google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

தக்காளியில் பூ முனை அழுகல் நோய் மேலாண்மை...

இது ஒரு சில வகையான காலநிலை அழுத்தம் மற்றும் சத்து குறைபாடு காரணங்கள் ஒருங்கிணைந்து பயிர்களை தாக்குவதால் ஏற்படக்கூடிய அறிகுறி ஆகும். இது பூஞ்சான அல்லது பாக்டீரியா வகை நோய்கள் கிடையாது.

பிரதான காரணங்கள்: 

  • தக்காளி காய்களின் செல் சுவர்கள் மிகவும் கடுமையானது, இந்த செல் சுவர் அமைப்பு ஏற்படுத்துவதில் கால்சியம் ஊட்டச்சத்தின் பங்களிப்பு இன்றியமையாததாகும். 
  • காய்களில் குறிப்பிட்ட இடத்தில் கால்சியம் குறைபாடு ஏற்படுவதால் இந்த நோய் உருவாகலாம்.கால்சியம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் போது அங்கு உற்பத்தி செய்யக்கூடிய புதிய செல்கள் பாதிப்படைந்து இருப்பதால் தான் இந்த அறிகுறி உருவாகிறது. 
  • வேர் மூலமாக உறிஞ்சப்பட்டு பயிரின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீருடன் செல்லும் கால்சியம் சத்து இலைகளினால் அதிகளவு உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதால் எளிதில் பற்றாக்குறை ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வெப்பநிலை திகழும் பொழுது. இதனால் பழத்தின் செல் சுவர் உற்பத்திக்கு தேவையான கால்சியம் சத்து கிடைப்பதில்லை. 
  • அதேபோன்று போதுமான அளவு மண் ஈரப்பதம் இல்லாமல் இருத்தல், அதிக வறட்சிக்கு பிறகு திடீரென மிகப்படியான ஈரப்பதம் உருவாதல், போதுமான அளவு மண்ணில் கால்சியம் சத்து இல்லாமல் இருத்தல் போன்ற பல காரணங்களால் இந்த நோய் உருவாகலாம்.

பூ முனை அழுகல் நோயின் அறிகுறிகள்:

  • தக்காளி பயிர்கள் காய் பிடிக்க தொடங்கியது முதல் இறுதி அறுவடை வரை கூட இதன் அறிகுறி காணப்படும்.
  • ஆரம்பத்தில் காய்களில் புள்ளிகள் தென்படும். 
  • பின்னர் புள்ளிகள் சற்று விரிவடைந்து பள்ளமான அமைப்புடன் பழுப்பு நிறத்தில் பிரதானமாக காய்களின் அடிப்புறத்தில் காணப்படும். எனவே தான் இதனை பூ முனை அழுகல் நோய் என குறிப்பிடுகிறோம்.
  • நாளடைவில் புள்ளிகள் பெரிதாகி காயின் மூன்றில் ஒரு பங்கு பகுதிக்குப் பரவி விடும். 
  • பழுப்பு நிறமாக இருந்த புள்ளிகள் விரைந்து கருப்பு நிறமாக மாறிவிடும்.

  • இதனால் பாதிக்கப்பட்ட தக்காளி காய்கள் விரைவில் பழுத்து விடும் மற்றும் அதன் உட்பகுதி பாதிப்படையும்.
  • கால்சியம் சத்து குறைபாட்டால் இலைகளில் பல்வேறு வகையான அறிகுறிகள் காணப்படும் உதாரணத்திற்கு இலை விளிம்புகள் பழுப்பு முதல் சிகப்பு நிறமாக மாறுதல், இலை சுருங்குதல் மற்றும் பல.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • அடி உரமாக போதுமான அளவு நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் கால்சியம் சல்பேட் இட வேண்டும்.
  • நிலத்தை வறட்சிக்கு உட்படுத்தாமல் மிதமான ஈரப்பதத்துடன் வைத்திருந்தால் இந்த நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • நிலப் போர்வை பயன்படுத்தி சாகுபடி செய்தால் மண் வெப்பநிலையை பாதுகாப்புத்துடன் அனைத்து பகுதிகளிலும் சராசரி ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்யலாம்.
  • அதிக அளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்கவும் குறிப்பாக அம்மோனியா வகை ஏனெனில் இது கால்சியம் ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதை மட்டுப்படுத்தும். 
  • அதிக எண்ணிக்கையிலான  இலைகள் உருவாவதை தடை செய்ய வேண்டும் இல்லை எனில் கண்டிப்பாக கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். 
  • மண்ணில் போதுமான அளவு கால்சியம் கொடுக்க வேண்டும் ஏனெனில் இது நன்கு கரைந்து வேர் மூலமாக மட்டுமே பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. 
  • எனவே நாம் இலை வழியாக தெளிக்கும் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் குறைந்த அளவு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

இது போன்ற வேளாண் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வெள்ளி, 27 செப்டம்பர், 2024

கத்தரியில் ஃபோமோப்சிஸ்(Phomopsis) கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

    நாம் பிரதானமாக சாகுபடி செய்யும் கத்தரி பயிரில் பல்வேறு வகையான நோய் மற்றும் பூச்சிகள் தாக்குகிறது. அதில் மிகவும் முக்கியமான பூஞ்சான நோயான ஃபோமோப்சிஸ் கருகல் நோய் மிகவும் ஆபத்தான ஒன்று. உலகம் முழுவதும் காணப்படும் இந்த நோய் சுமார் 70% வரை கூட மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். இந்த நோய் பயிரின் அனைத்து நிலைகளிலும் பாதிக்கும் என்பதால் இதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை:

  • தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு. 
  • அதிக காற்று ஈரப்பதம் மற்றும் மிதமான வெப்பநிலை. 
  • பிரதானமாக மழைப்பொழிவு மற்றும் பாதிக்கப்பட்ட பயிர் கழிவு மூலமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது.

தாக்குதலின் அறிகுறிகள்: 

நாற்றங்கால் அறிகுறிகள்

  • இந்த நோய் விதை மூலம் பரவும் என்பதால் விதை முளைக்கும் போதே அறிகுறிகளை ஏற்படுத்தும். 
  • இந்த Phomopsis நோய் நாற்றுகளின் தண்டுப் பகுதியை பாதிப்பதால் தண்டுகளில் பழுப்பு நிற புண்கள் காணப்படும்.
  • இதனால் தரைக்கு மேலே உள்ள பகுதியில் நாற்றுகள் முறிந்து இறக்கும்.  
  • அதேபோன்று நாற்றுகளின் இலையில் சிறிய புள்ளிகள் தோன்றும். இது நாளடைவில் பெருக்கமடைந்து இலைகள் உதிரும்.

வயலில் காணப்படும் அறிகுறிகள்:

  • சிறிய கருப்பு முதல் பழுப்பு நிற பள்ளத்துடன் கூடிய புள்ளிகள் காய்களில் காணப்படும். 
  • இது நாளடைவில் பெருக்குமடைந்து புள்ளிகளின் ஓரங்கள் சற்று அழுகியது போன்று காணப்படும். 
  • இதனால் காய்கள் சுருக்கமாகவும் ஒழுங்கற்ற வடிவிலும் தோன்றலாம். 
  • இலை மற்றும் தண்டுப் பகுதியில் நீள் வட்ட வடிவ புள்ளிகள் காணப்படும். 
  • மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்ட காய் அல்லது இலைகளில் கருப்பு நிற பூஞ்சானத்தை காண இயலும்.
  • கடைசி நிலையாக காய்களில் அழுகல் தென்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்த பூஞ்சான நோய் விதை மூலம் பரவும் அபாயம் உள்ளதால், தரமான விதைகளை தேர்வு செய்து அதனை 50 டிகிரி வெப்ப நிலையில் உள்ள தண்ணீரில் 15 முதல் 25 நிமிடம் ஊறவைத்து பின்னர் விதைக்க வேண்டும்.
  • அல்லது Trichoderma மற்றும் Pseudomonas பயன்படுத்தி விதை அல்லது நாற்றுகளை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.
  • இந்த பூஞ்சை பாதிக்கப்பட்ட பயிர் கழிவு மற்றும் மண்ணில் சுமார் ஒரு வருடம் கூட உயிர் வாழும் திறன் உடையதால், பயிர் கழிவுகளை முழுமையாக வயலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் கத்தரி சாகுபடி செய்வதை தவிர்ப்பது நல்லது. 
  • இந்த தாங்கி வளரக்கூடிய ரகங்கள் அல்லது வீரிய விட்டு ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யலாம்.
  • அதிக அளவு தழைச்சத்து உரத்தை பயன்படுத்துவதை தவிர்த்து பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்தால் மகசூல் குறைவதை தவிர்க்கலாம்.
  • பயிரில் பாதிக்கப்பட்ட பகுதியில் உருவாகும் பூஞ்சைகளால், அந்த இடத்தில் வளவளப்பாக இருப்பதால் மருந்து தெளிக்கும் பொழுது பாதிக்கப்பட்ட பகுதியில் மருந்துகள் நிலைத்திருக்காமல் விலகிச் சென்று விடும். 
  • உயிர் பூஞ்சை கொல்லிகள் அல்லது ரசாயன மருந்துகள் பயன்படுத்தும் பொழுது குறைவான அளவு மருந்துடன் ஒட்டுப் பசை சேர்த்து செடி முழுவதும் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
  • நோயை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட பூஞ்சான கொல்லிகலில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம்.
  • Carbendazim
  • Carbendazim + Mancozeb
  • Copper Oxychloride
  • Propiconazole
  • Carboxin + Thiram
  • Metalaxyl + Mancozeb
  • Zineb

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வியாழன், 19 செப்டம்பர், 2024

பருத்தி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை....

