google-site-verification: googled5cb964f606e7b2f.html மக்காச்சோள பயிரில் மெக்னீசியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அதன் மேலாண்மை... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 10 அக்டோபர், 2025

மக்காச்சோள பயிரில் மெக்னீசியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் அதன் மேலாண்மை...

முன்னுரை:

 மக்காச்சோளம் குறைந்த நாட்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொண்டு விளைச்சல் தரக்கூடிய ஒரு பயிராக திகழ்கிறது. தற்சமயம் சாகுபடியில் உள்ள பயிரில் ஒரு சில இடங்களில் மெக்னீசியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்படுகிறது. 

  பயிரில் போதுமான அளவு பச்சையத்தை உற்பத்தி செய்து பயிருக்கு தேவையான உணவை உற்பத்தி செய்வதில் இரண்டாம் நிலை ஊட்டச்சத்தான மெக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது.இது மட்டுமின்றி உற்பத்தி செய்யும் உணவை கிரகித்து ஆற்றலை பயிரின் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பவும் வேலையை செய்கிறது.

மெக்னீசியம் பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • தொடர்ச்சியாக ஒரே பயிரை சாகுபடி செய்வது 
  • போதுமான அளவு மெக்னீசியம் இடாமல் இருத்தல் 
  • அளவுக்கு அதிகமான பொட்டாசியம், கால்சியம் மற்றும் தழைச்சத்து இடுதல். இது மெக்னீசியம் பயிர்களுக்கு கிடைப்பதை தடை செய்கிறது
  • அதிக அமிலத்தன்மை மற்றும் மணல் பாங்கான மண்ணில் மெக்னீசியம் குறைபாடு காணப்படும்.
  • தொடர்ச்சியான மழை, அதிகமான மண் ஈரப்பதம் போன்ற காரணங்கள் சத்துக்கள் எளிதில் களைந்து மண்ணுக்கு அடியில் செல்லலாம் அல்லது பயிர்களால் சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். 

மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்: 

  • ஆரம்பகால அறிகுறியாக பயிரின் அடி இலைகளில் வெளிர் பச்சை நிற கோடுகள் காணப்படும். 
  • நரம்புகள் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும். 
  • பற்றாக்குறை தீவிரமடையும் பொழுது இலை நரம்புகளும் வெளிர் பச்சை நிறமாக மாறும்.
  • இந்த அறிகுறி அடுத்தடுத்த இலைகளுக்கு பரவுவதால் பயிரின் உணவு உற்பத்தி திறன் குறைந்து குன்றிய வளர்ச்சி காணப்படும். 
  • நாள்பட்ட மெக்னீசியம் ஊட்டச்சத்து பற்றாக்குறை கண்டிப்பாக மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். 

சரி செய்யும் வழிமுறைகள்: 

  • பயிர் சுழற்சி மிக அவசியம். இல்லை எனில் ஒரே விதமான ஊட்டச்சத்துக்கள் மண்ணிலிருந்து  பயிர்களால் எடுத்துக்கொள்ளப்படுவதால் மண் வளம் குறையும்.
  • சரிவிகித அடிப்படையில் ஊட்டச்சத்துக்கள் அளிக்க வேண்டும். 
  • எனவே மண்ணை பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் போதுமான அளவு தொழு உரம் மற்றும் ரசாயன உரம் இடவேண்டும்.
  • அளவுக்கு அதிகமான தழைச்சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் இடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 
  • நல்ல வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். நீர் தேக்கம் அல்லது தொடர்ச்சியான மண் ஈரப்பதம் பயிர் வளர்ச்சியை பாதிக்கும்.
  • மழை காலங்களில் தேவையான உரங்களை பிரித்து பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும். சொட்டு நீர் பாசனம் அல்லது இடைவெளி தெளிப்பு சால சிறந்தது. 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் மெக்னீசியம் ஊட்டச்சத்தை மீன் அமிலம், எலும்பு உரம், கடல்பாசி உரம் மற்றும் முட்டை எலுமிச்சை கரைசல் போன்றவற்றை பயன்படுத்தி கொடுக்கலாம்.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் மெக்னீசியம் சல்பேட், பாலி சல்பேட், கீர்த்தி சி எம் எஸ் போன்ற உரங்கள் கிடைக்கப்பெறுகிறது இதனை இடலாம். 
  • உடனடி தீர்வுக்கு நீரில் கரையும் வடிவில் மெக்னீசியம் ஊட்டச்சத்தை பெற்று அதை இலை வழியாக தெளித்து வரலாம்.

நமது உழவன் நண்பன் WhatsApp குழுவில் இணைந்து பயன் பெற...

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts