google-site-verification: googled5cb964f606e7b2f.html அக்டோபர் 2025 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

திங்கள், 13 அக்டோபர், 2025

தென்னையில் குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

    தற்பொழுது திகழும் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை அதாவது மிதமான வெப்பநிலை, அதிக காற்று ஈரப்பதம்,  அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் மேக மூட்டமான சூழ்நிலை தென்னையில் குருத்தழுகல் நோய் பரவலாக காணப்படுகிறது. 

    பூஞ்சை தொற்றால் ஏற்படும் இந்த குருத்தழுகல் நோய் இளம் வயது கன்றுகள் மற்றும் பராமரிப்பு இல்லாத மரங்களை வெகுவாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தும். நோய் தாக்குதலால் பயிர்கள் இறந்து விடுவதை விட, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.

    நோய் தாக்குதலால் இளம் கன்றுகள் இறப்பதும், காய்ப்பில் உள்ள மரத்தில் ஏற்படும் நோய் தொற்றால் அதிக அளவு காய்கள் உதிர்வதை காண இயலும். பருவமழை காலங்களில் இந்த நோய் தொற்று அதிகமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்:

  • குருத்துப் பகுதியில் அழுகல் ஏற்படுவதால் இளம் இலைகள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறி வெளுத்து காணப்படும்.
  • நாளடைவில் இந்த இலைகள் கருகியது போன்ற காட்சியளிக்கும்.
  • பாதிப்படைந்த குருத்து இலைகளை  இழுத்தால் கையோடு வந்துவிடும்.
  • குருத்துப் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகுவதால் சிதைந்து நிறம் மாறி இளம் சிகப்பு நிறத்தில் மாற ஆரம்பிக்கும். 
  • பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசும்.
  • குருத்துப் பகுதியில் உள்ள திசுக்கள் தொடர்ச்சியாக அழுகுவதால் படிப்படியாக அடுத்தடுத்த இலைகள் மேல்புறத்தில் இருந்து அழுகி இறந்துவிடும். 
  • தீவிர தாக்குதலின் போது குருத்துப் பகுதி சாய்ந்து விடும்.  

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தொடர்ச்சியாக நோயின் தாக்குதல் தென்படுகிறதா என்பதை ஆய்வு செய்து வர வேண்டும்.
  • குறிப்பாக நோய் தாக்குதல் பிரதானமாக காணப்படும் காலமான ஜூலை முதல் நவம்பர் வரை.
  • போதுமான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இலை, பன்னாடை, மட்டை அல்லது மரத்தின் இதரப் பகுதிகள் வயலில் ஆங்காங்கே இட்டு அழுகுவதை தவிர்க்க வேண்டும்.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாரம் ஒரு முறை Bacillus மற்றும் pseudomonas தலா 10 கிராம் கலந்து குருத்துப் பகுதியில் ஊற்ற வேண்டும்.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் பத்து லிட்டர் தண்ணீருக்கு 25 கிராம் காப்பர் ஆக்சி குளோரைடு என்ற மருந்தை கலந்து குருத்துப் பகுதியில் நன்கு தெளிக்கவும்.
  • முழுமையாக பாதிப்படைந்த மரங்களை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். 
  • நோய் தாக்கப்பட்ட குருத்து இலைகளில் வயலில் இடக்கூடாது. இது மேலும் நோய் பரவுவதற்கு வழிவகுக்கும்.
  • நோய் தாக்குதல் காரணமாக குருத்துப் பகுதியில் காண்டாமிருக வண்டு அல்லது சிகப்பு கூன் வண்டு தாக்குதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
  • நோய் தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து இரசாயன மருந்தை வேர் வழியாக செலுத்தி நோயை கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

வாழை பயிருக்கு என்ன உரம் எப்போது இடலாம்...

வாழை சாகுபடியில் ஊட்டச்சத்து மேலாண்மை என்பது மிகவும் இன்றியமையாதது ஏனெனில் வாழை மரங்கள் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொன்டு அதற்கேற்றவாறு மகசூலை கொடுக்கவல்லது. வாழை பயிர் கிடைக்கப்பெறும் சூரிய ஒளி, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை பயன்படுத்தி வளர்சியை துரிதப்படுத்தி அதிக அளவு மகசூலை தரும். மண்ணின் தன்மை மற்றும் வளத்திற்கு ஏற்றவாறு மண் பரிசோதனை அடிப்படையில் சரிவிகித முறையில் ஊட்டச்சத்து இடுவது மகசூலை மேம்படுத்துவதுடன் மண் வளத்தை பாதுகாக்கும்.

வாழை பயிர் அதிக அளவு எடுத்துக்கொள்ளக்கூடிய ஊட்டச்சத்துக்கள் வரிசையில் சாம்பல் சத்து முதலிடத்திலும் அதற்கு அடுத்தப்படியாக தழைச்சத்து, கால்சியம், மெக்னீசியம், போரான், மாங்கனிசு மற்றும் இதர ஊட்டச்சத்துகள் திகழ்கின்றன.

  • நடவு செய்யும்பொழுது குழி ஒன்றிற்கு நன்கு மட்கிய தொழுஉரம் 10 கிலோ மற்றும் 250 கிராம் வேப்பம்புன்னாக்கு ஆகியவற்றை மேல்மண்னுடன் கலந்து இடவேண்டும்.
  • கண்டிப்பாக மட்காத தொழு உரத்தை(குப்பை) பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் மட்காத குப்பை வேர்வளர்ச்சியை பாதிப்பதுடன் பூச்சி நோய் தாக்குதலை ஊக்கப்படுத்தும்.
  • ஊடுபயிர் சாகுபடி செய்ய விரும்புபவர்கள் கடைசி உழவின் போது அடிஉரமாக ஏக்கருக்கு குறைந்தபட்சம் 4 டன் நன்கு மட்கிய தொழுஉரம் இடவேண்டும்.
  • நடவு செய்த இரண்டு மாதங்களுக்கு இரசாயன உரங்கள் இடக்கூடாது. இந்த நேரத்தில் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிழங்கிலிருந்து கிடைக்கும்.
  • போதிய வேர்வளர்ச்சி காணப்படும் 3 ம் மாதத்திலிருந்து இரசாயன உரம் இடலாம்.
  • வருடத்திற்கு ஒரு மரத்திற்கு சராசரியாக 180-210 கிராம் தழைச்சத்து (இலைக்காக சாகுபடி செய்யப்படும் இடத்தில் தேவையின் அடிப்படையில் சன்று கூடுதலாக கொடுக்கலாம்), மணிச்சத்து 40-50 கிராம் மற்றும் பொட்டாசியம் சத்து 600-800 கிராம் இடவேண்டும்.
  • இரண்டாம் நிலை பேரூட்டச்சத்துக்களான கால்சியம், மெக்னிசியம் , சல்பர் ஆகியவற்றை மரம் ஒன்றிற்கு 100-150 கிராம், 30-50 கிராம் மற்றும் 15-20 கிராம் முறையே இட வேண்டும்.
  • நுண்ணுட்டச்சத்துக்களை தேவையின் அடிப்படையில்  கண்டிப்பாக இட வேண்டும்.

உரங்கள் (கிராம் /மரம்)

3 ம் மாதம்

5 ம் மாதம்

7 ம் மாதம்

யுரியா

100

200

150

சூப்பர் பாஸ்பேட்

200

100

-

மூரிஏட் ஆப் பொட்டாஷ்

250

350

350

டி.எ.பி

50

-

-

(ஒரு வருடத்திறகு ஒரு மரத்திற்கு தேவையான உத்தேச அளவு)

  • உரமிடும்பொழுது பரிந்துரைக்கப்பட்ட இரசாயன உரங்களுடன் தேவையான அளவு தொழுஉரம் கலந்து இட்டு தண்டு பகுதியிலிருந்து சுமார் 2 அடி தள்ளி இட்டு நீர்பாய்ச்ச வேண்டும். 
  • 2,4 மற்றும் 6ம்  மாதங்களில் உயிர் உரங்கள் அல்லது கடல்பாசி உரங்கள் அல்லது ஹீயுமிக் அமிலத்தை வேர் வழியாக கொடுப்பதன் மூலம் மண்ணிலிருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் எளிதில் பயிர்களுக்கு ஏற்ற வடிவில் கிடைக்க உதவி புரியும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...

சனி, 11 அக்டோபர், 2025

வெள்ளரி சாகுபடியில் (பாதுகாக்கப்பட்ட சூழல்- Polyhouse) பேன் தாக்குதலும் அதன் மேலாண்மையும்

வெள்ளரி சாகுபடியில் (பாதுகாக்கப்பட்ட சூழல் - Polyhouse) பேன் தாக்குதலும் அதன் மேலாண்மையும்...

முன்னுரை:

   பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி என்பது மிக லாபகரமான விவசாய தொழிலாக திகழ்கிறது. ஏனெனில் இதில் நிலப்பரப்பு மட்டுமில்லாமல் செங்குத்தாக பயிர்களை சாகுபடி செய்கிறோம் மேலும் இதில் அதிக வெப்பநிலை திகழ்வதால் பயிர்கள் வேகமாக வளர்ந்து அதிக மகசூலை கொடுக்கிறது. 

 உயர் தொழில்நுட்பங்களை பின்பற்றுவதால் 30 முதல் 50% கூடுதல் மகசூல் பெற இயலும். இங்கு உயர் தொழில்நுட்பம் என்பது தட்பவெட்ப சூழலை தேவைக்கேற்ப மாற்றுதல், சொட்டுநீர் பாசனம், நீரில் கரையும் உரங்கள், உயர் அடர் நடவு, Fogger, என் நிலப் போர்வை மற்றும் பல்வேறு  தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகும். 

பேன் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை:

  • அதிக வெப்பநிலை 
  • மிதமானது முதல் அதிக காற்று ஈரப்பதம் 
  • அடர் நடவு 
  • போதிய காற்றோட்டமின்மை 
  • உயர் தொழில்நுட்பம் மற்றும் அதிக இடுபொருள் இடுதல் (உரங்கள்)
  • மஞ்சள் நிற பூக்களின் நிறம் (பேன் எளிதில் கவரும்

பேன் தாக்குதலின் அறிகுறிகள்: 
இலைகள்:

  • இலைகளின் அடிப்புரத்தில் இருந்து சாற்றை உறிஞ்சும். 
  • இதனால் இலை மேற்பரப்பில் வெளிர் நிற திட்டுக்கள் காணப்படும். 
  • இதன் காரணமாக பயிர் வளர்ச்சி பாதிப்படையும். 
  • தீவிர தாக்குதல் என்பது இலைகள் உருக்குலைந்து, இலை விளிம்புகள் கருகி காட்சியளிக்கும்.

பூக்கள்: 

  • மஞ்சள் நிற பூக்களை நோக்கி பேன்கள் எளிதில் சென்று தாக்கும். 
  • பூ இதழ்களில் சாற்றை உறிஞ்சும் இதனால் இதழ்களில் வெளிர் நிற திட்டுக்கள் காணப்படும்.
  • மேலும் மகரந்த பகுதிகளை சேதமடைய செய்வதால் காய் பிடிப்பு திறன் குறையும்.

காய்கள்:

  • பேன்கள் காய்களில் சாற்றை முயற்சி செய்வதால் வெளிர் நிற தழும்புகள் காய்களின் மேல் பரப்பில் காணப்படும். 
  • இது மட்டும் இன்றி பல்வேறு வகையான வைரஸ் நோய் தொற்றை இந்த வகை சாறு உறிஞ்சும் பூச்சிகள் பரப்புகிறது.

ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • அடி உரம் இடும் பொழுது வெப்பம் புண்ணாக்கு அல்லது இடித்த வேப்பங்கொட்டை இடவும். 
  • போதுமான பயிர் இடைவெளி அவசியம் 
  • போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்க காலை மற்றும் மாலை நேரத்தில் பசுமை குடிலின் இரு புறத்தில் உள்ள Side wall/Curtain wall பகுதியில் உள்ள பாலிதீன் சீட்டை சுருட்டி வைக்கவும். 
  • அந்தப் பகுதி வழியாக பூச்சிகள் உள் நுழைவதை தடுக்கும் வலை கண்டிப்பாக பொறுத்திருக்க வேண்டும்.
  • அதிக வெப்பநிலையை குறைக்க Foggers பொருத்தலாம். அல்லது பசுமை குடிலின் மேல் பகுதியில் தெளிப்பு நீர் நிறுவி அதை உபயோகிக்கலாம்.
  • களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • பயிரின் ஆரம்ப கால வளர்ச்சியின் பொழுது வாரம் ஒரு முறை வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் அல்லது இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் போன்ற ஏதேனும் பூச்சி விரட்டி திரவத்தை தொடர்ச்சியாக தெளித்து வர வேண்டும். 
  • தேவையின் அடிப்படையில் உயிரியல் பூச்சிக்கொல்லி திரவமான Verticillium lecanii மற்றும் Beauveria bassiana கலந்து தெளிப்பதன் மூலம் பூச்சி தாக்குதல் தவிர்க்கலாம். 
  • 1000 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள பசுமை குடிலுக்கு 20 முதல் 25 எண்கள் மஞ்சள் மற்றும் நீல நிற ஒட்டுப்பொறி பயன்படுத்த வேண்டும்.
  • மிக கவனமாக இரசாயனம் மருந்துகளை தேர்வு செய்து தெளிக்க வேண்டும். உதாரணத்திற்கு Fibronil/Thiamethoxam/Spinosad/imidacloprid/Flonicamid/Cyantraniliprole.

நமது உழவன் நண்பன் WhatsApp குழுவில் இணைந்து பயன்பெற...

வெள்ளி, 10 அக்டோபர், 2025

மக்காச்சோள பயிரில் மெக்னீசியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அதன் மேலாண்மை...

முன்னுரை:

 மக்காச்சோளம் குறைந்த நாட்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொண்டு விளைச்சல் தரக்கூடிய ஒரு பயிராக திகழ்கிறது. தற்சமயம் சாகுபடியில் உள்ள பயிரில் ஒரு சில இடங்களில் மெக்னீசியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்படுகிறது. 

  பயிரில் போதுமான அளவு பச்சையத்தை உற்பத்தி செய்து பயிருக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதில் இரண்டாம் நிலை ஊட்டச்சத்தான மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது.இது மட்டுமின்றி உற்பத்தி செய்யும் உணவை கிரகித்து ஆற்றலை பயிரின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பவும் வேலையை செய்கிறது.

மெக்னீசியம் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • தொடர்ச்சியாக ஒரே பயிரை சாகுபடி செய்வது 
  • போதுமான அளவு மெக்னீசியம் இடாமல் இருத்தல் 
  • அளவுக்கு அதிகமான பொட்டாசியம், கால்சியம் மற்றும் தழைச்சத்து இடுதல். இது மெக்னீசியம் பயிர்களுக்கு கிடைப்பதை தடை செய்கிறது
  • அதிக அமிலத்தன்மை மற்றும் மணல் பாங்கான மண்ணில் மெக்னீசியம் குறைபாடு காணப்படும்.
  • தொடர்ச்சியான மழை, அதிகமான மண் ஈரப்பதம் போன்ற காரணங்கள் சத்துக்கள் எளிதில் களைந்து மண்ணுக்கு அடியில் செல்லலாம் அல்லது பயிர்களால் சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். 

மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்: 

  • ஆரம்பகால அறிகுறியாக பயிரின் அடி இலைகளில் வெளிர் பச்சை நிற கோடுகள் காணப்படும். 
  • நரம்புகள் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும். 
  • பற்றாக்குறை தீவிரமடையும் பொழுது இலை நரம்புகளும் வெளிர் பச்சை நிறமாக மாறும்.
  • இந்த அறிகுறி அடுத்தடுத்த இலைகளுக்கு பரவுவதால் பயிரின் உணவு உற்பத்தி திறன் குறைந்து குன்றிய வளர்ச்சி காணப்படும். 
  • நாள்பட்ட மெக்னீசியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை கண்டிப்பாக மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். 

சரி செய்யும் வழிமுறைகள்: 

  • பயிர் சுழற்சி மிக அவசியம். இல்லை எனில் ஒரே விதமான ஊட்டச்சத்துக்கள் மண்ணிலிருந்து  பயிர்களால் எடுத்துக்கொள்ளப்படுவதால் மண் வளம் குறையும்.
  • சரிவிகித அடிப்படையில் ஊட்டச்சத்துக்கள் அளிக்க வேண்டும். 
  • எனவே மண்ணை பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் போதுமான அளவு தொழு உரம் மற்றும் ரசாயன உரம் இடவேண்டும்.
  • அளவுக்கு அதிகமான தழைச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் இடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 
  • நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். நீர் தேக்கம் அல்லது தொடர்ச்சியான மண் ஈரப்பதம் பயிர் வளர்ச்சியை பாதிக்கும்.
  • மழை காலங்களில் தேவையான உரங்களை பிரித்து பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். சொட்டு நீர் பாசனம் அல்லது இடைவெளி தெளிப்பு சால சிறந்தது. 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் மெக்னீசியம் ஊட்டச்சத்தை மீன் அமிலம், எலும்பு உரம், கடல்பாசி உரம் மற்றும் முட்டை எலுமிச்சை கரைசல் போன்றவற்றை பயன்படுத்தி கொடுக்கலாம்.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் மெக்னீசியம் சல்பேட், பாலி சல்பேட், கீர்த்தி சி எம் எஸ் போன்ற உரங்கள் கிடைக்கப்பெறுகிறது இதனை இடலாம். 
  • உடனடி தீர்வுக்கு நீரில் கரையும் வடிவில் மெக்னீசியம் ஊட்டச்சத்தை பெற்று அதை இலை வழியாக தெளித்து வரலாம்.

நமது உழவன் நண்பன் WhatsApp குழுவில் இணைந்து பயன் பெற...

Recent Posts

Popular Posts