  • பருவ மழைக்கு முன்னதாக சட்டி கலப்பை பயன்படுத்தி ஆழமாக உழவு செய்வதன் மூலம் நிலத்தின் நீர் பிடிப்பு திறனை மேம்படுத்தலாம்.பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை கொத்து கலப்பை பயன்படுத்தி உழவு செய்து கட்டிகளை நன்றாக தூளாக்கி பின்னர் தேவையின் அடிப்படையில் ரோட்டாவேட்டர் பயன்படுத்தலாம்.
  • நீர்ப்பாசனம் மூலம் சாகுபடி செய்யும் பொழுது மேட்டுப்பாத்தி அல்லது தகுந்த இடைவெளியில் பார்கள் அமைத்து விதைப்பு மேற்கொள்ளலாம். 
  • கடைசி உழவுக்கு முன்னதாக ஏக்கருக்கு குறைந்தபட்சம் 4 டன் நன்கு மக்கிய தொழு உரம் /ஒரு டன் மண்புழு உரம், தேவையின் அடிப்படையில் அதனுடன் உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சான கொல்லிகள் கலந்து கொள்ளலாம்.
  • ரசாயன உரங்கள் இடவேண்டும் என்றால் விதைப்புக்கு முன்னதாக ஏக்கருக்கு இரண்டு மூட்டை டி.ஏ.பி, பொட்டாஸ் 15 முதல் 20 கிலோ, பருத்தி நுண்ணூட்ட உரம் 5-8 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ ஆகியவற்றை இடவேண்டும்.
  • நாம் பொதுவாக B.t வகை வீரிய ஒட்டு ரகங்களை சாகுபடி செய்வதால் பொதுவாகப் பரிந்துரை செய்யப்படும்  உர அளவான தழைச்சத்து 120 கிலோ, மணிச்சத்து 60 கிலோ மற்றும் சாம்பல் சத்து 60 கிலோ முதலியவற்றை ஒரு ஹெக்டர் நிலப்பரப்புக்கு  இடலாம். 
  • மண்ணில் நல்ல ஈரப்பதம் இருக்கும் பொழுது 60-90 X 30-45 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைப்பு மேற்கொள்ளலாம். பருத்தி ரகங்களின் முளைப்பு திறன் குறைவு என்பதால் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் இரண்டு விதைகளை விதைப்பு செய்ய வேண்டும். 
  • நீர் வசதி இல்லாமல் காய்ச்சலில் விதைப்பு மேற்கொள்ளும் பொழுது மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் கண்டிப்பாக இடவேண்டும். 
  • பருத்தியில் களை மேலாண்மை மிகவும் சவாலானதாக திகழ்வதால், இதில் அதிக கவனம் தேவை. விதைத்த மூன்று முதல் ஐந்து நாட்கள் இடைவெளியில் களை முளைப்பதற்கு முன்னதாக பயன்படுத்தப்படும் களைக்கொல்லியை போதுமான ஈரப்பதம் இருக்கும் பொழுது தெளித்து விடவும். உதாரணத்திற்கு Butachlor, Pendimethalin, Alachlor போன்றவற்றை பரிந்துரைக்கப்படும் அளவில் பயன்படுத்தலாம்.
  • விதைகள் முளைத்து 15 முதல் 20 நாட்கள் பயிரில் தெளிக்க கூடிய களைக்கொல்லிகள் பல இருந்தாலும் அதன் செயல்பாடுகள் குறிப்பிட்ட சில களைகளை மட்டுமே கட்டுப்படுத்துவதாக திகழ்கிறது எனவே அதனை முழுமையாக நம்பி இருக்க வேண்டாம். 
  • விதைத்த ஏழாம் நாள் முளைப்புத் தவறிய இடங்களில் மீண்டும் விதையை விதைக்கலாம். 
  • நீர் நிர்வாகத்தை பொறுத்தவரையில் உயிர் தண்ணீர், அதைத் தாண்டி பூக்கும் தருணத்திலும், காய்க்கும் மற்றும் காய்கள் பெருக்குமடையும் தருணத்தில் நல்ல ஈரப்பதம் வேர்களுக்கு கிடைத்தால் மகசூலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே நீரை பயன்படுத்தி சாகுபடி செய்பவர்கள் இதனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு நீர் பாய்ச்சலாம். 
  • மண்ணின் அமைப்பு மற்றும் தன்மையை பொறுத்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குறைந்தபட்ச நீர் பாய்ச்சினால் பருத்தியில் அதிக அளவு மகசூல் எதிர்பார்க்கலாம். 
  • பயிரின் 40 ஆம் நாள் நுனிப்பகுதியை கிள்ளிவிட்டு தேவையான வளர்ச்சி ஊக்கி கொடுத்தால் அதிக கிளை பிரிவதை காணலாம். வீரிய ஒட்டு ரகம் என்பதால் நல்ல கிளை பிரியும் திறன் எதிர்பார்க்கலாம் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் கொடுத்தால். 
  • நுனியை கிள்ளிவிட்டு NAA/Cytocyme போன்ற வளர்ச்சி ஊக்கியை பரிந்துரை செய்த அளவில் ஏழு நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால் அதிக காய்ப்பு திறன் எதிர்பார்க்கலாம் இதனால் 20 முதல் 30 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கக்கூடும். 
  • பூக்கும் தருணத்தில் பயிரில் வளர்ச்சி ஊக்கி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாமல் பராமரிப்பது இன்றி அமையாததாகும். இந்த தருணத்தில் பொதுவாக மெக்னீசியம் குறைபாடு காணப்படும். இதனால் இலைகள் விறைப்புத் தன்மையுடனும், இலையின் விளிம்புகள் சிகப்பு நிறத்தில் மாற்றம் அடைவதையும் காண இயலும். பொதுவாக அதிக அளவு பொட்டாசியம் சத்து கொடுக்கும் பொழுது இதை நாம் எதிர்பார்க்கலாம். இது கடந்த சில வருடங்களாக தென்படுகிறது எனவே அடி உரமாகவோ அல்லது இடைவெளியாகவோ போதுமான அளவு மெக்னீசியம் தெளிக்கலாம். 

  • அதேபோன்று போரான் மற்றும் துத்தநாகம் பற்றாக்குறைகள் தென்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதையும் கவனத்தில் கொண்டு உரிய தருணத்தில் தெளிப்பு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நுண்ணூட்ட சத்துக்கள் இழை வழியாக நாம் தெளிக்கும் பொழுது வளர்ச்சி ஊகிகள் கலந்து தெளிப்பதால் பூ /சப்பைகள் உதிர்வதை வெகுவாக குறைக்கலாம். 
  • முதல் அடி உரம் 30 முதல் 40 நாட்கள் இடைவெளியில் செடிக்கு அருகில் வைத்து நீர் விட வேண்டும். அப்பொழுது மணிச்சத்தும் பொட்டாசியம் சத்தும் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் உதாரணத்திற்கு ஏக்கருக்கு தலா 40 கிலோ இடலாம். இடைப்பட்ட காலத்தில் நீர் வசதி இருந்தால் அல்லது மண் ஈரப்பதம் இருந்தால் NPK consortia வேர்ப்பகுதிகளுக்கு கொடுத்தால் அடியில் இடப்பட்ட உரங்கள் செடிகளுக்கு எளிதில் கிடைக்கும். 
  • அடுத்த கட்ட மேலூரம் 60 முதல் 80 நாட்கள் இடைவெளியில் கொடுக்கலாம்.அப்பொழுது தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து இடலாம். 
  • பூச்சி தாக்குதலை பொருத்தவரையில் தத்துப்பூச்சி, வெள்ளை ஈக்கள், காய்ப்புழு, அஸ்வினி போன்ற பூச்சிகள் பிரதானமாக பயிரை தாக்கும். 
  • நோயைப் பொருத்தமட்டில் வேர் வாடல் நோய், அழுகல் நோய், இலை கருகல் மற்றும் பாக்டீரிய கருங்கல் நோய் எதிர்பார்க்கலாம்.

மேலும் சந்தேகம் மற்றும் தகவல்களுக்கு இணைப்பில் கலந்துள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.. https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


புதன், 4 செப்டம்பர், 2024

தென்னை சாகுபடியில் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கரையான் தாக்குதலின் அறிகுறிகள்:

  • நாற்றுப் பண்ணைகளில் செடிகளின் குருத்துப் பகுதி மஞ்சள் நிறமாக மாறி பின்னல் வாடி விடும்.
  • சில நேரங்களில் பராமரிப்பு இல்லாத மாற்று வழி கரையான்கள் நெற்றுகளின் வெளிப்புறம் மற்றும் வேர் பகுதியை பாதிப்பதால் செடிகள் வாடி விடும்.
  • மரத்தின் தண்டு பகுதியில் மண்ணால் ஆன படலம் காணப்படும்.
  • அதேபோன்று மெல்லிய மண்ணால் ஆன பாதை போன்ற அறிகுறிகளும் தென்படும். 
  • தீவிர தாக்குதலின் போது தண்டுப் பகுதியில் உள்ள பட்டையை உண்டு பின் திசு பகுதியை சென்றடையும்.




கரையான் தாக்குதலுக்கான காரணங்கள்: 

  • தோப்புகளை சுத்தமாக பராமரிக்காதது. 
  • குறிப்பாக உதிர்ந்த இலை, சிறை, நெற்றுகள் முதலியவற்றை அகற்றாமல் இருத்தல். 
  • குப்பைகளை தோப்பிற்குள் சேமித்து வைத்தல். 
  • நீண்ட நாட்களுக்கு தொழு உரத்தினை தோப்பில் குவித்து வைத்திருத்தல்.
  • பண்ணை பணிகளின் போது தண்டு மற்றும் வேர் பகுதியை சேதப்படுத்துவதால் அதிலிருந்து வெளியேற்றப்படும் திரவம் கரையான்களை ஈர்க்கும்.
  • அதிக வறட்சி மற்றும் முறையற்ற வடிகால் வசதி கரையான் தாக்குதலை ஊக்குவிக்கும்.

தென்னையில் கரையானை தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • தோப்புகள் அல்லது நாற்றுப் பண்ணைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக உதிர்ந்த மட்டைகள், காய்கள், இறந்த மரத்தின் பாகங்கள் மற்றும் சிறைகளை அப்போது சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • தென்னை தோப்பு அல்லது அதற்கு அருகில் கரையான் புற்றுகள் தென்பட்டால் அதை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற மழைகாலங்களில் புற்றுக்களின் மேல் பகுதியை மட்டும் சற்று அகற்றிவிட்டு பள்ளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தினால் தொடர்ச்சியாக நீர் தேங்கி மொத்த புற்றும் அழியும். 
  • இதைத் தவிர பல்வேறு ரசாயன மருந்துகள் உள்ளது அதனை பயன்படுத்தியும் புற்றில் உள்ள கரையான்களை முற்றிலும் அழிக்கலாம். அவ்வாறு செய்யும்போது ராணி கரையான் பூச்சியை கண்டறிந்து அழிக்க வேண்டும்.
  • நெற்றுகளை நாற்று விடும் பொழுது அதன் கழுத்துப் பகுதி தரைமட்டத்திற்கு மேல் இருக்கும்படி உதவி செய்ய வேண்டும். 
  • நாற்றுப் பண்ணையில் நாம் அதிக அளவு மணல் பயன்படுத்துவதால் அதில் கரையான் தாக்குதல் அதிகம் காணப்படும் அதை உடனுக்குடன் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். 
  • நாற்றுப் பண்ணையில் இயற்கை பொருட்களை வைத்து மூடாக்கு அமைத்திருந்தால் மூடாக்கில் கரையான் தாக்குதல் உள்ளதா என அவ்வப்போது கண்டறிய வேண்டும். 
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரத்தின் தண்டுப் பகுதியில் அதாவது தரையில் இருந்து 2-3 மீட்டர் உயரத்திற்கு வேப்ப எண்ணையை தடவி விடலாம். அல்லது முந்திரி கொட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் கரையான்களுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. 
  • Copper sulphate அல்லது Chlorpyriphos போன்ற ரசாயனங்களை பயன்படுத்தியும் கரையான்களை கட்டுப்படுத்தலாம்.
  • நாற்றுப்பண்ணை அல்லது நிலத்தில் நடவு செய்வதற்கு முன்னதாக மெட்டாரைசியம் அல்லது இரசாயன குருணை வடிவில் கிடைக்கக்கூடிய மருந்துகளான Chlorpyriphos/Fibronil தேவையான அளவு இட்டு பின்பு நடவு செய்ய வேண்டும். 
  • நடவு செய்த பிறகு செடிகளின் கழுத்து பகுதியில் அல்லது தரையில் கரையான் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக imidacloprid /Chlorpyriphos பரிந்துரைக்கப்பட்ட அளவில் மேற்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும்.
  • வேர்ப்பகுதியில் நல்ல காற்றோட்டம் கிடைக்க வேண்டும் அதற்கு ஏற்றவாறு நடவு செய்வதற்கு முன்னதாக இடு பொருட்கள்  பயன்படுத்த வேண்டும்.
  • நடவு செய்வதற்கு முன்னதாக தேவையான அளவு மணல், சாம்பல் மற்றும் உப்பு கலந்து இடவேண்டும். இதில் மணல் நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்தி வேர் வளர்ச்சி ஊக்கப்படுத்துகிறது. உப்பு மண்ணின் தன்மையை மாற்றி அமைத்து ஊட்டச்சத்து கிடைக்க வழிவகை செய்கிறது. சாம்பல் ஆரம்ப காலத்தில் தேவைப்படும் பொட்டாசியம் சத்தை கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை பயிர்களுக்கு தருகிறது.

இது போன்ற வேளாண் தகவல் மற்றும் பயிர் சாகுபடி சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம். 

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

வாழையில் தலைக்கொத்து நோய் மேலாண்மை...

வாழையில் தலைக்கொத்து நோய் மேலாண்மை...

    தலைக்கொத்து நோய் என்பது ஒருவகை வைரஸ் பாதிப்பால் ஏற்படக் கூடியதாகும். இந்த நோய் அஸ்வினி எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகளினால் அடுத்த அடுத்த செடிகளுக்கு பரப்பப்படுகிறது. இது மட்டுமின்றி பாதிப்படைந்த மரத்திலிருந்து விதை கருணைகளை தேர்வு செய்து நடவு செய்தாலும் நோய் பரவும் தன்மையுடையது.

இதன் அறிகுறிகள்:

  • இந்த வைரஸ் நோய் பாதிப்பின் அறிகுறிகள் மிகத் தெளிவாக இளம் வயது பக்க கன்றுகளில் காண இயலும். 
  • பாதிப்படைந்த பக்கக்கன்றுகளின் வளர்ச்சி தடைபட்டு குன்றி காணப்படும். 
  • தண்டுப் பகுதியின் நுனியில் வரக்கூடிய இலைகளுக்கு இடைப்பட்ட இடைவெளி மிகவும் குறைந்து காணப்படும்.
  • நுனியில் வரக்கூடிய இலைகள் நன்றாக விரியாமலும் அகலம் குறைந்தும் நீள்வாக்கில் காணப்படும். 
  • இலையின் விளிம்புகளில் மஞ்சள் நிற மாற்றத்தை காண இயலும். 
  • அதேபோன்று இலை விளிம்புகள் சீராக இல்லாமல் மேடும் பள்ளமுமாக வளமுமாக பலமாக இருப்பது போன்ற அமைப்பு காணப்படும். 
  • இளம் செடிகளில் இலைகள் வளைந்தும் ஒழுங்கற்ற வடிவிலும் காணப்படும். அது மட்டும் இன்றி இலை காம்பு மற்றும் இலையின் அடி புறத்தில் மெல்லிய சீரற்ற கோடுகள் காணப்படும். 

முதிர்ந்த மரங்களில் காணப்படும் அறிகுறிகள்...

  • நன்கு வளர்ந்த மரங்களில் தலைக்கொத்து நோய் அறிகுறி தெளிவாக தெரியாது. 
  • இலையின் நடுநரம்பு மற்றும் அடிப்பகுதியில் புள்ளி மற்றும் கோடுகள் சீரற்ற பரவலாக காணப்படும்.
  • நடு நரம்பிற்கும் இலை விளிம்புகளும் இணையும் இடத்தில் J வடிவத்தில் கோடுகள் இலையின் அடி புறத்தில் காணப்படும். 
  • அதேபோன்று இலை காம்பு மற்றும் பூங்கொத்து போன்ற பகுதிகளிலும் கோடுகள் காணப்படும் நாளடைவில் இந்த கோடுகள் சிகப்பு நிறமாக மாற்றம் அடையலாம்.
  • முதிர்ந்த மரத்தில் இருந்து வெளிவரக்கூடிய வாழை பூ மற்றும் தார் மிக மிக சிறிதாகவும் வளைந்து நெளிந்தும் ஒழுங்கற்ற வடிவில் காணப்படும். 
  • சில நேரங்களில் பாதிப்படைந்த மரங்கள் பூ அல்லது காய்கள் விடாமலேயே இறந்து விடுகிறது. 

இதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தலைக்கொத்து நோய் தாக்குதல் காணப்படும் வாழை தோப்புகளில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் விதை கட்டைகள் தேர்வு செய்ய வேண்டாம். 
  • வயலை சுத்தமாக பராமரித்துக் கொள்ள வேண்டும். 
  • ஊடுபயிராக சாறு உறிஞ்சி பூச்சிகள் அதிகம் தாக்கும் பயிர்களை பயிரிட வேண்டாம். 
  • அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அந்த மரத்தை முழுமையாக அகற்றி வயலில் இருந்து வெளியேற்றவும். 
  • அஸ்வினி போன்ற மற்ற வகை சாறு உறிஞ்சி பூச்சிகள் தாக்காத வண்ணம் பயிரை பராமரிக்க வேண்டும்.
  • ஒருவேளை சார் உறிஞ்சி பூச்சிகள் இருந்தால் உடனடியாக இயற்கை முறையில் அல்லது ரசாயன மருந்துகளை பயன்படுத்தியும் கட்டுப்படுத்த வேண்டும்.
  • பயிரின் ஆரம்ப காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை சாறு உறிஞ்சி பூச்சிகளை கட்டுப்படுத்த Verticillum lecanii தெளித்து வர வேண்டும்.
  • பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும் நேரத்தில் கீழ்க்கண்ட ரசாயன மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 
  1. Imidacloprid - 10 மில்லி 
  2. Fibronil -15-25 மில்லி 
  3. Thiamethaxam- 10 கிராம்
  4. Dimethoate -15-25 மில்லி 
  5. Acephate-10 கிராம்
இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறவும்....

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

டிஏபி (DAP) உரத்தை ஏன் அடி உரமாக பயன்படுத்த வேண்டும்...

முன்னுரை:

பயிர் சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை என்பது இன்றியமையாதது. குறைந்த வாழ்நாள் உடைய பயிர் சாகுபடியில் அடி உரத்தின் பங்கு அளப்பரியது. அதாவது குறைந்த வாழ்நாளில் பயிர்களை போதுமான அளவு வளர செய்து நல்ல மகசூல் கொடுக்க ஆதாரமாக அடி உரம் இடுதல் திகழ்கிறது. இதனை அடிப்படையாகக் கொண்ட பொதுவாக டிஏபி அடி உரமாக இட  ஏன் பரிந்துரை செய்யப்படுகிறது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.

டி ஏ பி உரத்தை அடி உரமாக இடுதல்:

  • டி ஏ பி என்பதை ஆங்கிலத்தில் டை அமோனியம் பாஸ்பேட் (DAP) என்பார்கள். இவற்றில் 18 % தழைச்சத்து மற்றும் 46 % மணிச்சத்து நிறைந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. 
  • இதில் இருக்கக்கூடிய மணிச்சத்து பாஸ்பேட் உள்ளதால் இதன் கரைதிறன் மிகவும் அதிகம். அதாவது மண்ணில் இட்டு போதுமான அளவு நீர் கிடைக்கப் பெற்றால் விரைந்து செடிகளுக்கு தேவையான வடிவத்தில் கிடைக்கப்பெறுகிறது.
  • எந்த ஒரு பயிரின் வேர் வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழ்வது மணிச்சத்து ஊட்டச்சத்து ஆகும். DAP -ல் இருக்கக்கூடிய மணிச்சத்து பயிர்களுக்கு விரைந்து கிடைப்பதால் தான் இதனை அடி உரமாக பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. 
  • இது மட்டுமின்றி இதில் இருக்கக்கூடிய தழைச்சத்து படிப்படியாக கரைந்து பயிர்களுக்கு தேவையான பொழுது தேவையான அளவு மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. 
  • இந்த உரத்தை பயன்படுத்துவதால் பயிர்களில் நல்ல வேர் வளர்ச்சி கிடைக்கப்பெறுகிறது. நல்ல வேர் அமைப்பு உடைய பயிர்கள் அசாதாரண சூழ்நிலையை தாங்கி வளரும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. 
  • டிஏபி உரத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு பயிரின் ஆரம்ப வளர்ச்சியின் போது வேர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுத்தலும் அதன் பின்பு தண்டு இலை போன்றவற்றின் வளர்ச்சிக்கு தேவையான தழைச்சத்தை கொடுத்து உதவி புரிகிறது. 

இதன் இதர பயன்கள்: 

  • மண்ணின் கார அமிலத்தன்மை தான் மண்ணில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை செடிக்கு கிடைக்க வழிவகை செய்கிறது. அமிலத்தன்மை அதிகமானால் பெரும்பான்மையான ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதில்லை, அதே போன்று மண்ணின் காரத்தன்மை அதிகமானால் ஊட்டச்சத்து மிகைப் பாட்டினால் ஏற்படும் அறிகுறி காணப்படும். இந்த வகையில் டிஏபி உரம் இடுவதால் மண்ணின் கார அமிலத்தன்மையை சரி செய்து சராசரியாக பராமரிக்க உதவி புரிகிறது.
  • டி ஏ பி இருக்கக்கூடிய மணிச்சத்து எளிதில் பயிர்களுக்கு கிடைப்பதால் வேர் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கிறது. இதனால் ஆரம்ப காலத்தில் ஏற்படும் வறட்சி, சத்து பற்றாக்குறை, நாற்றுகள் இறத்தல் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். 
  • இது மட்டுமின்றி நல்ல வேர் அமைப்புடைய நாற்றுகள் தனக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் நீரை தேடி எடுத்துக் கொண்டும் வறட்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து எதிர்ப்பு திறன் புரிகிறது.
  • மேலும் டி ஏ பி உரம் மற்ற உரங்களை ஒப்பிடும் போது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. மேலும் உரம் வீணாவதை வெகுவாக குறைக்கலாம்.
  • நாம் சாகுபடி செய்யும் அநேக பயிர்களுக்கும் பி ஏ பி பயன்படுத்தலாம் இதில் எந்தவித அச்சமும் தேவையில்லை. 
  • அது மட்டுமின்றி டி ஏ பி இடுதல் மண் வளம் மற்றும் அதன் அமைப்பை மேம்படுத்தி மண்ணில் இருக்கக்கூடிய நன்மை செய்யும் உயிரினங்களுக்கு உதவியாக தான் திகழ்கிறது என பல்வேறு ஆய்வு அறிக்கை கூறுகிறது.

இதுபோன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

மக்காச்சோளத்தில் படைப்புழுவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்...

முன்னுரை: 

  • தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பெரும்பான்மையான மக்காச்சோள பயிர் நடப்பு பருவத்தில் தான் சாகுபடி செய்யப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மானாவாரி மற்றும் இறவையில் சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. பெரும்பான்மையான விவசாயிகள் நல்ல விலை கிடைப்பதால் இதனை பயிர் செய்து செய்து வருகிறார்கள் இதில் சாகுபடி செலவை அதிகப்படுத்தி மகசூலை குறைக்கும் பிரதான பூச்சியாக படைப் புழு காணப்படுகிறது. 
  • இதன் தாக்குதலால் சராசரியாக 10 முதல் 35% வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. பராமரிப்பு அற்ற நிலத்தில் 100% வரை மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.இதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை விரிவாக பார்ப்போம். 

புழு தாக்குதலின் அறிகுறிகள்:

இந்தப் புழு தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்ததாக கருதப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் விதை முளைத்த பத்து நாட்களில் இருந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

  • இளம் புழுக்கள் அதாவது பச்சை நிற புழுக்கள் இலையின் ஒரு புறத்தில் உள்ள திசுக்களை உண்டு சல்லடை போன்ற அமைப்பை ஏற்படுத்தும் ஆனால் மறுபுறத்தில் பச்சையம் காணப்படும். 
  • இரண்டு மற்றும் மூன்றாம் தோல் உரித்தல் நிகழ்வின்போது பயிரை கடித்து உண்டு துளைகளை ஏற்படுத்தும்.
  • நடுப் பகுதியில் இருக்கும் குருத்துப் பகுதியை உண்டு காயம் ஏற்படுத்துவதால் இலைகள் விரிந்த பிறகு பரவலாக துளைகள் காணப்படும்.
  • பெரிய புழுக்கள் சிறிய புழுக்களை உண்ணும் திறன் உடையதால் பயிரில் இரண்டு முதல் மூன்று புழுக்கள் மட்டுமே காணப்படும்.
  • முதிர்ந்த புழுக்கள் இலைகளை கடித்து உண்ணுவதால் மைய நரம்பு மற்றும் இலை காம்பு மட்டுமே மீதம் இருக்கும்.
  • உண்ட இலைப் பகுதியின் எச்சங்களை பயிர்கள் மற்றும் தரையில் காண இயலும்.
  • பயிரின் குருத்துப் பகுதியை துளைத்து உண்ணுவதால் குருத்துகள் வளராமல் வளர்ச்சி தடைப்படும். 
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட பயிரில் குருத்துப் பகுதி இல்லாமல் தண்டுப் பகுதியிலிருந்து கிளை உருவாகும் ஆனால் இதில் மகசூல் கிடைப்பது மிகவும் அரிது. 
  • பூ மற்றும் கதிர் பகுதியையும் இந்த புழுக்கள் உண்ணும் 

புழுவின் வாழ்க்கை சுழற்சி:

இந்தப் படைப்பு புழு கோடைகாலத்தில் 30 நாட்களிலும் மற்ற பருவத்தில் 60 முதல் 90 நாட்கள் வரையும் வாழும் தன்மை படைத்தது. 


முட்டை: 

தாய் அந்துப் பூச்சிகள் சுமார் 150 முதல் 200 முட்டைகளை கொத்தாக இலை மற்றும் பயிரின் குருத்துப் பகுதியில் இடுகிறது. இதன் வாழ்நாள் சுமார் மூன்று முதல் நான்கு நாட்கள் ஆகும். ஒரு தாய் அந்து பூச்சி அதன் வாழ்நாளில் சுமார் 1500 முதல் 2000 முட்டைகளை இடும் திறன் படைத்தது.

இளம் புழுக்கள்: 

முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் சுமார் 6 தோல் உரித்தல் நிகழ்வை மேற்கொள்ளும். ஆரம்ப நிலையில் பிச்சை நிற உடம்பையும் கருப்பு நிற தலைப் பகுதியையும் கொண்டிருக்கும். இரண்டாவது தோல் உரித்தல் நிகழ்வின்போது இதன் தலை சற்று ஆரஞ்சு நிறத்தில் மாற்றமடையும். மூன்றாவது தோல் உரித்தல் நிகழ்வின்போது உடம்பு காவி நிறமாக மாறும். நான்கு முதல் ஆறாவது நிகழ்வின் போது தலைப்பகுதி சிகப்பு முதல் பழுப்பு நிறத்தில் மாறும் உடம்பு பகுதியில் கோடுகள் மற்றும் புள்ளிகள் உருவாகும். இதன் வாழ்நாள் சுமார் 15 முதல் 30 நாட்கள் வரை நீடிக்கும்.

கூட்டுப்புழு: 

சிகப்பு நிற கூட்டு புழு பெரும்பான்மையாக மண்ணில் ஐந்து சென்டிமீட்டர் ஆழம் வரை காணப்படும். இதன் வாழ்நாள் கோடை பருவத்தில் 8 முதல் 10 நாட்களும் இதர பருவத்தில் 20 முதல் 30 நாட்களும் இருக்கலாம். 

தாய் அந்து பூச்சி:

இது பத்து முதல் 20 நாட்கள் வரை வாழும் தன்மை உடையது.தாய் அந்தப் பூச்சி இரவு நேரத்தில் மட்டுமே முட்டையிடும் இது பழுப்பு நிறத்தில் காணப்படும். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தொடர்ச்சியாக ஒரே வயலில் மக்காச்சோளம்  பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். 
  • கோடை உழவு கண்டிப்பாக செய்ய வேண்டும். இதன் மூலம் படைப் புழுவின் முட்டை மற்றும் கூட்டு புழுக்களை அதிக வெப்பநிலை மற்றும் பறவைகளுக்கு இரையாக்கி அழிக்கலாம்.
  • குறைந்தது 18 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை கோடை உழவு செய்து மண்ணை நன்கு ஆற விட வேண்டும்.
  • கடைசி உழவின் போது ஏக்கருக்கு 100 கிலோ விதம் இடித்த வேப்பம் கொட்டைகள் அல்லது வேப்பம் புண்ணாக்கு இடலாம்.
  • விதைகள் நடவு செய்வதற்கும் முன்னதாக வரப்பு பயிராக அல்லது பாதுகாப்பு பயிராக ஆமணக்கு, துவரை அவரை, சூரியகாந்தி, தட்டப்பயிறு அல்லது தங்கள் பகுதிக்கு ஏற்ற ஏதேனும் ஒரு  மூன்று வரிசையில் நடவு செய்ய வேண்டும்.
  • விதை விதைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக பரப்பு பயிர் சாகுபடி செய்வது சாலச் சிறந்தது. 
  • விதைகளை Cyantraniliprole என்ற மருந்தை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யலாம் இதனால் 25 நாட்கள் வரை புழு தாக்குதல் வராமல் தடுக்கலாம். 
  • ஏக்கருக்கு ஐந்து முதல் 8 எண்கள் இன கவர்ச்சி பொறி பயன்படுத்தி புழுக்களின் நடமாட்டத்தை கண்டறிவதுடன் கவர்ந்து அழிக்கலாம்.
  • கண்டிப்பாக விளக்கு பொறி ஏக்கருக்கு ஒரு எண் விதம் வாங்கி பயன்படுத்த வேண்டும். தாய் அந்த பூச்சிகள் இரவில் மட்டுமே முட்டையிடும். 
  • வயலை சுற்றி சிறிதாக குழி வெட்டி அதில் தண்ணீர் மற்றும் மருந்து ஊற்றி வைப்பதால் மற்ற வயல்களில் இருந்து புழுக்கள் வயலுக்குள் நுழைவதை தவிர்க்கலாம். 
  • அதேபோன்று ஏக்கருக்கு ஐந்து முதல் எட்டு எண்கள் இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்தலாம்.
  • ஒரே நேரத்தில் சாகுபடி செய்ய இருக்கும் மொத்த நிலத்திலும் விதைகளை விதைக்க வேண்டும் இதனால் முழு தாக்குதலை வெகுவாக குறைக்கலாம். 
  • பயிரின் குருத்துப் பகுதியில் மணல் அல்லது அடுப்பு சாம்பல் தூவி விடுவதால் ஓரளவிற்கு பூச்சி கடிப்பதை தவிர்க்கலாம்.
  • மணல் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை 9:1 என்ற சதவீதத்தில் கலந்து குருத்துப் பகுதியில் இடலாம்.
  • ஆரம்ப காலத்தில் வயலில் ஆங்காங்கே குச்சிகளை நட்டு வைப்பதால் அதில் பறவைகள் உட்கார்ந்து புழுக்களை உண்ணும்.
  • பயிர் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருந்து தொடர்ச்சியாக Metarhizium anisopliae மற்றும் Beauveria bassiana ஆகியவற்றை லிட்டருக்கு தலா 5 கிராம் கலந்து வாரம் ஒரு முறை தெளித்து வர வேண்டும். 
  • தாக்குதல் இல்லாத போது வேப்ப எண்ணெய், வேப்பங்கொட்டை விதை கரைசல், 3 G கரைசல், பத்திலை அல்லது ஐந்திலை கரைசல் அல்லது கிடைக்க பெறும் இயற்கை வழி தயாரிப்பு இடுபொருட்களை பயன்படுத்தி தாக்குதலை தவிர்க்கலாம். 
  • இவை அனைத்தையும் முயற்சி செய்து வர வேண்டும் முடியாத பட்சத்தில் மட்டுமே ரசாயன மருந்து தெளிக்கலாம்... தெளிக்கும் பொழுது தேர்வு செய்யப்படும் மருந்து, நிறுவனம் மற்றும் அதன் அளவு ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவும். 
  • கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். 
  • Emammectin benzoate - 8 கிராம்
  • Novuluron- 10 மில்லி
  • Thiamethaxam+ Lambada cychlothrin - 10 மில்லி 
  • Tetraniprole - 10 மில்லி
  • Chloratranliniprole - 6 மில்லி
  • Thiodicarb - 10 கிராம்
  • Spinotorom - 10 மில்லி
  • Spinosad -5 மில்லி

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். 

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வியாழன், 15 ஆகஸ்ட், 2024

பப்பாளியில் வளைப்புள்ளி வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பப்பாளி இரண்டு முதல் மூன்று மாத வயதுடைய பயிராக சாகுபடியில் உள்ளது. பப்பாளி பயிரின் மகசூலை பாதிக்க கூடிய பல்வேறு நோய் மற்றும் பூச்சிகள் இருந்தாலும் வைரஸ் நோய் தாக்குதல் மிகப்பெரிய அளவில் மகசூல் இழப்பீடு மற்றும் பயிர் இறத்தல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதில் பப்பாளி வளைப்புள்ளி வைரஸ் நோய் மிக முக்கியமானது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 

  • பயிரின் வயது, தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் வைரஸின் வீரிய தன்மை ஆகியவற்றை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். 
  • ஆரம்ப நிலையில் இலைகளில் கரும்பு பச்சை நிறத்தில் கொப்புளங்கள் பரவலாக காணப்படும்.
  • நாளடைவில் இலைகளில் பல வண்ண நிறத்தில் புள்ளிகள் காணப்படும். 
  • இலைப் பகுதியில் வளர்ச்சி தடைப்பட்டு, இலைகள் அகற்ற அமைப்புடன் இல்லாமல் நீள்வாக்கில் வளரும். 
  • இலை காம்புகள் அளவிற்கு அதிகமாக வளர்ந்து நீண்டு காணப்படும்.
  • இலைகளில் தேமல் அறிகுறிகள் அதிகமாக தென்படும், நாளடைவில் இதில் பழுப்பு நிற புள்ளிகள் தென்பட ஆரம்பிக்கும்.
  • இதனால் ஒட்டுமொத்த பயிரின் வளர்ச்சி தடைப்பட்டு குன்றி காணப்படும். 
  • பயிரின் தண்டுப் பகுதி மற்றும் இலை காம்புகளில் நீர்த்த புள்ளிகள் மற்றும் கோடுகள் காணப்படும். 
  • காய்களில் நீர்த்த  வளையங்கள் காணப்படும்.
  • தீவிர நிலையின் போது இலைகள் மற்றும் பழங்கள் ஒழுங்கற்ற வடிவில் மாற்றம் அடைவதை காண இயலும்.

பரவும் விதம்: 

  • அஸ்வினி எனப்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் இளம் செடிகளில் சாற்றை உறிஞ்சி நொடிப்பொழுதில் மற்ற செடிகளுக்கு பரப்புகிறது. 
  • தர்பூசணி முலாம்பழம் வெள்ளரி மற்றும் பரங்கி வகை பயிர்களிலும் இந்த வகை வைரஸ் நோய் தாக்குதலை காண இயலும். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்த வகை வைரஸ் விதை மூலமாக பரவும் அபாயம் உள்ளதால் நோய் தாக்குதல் அல்லாத விதைகளை தேர்வு செய்வது மிக முக்கியம். 
  • வளைப்புள்ளி வைரஸ் நோய்க்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்கள் அல்லது வீரிய ஓட்டு ரகங்கள் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு பின்னர் சாகுபடி செய்யலாம்.
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் பப்பாளி சாகுபடி செய்வதை தவிர்க்கலாம். 
  • வெள்ளரி குடும்பத்தில் இருக்கும் மற்ற பயிர்களை பயிர் செய்த வயலில் பப்பாளி நடவு செய்வதை தவிர்க்கலாம். 
  • நடவு செய்வதற்கு முன்பதாக வயலை சுற்றி இரண்டு அல்லது மூன்று வரிசையில் சோளம் பயிரிடலாம்.
  • அஸ்வினி அதிகம் தென்படும் பருவத்தில் நடவு செய்வதை தவிர்க்கலாம். 
  • களை மேலாண்மை மிகவும் முக்கியம் ஏனெனில் அஸ்வினி களைச் செடிகளில் உயிர் வாழ்ந்து பயிரைத்தாக்கும்.
  • தொடர்ச்சியாக வயலை ஆய்வு செய்து நோய் தாக்குதல் உள்ளதா என்பதை காணவும். தாக்குதலின் அறிகுறிகள் தென்படும் தருணத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • தழைச்சத்து அதிகம் கொடுப்பதை தவிர்த்து இதர ஊட்டச்சத்துக்களை இயற்கை வழி முறையில் கொடுத்து பயிர்களை எதிர்ப்பு திறன் உடையதாக மாற்றலாம்.
  • ஆரம்ப நிலையில் இருந்தே சாறு உறிஞ்சி பூச்சியை கட்டுப்படுத்தும் Verticillum lecanii மற்றும் தேமோர் கரைசல், வேப்ப எண்ணெய், அக்னி அஸ்திரம், வசம்பு கரைசல், 3g போன்றவற்றை தெளிப்பதால் சாறு உறிஞ்சும் பூச்சிகள் செடிகளை நெருங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளலாம். 
  • ரசாயன முறையில் அஸ்வினியை கட்டுப்படுத்த கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் பயன்படுத்தி தெளிக்கலாம்.
  • Imidacloprid - 10 மில்லி.
  • Thiamethaxam - 10 கிராம்.
  • Monocrotophos- 30-40 மில்லி
  • Profenaphos - 30-40 மில்லி
  • Lambada cychlothrin - 25 milli
  • Dimethoate - 25 மில்லி.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...


https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


தென்னை சாகுபடி சார்ந்த பயிர் காப்பீடு திட்டங்கள்...

தென்னை சாகுபடி சார்ந்த பயிர் காப்பீடு திட்டங்கள்:

  • தேசிய அளவில் தென்னை சாகுபடி என்பது பிரதான பயிராக திகழ்கிறது. இந்தியா உலக அளவில் தென்னை சாகுபடியில் மூன்றாவது இடத்தினை எட்டியுள்ளது அதேபோன்று தமிழ்நாடு இந்திய அளவில் தென்னை சாகுபடியில் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக திகழ்கிறது. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் ஆகியவை இணைந்து பயிர் காப்பீடு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றார்கள்.
  • எனவே தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு சாகுபடியில் உள்ள தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்.

தென்னை பனை காப்பீடு திட்டம் (CPIS)

ஆங்கிலத்தில் Coconut Palm Insurance Scheme எனப்படும் இந்தத் திட்டமானது தென்னை மரங்களை இயற்கை பேரழிவுகள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல் மற்றும் பல இதர உடனடி தாக்குதல்களால் பாதிக்கப்படும் மரங்களுக்கு காப்பீடு செய்யும் திட்டமாகும்.

  • இத்திட்டத்தில் வளமான மரங்களை மட்டுமே காப்பீடு செய்ய இயலும். 
  • சாகுபடி பரப்பளவுக்கு காப்பீடு செய்ய இயலாது தனிப்பட்ட மரங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்ய இயலும்.
  • காய்ப்பில் உள்ள மரங்கள் குறைந்தது ஐந்து வளமான காய்களை காய்க்க வேண்டும். 
  • காப்பீடு நிறுவனங்களுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்படுகிறது. 
  • 4 முதல் 15 வயதுடைய மரங்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்து தொகையாக Rs. 9 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 16 முதல் 60 வயது உடைய மரங்களுக்கு Rs. 14 ஆகும்.
  • ஒருவேளை மரங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அல்லது முழுவதும் காய்க்கும் திறனை இழந்து விட்டால் 4 முதல் 15 வயதுடைய மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு Rs.900 எனவும் 16 முதல் 60 வயதுடைய மரங்களுக்கு மரம் ஒன்றிற்கு Rs.1750 எனவும் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும்.

Kera Suraksha Insurance Scheme:

இளநீர் அல்லது தென்னங் காய்களை அறுவடை செய்தல், மரத்தை சுத்தப்படுத்துதல், மற்றும் பல பணிகளுக்காக தென்னை மரம் ஏறுபவர்களுக்கு காப்பீடு செய்வதே இந்த திட்டம். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் ஆண்டிற்கு ரூபாய் 99 செலுத்த வேண்டும் மீதமுள்ள செலுத்து தொகையான ரூபாய் 299.55 ஐ தென்னை வளர்ச்சி வாரியம் செலுத்தும். 18 முதல் 65 வயது உடைய தென்னை மரம் ஏறுபவர்கள் மட்டுமே இதில் பயனடைய இயலும். காப்பீடு செய்த நபர்கள் இறந்துவிட்டால் ரூபாய் 5 லட்சம் வரை வழங்கப்படும். ஊனம் அடைந்தால் அதற்கு ஏற்றவாறு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

இதுபோன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2024

தென்னையில் சிகப்பு கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை: 

  • தென்னை சாகுபடியில் பல்வேறு பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் காணப்பட்டாலும், பூச்சி தாக்குதலினால் மகசூல் மற்றும் பயிர்/மரம் இழப்பீடு காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூன் வண்டு தாக்குதலால் பெரிய அளவில் காணப்படுகிறது.
  • தென்னை, எண்ணெய் பனை, பாக்கு, பேரிச்சை, அலங்கார தாவரங்கள் என 25 மேற்பட்ட பனை வகை பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் படைத்தது. 
  • சிகப்பு கூன் வண்டு இளம் மரங்களில் அதாவது 20 வருடங்களுக்கு குறைவான வாழ்நாள் கொண்ட மரங்களில் இதன் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
  • இந்தியாவில் தென்னை மற்றும் பாக்கு பயிரில் பிரதான பூச்சியாகவும் அரேபிய நாடுகளில் பேரிச்சை மற்றும் அழகு தாவரங்களில் தாக்கும் பிரதான பூச்சியாக திகழ்கிறது.
  • தாக்குதலின் தீவிரம் மற்றும் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பொறுத்து சராசரியாக 50% வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துகிறது.

தாக்குதலுக்கான உகந்த சூழ்நிலை: 

  • பராமரிப்பு அல்லாத தோப்புகள் 
  • பாதித்த மரம் அல்லது மரத்தின் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்காமல் இருத்தல்.
  • இளம் மரங்களில் ஏற்படும் காயங்கள். மரத்தின் காயங்களில் இருந்து வெளிவரும் திரவம் பெண் வண்டுக்களை இனப்பெருக்கத்திற்காக கவர்வது போன்று இருப்பதால் பெண் வண்டுக்கள் மரத்தின் பாதித்த இடத்தில் முட்டைகளை இடுகிறது. அது அடித்தண்டு பகுதியாக இருந்தாலும் சரி அல்லது தண்டு அல்லது குருத்துப் பகுதியாக இருந்தாலும் சரி.
  • அடித்தண்டு அல்லது வேர் பகுதியில் ஊடுபயிர் அல்லது களை எடுத்தலின் போது ஏற்படும் காயங்கள் வழியாக.
  • காண்டாமிருக வண்டால் தென்னையில் ஏற்படும் காயங்கள் மூலமாகவும்,
  • மேலோட்டமாக அல்லது ஆழம் இல்லாமல் தென்னங் கன்றுகளை நடவு செய்வதால்.
  • சில நேரங்களில் இயற்கையாகவே தண்டுப் பகுதியில் பிளவுகள் காணப்படும் இதன் வழியாகவும் தாக்குதல் அல்லது முட்டை இடுதல் நிகழ்வு நடைபெறலாம்.
  • பொதுவாக சிகப்பு கூன் வண்டுகள் முட்டையிடவோ அல்லது தாக்குதலை ஏற்படுத்தவோ பயிர்களில் காயங்களை உண்டாக்குவதில்லை.

பூச்சி தாக்குதல் பரவும் விதம்:

பாதிக்கப்பட்ட மரங்கள் அல்லது மரத்தின் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்காமல் இருப்பது இதன் பரவுவதற்கான பிரதான காரணமாகும்.

கூன் வண்டு தாக்குதல் இல்லாத தோப்புகளில் இனக்கவர்ச்சி பொறியை வைப்பதால் மற்ற வயல்களில் இருந்து நமது தோப்பிற்கு வண்டு தாக்குதல் ஏற்படுகிறது. 

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி: 

முட்டை: 

பெண் வண்டுகள் மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகள், வெடிப்புகள்,பிளவுகள், இலைக் காம்பு மற்றும் குருத்து போன்ற இடத்தில் 200-300 நீள் வட்ட வடிவ வெள்ளை நிற மூட்டைகளை இடுகிறது.

இளம் புழுக்கள்:

சுமார் 3-5 நாட்களுக்குப் பிறகு முட்டைகள் பொரித்து இளம் புழுவாக மாறுகிறது. இதனை ஆங்கிலத்தில் கிரப்(Grub) என்று கூறுவார்கள். கால்கள் இல்லாத இளம் புழுக்கள் மரத்தின் மென்மையான திசுக்களை உண்டு சக்கையை வெளியேற்றுகிறது. சுமார் 50 மில்லி மீட்டர் நீளம் வரை வளரும்.பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து சாறு வடிதல் மற்றும் சக்கை வெளியேறுதலை காண இயலும்.வெள்ளை நிற உடம்பு பகுதியையும் காவி நிற தலைப் பகுதியையும் கொண்டிருக்கும்.

கூட்டு புழு: 

சுமார் 1-3 மாத வயதுடைய இளம் கூட்டு புழுவாக மாறுகிறது. இந்த கூட்டுப் புழுக்கள் மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் தென்படும். 

முதிர்ந்த புழுக்கள்:

15 முதல் 25 நாட்கள் வயதுடைய கூட்டுப் புழுவில் இருந்து பண்டு வெளியேறும்.சிகப்பு நிறத்தில் நீண்ட மூக்குடன் காணப்படும். இதன் முதுகு பகுதியில் 6 புள்ளிகள் இருக்கும்.

தாக்குதலின் அறிகுறிகள்:


  • மரத்தின் அடித் தண்டு, தண்டுப் பகுதி, இலை காம்பின் அடிப்பகுதி மற்றும் குருத்துப் பகுதியில் சிறிய துவாரங்கள் காணப்படும்.
  • துளைகள் காணப்படும் பகுதியில் இருந்து சாறு  வடிதலை காண இயலும்.
  • இளம் புழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதியை தொடர்ச்சியாக உண்ணுவதால் துளைகள் வழியாக சக்கை வெளியேறுவதை காணலாம்.
  • தண்டுப் பகுதியை உண்ணுவதால் பயிருக்கு செல்ல வேண்டிய உணவு மற்றும் தண்ணீர் தடைபடுவதால் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதை காண இயலும்.
  • குருத்துப் பகுதியை துளைத்து உண்ணுவதால் கொண்டைப் பகுதி பலம் இழந்து சாய்ந்து விடுகிறது.இலையின் காம்பு பகுதியில் துளையிட்டு உண்பதால் இலைகள் உதிர்வதையும் காணலாம்.
  • அடித்தண்டு பகுதியில் நம் கண்ணிற்கு புலப்படாதவாறு புழுக்கள் உண்ணுவதால் மரம் சாய்ந்து விடுகிறது.
  • மரத்தின் தண்டுப் பகுதியில் இதன் தாக்குதல் காணப்பட்டால் புழுக்கள் இறையும் சத்தம் கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தென்னை மரங்களின் அடித் தண்டு, தண்டு பகுதி மற்றும் குருத்து பகுதியில் காயங்கள் ஏற்படாதவாறு பராமரிக்க வேண்டும்.
  • மரங்களின் இளம் பருவத்தில் அதாவது குறைந்தது 10 வருடங்கள் வரை கூன்  வண்டு தாக்குதலில் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதை தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டும்.
  • மரத்தில் ஏதேனும் காயங்கள் தென்பட்டால் உடனடியாக தார் அல்லது பயன்படுத்தப்பட்ட இயந்திர எண்ணெய்யை தடவி விட வேண்டும்.
  • மரத்தின் அடித் தண்டு அல்லது தண்டுப் பகுதியில் சாறு வடிதல் தென்பட்டால் உடனடியாக ஏதேனும் பூஞ்சான மருந்தை தடவி விடலாம் அல்லது தெளிக்க வேண்டும். 
  • காண்டாமிருக வண்டு தாக்காத வண்ணம் பராமரிக்கப்பட வேண்டும் ஏனெனில் இந்த வண்டு தாக்கிய பகுதிகளில் சிகப்பு கூன் வண்டு முட்டை இட அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட மரத்தை வேர்ப்பகுதியோடு முழுமையாக அப்புறப்படுத்தி வெட்டி கொளுத்தி விட வேண்டும் ஏனெனில் வண்டுகளின் இளம் புழுக்கள் அதில் இருக்க வாய்ப்புகள் உண்டு.
  • மேலும் கூன் வண்டு உணவுக்காக மற்றும் இனப் பெருக்கத்திற்காக பாதிக்கப்பட்ட மரத்தையே தேர்வு செய்யும். 
  • தென்னந்தோப்பை களைகள், குப்பைகள் அல்லது காய்ந்த மட்டையில் அதிகம் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். ஏனெனில் இது புழுக்கள் மறைந்து வாழ வழிவகை செய்யவும்.
  • எக்காரணத்தைக் கொண்டும் பண்ணை உபகரணங்கள், இயந்திரங்கள் அல்லது கால்நடைகள் மரங்களை காயப்படுத்தாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.
  • தென்னை மரங்களின் அடித் தண்டு பகுதியில் மண், தொழு உரம் அல்லது மூடாக்கு போன்றவற்றை இடாமல் தெளிவாக இருக்கும் படி வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் வண்டு தாக்குதலை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க இயலாது.
  • காண்டாமிருக வண்டு, குருத்து அழுகல்,வேர் வாடல் போன்ற நோய் அல்லது பூச்சிகள் தாக்காதவாறு பராமரிக்க வேண்டும் இவை அனைத்தும் மறைமுகமாக கூன் வண்டு தாக்குதலை ஊக்கப்படுத்தும்.
  • வண்டு தாக்குதல் ஏற்படாத வண்ணம் பயிரை பாதுகாக்க மாதம் ஒரு முறை இலையின் குருத்து பகுதியில் இடித்த வேப்பங்கொட்டை அல்லது வேப்பம் புண்ணாக்கு உடன் சம அளவு மணல் கலந்து மரம் ஒன்று இருக்கு அரை கிலோ விதம் இடவேண்டும். 
  • அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இலை இடுக்குகளில் நாப்தலின் உருண்டைகளை இட்டு அதன் மேல் கைப்பிடி அளவு மணல் இடவேண்டும்.
  • அல்லது மாதம் ஒருமுறை 1:40 என்ற அளவில் Chlorantraniliprole மருந்தையும் மணலையும் கலந்து மரம் ஒன்று இருக்கு 200 முதல் 300 கிராம் இட வேண்டும்.
  • கூன் வண்டு தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்ப நிலையிலேயே ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி Imidacloprid என்ற மருந்தை வேர் அல்லது தண்டு வழியாக செலுத்தலாம் இல்லையெனில் குருத்து பகுதியில் உற்ற வேண்டும்.
  • குருத்துப் பகுதியை பாதுகாக்க இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும். அதேபோன்று அடித்தண்டு பகுதியை பாதுகாக்க மாதம் ஒருமுறை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி Chlorpyriphos கலந்து தண்டு மற்றும் அடித்தண்டு பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும்.
  • அல்லது Imidacloprid/Chlorpyriphos/Spinosad மருந்தை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தண்டுப் பகுதியில் ஊசியை பயன்படுத்தி செலுத்தலாம்.
  • ஏக்கருக்கு ஒரு எண் சிவப்பு கூன் வண்டு இனக்கவர்ச்சி பொறி வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • அதேபோன்று தென்னை ஓலை பொறி தயார் செய்து ஏக்கருக்கு 20 வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.

இது விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வியாழன், 1 ஆகஸ்ட், 2024

வாழையில் மொகோ/பாக்டீரியல் வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • வாழை சாகுபடியில் பூஞ்சானத்தால் ஏற்படக்கூடிய பணமா வாடல் நோய் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே ஆனால் அதே போன்று சில அறிகுறிகளை பாக்டீரியா வாடல் நோயும் ஏற்படுத்தி விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் வாழை மரங்கள் இறக்கவும் காரணமாக திகழ்கிறது.
  • இந்த பாக்டீரியல் நோயானது வாழை மற்றும் வாழை குடும்பத்தைச் சார்ந்த இதர பயிர்களையும் பொதுவாக தாக்குகிறது.பயிரின் அனைத்து நிலைகளிலும் இந்த நோய் தாக்குதல் காணப்பட்டாலும் இளம் பருவ வாழை மரங்களை அதிகம் தாக்குகிறது.

பரவும் விதம்: 

இந்த பாக்டீரியா பாதிக்கப்பட்ட பயிர் வாயிலாக இதர பயிர், மண் மற்றும் சென்றடைகிறது. அங்கிருந்து வாய்க்கால் வழி நீர் பாசனம் மற்றும் அன்றாட பண்ணைப் பணிகள் வாயிலாக இதர பயிர்களுக்கு பரவுகிறது.

நோயின் பிரதான அறிகுறிகள்:


  • அடி இலைகள் வெளிர் பச்சை நிறம் முதல் மஞ்சள் நிறமாக மாற்றம் அடையும். சில நேரங்களில் இலைகள் மஞ்சள் நிறம் மாறாமலும் இருக்கும்.
  • இலைகளின் காம்பு பகுதியில் வெடிப்புகள் அல்லது பிளவுகள் ஏற்பட்டு செடியை ஒட்டி தொங்கும். நாளடைவில் அடுத்தடுத்த இலைகளுக்கு இவ்விதமான அறிகுறிகள் பரவ ஆரம்பிக்கும்.
  • வாழை மரத்தின் தண்டுப் பகுதியில் பழுப்பு நிற கோடுகள் அல்லது திட்டுக்கள் காணப்படலாம்.வாழை மரத்தின் தண்டுப் பகுதி அல்லது கிழங்கு பகுதியை குறுக்கு நெடுக்காக வெட்டி பார்த்தால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்தில் நிற மாற்றம் அடைந்திருக்கும். 
  • அதாவது பயிர்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நீரை எடுத்துச் செல்லக் கூடிய திசுக்கள் பாதிப்பதால் இவ்வாறான அறிகுறிகள் தென்படுகிறது.
  • ஆண் மலர் பாகங்கள் திடீரென கருப்பு நிறமாக மாறி உதிர ஆரம்பிக்கும். வாழைத்தாரின் காம்பு பகுதியை வெட்டி பார்த்தாலும் கருப்பு நிற மாற்றத்தை காணலாம்.
  • பாதிக்கப்பட்ட மரத்திலிருந்து உற்பத்தி செய்யக்கூடிய காய்கள் வளைந்து நெளிந்து வெம்பியது போன்ற காட்சி அளிக்கும். 
  • இந்த காய்கள் அல்லது பழங்களை உடைத்துப் பார்த்தால் அழுகிய நிறமாற்றம் இருக்கும். தாரில் உள்ள காய்கள் வெவ்வேறு நேரங்களில் பழுக்க ஆரம்பிக்கும் 
  • நோயின் தாக்குதல் தீவிரமடையும் பொழுது செடிகள் இறந்துவிட அதிக வாய்ப்புகள் உள்ளது.

நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • தேர்வு செய்யப்படும் விதைக் கிழங்குகள் தரமானதாகவும் நோயால் பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.
  • பாக்டீரியல் வாடல் நோய்க்கு எதிராக வளரும் தன்மை கொண்ட பூவன், மோந்தன் போன்ற ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யலாம். 
  • ஒரே வயலில் மீண்டும் மீண்டும் வாழை சாகுபடி செய்வதை தவிர்ப்பது நல்லது.
  • நடவு செய்வதற்கு முன்பதாக உயிர் பூஞ்சான கொல்லிகள் அல்லது இரசாயன மருந்துகளை பயன்படுத்தி கிழங்குகளை நேர்த்தி செய்து நடவு செய்யலாம்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். 
  • நீர் பாய்ச்சுதலை முறைப்படுத்தி காய்ச்சலும் பாய்ச்சலும் ஆக நீர் விட வேண்டும். 
  • பெரும்பான்மையாக இந்த நோயானது நீர்ப்பாசனம் வழியாக பரவுவதால் சொட்டுநீர் பாசனம் பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. 
  • நோய் தாக்குதலை ஏற்படுத்தும் பாக்டீரியாவானது வயலில் அல்லது பயிர் கழிவுகளில் சுமார் 18 மாதம் முதல் 20 மாதங்கள் வரை உயிருடன் இருப்பதால் பயிர் சுழற்சி அதற்கேற்றவாறு பின்பற்றலாம்.
  • பயிர்களில் காயங்கள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் அடித் தண்டு மற்றும் தண்டுப் பகுதிகளில்.
  • நோய் பரவுதலை கட்டுப்படுத்த வேர்ப்பகுதியில் காப்பர் ஆக்ஸி குளோரைடு என்ற ரசாயன மருந்தை வேர்ப்பகுதியில் ஊற்றலாம்.

இது விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

Recent Posts

Popular Posts