காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்கள்...
|பயிர் சாகுபடியில் நோய், பூச்சி மற்றும் களை மேலாண்மையில் ஏற்படும் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இந்த வரிசையில் சமீப காலமாக காட்டு விலங்குகளின் சேதம் அதிகரித்துக் கொண்டே உள்ளது குறிப்பாக காட்டுப்பன்றிகள். வன விலங்குகளில் வனத்தை விட்டு வெளியில் பிரதானமாக வாழக்கூடிய மான்கள், குரங்கு மற்றும் பன்றி போன்றவற்றில் அதிக பயிர் சேதத்தை விளைவிப்பது இந்த காட்டு பன்றிகள் தான். காட்டுப் பன்றிகளை பற்றிய அடிப்படை தகவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதில் ஏற்படும் சவால்களை பற்றி இதில் விரிவாக பார்ப்போம்.
- பொதுவாக எந்த ஒரு வன விலங்கினத்தையும் வேட்டையாட சட்டம் அனுமதிப்பதில்லை ஏனெனில் உயிர்களின் சமநிலையில் மாறுதல்கள் ஏற்பட்டு அதனால் மனிதர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதே இதன் அடிப்படை. அதாவது உணவுச் சங்கிலியில் மாறுதல்.
- அவ்வாறே இருந்தாலும் இந்த காட்டுப்பன்றிகளை உணவாக உண்ணக்கூடிய இதர உயிரினங்கள் காடுகளில் மட்டும் வசிப்பதால் பன்றிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
- மேலும் இந்த காட்டு பன்றிகள் பிறந்த ஏழு முதல் எட்டு மாதங்களில் இனப்பெருக்க பருவத்தை அடைந்து அதிலிருந்து நான்கே மாதங்களில் குட்டிகளை ஈனுகிறது.
- ஒரு முறை குட்டி ஈனும் பொழுது சுமார் 6 முதல் 10 குட்டிகள் வரை கூட ஈனும் இதனால் தான் இதன் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கிறது.
- காட்டுப் பன்றிகளை பொறி வைத்து பிடித்து கூண்டுகளில் அடைத்து அதனை வனப்பகுதியில் விடலாம். ஆனால் இதனை விவசாயிகள் செய்ய இயலாது செய்யவும் கூடாது அரசின் உதவி அல்லது அரசு அங்கீகரித்த நபர்கள் வாயிலாகவே இதனை மேற்கொள்ள இயலும் இந்த முறையை பின்பற்றினால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.
- பயிர்களுக்கு காவலாளி வைத்து பயிர்களை காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம் ஆனால் அந்தப் பணியை செய்ய யாரும் முன் வருவதில்லை அவ்வாறு செய்தாலும் அது உற்பத்தி செலவை அதிகப்படுத்தும்.
- காட்டுப்பன்றிகள் பயிர்களை உண்டு சேதத்தை ஏற்படுத்துவதை விட மண்ணை கிளறி விட்டு அதனால் ஏற்படும் சேதம் அதிகம்.
- இது மட்டும் இன்றி மண்ணில் ஆழமாக குழி பறிப்பதால் வளமற்ற மண் மேல்பகுதிக்கும் வளமான மண் ஆழமாகவும் சென்று விடுகிறது இது மண்ணின் வளம் மற்றும் தன்மையை படிப்படியாக குறைத்துவிடும்.
- காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து மீண்டும் கூட்டமாக நிலத்திலிருந்து வெளியேறுவதால் கட்டுப்படுத்துவதிலும் சிரமம் அதேபோன்று பாதிப்பும் அதிகம்.
- காட்டு பன்றிகளுக்கு கேட்கும் திறன் சற்று குறைவு என்பதால் வெடி வைத்தல், ஒலிபெருக்கி மூலம் அச்சமூட்ட முயற்சித்தாலும் அது பெரிய அளவில் பயனளிப்பதில்லை.
- அதேபோன்று காட்டு பன்றிகளின் பார்க்கும் திறன் சற்று குறைவாகத்தான் இருக்கும். இதனால் நாம் ஏற்படுத்தும் தடுப்பு வேலைகள், பொம்மை கட்டுதல், கலர் துணிகள் வயலை சுத்தி கட்டுதல் போன்ற எந்த ஒரு பாரம்பரிய முறையில் பயனளிக்க வாய்ப்புகள் குறைவு.
- மேலை நாடுகளில் காட்டுப்பன்றிகளை விரட்ட நாய்களுக்கு பயிற்சி அளித்து அதன் மூலம் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு செய்யும் பொழுது அதனால் பன்றிகளுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அதற்காகவும் நம் மீது சட்டங்கள் பாயலாம்.
- அதேபோன்று வேலிகள் அமைத்து அதனால் வன விலங்குகளுக்கு காயங்கள் அல்லது இறக்க நேரிட்டாலும் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப் படலாம்.
- சப்பாத்திக்கள்ளி போன்ற பயிர்களை வயல் வரப்புகளில் வளர்த்து இயற்கை முறையில் தடுப்புகளை ஏற்படுத்தலாம் ஆனால் அதை பின்பற்ற விவசாயிகள் முன்வருவது குறைவு.
- இரவு நேரங்களில் தீப்பந்தம் வைத்து அல்லது ஏந்தி மிக எளிதாக காட்டுப்பன்றிகளை விரட்டலாம். ஆனால் இதனால் இதர பயிர்கள் அல்லது அறுவடை நிலையில் உள்ள பயிர்களுக்கு சேதம் வர வாய்ப்புள்ளது.
- இயற்கை முறையில் கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன ஆனால் அவை அனைத்துமே ஒரு சில நாட்கள் மட்டுமே காட்டுப்பன்றிகள் வருவதை தடுப்பதால் மீண்டும் மீண்டும் பின்பற்றுவதில் விவசாயிகளுக்கு தொய்வு ஏற்படுகிறது.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக