை நிற கோடுகள் இலையின் அடி புறத்தில் காணப்படலாம்.
  • வேர் மற்றும் குருத்துப் பகுதியில் வளர்ச்சியை தூண்டுதல், பூ மற்றும் காய் பிடித்தலில் பிரதான பங்கு வகித்தல் ஆகியவன போரான் ஊட்டச்சத்துக்களின் பிரதான பணிகள் ஆகும்.

மாங்கனிசு (Manganese):

  • மாங்கனிசு ஊட்டச்சத்து குறைபாட்டால் இளம் இலைகள் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும்.
  • நாளடைவில் இந்த இலைகளின் விளிம்புகளில் நிறமாற்றம் காணப்படும் அதாவது காய்ந்தது போன்ற அறிகுறி உருவாகும். 
  • இலையின் விளிம்புகள் கீழ்நோக்கி சுருண்டு காணப்படும்
  • இலைகளின் நுனிப்பகுதி ஆரம்ப நிலையில் ஊட்டச்சத்து குறைபாட்டு அறிகுறியை வெளிப்படுத்தும்.

துத்தநாகம் (Zinc):

  • பயிர்களுக்கு போதுமான அளவு பச்சையத்தன்மையை கொடுத்து வளர்ச்சி மற்றும் விளைச்சலை மேம்படுத்த உதவி புரிகிறது. 
  • துத்தநாகம் குறைபாட்டால் இளம் இலைகள் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும். 
  • குறிப்பாக நுனி இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிற கோடுகள் போன்ற அறிகுறி குறிப்பிடத்தக்கது. 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் (WhatsApp) குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வியாழன், 6 மார்ச், 2025

இயற்கை முறையில் பயிர்களில் பூ பிடித்தலை ஊக்குவிக்கவும் வழிமுறைகள்

  இயற்கை முறையில் பயிர்களில் பூ பிடித்தலை ஊக்குவிக்கவும், பூ உதிர்வை தடுத்து காய் பிடித்தலை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது. அதில் ஒரு சில வழிமுறைகளை பற்றி இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.

தேமோர் கரைசல்:

  • தேங்காய் பால் மற்றும் புளித்த மோர் ஆகியவற்றின் கலவையை தேமோர் கரைசல் ஆகும்.
  • இதனை தயாரிக்க மூன்று முதல் ஐந்து தேங்காய்களை அரைத்து அதை ஐந்து லிட்டர் கலவையாக மாற்ற வேண்டும்.
  • அதேபோன்று ஐந்து லிட்டர் மோர் ஆகிய இரண்டையும் கலந்து மண்பானை அல்லது பிளாஸ்டிக் வாலியில் ஊற்றி வைத்து அதன் வாய் பகுதியை துணி வைத்து நன்கு கட்டிவிட வேண்டும்.
  • சுமார் ஏழு நாட்களுக்குப் பிறகு இந்த கலவை நன்கு புளித்து விடும். இதிலிருந்து 500 மில்லி தேமோர் கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
  • இந்த கரைசலில் இருக்கக்கூடிய பல்வேறு வகையான வளர்ச்சி ஊக்கிகள் பூ பிடித்தலை தூண்டுவதுடன் பூ உதிர்வையும் தடுத்து காய் பிடித்தலை அதிகரிக்கிறது.

அரப்பு மோர் கரைசல்:

  • தேமோர் கரைசல் போன்ற அரப்பு மோர் கரைசல் தயாரிக்க இரண்டு கிலோ அரப்பு இலை அல்லது ஊசி இலை மரம் என்று அழைக்கப்படும் மரத்தின் இலையை சுத்தம் செய்து தேவையான அளவு தண்ணீர் கலந்து நன்கு அரைத்துக் கொள்ளவும். 
  • இதனை ஐந்து லிட்டர் கரைசலாக தயார் செய்து ஐந்து லிட்டர் மோர் உடன் கலந்து ஏழு நாட்கள் நொதிக்க விட வேண்டும் பின்பு கரைசல் தயாராகிவிடும். 

எருக்கு கரைசல்:

  • எருக்கு இலை, தண்டு மற்றும் பூ ஆகியவற்றை சுமார் ஐந்து கிலோ எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை 200 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்து ஐந்து நாட்கள் கழித்து வடிகட்டி இலை வழியாக தெளிக்கலாம்.
  • மேம்படுத்தப்பட்ட இயற்கை கரைசல் தயாரிக்க சுமார் 20 லிருந்து 30 கிலோ எருக்கு இலைகள், மூன்று முதல் ஐந்து லிட்டர் கோமியம் மற்றும் நாட்டுச் சர்க்கரை கலந்து சுமார் ஒரு மாத காலம் வைத்திருந்து பின்னர் வடிகட்டி தெளிக்கலாம். 

இளநீர்:

  • இளநீரில் அதிக அளவு வளர்ச்சி ஊக்கிகள் நிறைந்து இருப்பதால் இதனை தனிப்பட்ட முறையில் கூட பூ பிடித்தலை மேம்படுத்த இலை வழியாக தெளிக்கலாம்.
  • இளநீர் அல்லது தேங்காய் தண்ணீரில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸின், ஜிப்ரலின், சைடோகைனின் போன்ற வளர்ச்சி ஊக்கிகள் நிறைந்து இருப்பதால் பயிர்களுக்கு தெளிப்புதான் இது ஊட்டச்சத்து பொருளாகவும் பூப்பிடித்தலை ஊக்குவிக்கவும் உதவுகிறது. 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் (WhatsApp) குழுவில் இருந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


கொடி காய்கறி பயிர்களில் சிவப்பு பூசணி வண்டு தாக்குதலும் அதன் மேலாண்மையும்...

முன்னுரை: 

  • கொடி காய்கறி பயிர்களான பரங்கி, பூசணி, சுரை, பீர்க்கன், புடலை, வெள்ளரி, பாகல் மற்றும் பல்வேறு காய்கறிகள் நாம் அன்றாட வாழ்வில் பிரதானமாக உண்ணக்கூடிய காய்கறி பயிராக திகழ்வதால் இதன் சாகுபடி வருடம் முழுவதும் காணப்படுகிறது.
  • கோடைகாலத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறி பயிர்களுக்கு குறிப்பாக கொடி காய்கறி பயிர்கள் நல்ல விலையில் விற்கப்படுவதால் தற்சமயம் பல்வேறு இடங்களில் பொடி காய்கறிகள் சாகுபடிகள் உள்ளது. 
  • கொடி காய்கறி பயிர்களில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் தற்சமயம் சாகுபடி உள்ள பயிர்களில் சிகப்பு பூசணி வண்டு தாக்குதல் காணப்படுகிறது.
  • இந்தப் பூச்சி தாக்குதலின் அறிகுறிகள் மற்றும் மேலாண்மையை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்ப்போம். இந்த வண்டுகளில் பல்வேறு இனங்கள் உள்ளன இவை ஒவ்வொன்றும் நிறத்தில் சற்று வேறுபடும்.

வாழ்க்கை சுழற்சி:

  • முட்டை- தனியாக அல்லது கொத்தாக மண் அல்லது செடிகளின் தண்டுப் பகுதியில் இடப்படுகிறது.
  • இளம்புழுக்கள்- 10 முதல் 15 நாட்கள் கழித்து முட்டையிலிருந்து வெளிவரும் Grub என்று அழைக்கப்படும் இளம் புழுக்கள் வேர்களை பாதிக்கும் திறனுடையது. இதன் வாழ்நாள் சுமார் ஒரு மாதம் வரை இருக்கும். 
  • கூட்டுப்புழு- இளம் புழுக்கள் கூட்டுப்புழுக்களாக மாறி சுமார் 10-15 நாட்கள் வரை இந்த நிலையில் இருக்கும் பின்பு வண்டுகளாக மாறும். 
  • வண்டு- வண்டுகள் பயிரின் மேற்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் இதன் மொத்த வாழ்நாள் 60 முதல் 85 நாட்கள். 

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பயிரின் இலை, தண்டுப் பகுதி, காய்கள் மற்றும் சில நேரங்களில் வேர் பகுதியை தாக்கும். 
  • இளம் புழுக்கள் வேர்கள், மற்றும் மண்ணில் காணப்படும் காய்களையும் உண்ணுவதால் வேர்ப்பகுதியில் அழுகல் உருவாகலாம். 
  • தீவிர தாக்குதலின் போது செடிகள் காய்ந்து இறந்துவிடும் அபாயமும் உள்ளது.
  • இலை, பூக்கள், மொட்டுக்கள் மற்றும் காய்களை  உண்பதால்  இலைகளில் துளைகள் மற்றும் சல்லடை போன்ற அறிகுறிகளை தோற்றுவிக்கும். 
  • இதனால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பீடு ஏற்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

  • ஒருமுறை கொடி காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களை நன்கு சுத்தம் செய்துவிட்டு பின்பு சாகுபடி செய்ய வேண்டும்.
  • வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இல்லாதவாறு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடி உரமாக வேப்பம் புண்ணாக்கு கண்டிப்பாக இடவேண்டும். 
  • அவ்வப்போது பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும் மண்ணை கிளறி விட வேண்டும் இதனால் முட்டைகளை அழிக்கலாம். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை பாசன நீர் வழியாக ஏக்கருக்கு ஒரு லிட்டர் மெட்டாரைசியம் மற்றும் டிரைக்கோடெர்மா கொடுக்க வேண்டும்.
  • இதன் மூலம் வேர் அழுகல் நோயை தவிர்க்கலாம் மற்றும் முட்டைகளை அழித்து தாக்குதலை குறைக்கலாம்.
  • இயற்கை பூச்சி விரட்டி திரவங்களான பத்திலை கசாயம் /ஐந்திலை கசாயம்/இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கரைசல்/ புகையிலை கரைசல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிப்பதன் மூலம் வண்டுகள் எளிதில் வயலை விட்டு வெளியேறி விடும்.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் ஏக்கருக்கு நான்கு கிலோ விதம் Fibronil குருணை இடலாம். 
  • இலை வழியாக தெளிப்பதற்கு கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பரிந்துரை செய்யப்பட்ட அளவில் பயன்படுத்தலாம்.
  • Malathion, Dimethoate, Spinosad, Phenthoate, Cyantraniliprole

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


Recent Posts

Popular Posts