பருத்தி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை....
|- பருவ மழைக்கு முன்னதாக சட்டி கலப்பை பயன்படுத்தி ஆழமாக உழவு செய்வதன் மூலம் நிலத்தின் நீர் பிடிப்பு திறனை மேம்படுத்தலாம்.பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை கொத்து கலப்பை பயன்படுத்தி உழவு செய்து கட்டிகளை நன்றாக தூளாக்கி பின்னர் தேவையின் அடிப்படையில் ரோட்டாவேட்டர் பயன்படுத்தலாம்.
- நீர்ப்பாசனம் மூலம் சாகுபடி செய்யும் பொழுது மேட்டுப்பாத்தி அல்லது தகுந்த இடைவெளியில் பார்கள் அமைத்து விதைப்பு மேற்கொள்ளலாம்.
- கடைசி உழவுக்கு முன்னதாக ஏக்கருக்கு குறைந்தபட்சம் 4 டன் நன்கு மக்கிய தொழு உரம் /ஒரு டன் மண்புழு உரம், தேவையின் அடிப்படையில் அதனுடன் உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சான கொல்லிகள் கலந்து கொள்ளலாம்.
- ரசாயன உரங்கள் இடவேண்டும் என்றால் விதைப்புக்கு முன்னதாக ஏக்கருக்கு இரண்டு மூட்டை டி.ஏ.பி, பொட்டாஸ் 15 முதல் 20 கிலோ, பருத்தி நுண்ணூட்ட உரம் 5-8 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ ஆகியவற்றை இடவேண்டும்.
- நாம் பொதுவாக B.t வகை வீரிய ஒட்டு ரகங்களை சாகுபடி செய்வதால் பொதுவாகப் பரிந்துரை செய்யப்படும் உர அளவான தழைச்சத்து 120 கிலோ, மணிச்சத்து 60 கிலோ மற்றும் சாம்பல் சத்து 60 கிலோ முதலியவற்றை ஒரு ஹெக்டர் நிலப்பரப்புக்கு இடலாம்.
- மண்ணில் நல்ல ஈரப்பதம் இருக்கும் பொழுது 60-90 X 30-45 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைப்பு மேற்கொள்ளலாம். பருத்தி ரகங்களின் முளைப்பு திறன் குறைவு என்பதால் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் இரண்டு விதைகளை விதைப்பு செய்ய வேண்டும்.
- நீர் வசதி இல்லாமல் காய்ச்சலில் விதைப்பு மேற்கொள்ளும் பொழுது மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் கண்டிப்பாக இடவேண்டும்.
- பருத்தியில் களை மேலாண்மை மிகவும் சவாலானதாக திகழ்வதால், இதில் அதிக கவனம் தேவை. விதைத்த மூன்று முதல் ஐந்து நாட்கள் இடைவெளியில் களை முளைப்பதற்கு முன்னதாக பயன்படுத்தப்படும் களைக்கொல்லியை போதுமான ஈரப்பதம் இருக்கும் பொழுது தெளித்து விடவும். உதாரணத்திற்கு Butachlor, Pendimethalin, Alachlor போன்றவற்றை பரிந்துரைக்கப்படும் அளவில் பயன்படுத்தலாம்.
- விதைகள் முளைத்து 15 முதல் 20 நாட்கள் பயிரில் தெளிக்க கூடிய களைக்கொல்லிகள் பல இருந்தாலும் அதன் செயல்பாடுகள் குறிப்பிட்ட சில களைகளை மட்டுமே கட்டுப்படுத்துவதாக திகழ்கிறது எனவே அதனை முழுமையாக நம்பி இருக்க வேண்டாம்.
- விதைத்த ஏழாம் நாள் முளைப்புத் தவறிய இடங்களில் மீண்டும் விதையை விதைக்கலாம்.
- நீர் நிர்வாகத்தை பொறுத்தவரையில் உயிர் தண்ணீர், அதைத் தாண்டி பூக்கும் தருணத்திலும், காய்க்கும் மற்றும் காய்கள் பெருக்குமடையும் தருணத்தில் நல்ல ஈரப்பதம் வேர்களுக்கு கிடைத்தால் மகசூலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே நீரை பயன்படுத்தி சாகுபடி செய்பவர்கள் இதனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு நீர் பாய்ச்சலாம்.
- மண்ணின் அமைப்பு மற்றும் தன்மையை பொறுத்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குறைந்தபட்ச நீர் பாய்ச்சினால் பருத்தியில் அதிக அளவு மகசூல் எதிர்பார்க்கலாம்.
- பயிரின் 40 ஆம் நாள் நுனிப்பகுதியை கிள்ளிவிட்டு தேவையான வளர்ச்சி ஊக்கி கொடுத்தால் அதிக கிளை பிரிவதை காணலாம். வீரிய ஒட்டு ரகம் என்பதால் நல்ல கிளை பிரியும் திறன் எதிர்பார்க்கலாம் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் கொடுத்தால்.
- நுனியை கிள்ளிவிட்டு NAA/Cytocyme போன்ற வளர்ச்சி ஊக்கியை பரிந்துரை செய்த அளவில் ஏழு நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால் அதிக காய்ப்பு திறன் எதிர்பார்க்கலாம் இதனால் 20 முதல் 30 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கக்கூடும்.
- பூக்கும் தருணத்தில் பயிரில் வளர்ச்சி ஊக்கி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாமல் பராமரிப்பது இன்றி அமையாததாகும். இந்த தருணத்தில் பொதுவாக மெக்னீசியம் குறைபாடு காணப்படும். இதனால் இலைகள் விறைப்புத் தன்மையுடனும், இலையின் விளிம்புகள் சிகப்பு நிறத்தில் மாற்றம் அடைவதையும் காண இயலும். பொதுவாக அதிக அளவு பொட்டாசியம் சத்து கொடுக்கும் பொழுது இதை நாம் எதிர்பார்க்கலாம். இது கடந்த சில வருடங்களாக தென்படுகிறது எனவே அடி உரமாகவோ அல்லது இடைவெளியாகவோ போதுமான அளவு மெக்னீசியம் தெளிக்கலாம்.
- அதேபோன்று போரான் மற்றும் துத்தநாகம் பற்றாக்குறைகள் தென்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதையும் கவனத்தில் கொண்டு உரிய தருணத்தில் தெளிப்பு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நுண்ணூட்ட சத்துக்கள் இழை வழியாக நாம் தெளிக்கும் பொழுது வளர்ச்சி ஊகிகள் கலந்து தெளிப்பதால் பூ /சப்பைகள் உதிர்வதை வெகுவாக குறைக்கலாம்.
- முதல் அடி உரம் 30 முதல் 40 நாட்கள் இடைவெளியில் செடிக்கு அருகில் வைத்து நீர் விட வேண்டும். அப்பொழுது மணிச்சத்தும் பொட்டாசியம் சத்தும் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் உதாரணத்திற்கு ஏக்கருக்கு தலா 40 கிலோ இடலாம். இடைப்பட்ட காலத்தில் நீர் வசதி இருந்தால் அல்லது மண் ஈரப்பதம் இருந்தால் NPK consortia வேர்ப்பகுதிகளுக்கு கொடுத்தால் அடியில் இடப்பட்ட உரங்கள் செடிகளுக்கு எளிதில் கிடைக்கும்.
- அடுத்த கட்ட மேலூரம் 60 முதல் 80 நாட்கள் இடைவெளியில் கொடுக்கலாம்.அப்பொழுது தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து இடலாம்.
- பூச்சி தாக்குதலை பொருத்தவரையில் தத்துப்பூச்சி, வெள்ளை ஈக்கள், காய்ப்புழு, அஸ்வினி போன்ற பூச்சிகள் பிரதானமாக பயிரை தாக்கும்.
- நோயைப் பொருத்தமட்டில் வேர் வாடல் நோய், அழுகல் நோய், இலை கருகல் மற்றும் பாக்டீரிய கருங்கல் நோய் எதிர்பார்க்கலாம்.
மேலும் சந்தேகம் மற்றும் தகவல்களுக்கு இணைப்பில் கலந்துள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.. https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக