google-site-verification: googled5cb964f606e7b2f.html டிசம்பர் 2024 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 24 டிசம்பர், 2024

மா பயிரில் இலை உருக்குலைவு (Malformation) நோய் மேலாண்மை

 இலை உருக்குலைவு (Malformation) நோய்:

  • மா பயிர்களின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் காணப்படக்கூடிய ஒரு பிரதான நோயாக இந்த உருக்குலைவு நோய் நிகழ்கிறது.
  • பயிர்கள் நாற்றுகளில் அல்லது நிலத்தில் நட்ட ஆரம்ப காலகட்டத்தில் இந்த நோய் தொற்று ஏற்பட்டால் இதனை இலை உருக்குலைவு நோய் என்பார்கள். இதனால் பயிர் வளர்ச்சி முற்றிலும் தடைப்பட்டு பயிர்கள் இறக்க நேரிடலாம்.
  • பூத்தலின் போது இருந்ததில் ஏற்படும் தருணத்தில் இதழை பூக்கள் உருக்குலைவு நோய் என்பவர்கள் இதனால் மகசூல் சுமார் 50 முதல் 80 சதவீதம் வரை கூட இழப்பீடு ஏற்படலாம்.
  • இந்த நோய் முதன் முதலாக இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்தியாவில் காணப்படும் ஒரு பொதுவான காணப்பட்டாலும் இதனை கட்டுப்படுத்த பெரிய அளவில் முயற்சிகள் எடுப்பதில்லை.

நோய் தொற்றுக்கான காரணங்கள்:

  • இது ஒரு பூஞ்சை தொற்றால் ஏற்படும் நோய் என்று கருதப்பட்டாலும் பல்வேறு இதர காரணிகளும் இந்த உருக்குலைவு நோய் தாக்குதலுக்கு சாதகமாக திகழ்கிறது.
  • மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை குறிப்பாக குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக மண் ஈரப்பதம், நிலையற்ற மழை பொழிவு, ஆரம்ப கால கட்டத்தில் மொட்டுகளை தாக்கும்  பேன், பாதிப்படைந்த பயிர்களில் இருந்து ஒட்டு கட்டுதல், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பயிர்களில் உற்பத்தியாகும் வளர்ச்சி ஊக்குகளில் நிலையற்ற தன்மை போன்ற பல்வேறு காரணங்களும் இந்த நோய் உருவாவதற்கும் பரவுவதற்கும் உதவி புரிகிறது. 

இலை உருக்குலைவின் அறிஅறிகுறிகள்:


1.இளம் கன்றுகளில் தளிர்களின் வளர்ச்சி குன்றி செதில் போன்ற அமைப்புடைய இலைகளை குருத்துப் பகுதியில் மிக நெருங்கிய அமைப்புடன் உருவாக்குகிறது.

2.இதனால் கன்றுகளின் வளர்ச்சி தடைபட்டு நாளடைவில் இறக்க நேரிடலாம்.

3.மிகக் குறைந்த இடைவெளியில் அதிக தளிர்கள் ஒருங்கிணைந்து காணப்படுவதால் இதனை சில நேரங்களில் தலைக்கொத்து நோய் எனவும் கூறுவார்கள்.

4.சில நேரங்களில் நுனிப்பகுதி தடித்து காணப்படலாம். 

5.இளம் கன்றுகளில்  ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உருக்குலை அறிகுறி மீண்டும் காணப்படலாம். 

பூ உருக்குலைவின் அறிகுறிகள்:

1.பூக்கள் மிக நெருக்கமாகவும் சற்று பெரிதாகவும் பூங்கொத்துகளில்  காணப்படும்.

2.நாளடைவில் பூங்கொத்து கருப்பு நிறமாக மாறி உதிரும். 

3.இதனால் பூ உதிர்வு அல்லது பிஞ்சுகள் அதிக அளவில் உதிரும். இதன் காரணமாக சுமார் 50 முதல் 80 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு காணப்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஆரம்ப காலத்தில் அதாவது நாற்றுகள் அல்லது நிலத்தில் நடவு செய்த சில மாதங்களில் அறிகுறிகள் தென்பட்டால் பாதித்த செடிகளை முழுமையாக அகற்ற வேண்டும். 
  • இந்தச் செடிகளை கவாத்து செய்து மீள முயற்சிப்பது தவறான அணுகுமுறை. வளர்ந்த மரத்தில் இலை உருக்குலைவு நோய் தென்பட்டால் பாதித்த பகுதியை மட்டும் கவாத்து செய்து பராமரிக்கலாம். 
  • நோயால் பாதிக்கப்பட்ட மரங்களின் வாஸ்குலார் திசுக்களை இந்த பூஞ்சைகள் சென்றடைவதால் ஊடுருவிப் பாயக்கூடிய மருந்துகளை தெளிக்க வேண்டும். 
  • பாதிக்கப்பட்ட இலை அல்லது பூங் கொத்துகளை அகற்றிவிட்டு இயற்கை அல்லது இரசாயன மருந்துகளை தெளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மரத்திலிருந்து ஒட்டு கட்டுதலுக்கு வேர் அல்லது தாய் செடிகளை தேர்வு செய்யக்கூடாது.
  • வெளியில் இருந்து வேர் செடிகளை வாங்கும் பொழுது நேரடியாக பண்ணையை ஆய்வு செய்து தரமான கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் பூக்கள் நன்கு பூக்க ஏதுவாக NAA 20ppm தெளிக்கலாம். முன்னெச்சரிக்கைக்காக இயற்கை அல்லது இரசாயன தெளிப்புகளும் மேற்கொள்ளலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

திங்கள், 23 டிசம்பர், 2024

நத்தைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

முன்னுரை:

  • மழைக்காலங்களில் நத்தைகள் நடமாட்டம் அதிகம் தென்படுவது வழக்கமான ஒன்றுதான். 
  • சாகுபடி செய்யும் வயல்களில் நத்தைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன தொடர்ச்சியான மண் ஈரப்பதம், பயிர்களின் இலைப் பகுதியில் காணப்படும் ஈரப்பதம், வயலில் அதிகம் குப்பை காணப்படுதல், வயலில் நீர் தேங்கி இருத்தல், மக்காத இலை மற்றும் சாணம் மண்ணில் காணப்படுதல் என பல காரணங்களை கூறலாம்.
  • மக்காத நிலையில் காணப்படும் பொருட்களை உண்ணுவதற்காக நத்தைகள் அதிகம் காணப்பட்டு மிக வேகமாக பெருக்கம் அடைந்து நாளடைவில் இலை மற்றும் பூக்களையும் பாதித்து சேதப்படுத்துகிறது.
  • நத்தைகள் மிக நீண்ட நாட்கள் வாழும் திறன் உடையதால் இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம் இல்லை பயிர்களில் அதிக சேதத்தை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

  • நத்தைகள் பொதுவாக மாலை நேரத்தில் அதிகம் செயல்படுவதால் மாலை வேளையில் கையால் சேகரித்து அழிப்பது சிறந்த முறையாக கருதப்படுகிறது. 
  • நன்கு புளித்த மோர் அல்லது தயிரை சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு அதை நிலத்தில் ஆங்காங்கே தரை மட்டத்திற்கு மாலை நேரத்தில் புதைத்து வைக்க வேண்டும்.
  • மறுநாள் காலையில் இதில் இருக்கும் நத்தைகளை கையால் சேகரித்து அழிக்க வேண்டும். 
  • அதேபோன்று ஆல்கஹால் பயன்படுத்தியும் கவர்ச்சி பொறி தயார் செய்து நத்தைகளை கவர்ந்து அழிக்கலாம். 
  • வயலில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். 
  • வயலில் இருக்கும் குப்பைகளை  அப்புறப்படுத்தி சுத்தமாக பராமரித்தால் இதன் நடமாட்டம் படிப்படியாக குறையும். 
  • பறவைகள், எலிகள் கோழி போன்றவைகள் நத்தைகளை சேதப்படுத்தி இறக்கச் செய்வதால் இந்த வழிமுறையும் பின்பற்ற வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும். 
  • போதுமான காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை செடிகளுக்கு கிடைக்க பெற வழிவகை செய்யலாம். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் புகையிலை கரைசல் தயார் செய்து தெளிக்கலாம் அல்லது 3G கரைசலும் தெளிக்கலாம் இவை நத்தைகளை விரட்ட உதவி புரியும். 
  • காப்பர் சல்பேட் போதுமான அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் மணல் கலந்து வயலை சுற்றி இடுவதால் நத்தைகள் உடலில் காப்பர் வினைபுரிந்து அதனை விரட்ட உதவி புரியும். 
  • வயதில் கல் உப்பு அங்கங்கே வைத்தல் அல்லது பயிர்களை சுத்தி வைப்பதன் மூலம் நத்தைகளை விரட்ட இயலும். 
  • வயலில் பயிர் இல்லாத இடத்தில் அதிக முள் காணப்படும் பயிரின் கிளைகளை உடைத்து ஒரு சில இடங்களில் வைப்பதன் மூலம் நத்தைகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுவதை தடுக்கவும் ஒரு சில நத்தைகள் இறக்கவும் இது உதவி புரியும்.
  • Metaldehyde எனப்படும் மருந்தை பயன்படுத்தி பொறிகள் தயார் செய்து வைப்பதன் மூலம் இதனை உண்டு நத்தைகள் இறந்துவிடும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
  • அழுகிய பப்பாளி பழத்தை சிறிய கிண்ணத்தில் வைத்து  நத்தைகளை கவர்ந்து அழிக்கலாம். 
  • இதுபோன்று எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது. 
  • இலை வழியாக தெளிக்க 10 லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி டைக்ளோராவாஸ் எனும் மருந்தை தெளிக்கலாம்.
  • Metaldehyde எனப்படும் மருந்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட Snaikill குருணையை வாங்கி கைப்பிடி அளவு வயலில் ஒரு சில இடங்களில் வைப்பதால் இதனை உண்டு மிக விரைவாக நத்தைகள் இறந்துவிடும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

தை பட்டம் மக்காச்சோளம் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை

முன்னுரை:

தமிழ்நாட்டின் அநேக பகுதிகளில் தண்ணீர் வசதி இருக்கும் ஒரு சில  விவசாயிகள் வருகிற தை பட்டத்தில்(ஜனவரி - பிப்ரவரி) மக்காச்சோளம் சாகுபடி செய்ய விரும்புகிறார்கள். அவ்வாறு சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகள் விதைப்பு மேற்கொள்வதற்கு முன் கீழ்கண்ட விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

ரகம் தேர்வு செய்தல்: 

  • தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பெரும்பான்மையான மக்காச்சோள வீரிய ஒட்டு ரகங்கள் ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்திற்கு (ஜூன் ஜூலை மற்றும் செப்டம்பர் அக்டோபர்) உட்பட்ட காலங்களில் சாகுபடி செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது. அதாவது விதை சான்றிதழில் துறையால் எந்த பருவத்திற்கு இந்த ரகம் சாகுபடிக்கு உகந்தது என கூறியிருப்பார்கள்.  எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு ரகத்தை தேர்வு செய்தல் மிகவும் முக்கியம்.
  • சரியான பட்டம் பரிந்துரை செய்யப்படாமல் இருந்தால் அந்த ரகத்தை வாங்கி நாம் விதைப்பு மேற்கொண்டு ஏதேனும் பின் விளைவுகள் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனம் எந்த ஒரு பதிலும் தர மாட்டார்கள். 
  • நாம் தேர்வு செய்துள்ள ரகத்தின் விதையை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது கடையில் மட்டும் தான் கண்டிப்பாக வாங்க வேண்டும். வாங்கும் போது ரகத்தின் பெயர், காலாவதி நாள், முளைப்பு திறன் எவ்வாறு உள்ளது, எந்த பருவத்திற்கு ஏற்றது என பல்வேறு விஷயங்களை நினைவில் வைத்து கொண்டு வாங்க வேண்டும்.

முளைப்பு திறன் கண்டறிதல்:

வாங்கிய விதையை சாகுபடிக்கு 10 நாட்களுக்கு முன்னதாக சிறிய பிளாஸ்டிக் தட்டில் மண்ணை எடுத்துக்கொண்டு சுமார் பத்து விதைகளை முளைப்புக்கு ஆட்படுத்த வேண்டும். முளைப்பு திறன் போதுமான அளவு இருந்தால் மட்டுமே வயலில் விதைக்க வேண்டும்.

விதைப்பு மேற்கொள்ளுதல்:

அதிக வெப்பநிலை நிலவுவதால் விதைகளை விதைத்து விட்டு பின்னர் நீர் விடுவதை தவிர்க்கவும். இன்று நீர் பாய்ச்சி விட்டு நாளை விதைப்பு மேற்கொள்வதால் அதிக மண் சூட்டினால் முளைப்பு திறனில் பின்னடைவு ஏற்படாமல் நன்றாக இருக்கும். மேலும் வயலில் அநேக விதைகள் முளைப்பு வரும் வரை போதுமான அளவு ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பயிர் இடைவெளி:

வழக்கத்திற்கு மாறாக சற்று அதிக இடைவெளி விடுவதால் போதுமான காற்றோட்ட வசதி இருக்கும். இதனால் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறையும்.

உரம் இடுதல்:

அதிக அளவில் இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் பயிர்கள் அதிக வெப்பநிலை மற்றும் பூச்சி தாக்குதலை சமாளித்து வளரும் தன்மை பெறும். உதாரணத்திற்கு மண்புழு உரம், கடல்பாசி உரம், உயிர் உரங்கள், தொழு உரம், ஊட்டமேற்றிய தொழு உரம், இயற்கை தயாரிப்புகள் (பஞ்சகாவியம், மீன் அமிலம் மற்றும் பல).

நீர் மேலாண்மை:

  • கண்டிப்பாக போதுமான அளவு நீர் விட வேண்டும் ஏனெனில் நாம் சாகுபடி செய்யும் அநேக ரகங்கள் எல்லாம் வீரிய ஒட்டு ரகம். எனவே அவற்றுக்கு அதிக அளவு நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவைப்படும். போதுமான அளவு நீர் கிடைக்கப் பெறவில்லை எனில் ஏற்படும் அழுத்தத்தால் செடிகளில் பக்க கிளைகள் சில நேரங்களில் உருவாகும். இது மட்டுமின்றி ஒரே செடியில் மூன்று முதல் நான்கு கதிர்கள் வெவ்வேறு கணுக்களில் பகுதிகளில் உருவாகும். சில நேரங்களில் மட்டுமே இவை அனைத்தும் மணிகள் பிடிக்கும். ஏனெனில் பெரிய அளவில் மகசூல் இழப்பீடு ஏற்படும்.
  • விதைத்த 50 முதல் 75 நாட்கள் தண்ணீர் தேவைப்படும் மிக முக்கிய தருணம் அந்த நேரத்தில் எந்தவித தொய்வு இன்றி போதுமான அளவு நீர் கொடுக்க வேண்டும்.
  • செடிகள் பூக்கும் தருணத்தில் குறைந்தால் அளவிலாவது மழைப்பொழிவு இருக்க வேண்டும் இல்லையெனில் மணி பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டு மகசூல் குறையும் வாய்ப்புகள் உள்ளது. ரகத்தை பொறுத்து 55 முதல் 70 நாட்கள் வரை பூக்கும் தருணம் திகழும்.
  • பூக்கள் வெளிவர தொடங்கியது முதல் 10 நாட்கள் மகரந்த சேர்க்கை நடைபெறும் அப்போது கண்டிப்பாக மழை தேவைப்படும்.

நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:

  • ஜனவரி மாதம் இறுதி முதலே அதிக வெப்பநிலை திகழ வாய்ப்புள்ளதால் சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் படை புழு தாக்குதல் அதிகம் தென்படும். அதை அவ்வப்போது கட்டுப்படுத்த வேண்டும் தவறினால் செடிகளின் குருத்து பகுதியை முழுவதும் சேதப்படுத்தி விடும்.
  • அறுவடை சமயத்தில் பருவமழை இல்லாதவாறு விதைப்பு செய்ய வேண்டும். இது போன்ற பல சவால்கள் தைபட்டம் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் போது ஏற்படும் இவற்றைக் கருத்தில் கொண்ட சாகுபடி மேற்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.

https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX



வெள்ளி, 13 டிசம்பர், 2024

தென்னை பயிரில் நீர் மேலாண்மையில் கவனிக்கப்பட வேண்டியவை

 

நீர் மேலாண்மை

        தென்னை சாகுபடியில் நீர் மேலாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்து தரவும், மரங்கள் திடகாத்திரமாக இருக்கவும், வெப்பத்தை சமநிலை செய்திடவும் மற்றும் ஒளிச்சேர்க்கை நடைபெறுவதற்கும் தேவையான நீரை கொடுத்து வருவதன் மூலம் ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி மற்றும் அதிக விளைச்சலை காண இயலும்.  தமிழ்நாட்டில் பொதுவாக வெள்ள நீர் பாசனம், வட்டப்பாத்தி மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் விடப்படுகிறது.

வெள்ளநீர் பாசனமுறை

  • இம்முறை நீர் பாசனத்தால் அதிக தண்ணீர் வீணடிக்கப்படுகிறது.
  • தொடர்ச்சியாக மண் ஈரப்பதம் காணப்படுவதால், வேர்களுக்கு போதுமான காற்றோட்டம் கிடைப்பதில்லை.
  • மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மண்ணுக்கு அடியில் எடுத்து செல்லப்படுவதால் பயிர்களுக்கு கிடைக்காமல் சத்துக்குறைபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
  • அதிக தண்ணீர் விடுவதால் ஊட்டச்சத்து வேர்கள் அழுக நேரிடலாம்.
  • தொடர்ச்சியான மண் ஈரப்பதம் காரணமாக  அடித்தண்டு அழுகல் அல்லது தஞ்சாவூர் வாடல் நோய் தொற்று ஏற்படலாம்.
  • அதிக தண்ணீர் கொடுப்பதன் காரணமாக இளநீரின் சுவை சற்று குறைந்தும்  கொப்பரைத் தேங்காயின் எண்ணெய் அளவு குறைந்தும் காணப்படலாம்.

வட்டப்பாத்தி முறை

          மரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து சுமார் 1.8 முதல் 2 மீ ஆரத்தில் வட்டப்பாத்தி அமைத்து அதில் நீர் விடப்படுகிறது.  இம்முறையில் சுமார் 400 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. இது சுமார் 7 நாட்கள் வரை போதுமானதாகும்.  தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மணற்பாங்கான மண்ணில் நீர் குறைவாகவும், குறைவான இடைவெளியிலும், களிமண் பூமியில் அதிக இடைவெளியிலும் நீர் பாய்ச்சலாம்.  வட்டப்பாத்தி முறையானது வெள்ளநீர் பாசனமுறையை விட சிறந்தது என்றாலும், உரங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீரினால் அடித்து செல்லப்படலாம்.  மேலும், மண் மற்றும் நீர் மூலமாக பரவும் தீமை செய்யும் பூஞ்சைகள் இம்முறையில் எளிதில் பரவும் வாய்ப்புள்ளது.

சொட்டு நீர் பாசனமுறை

        சொட்டு நீர் பாசனம் அமைத்து நீர் விடுவதால் அதிக அளவு தண்ணீரை சேமிப்பதுடன் வறட்சி காலத்திலும் நல்ல பயன்பெறலாம்.  ஒரு மணி நேரத்திற்கு 4 லிட்டர் வரை தண்ணீர் வெளியேற்றக்கூடிய அமைப்புடைய குழாய்களை பயன்படுத்தி தட்பவெப்ப சூழ்நிலை, மண்ணின் தன்மை மற்றும் பயிரின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மரம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 40 முதல் 60 லிட்டர் வரை தண்ணீர் விட வேண்டும்.  கோடைப்பருவத்தில் இன்னும் சற்று அதிகமான நீர் தேவைப்படும்.  சொட்டு நீர்ப்பாசனம் வட்டப்பாத்தியின் 35 முதல் 40 சதவிகித பரப்பளவை மட்டுமே நனைப்பதால் வேர்களுக்கு போதுமான அளவு காற்றோட்டம் கிடைக்கிறது.  

நீரியில் கரையும் உரங்களை சொட்டு நீர் பாசனம் வழியாக பயன்படுத்தும்போது, பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் 40 சதவிகிதம் வரை குறைத்து பயன்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.   https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


புதன், 11 டிசம்பர், 2024

தென்னையில் ஊடு பயிர் மற்றும் கலப்பு பயிரிடுதல்

தென்னையில் ஊடு பயிர் மற்றும் கலப்பு பயிரிடுதல்

  • தென்னை பல்லாண்டு பயிர் என்பதாலும் அதிக இடைவெளியுடன் நடவு செய்யப்படுவதாலும், எவ்வித மகசூல் குறைபாடின்றி ஊடுபயிர் அல்லது கலப்பு பயிரிட்டு கூடுதல் வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. தென்னந்தோப்புகள் சுமார் 25 முதல் 28% நிலப்பகுதியை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகிறது என பல்வேறு ஆய்வு குறிப்புகள் குறிப்பிடுகின்றன. மேலும், தென்னை மரங்களில் இலை அமைப்பு 50% சூரிய ஒளியை ஊடுருவ செய்து நிலப்பகுதிக்கு அனுமதிப்பதால் மிதமான சூரிய வெப்பத்தை விரும்பி வளரக்கூடிய பயிர்களை தேர்வு செய்து ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.
  • தென்னை மரங்களின் வயது, வளர்ச்சி மற்றும் மரங்களுக்கிடையே கிடைக்கப்பெறும் சூரிய ஒளி அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தென்னையின் வாழ்க்கை பருவத்தை மூன்று காலகட்டமாக பிரிக்கலாம். தென்னை நடவு செய்த பின் 7ஆண்டுகள் வரை சூரிய ஒளி அதிக அளவு தரைப்பகுதிக்கு கிடைக்கப்பெறுவதால் இந்தக் காலகட்டத்தில் குறைந்த வாழ்நாட்கள் உடைய பயிரை ஊடுபயிராக தொடர்ச்சியாக சாகுபடி செய்து வரலாம். 7 முதல் 20 ஆண்டுகள் வரை தென்னை மரத்தின் அமைப்பு சூரிய ஒளியை தரைப்பகுதிக்கு பெரிய அளவில் அனுமதிப்பதில்லை. எனவே, இந்தக் காலகட்டத்தில் நிழற்பாங்கான சூழ்நிலையில் வளரக்கூடிய பயிறு வகைப்பயிர்கள், பசுந்தாள் பயிர்கள் மற்றும் தீவனப்பயிர்களை சாகுபடி செய்யலாம். 20 வயதிற்கு மேற்பட்ட தென்னந்தோப்புகளில் சுமார் 50 சதவிகிதம் வரை சூரிய ஒளி தரைப்பகுதியில் கிடைக்கப்பெறுவதால் ஓராண்டு, ஈராண்டு மற்றும் பல்லாண்டு பயிர்களை ஊடுபயிர் அல்லது கலப்பு பயிர்களை சாகுபடி செய்யலாம்.

  • அந்தந்த பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை, மழை அளவு, வெப்பநிலை, மண் வளம் மற்றும் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு நடவு மேற்கொண்டு 7 முதல் 8 வருடம் வரை கீழ்கண்ட பயிர்களை ஊடுபயிர் முறையில் சாகுபடி செய்யலாம்.
  • பழப்பயிர்கள் - வாழை, பப்பாளி, அன்னாசிப்பழம் மற்றும் இதர.
  • காய்கறி பயிர்கள் – தக்காளி, கத்தரி, மிளகாய், மரவள்ளி, பரங்கிக்காய், புடலைக்காய், பீர்க்கன், சுரைக்காய், பாகற்காய், சாம்பல் பூசணி, தர்பூசணி, கொத்தவரை, தட்டைப்பயிறு, அவரை, செடி முருங்கை,  கீரை வகைகள், சின்ன வெங்காயம் மற்றும் பெரும்பான்மையான கிழங்கு வகை காய்கறிகள்.
  • மலர் பயிர்கள் – சம்பங்கி, செண்டுமல்லி, மல்லிகை, சாமந்தி
  • நறுமணப்பயிர்கள் – மஞ்சள், இஞ்சி, கொத்தமல்லி
  • சிறுதானியங்கள் – மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, பணிவரகு சாமை, தினை, வரகு, குதரைவாலி
  • பயிறு வகைகள் – உளுந்து, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, அவரை, மொச்சை, துவரை, சோயா
  • எண்ணெய் வித்து பயிர்கள் – நிலக்கடலை, எள், சூரியகாந்தி
  • தீவன பயிர்கள்
  • கலப்பு பயிரிடுதலுக்கு உகந்த பயிர்கள் – கொக்கோ, மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கம், காப்பி, வெற்றிலை, பழவகை மரங்கள், குரு மிளகு, வனிலா,  மற்றும் இதர

ஊடுபயிர் சாகுபடி செய்யும் போது கவனிக்கப்பட வேண்டியவை

  • மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து இரண்டு மீட்டர் அகலத்தில் பெரும்பான்மையான வேர்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் ஊடுபயிர் இடுவதை தவிர்க்க வேண்டும். 
  • அந்தந்த பயிர்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மற்றும் நீரை கொடுத்து வர வேண்டும் இல்லை எனில் மண் வளம் குன்றும். 

  • கிடைக்கப்பெறும் சூரிய ஒளியை அடிப்படையாக வைத்து ஊடு பயிரை தேர்வு செய்வது மிக அவசியம். 
  • எவ்வித காரணத்தினாலும் மரத்தின் வேர் பகுதி சேதம் அடைய கூடாது. 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


செவ்வாய், 10 டிசம்பர், 2024

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்கள்...

பயிர் சாகுபடியில் நோய், பூச்சி மற்றும் களை  மேலாண்மையில் ஏற்படும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்த வரிசையில் சமீப காலமாக காட்டு விலங்குகளின் சேதம் அதிகரித்துக் கொண்டே உள்ளது குறிப்பாக காட்டுப்பன்றிகள். வன விலங்குகளில் வனத்தை விட்டு வெளியில் பிரதானமாக வாழக்கூடிய மான்கள், குரங்கு மற்றும் பன்றி போன்றவற்றில் அதிக பயிர் சேதத்தை விளைவிப்பது இந்த காட்டு பன்றிகள் தான். காட்டுப் பன்றிகளை பற்றிய அடிப்படை தகவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்களை பற்றி இதில் விரிவாக பார்ப்போம். 

  • பொதுவாக எந்த ஒரு வன விலங்கினத்தையும் வேட்டையாட சட்டம் அனுமதிப்பதில்லை ஏனெனில் உயிர்களின் சமநிலையில் மாறுதல்கள் ஏற்பட்டு அதனால் மனிதர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதே இதன் அடிப்படை. அதாவது உணவுச் சங்கிலியில் மாறுதல். 
  • அவ்வாறே இருந்தாலும் இந்த காட்டுப்பன்றிகளை உணவாக உண்ணக்கூடிய இதர உயிரினங்கள் காடுகளில் மட்டும் வசிப்பதால் பன்றிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 
  • மேலும் இந்த காட்டு பன்றிகள் பிறந்த ஏழு முதல் எட்டு மாதங்களில் இனப்பெருக்க பருவத்தை அடைந்து அதிலிருந்து நான்கே மாதங்களில் குட்டிகளை ஈனுகிறது. 
  • ஒரு முறை குட்டி ஈனும் பொழுது சுமார் 6 முதல் 10 குட்டிகள் வரை கூட ஈனும் இதனால் தான் இதன்  எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கிறது.
  • காட்டுப் பன்றிகளை பொறி வைத்து பிடித்து கூண்டுகளில் அடைத்து அதனை வனப்பகுதியில் விடலாம். ஆனால் இதனை விவசாயிகள் செய்ய இயலாது செய்யவும் கூடாது அரசின் உதவி அல்லது அரசு அங்கீகரித்த நபர்கள் வாயிலாகவே இதனை மேற்கொள்ள இயலும் இந்த முறையை பின்பற்றினால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். 
  • பயிர்களுக்கு காவலாளி வைத்து பயிர்களை காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் ஆனால் அந்தப் பணியை செய்ய யாரும் முன் வருவதில்லை அவ்வாறு செய்தாலும் அது உற்பத்தி செலவை அதிகப்படுத்தும்.
  • காட்டுப்பன்றிகள் பயிர்களை உண்டு சேதத்தை ஏற்படுத்துவதை விட மண்ணை கிளறி விட்டு அதனால் ஏற்படும் சேதம் அதிகம்.
  • இது மட்டும் இன்றி மண்ணில் ஆழமாக குழி பறிப்பதால் வளமற்ற மண் மேல்பகுதிக்கும் வளமான மண் ஆழமாகவும் சென்று விடுகிறது இது மண்ணின் வளம் மற்றும் தன்மையை படிப்படியாக குறைத்துவிடும்.
  • காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து மீண்டும் கூட்டமாக நிலத்திலிருந்து வெளியேறுவதால் கட்டுப்படுத்துவதிலும் சிரமம் அதேபோன்று பாதிப்பும் அதிகம். 
  • காட்டு பன்றிகளுக்கு கேட்கும் திறன் சற்று குறைவு என்பதால் வெடி வைத்தல், ஒலிபெருக்கி மூலம் அச்சமூட்ட முயற்சித்தாலும் அது பெரிய அளவில் பயனளிப்பதில்லை. 
  • அதேபோன்று காட்டு பன்றிகளின் பார்க்கும் திறன் சற்று குறைவாகத்தான் இருக்கும். இதனால் நாம் ஏற்படுத்தும் தடுப்பு வேலைகள், பொம்மை கட்டுதல், கலர் துணிகள் வயலை சுத்தி கட்டுதல் போன்ற எந்த ஒரு பாரம்பரிய முறையில் பயனளிக்க வாய்ப்புகள் குறைவு. 
  • மேலை நாடுகளில் காட்டுப்பன்றிகளை விரட்ட நாய்களுக்கு பயிற்சி அளித்து அதன் மூலம் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு செய்யும் பொழுது அதனால் பன்றிகளுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அதற்காகவும் நம் மீது சட்டங்கள் பாயலாம்.
  • அதேபோன்று வேலிகள் அமைத்து அதனால் வன விலங்குகளுக்கு காயங்கள் அல்லது  இறக்க நேரிட்டாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப் படலாம். 
  • சப்பாத்திக்கள்ளி போன்ற பயிர்களை வயல் வரப்புகளில் வளர்த்து இயற்கை முறையில் தடுப்புகளை ஏற்படுத்தலாம் ஆனால் அதை பின்பற்ற விவசாயிகள் முன்வருவது குறைவு. 
  • இரவு நேரங்களில் தீப்பந்தம் வைத்து அல்லது ஏந்தி மிக எளிதாக காட்டுப்பன்றிகளை விரட்டலாம். ஆனால் இதனால் இதர பயிர்கள் அல்லது அறுவடை நிலையில் உள்ள பயிர்களுக்கு சேதம் வர வாய்ப்புள்ளது.
  • இயற்கை முறையில் கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன ஆனால் அவை அனைத்துமே ஒரு சில நாட்கள் மட்டுமே காட்டுப்பன்றிகள் வருவதை தடுப்பதால் மீண்டும் மீண்டும் பின்பற்றுவதில் விவசாயிகளுக்கு தொய்வு ஏற்படுகிறது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


பாக்கு சாகுபடியில் வேர்/அடித்தண்டு அழுகல் நோய் மேலாண்மை

  • பாக்கு சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் அதிக அளவு சேதத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் முதலாவதாக திகழ்வது பழ அழுகல் நோய் அதனை தொடர்ந்து இந்த அடித்தண்டு அல்லது வேர் அழுகல் நோய் திகழ்கிறது. 
  • இந்த நோய் முதன்முதலாக பாக்கு அதிகம் சாகுபடி செய்யப்படும் கர்நாடகா மாநிலத்தின் மைசூர் பகுதியில் தான் கண்டறியப்பட்டது. பின்னர் பிற மாநிலங்களிலும் இந்த நோய் தாக்குதல் காணப்பட்டது. இதன் தாக்குதலால் சராசரியாக ஆண்டிற்கு 8 சதவீதம் பாக்கு மரங்கள் இறந்து விடுவதாகவும் தாக்குதலின் தீவிரத்தைப் பொறுத்து 25-30 சதவீதம் மரங்களைக் கூட இழக்க நேரிடும்.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 


                   

  • நோய் தாக்குதலை ஏற்படுத்தும் பூஞ்சைகள் வேர்ப்பகுதியை தாக்கி அதனை சிதைத்து பயிர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து மற்றும் தண்ணீரை தடை செய்வதால் அறிகுறிகள் காணப்படுகிறது. 
  • எனவே நோய் தாக்குதலின் அறிகுறிகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்  ஒன்று தரைமட்டத்திற்கு மேல் மற்றும் தரைமட்டத்திற்கு கீழ் உள்ள அறிகுறிகள் என்ற முறையில்.
  • வேர் அமைப்பு பாதிக்கப்பட்டு நிறம் மாற்றத்துடன் காணப்படும், இதனால் வேர்கள் வளர்ச்சி இன்றி காய்ந்து அழுக நேரிடலாம் சில நேரங்களில் வேர்களில் துர்நாற்றம் காணப்படும்.
  • மரத்தின் அடி இலை பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறி நாளடைவில் முறிந்து தொங்கும்.
  • நாளடைவில் இந்த அறிகுறி அடுத்தடுத்த இலைகளில் காணப்படலாம். 
  • மரத்தில் உள்ள பூக்கள் மற்றும் காய்கள் நோய் தாக்குதலின் ஆரம்ப கட்டத்திலேயே உதிர ஆரம்பித்து விடும் இதை கட்டுப்படுத்துவது சற்று கடினம். 
  • மரத்தின் தண்டுப் பகுதியில் பரவலாக வெளிர் பழுப்பு நிற மாற்றத்தை காண இயலும் இதிலிருந்து வெளியிடப்படும் திரவம் நாளடைவில் பிசின் போன்று காட்சியளிக்கும். 
  • தாக்குதல் தீவிரமடையும் பொழுது தொண்டை பகுதியில் ஒரு சில இலைகள் மட்டுமே காணப்படும் பலவீனமாக இருக்கக்கூடிய மரங்கள் முறிந்து கீழே விழுகலாம். 
  • தரைமட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் உயரம் வரை பூஞ்சைகளின் வளர்ச்சி காளான் போன்று காணப்படும்.
  • தண்டுப் பகுதியை பிளந்து பார்க்கும் பொழுது அதிலும் நிறமாற்றம் காணும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • தென்னையில் பாக்கு ஊடு பயிராக சாகுபடி செய்யும் போது இந்த நோய் தாக்குதல் காணப்படுகிறதா என்பதை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வர வேண்டும். 
  • அடர் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • வளமான மண் அமைப்புடைய நல்ல வடிகால் வசதி உடைய நிலங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
  • இந்த பூஞ்சைகள் மண்ணில் நீண்ட நாட்கள் நிலைத்திருந்து தாக்குதலை ஏற்படுத்தும் மேலும் தாக்குதலின் அறிகுறிகள் பின் நாளில் மட்டுமே தெரிவதால் பயிர் சேதம் அடைவதை தவிர்ப்பது சற்று கடினம். 
  • பாதிப்படைந்த மரத்தை தனிமைப்படுத்த வேண்டும் அதாவது மரத்தைச் சுற்றி 30 சென்டிமீட்டர் அகலத்தில் ஆழமான குழி எடுத்து வைப்பதன் மூலம் பூஞ்சைகள் மற்ற மரங்களுக்கு பரவுவதை தவிர்க்கலாம்.
  • தீவிரமாக பாதித்த மரங்களை முழுமையாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • பயிர் கழிவுகள் எதுவும் இல்லாத அளவிற்கு நிலத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். 
  • தொடர்ச்சியாக உழவு செய்தல், ஊடு பயிர் செய்தல் மண்ணை கிளறுதல் போன்ற கிளறுதல் பூஞ்சைகள் எளிதில் பரவலாம் எனவே இதை தவிர்க்கவும்.
  • ஊட்டச்சத்து மேலாண்மை மிக முக்கியம் பரிந்துரை செய்யப்படும் உரங்களை இட்டு பராமரிக்க வேண்டும். 
  • பருவ மழைக்கு முன்னும் பின்னும் Trichoderma harzianum மற்றும் Pesudomonas florescence வேர்ப்பகுதிகளுக்கு கொடுப்பதால் பூஞ்சைகளின் வளர்ச்சியை தடை செய்ய உதவி புரியும்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை வேர்ப்பகுதியில் தகுந்த நேரத்தில் கொடுக்கலாம்.
    • Carbendazim + Mancozeb
    • Copper Oxychloride
    • Tridemorph
    • Hexaconazole
    • Root feeding- Propiconazole/ Hexaconazole

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள  WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


வெள்ளி, 6 டிசம்பர், 2024

நெல் பயிரில் குலை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

நெல் பயிரில் குலை நோய் மேலாண்மை:

  • நெல் பயிரில் பல்வேறு நோய்கள் காணப்பட்டாலும் குலை நோய் என்பது சற்று சவாலானதாகவும் பெரும்பான்மையாக சாகுபடி செய்யப்படும் அனைத்து ரகங்களையும் தாக்கும் திறனுடையது. 
  • தற்போது நிலவும் சாதகமான சூழ்நிலை அதாவது குறைந்த வெப்பநிலை, அதிக காற்று ஈரப்பதம், மழை தருணம், மேக மூட்டமான சூழ்நிலை, சாதகமான பயிரின் வளர்ச்சி நிலை மற்றும் மோசமான மண் அமைப்பால் பெரும்பான்மையான இடங்களில் குலை நோய் காணப்படுகிறது. 
  • பூஞ்சை தொற்றால் ஏற்படும் இந்த நோயானது பயிரின் பெரும்பான்மையான பாகங்களை அதாவது இலை, தண்டு, இலை உறை, கழுத்து பகுதி, கதிர் என அனைத்து பாகங்களில் தொற்றை ஏற்படுத்தி அறிகுறிகளை தோற்றுவிக்கிறது. 
  • பயிரின் அனைத்து நிலைகளிலும் இந்த நோய் தாக்குதலை நாம் காண இயலும் எப்போதெல்லாம் சாதகமான சூழ்நிலைகள் அமைகிறதோ. 
  • ஆரம்பத்தில் சிறிய புள்ளி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் இந்த பூஞ்சை நோய் நாளடைவில் ஒழுங்கற்ற அல்லது நீள் வட்ட வடிவில் புண்கள் போன்ற சற்று பெரிதான புள்ளியை உருவாக்குகிறது. 

  • கரும்புள்ளி நோய் மற்றும் குலை நோய் ஆகிய இரண்டின் அறிகுறிகளையும் சற்று உன்னிப்பாக கவனித்து நோயை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். 
  • குலை நோய் அறிகுறியானது புள்ளியின் மையப்பகுதி வெளிர் பழுப்பு நிறத்திலும் அதன் ஓரங்கள் அடர் பழுப்பு நிறத்திலும் காணப்படும். வேகமாக பரவும் தன்மையுடைய இந்த  இலைப்புள்ளிகள் பெரிதாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து கருகல் அறிகுறி போன்ற காட்சியும் சில நேரங்களில் காண இயலும். 
  • நோய் தாக்குதலின் தீவிரம் அதிகமாகும் போது இலைகள், இலை உறைகள் சில நேரங்களில் தண்டு பகுதி காய்ந்து சருகு போன்று மாறும் காட்சியை காண இயலும்.
  • மிக எளிதாக காற்று மூலமாகவும் பண்ணைப் பணிகள் மூலமாக அடுத்தடுத்த பயிர்களுக்கு பரவும் தன்மை உடையது அதற்கேற்றவாறு நாம் செயல்பட வேண்டும். 
  • நிலம் அதிகளவு சேற்றுடன் இருக்கும் பொழுது இந்த நோய் தாக்குதல் தண்டு மற்றும் அதன் உறை பகுதியில் காணப்படுவதால் பாதிக்கப்பட்ட இடம் நோய்த்தொற்றுடன் இரண்டாம் நிலையாக அழுகலும் காணப்படலாம். இதனால் அதிக பயிர் இழப்பீட்டை நாம் காண இயலும் குறிப்பாக ஆரம்ப நிலையில்.
  • பயிர்கள் பூக்கும் அல்லது தொண்டை கருவாக இருக்கும் நேரத்தில் நோய் தொற்று மற்றும் சாதகமான சூழ்நிலை திகழும் பொழுது சுமார் 50% வரை கூட மகசூல் இழப்பீட்டை காண இயலும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • பருவ மழைக்கு ஏற்றவாறு நடவு பணியை மேற்கொள்ள வேண்டும். அதாவது பயிரின் ஆரம்ப வளர்ச்சி நிலை பருவ மழைக்கு இணையாக  இருக்கக் கூடாது.
  • நோய் தாக்குதல் குறைவாக காணப்படும் ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யலாம். 
  • மழைக்காலங்களில் சாகுபடி செய்யும் பொழுது தழைச்சத்து உரத்தை மிகக் குறைந்த அளவு பயன்படுத்த வேண்டும் அதுவும் சிறிது சிறிதாக கொடுத்து வர வேண்டும். 
  • பயிரின் இலை பகுதியில் ஈரப்பதம் திகழும் பொழுது பண்ணைப் பணிகள் அல்லது பூஞ்சையை கட்டுப்படுத்தக்கூடிய எந்தவித தெளிப்புகளும் செய்யக்கூடாது இது பயனற்றது.
  • முன்னெச்சரிக்கையாக தெளிப்புகள் மேற்கொள்வது இந்த நோய் தாக்குதல் மற்றும் பரவுதலை கணிசமாக கட்டுப்படுத்துகிறது. 
  • விதை அல்லது நாற்றுகளை நேர்த்தி செய்து நடவு செய்வது மிகவும் நல்லது குறிப்பாக Pseudomonas மற்றும் Trichoderma பயன்படுத்தி. 
  • காய்ச்சலும் பாய்ச்சலுமாக நீர் விடுவது மிக சிறந்தது. மேலும் இது பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தும்.
  • மழை பருவத்தில் சாகுபடி செய்பவர்கள் சற்று அதிக இடைவெளி விட்டு காற்றோட்டம் மற்றும் வெப்பநிலை கிடைக்கும் படி செய்யலாம்.
  • பொட்டாசியம், கால்சியம் மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை போதுமான அளவு கொடுக்கும் பொழுது மேலும் பயிர்கள் நோய் எதிர்ப்பு திறனுடன் செயல்படும்.
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் சூடோமோனஸ் திரவத்தை மட்டும் நம்ப வேண்டும் ஏனெனில் மற்ற எந்த ஒரு உயிர் கட்டுப்பாட்டு காரணிகள் இந்த நோயை கட்டுப்படுத்துவதாக தெரியவில்லை. எனவே இதனை தொடர்ச்சியான இடைவெளியில் பயன்படுத்தலாம்.
  • ரசாயன முறையில் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம்... 

    • Carbendazim
    • Carbendazim + Mancozeb
    • Hexaconazole
    • Tebuconazole
    • Tricyclazole
    • Trifloxystrobin + Tebuconazole
    • Picoxystrobin

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX 


பயிர் சாகுபடியில் இரும்பு சத்து குறைபாடும் அதன் மேலாண்மையும்...

    பயிர் சாகுபடியில் நுண்ணூட்ட சத்துக்களின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழைக்காலங்களில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் பிரதானமாக இரும்பு திகழ்கிறது. பயிர்களுக்கு போதுமான அளவு பச்சயத்தை கொடுத்து அதன்மூலம் பயிர் வளர்ச்சி மற்றும் திடத்தன்மையை மேம்படுத்துகிறது. 

    இது மட்டும் இன்றி பல்வேறு நொதித்தல் நிகழ்வு மற்றும் புரத உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கிறது. எனவே இதன் பற்றாக்குறையை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • மண்ணில் தொடர்ச்சியான ஈரப்பதம் அல்லது நீர் தேங்கி நிற்கும் பொழுது இரும்பு சத்து குறைபாடு ஏற்படும்.
  • மண்ணின் கார அமிலத்தன்மை அதிகமாக இருத்தல்.
  • மண் அல்லது பயிரில் பாஸ்பரஸ், காப்பர், மாங்கனிசு மற்றும் துத்தநாகம் அதிகமாக இருக்கும் பொழுது இரும்புச்சத்து பயிர்களுக்கு கிடைப்பதில்லை.
  • பயிரில் நீண்ட நாட்களுக்கு வேர் வளர்ச்சி இல்லாமல் இருத்தல். 
  • மண்ணில் அதிக அளவு நன்மை செய்யும் உயிரினங்கள் இருக்கும் பொழுது, அதற்குத் தேவையான சத்துக்கள் போக மீதி பயிர்களுக்கு கிடைப்பது அரிது எனவே பற்றாக்குறை ஏற்படும். 
  • மணல் பாங்கான மண்ணில் அதிகளவு சத்துக்கள் தேக்கி வைக்க இயலாத நிலை காரணமாகவும், களிமண்ணில் அதிக பிடிப்பு திறன் காரணமாகவும் இரும்பு சத்து பற்றாக்குறை ஏற்படலாம்.

இரும்புச்சத்து பற்றாக் குறையின் அறிகுறிகள்: 



  • பயிரின் இளம் இலைகளில் இதன் அறிகுறியை காண இயலும் குறிப்பாக பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறுதல். 
  • மாறுதலடைந்த இலைகளில் இலை நரம்புகள் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும். 
  • நாளடைவில் இந்த இலைகள் மேலும் அடர் மஞ்சள் நிறமாக மாறி அதன் விளிம்புகளில் கருகல் ஏற்படலாம்.
  • சில நேரங்களில் இலை உதிர்வதை காணலாம்.
  • குன்றிய பயிர் வளர்ச்சி, மகசூலின் அளவு மற்றும் தரத்தில் குறைபாடு போன்றவற்றையும் காணலாம்.

இதை எவ்வாறு சரி செய்யலாம்: 

  • மண் பரிசோதனை அடிப்படையில் மண் மற்றும் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்து வர வேண்டும். 
  • வயலில் போதுமான அளவு வடிகால் வசதி இருப்பதால் நீர் தேங்குவதை தவிர்க்கலாம். 
  • மண்ணின் கார அமிலத்தன்மை சமநிலையில் அல்லது நடுநிலையாக இருப்பதை அவ்வப்போது உறுதிப்படுத்த வேண்டும். 
  • ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். 
  • மழைக்காலங்களில் இரும்பு சத்து குறைபாடு ஏற்படுவது பொதுவானது அதனை இலை வழி தெளிப்பு மூலம் சரி செய்து கொள்ள வேண்டும்.
  • ஆரம்ப நிலை  பற்றாக்குறை அறிகுறிகளின் போது இரும்பு சல்பேட் ஊட்டச்சத்தை மண்ணில் இடலாம். 
  • Chelated வடிவில் இருக்கும் இரும்பு சத்தை இலை வழியாக தெளித்தால் இதன் பற்றாக்குறை அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


Recent Posts

Popular Posts