google-site-verification: googled5cb964f606e7b2f.html வாழை பயிருக்கு தேவைப்படும் பிரதான ஊட்டச்சத்துக்களும் அதன் குறைபாட்டு அறிகுறிகளும் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 7 மார்ச், 2025

வாழை பயிருக்கு தேவைப்படும் பிரதான ஊட்டச்சத்துக்களும் அதன் குறைபாட்டு அறிகுறிகளும்

  • வாழை சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை என்பது மிகவும் இன்றியமையாதது ஏனெனில் வாழை மரங்கள் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு வளமான மகசூலை கொடுக்க வல்லது.
  • வாழைப்பயிர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கிடைக்க பெறும் சூரிய ஒளி மற்றும் ஊட்டச்சத்துக்களை பயன்படுத்தி வளர்ச்சியை துரிதப்படுத்தி அதிகளவு மகசூலை தரவல்லது. எனவே மண் பரிசோதனை அடிப்படையில் சரிவிகித ஊட்டச்சத்து மேலாண்மை சிறந்த மகசூல் காண அடிப்படையாக திகழ்கிறது. 
  • வாழை பயிருக்கு பிரதானமாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் குறைபாட்டால் ஏற்படும்  அறிகுறிகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். 

சாம்பல் சத்து (பொட்டாசியம்):

  • வாழை தார்களில் உள்ள காய்களின் எண்ணிக்கை, அளவு, தரம் ஆகியவற்றை நிர்ணயிக்கிறது.
  • வாழைமரம் சரியான நேரத்தில் பூ பிடித்து தார் விடுவது பொட்டாசியத்தை பயன்படுத்தி தான்.
  • இதன் குறைபாட்டால் இலையின் விளிம்புகள் மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் கருகுதல், இலையில் கிழிதல், இலைகள் பாதியில் உடைந்து தொங்குதல், வாழைத்தார்கள் சிறிதாக இருத்தல், தார்களில் பழங்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல் என பல அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

தழைச்சத்து:

  • உடலும் உயிரும் போன்று தழைச்சத்து தான் பயிரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஆதாரம்.
  • வாழைப் பயிரை பொறுத்த வரையில் முதல் ஐந்து மாதங்களில் போதுமான வளர்ச்சியை அடைய வேண்டும் இல்லையெனில் கண்டிப்பாக மகசூல் பின்னடைவு ஏற்படும். 
  • அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல் இதன் குறைபாட்டின் பிரதான அறிகுறி
  • போதுமான வளர்ச்சி இன்மை, குறைந்த எண்ணிக்கையிலான இலைகள், தண்டுப் பகுதியில் நிறம் மாற்றம் ஆகியவை தழைச்சத்து குறைபாட்டின் இதர அறிகுறிகளாகும். 

மெக்னீசியம்:

  • தண்டுப் பகுதியில் காணப்படும் இலை உறை சற்று விலகி காணப்படுதல் இதன்  குறைபாட்டு அறிகுறி.
  • வாழை மரத்தின் அடி இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிற மாற்றத்தை காண இயலும். இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால் இந்த ஊட்டச்சத்தின் குறைபாடு பொட்டாசியம் மற்றும் மாங்கனிசு ஊட்டச்சத்து பற்றாக் குறையின் அறிகுறிகள் போன்றே காணப்படும்.
  • இதை சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். ஏனெனில் இதுதான் வாழை காய்களின் எடையை நிர்ணயிக்கிறது.
  • பொட்டாசியம் உரத்தை அதிக அளவு கொடுத்தாலும் வாழை பயிரினால் இந்த ஊட்டச்சத்தை பயிர்களால் எடுத்துக் கொள்ள முடியாது.

கால்சியம்:

  • மரத்தின் நுனி இலைகளில் மஞ்சள் நிற மாற்றம் காணப்படும். நாளடைவில் இது கருகியது போன்று காட்சியளிக்கும்.
  • நுனி இலை போதுமான வளர்ச்சி இல்லாமல் குட்சி போன்று உருவாகும். 
  • முதிர்ந்த காய்களில் கால்சியம் குறைபாட்டால் வெடிப்புகள் தோன்றலாம்.

போரான் (Boron):

  • நுனி இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாக காட்சி அளிக்கும் சில நேரங்களில் நுனி இலைகள் ஒழுங்கற்று காணப்படுதல்
  • நுனி இலைகள் உள்புறமாக வளைதல், நாளடைவில் இந்த இலைகளின் விளிம்புகளில் பழுப்பு நிறமாக மாறி பின்பு காய்ந்து விடும்.   நரம்புகளுக்கு இணையாக வெள்ளை நிற கோடுகள் இலையின் அடி புறத்தில் காணப்படலாம்.
  • வேர் மற்றும் குருத்துப் பகுதியில் வளர்ச்சியை தூண்டுதல், பூ மற்றும் காய் பிடித்தலில் பிரதான பங்கு வகித்தல் ஆகியவன போரான் ஊட்டச்சத்துக்களின் பிரதான பணிகள் ஆகும்.

மாங்கனிசு (Manganese):

  • மாங்கனிசு ஊட்டச்சத்து குறைபாட்டால் இளம் இலைகள் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும்.
  • நாளடைவில் இந்த இலைகளின் விளிம்புகளில் நிறமாற்றம் காணப்படும் அதாவது காய்ந்தது போன்ற அறிகுறி உருவாகும். 
  • இலையின் விளிம்புகள் கீழ்நோக்கி சுருண்டு காணப்படும்
  • இலைகளின் நுனிப்பகுதி ஆரம்ப நிலையில் ஊட்டச்சத்து குறைபாட்டு அறிகுறியை வெளிப்படுத்தும்.

துத்தநாகம் (Zinc):

  • பயிர்களுக்கு போதுமான அளவு பச்சையத்தன்மையை கொடுத்து வளர்ச்சி மற்றும் விளைச்சலை மேம்படுத்த உதவி புரிகிறது. 
  • துத்தநாகம் குறைபாட்டால் இளம் இலைகள் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும். 
  • குறிப்பாக நுனி இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிற கோடுகள் போன்ற அறிகுறி குறிப்பிடத்தக்கது. 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் (WhatsApp) குழுவில் இணைந்து பயன் பெறலாம்...
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts