பயிர் சாகுபடியில் இரும்பு சத்து குறைபாடும் அதன் மேலாண்மையும்...
|பயிர் சாகுபடியில் நுண்ணூட்ட சத்துக்களின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மழைக்காலங்களில் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் பிரதானமாக இரும்பு திகழ்கிறது. பயிர்களுக்கு போதுமான அளவு பச்சயத்தை கொடுத்து அதன்மூலம் பயிர் வளர்ச்சி மற்றும் திடத்தன்மையை மேம்படுத்துகிறது.
இது மட்டும் இன்றி பல்வேறு நொதித்தல் நிகழ்வு மற்றும் புரத உற்பத்தியில் பிரதான பங்கு வகிக்கிறது. எனவே இதன் பற்றாக்குறையை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்கள்:
- மண்ணில் தொடர்ச்சியான ஈரப்பதம் அல்லது நீர் தேங்கி நிற்கும் பொழுது இரும்பு சத்து குறைபாடு ஏற்படும்.
- மண்ணின் கார அமிலத்தன்மை அதிகமாக இருத்தல்.
- மண் அல்லது பயிரில் பாஸ்பரஸ், காப்பர், மாங்கனிசு மற்றும் துத்தநாகம் அதிகமாக இருக்கும் பொழுது இரும்புச்சத்து பயிர்களுக்கு கிடைப்பதில்லை.
- பயிரில் நீண்ட நாட்களுக்கு வேர் வளர்ச்சி இல்லாமல் இருத்தல்.
- மண்ணில் அதிக அளவு நன்மை செய்யும் உயிரினங்கள் இருக்கும் பொழுது, அதற்குத் தேவையான சத்துக்கள் போக மீதி பயிர்களுக்கு கிடைப்பது அரிது எனவே பற்றாக்குறை ஏற்படும்.
- மணல் பாங்கான மண்ணில் அதிகளவு சத்துக்கள் தேக்கி வைக்க இயலாத நிலை காரணமாகவும், களிமண்ணில் அதிக பிடிப்பு திறன் காரணமாகவும் இரும்பு சத்து பற்றாக்குறை ஏற்படலாம்.
இரும்புச்சத்து பற்றாக் குறையின் அறிகுறிகள்:
- பயிரின் இளம் இலைகளில் இதன் அறிகுறியை காண இயலும் குறிப்பாக பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறுதல்.
- மாறுதலடைந்த இலைகளில் இலை நரம்புகள் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும்.
- நாளடைவில் இந்த இலைகள் மேலும் அடர் மஞ்சள் நிறமாக மாறி அதன் விளிம்புகளில் கருகல் ஏற்படலாம்.
- சில நேரங்களில் இலை உதிர்வதை காணலாம்.
- குன்றிய பயிர் வளர்ச்சி, மகசூலின் அளவு மற்றும் தரத்தில் குறைபாடு போன்றவற்றையும் காணலாம்.
இதை எவ்வாறு சரி செய்யலாம்:
- மண் பரிசோதனை அடிப்படையில் மண் மற்றும் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்து வர வேண்டும்.
- வயலில் போதுமான அளவு வடிகால் வசதி இருப்பதால் நீர் தேங்குவதை தவிர்க்கலாம்.
- மண்ணின் கார அமிலத்தன்மை சமநிலையில் அல்லது நடுநிலையாக இருப்பதை அவ்வப்போது உறுதிப்படுத்த வேண்டும்.
- ஒரே பயிரை தொடர்ந்து சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.
- மழைக்காலங்களில் இரும்பு சத்து குறைபாடு ஏற்படுவது பொதுவானது அதனை இலை வழி தெளிப்பு மூலம் சரி செய்து கொள்ள வேண்டும்.
- ஆரம்ப நிலை பற்றாக்குறை அறிகுறிகளின் போது இரும்பு சல்பேட் ஊட்டச்சத்தை மண்ணில் இடலாம்.
- Chelated வடிவில் இருக்கும் இரும்பு சத்தை இலை வழியாக தெளித்தால் இதன் பற்றாக்குறை அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக