தென்னையில் சிகப்பு கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
|முன்னுரை:
- தென்னை சாகுபடியில் பல்வேறு பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் காணப்பட்டாலும், பூச்சி தாக்குதலினால் மகசூல் மற்றும் பயிர்/மரம் இழப்பீடு காண்டாமிருக வண்டு மற்றும் சிகப்பு கூன் வண்டு தாக்குதலால் பெரிய அளவில் காணப்படுகிறது.
- தென்னை, எண்ணெய் பனை, பாக்கு, பேரிச்சை, அலங்கார தாவரங்கள் என 25 மேற்பட்ட பனை வகை பயிர்களில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் படைத்தது.
- சிகப்பு கூன் வண்டு இளம் மரங்களில் அதாவது 20 வருடங்களுக்கு குறைவான வாழ்நாள் கொண்ட மரங்களில் இதன் தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.
- இந்தியாவில் தென்னை மற்றும் பாக்கு பயிரில் பிரதான பூச்சியாகவும் அரேபிய நாடுகளில் பேரிச்சை மற்றும் அழகு தாவரங்களில் தாக்கும் பிரதான பூச்சியாக திகழ்கிறது.
- தாக்குதலின் தீவிரம் மற்றும் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பொறுத்து சராசரியாக 50% வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துகிறது.
தாக்குதலுக்கான உகந்த சூழ்நிலை:
- பராமரிப்பு அல்லாத தோப்புகள்
- பாதித்த மரம் அல்லது மரத்தின் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்காமல் இருத்தல்.
- இளம் மரங்களில் ஏற்படும் காயங்கள். மரத்தின் காயங்களில் இருந்து வெளிவரும் திரவம் பெண் வண்டுக்களை இனப்பெருக்கத்திற்காக கவர்வது போன்று இருப்பதால் பெண் வண்டுக்கள் மரத்தின் பாதித்த இடத்தில் முட்டைகளை இடுகிறது. அது அடித்தண்டு பகுதியாக இருந்தாலும் சரி அல்லது தண்டு அல்லது குருத்துப் பகுதியாக இருந்தாலும் சரி.
- அடித்தண்டு அல்லது வேர் பகுதியில் ஊடுபயிர் அல்லது களை எடுத்தலின் போது ஏற்படும் காயங்கள் வழியாக.
- காண்டாமிருக வண்டால் தென்னையில் ஏற்படும் காயங்கள் மூலமாகவும்,
- மேலோட்டமாக அல்லது ஆழம் இல்லாமல் தென்னங் கன்றுகளை நடவு செய்வதால்.
- சில நேரங்களில் இயற்கையாகவே தண்டுப் பகுதியில் பிளவுகள் காணப்படும் இதன் வழியாகவும் தாக்குதல் அல்லது முட்டை இடுதல் நிகழ்வு நடைபெறலாம்.
- பொதுவாக சிகப்பு கூன் வண்டுகள் முட்டையிடவோ அல்லது தாக்குதலை ஏற்படுத்தவோ பயிர்களில் காயங்களை உண்டாக்குவதில்லை.
பூச்சி தாக்குதல் பரவும் விதம்:
பாதிக்கப்பட்ட மரங்கள் அல்லது மரத்தின் பகுதிகளை அப்புறப்படுத்தி அழிக்காமல் இருப்பது இதன் பரவுவதற்கான பிரதான காரணமாகும்.
கூன் வண்டு தாக்குதல் இல்லாத தோப்புகளில் இனக்கவர்ச்சி பொறியை வைப்பதால் மற்ற வயல்களில் இருந்து நமது தோப்பிற்கு வண்டு தாக்குதல் ஏற்படுகிறது.
பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:
முட்டை:
பெண் வண்டுகள் மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகள், வெடிப்புகள்,பிளவுகள், இலைக் காம்பு மற்றும் குருத்து போன்ற இடத்தில் 200-300 நீள் வட்ட வடிவ வெள்ளை நிற மூட்டைகளை இடுகிறது.
இளம் புழுக்கள்:
சுமார் 3-5 நாட்களுக்குப் பிறகு முட்டைகள் பொரித்து இளம் புழுவாக மாறுகிறது. இதனை ஆங்கிலத்தில் கிரப்(Grub) என்று கூறுவார்கள். கால்கள் இல்லாத இளம் புழுக்கள் மரத்தின் மென்மையான திசுக்களை உண்டு சக்கையை வெளியேற்றுகிறது. சுமார் 50 மில்லி மீட்டர் நீளம் வரை வளரும்.பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து சாறு வடிதல் மற்றும் சக்கை வெளியேறுதலை காண இயலும்.வெள்ளை நிற உடம்பு பகுதியையும் காவி நிற தலைப் பகுதியையும் கொண்டிருக்கும்.
கூட்டு புழு:
சுமார் 1-3 மாத வயதுடைய இளம் கூட்டு புழுவாக மாறுகிறது. இந்த கூட்டுப் புழுக்கள் மரத்தின் பாதிக்கப்பட்ட பகுதியில் தென்படும்.
முதிர்ந்த புழுக்கள்:
15 முதல் 25 நாட்கள் வயதுடைய கூட்டுப் புழுவில் இருந்து பண்டு வெளியேறும்.சிகப்பு நிறத்தில் நீண்ட மூக்குடன் காணப்படும். இதன் முதுகு பகுதியில் 6 புள்ளிகள் இருக்கும்.
தாக்குதலின் அறிகுறிகள்:
- மரத்தின் அடித் தண்டு, தண்டுப் பகுதி, இலை காம்பின் அடிப்பகுதி மற்றும் குருத்துப் பகுதியில் சிறிய துவாரங்கள் காணப்படும்.
- துளைகள் காணப்படும் பகுதியில் இருந்து சாறு வடிதலை காண இயலும்.
- இளம் புழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதியை தொடர்ச்சியாக உண்ணுவதால் துளைகள் வழியாக சக்கை வெளியேறுவதை காணலாம்.
- தண்டுப் பகுதியை உண்ணுவதால் பயிருக்கு செல்ல வேண்டிய உணவு மற்றும் தண்ணீர் தடைபடுவதால் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதை காண இயலும்.
- குருத்துப் பகுதியை துளைத்து உண்ணுவதால் கொண்டைப் பகுதி பலம் இழந்து சாய்ந்து விடுகிறது.இலையின் காம்பு பகுதியில் துளையிட்டு உண்பதால் இலைகள் உதிர்வதையும் காணலாம்.
- அடித்தண்டு பகுதியில் நம் கண்ணிற்கு புலப்படாதவாறு புழுக்கள் உண்ணுவதால் மரம் சாய்ந்து விடுகிறது.
- மரத்தின் தண்டுப் பகுதியில் இதன் தாக்குதல் காணப்பட்டால் புழுக்கள் இறையும் சத்தம் கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.
கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:
- தென்னை மரங்களின் அடித் தண்டு, தண்டு பகுதி மற்றும் குருத்து பகுதியில் காயங்கள் ஏற்படாதவாறு பராமரிக்க வேண்டும்.
- மரங்களின் இளம் பருவத்தில் அதாவது குறைந்தது 10 வருடங்கள் வரை கூன் வண்டு தாக்குதலில் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதை தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டும்.
- மரத்தில் ஏதேனும் காயங்கள் தென்பட்டால் உடனடியாக தார் அல்லது பயன்படுத்தப்பட்ட இயந்திர எண்ணெய்யை தடவி விட வேண்டும்.
- மரத்தின் அடித் தண்டு அல்லது தண்டுப் பகுதியில் சாறு வடிதல் தென்பட்டால் உடனடியாக ஏதேனும் பூஞ்சான மருந்தை தடவி விடலாம் அல்லது தெளிக்க வேண்டும்.
- காண்டாமிருக வண்டு தாக்காத வண்ணம் பராமரிக்கப்பட வேண்டும் ஏனெனில் இந்த வண்டு தாக்கிய பகுதிகளில் சிகப்பு கூன் வண்டு முட்டை இட அதிக வாய்ப்புகள் உள்ளது.
- தீவிரமாக பாதிக்கப்பட்ட மரத்தை வேர்ப்பகுதியோடு முழுமையாக அப்புறப்படுத்தி வெட்டி கொளுத்தி விட வேண்டும் ஏனெனில் வண்டுகளின் இளம் புழுக்கள் அதில் இருக்க வாய்ப்புகள் உண்டு.
- மேலும் கூன் வண்டு உணவுக்காக மற்றும் இனப் பெருக்கத்திற்காக பாதிக்கப்பட்ட மரத்தையே தேர்வு செய்யும்.
- தென்னந்தோப்பை களைகள், குப்பைகள் அல்லது காய்ந்த மட்டையில் அதிகம் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். ஏனெனில் இது புழுக்கள் மறைந்து வாழ வழிவகை செய்யவும்.
- எக்காரணத்தைக் கொண்டும் பண்ணை உபகரணங்கள், இயந்திரங்கள் அல்லது கால்நடைகள் மரங்களை காயப்படுத்தாத வண்ணம் பாதுகாக்க வேண்டும்.
- தென்னை மரங்களின் அடித் தண்டு பகுதியில் மண், தொழு உரம் அல்லது மூடாக்கு போன்றவற்றை இடாமல் தெளிவாக இருக்கும் படி வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் வண்டு தாக்குதலை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க இயலாது.
- காண்டாமிருக வண்டு, குருத்து அழுகல்,வேர் வாடல் போன்ற நோய் அல்லது பூச்சிகள் தாக்காதவாறு பராமரிக்க வேண்டும் இவை அனைத்தும் மறைமுகமாக கூன் வண்டு தாக்குதலை ஊக்கப்படுத்தும்.
- வண்டு தாக்குதல் ஏற்படாத வண்ணம் பயிரை பாதுகாக்க மாதம் ஒரு முறை இலையின் குருத்து பகுதியில் இடித்த வேப்பங்கொட்டை அல்லது வேப்பம் புண்ணாக்கு உடன் சம அளவு மணல் கலந்து மரம் ஒன்று இருக்கு அரை கிலோ விதம் இடவேண்டும்.
- அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை இலை இடுக்குகளில் நாப்தலின் உருண்டைகளை இட்டு அதன் மேல் கைப்பிடி அளவு மணல் இடவேண்டும்.
- அல்லது மாதம் ஒருமுறை 1:40 என்ற அளவில் Chlorantraniliprole மருந்தையும் மணலையும் கலந்து மரம் ஒன்று இருக்கு 200 முதல் 300 கிராம் இட வேண்டும்.
- கூன் வண்டு தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்ப நிலையிலேயே ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி Imidacloprid என்ற மருந்தை வேர் அல்லது தண்டு வழியாக செலுத்தலாம் இல்லையெனில் குருத்து பகுதியில் உற்ற வேண்டும்.
- குருத்துப் பகுதியை பாதுகாக்க இவை அனைத்தையும் பின்பற்ற வேண்டும். அதேபோன்று அடித்தண்டு பகுதியை பாதுகாக்க மாதம் ஒருமுறை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி Chlorpyriphos கலந்து தண்டு மற்றும் அடித்தண்டு பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும்.
- அல்லது Imidacloprid/Chlorpyriphos/Spinosad மருந்தை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தண்டுப் பகுதியில் ஊசியை பயன்படுத்தி செலுத்தலாம்.
- ஏக்கருக்கு ஒரு எண் சிவப்பு கூன் வண்டு இனக்கவர்ச்சி பொறி வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
- அதேபோன்று தென்னை ஓலை பொறி தயார் செய்து ஏக்கருக்கு 20 வீதம் வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
இது விவசாயம் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக