தென்னையில் ஊடு பயிர் மற்றும் கலப்பு பயிரிடுதல்
|தென்னையில்
ஊடு பயிர் மற்றும் கலப்பு பயிரிடுதல்
- தென்னை பல்லாண்டு பயிர் என்பதாலும் அதிக இடைவெளியுடன் நடவு செய்யப்படுவதாலும், எவ்வித மகசூல் குறைபாடின்றி ஊடுபயிர் அல்லது கலப்பு பயிரிட்டு கூடுதல் வருமானம் பெற வாய்ப்பு உள்ளது. தென்னந்தோப்புகள் சுமார் 25 முதல் 28% நிலப்பகுதியை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துகிறது என பல்வேறு ஆய்வு குறிப்புகள் குறிப்பிடுகின்றன. மேலும், தென்னை மரங்களில் இலை அமைப்பு 50% சூரிய ஒளியை ஊடுருவ செய்து நிலப்பகுதிக்கு அனுமதிப்பதால் மிதமான சூரிய வெப்பத்தை விரும்பி வளரக்கூடிய பயிர்களை தேர்வு செய்து ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.
- தென்னை மரங்களின் வயது, வளர்ச்சி மற்றும் மரங்களுக்கிடையே கிடைக்கப்பெறும் சூரிய ஒளி அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தென்னையின் வாழ்க்கை பருவத்தை மூன்று காலகட்டமாக பிரிக்கலாம். தென்னை நடவு செய்த பின் 7ஆண்டுகள் வரை சூரிய ஒளி அதிக அளவு தரைப்பகுதிக்கு கிடைக்கப்பெறுவதால் இந்தக் காலகட்டத்தில் குறைந்த வாழ்நாட்கள் உடைய பயிரை ஊடுபயிராக தொடர்ச்சியாக சாகுபடி செய்து வரலாம். 7 முதல் 20 ஆண்டுகள் வரை தென்னை மரத்தின் அமைப்பு சூரிய ஒளியை தரைப்பகுதிக்கு பெரிய அளவில் அனுமதிப்பதில்லை. எனவே, இந்தக் காலகட்டத்தில் நிழற்பாங்கான சூழ்நிலையில் வளரக்கூடிய பயிறு வகைப்பயிர்கள், பசுந்தாள் பயிர்கள் மற்றும் தீவனப்பயிர்களை சாகுபடி செய்யலாம். 20 வயதிற்கு மேற்பட்ட தென்னந்தோப்புகளில் சுமார் 50 சதவிகிதம் வரை சூரிய ஒளி தரைப்பகுதியில் கிடைக்கப்பெறுவதால் ஓராண்டு, ஈராண்டு மற்றும் பல்லாண்டு பயிர்களை ஊடுபயிர் அல்லது கலப்பு பயிர்களை சாகுபடி செய்யலாம்.
- அந்தந்த பகுதிகளில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை, மழை அளவு, வெப்பநிலை, மண் வளம் மற்றும் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு நடவு மேற்கொண்டு 7 முதல் 8 வருடம் வரை கீழ்கண்ட பயிர்களை ஊடுபயிர் முறையில் சாகுபடி செய்யலாம்.
- பழப்பயிர்கள் - வாழை, பப்பாளி, அன்னாசிப்பழம் மற்றும் இதர.
- காய்கறி பயிர்கள் – தக்காளி, கத்தரி, மிளகாய், மரவள்ளி, பரங்கிக்காய், புடலைக்காய், பீர்க்கன், சுரைக்காய், பாகற்காய், சாம்பல் பூசணி, தர்பூசணி, கொத்தவரை, தட்டைப்பயிறு, அவரை, செடி முருங்கை, கீரை வகைகள், சின்ன வெங்காயம் மற்றும் பெரும்பான்மையான கிழங்கு வகை காய்கறிகள்.
- மலர் பயிர்கள் – சம்பங்கி, செண்டுமல்லி, மல்லிகை, சாமந்தி
- நறுமணப்பயிர்கள் – மஞ்சள், இஞ்சி, கொத்தமல்லி
- சிறுதானியங்கள் – மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, பணிவரகு சாமை, தினை, வரகு, குதரைவாலி
- பயிறு வகைகள் – உளுந்து, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு, அவரை, மொச்சை, துவரை, சோயா
- எண்ணெய் வித்து பயிர்கள் – நிலக்கடலை, எள், சூரியகாந்தி
- தீவன பயிர்கள்
- கலப்பு பயிரிடுதலுக்கு உகந்த பயிர்கள் – கொக்கோ, மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், இலவங்கம், காப்பி, வெற்றிலை, பழவகை மரங்கள், குரு மிளகு, வனிலா, மற்றும் இதர
ஊடுபயிர் சாகுபடி செய்யும் போது கவனிக்கப்பட வேண்டியவை
- மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து இரண்டு மீட்டர் அகலத்தில் பெரும்பான்மையான வேர்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் ஊடுபயிர் இடுவதை தவிர்க்க வேண்டும்.
- அந்தந்த பயிர்களுக்கு ஏற்ற ஊட்டச்சத்து மற்றும் நீரை கொடுத்து வர வேண்டும் இல்லை எனில் மண் வளம் குன்றும்.
- கிடைக்கப்பெறும் சூரிய ஒளியை அடிப்படையாக வைத்து ஊடு பயிரை தேர்வு செய்வது மிக அவசியம்.
- எவ்வித காரணத்தினாலும் மரத்தின் வேர் பகுதி சேதம் அடைய கூடாது.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX
0 Comments:
கருத்துரையிடுக