google-site-verification: googled5cb964f606e7b2f.html உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 8 டிசம்பர், 2023

மரவள்ளியில் சிலந்திப்பேனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

மரவள்ளியில் சிவப்பு சிலந்தி பூச்சி/ கரையான் நோய் (Red spider mite in Tapioca):

தமிழகத்தில் சுமார் 3.00 இலட்சம் எக்டர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சாகுபடியில் உள்ள மரவள்ளியில் தற்போது நிலவும் தட்பவெப்ப நிலை காரணமாக சிவப்பு சிலந்தி பூச்சியின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. பல்வேறு வகையான சிவப்பு சிலந்தி பூச்சிகள் இருந்தாலும் Tetranchus urticae என்ற இனம் அதிக தாக்குதலை ஏற்படுத்தி 20-80% வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த வகை பூச்சியை இரண்டு புள்ளிகள் சிவப்பு சிலந்தி என அழைக்கப்படுகிறது.

உகந்த பயிர்கள் 

இந்த வகை இனப் பூச்சிகள் சுமார் 200 பயிர்களை தாக்கக் கூடியது. அதில் சில முக்கியமான பயிர்கள் தக்காளி, கத்தரி, பூண்டு, பீட்ரூட், வெள்ளரி, வெண்டை, பப்பாளி, மரவள்ளி சர்க்கரை வள்ளிக்கிழங்கு, தர்பூசணி, திராட்சை, நெல்லி, முத்துச்சோளம், கடலை, ரோஸ், சாமந்தி, கார்னேசள், பருத்தி மற்றும் இதர பயிர்கள்.

வாழ்க்கைச் சுழற்சி :

முட்டை

-

கோள வடிவில் ஒளி ஊடுருவக்கூடிய தன்மைக் கொண்ட முட்டைகள் இலையின் அடிப்பாகத்தில் நரம்புகளுக்கிடையே காணப்படும்.

லார்வா

-

பொறிக்கப்பட்ட லார்வாக்கள் கிட்டத்தட்ட கோள வடிவம் முதல் ஓவல் வடிவில் காணப்படும். ஆரம்பத்தில் இவை வெள்ளை நிறத்திலும் பின்னர் சாற்றை உறிஞ்சும் போது பச்சை நிறமாகவும், அதன் பின் சிவப்பு நிறமாகவும் மாறுகிறது.

முதிர்ந்த பூச்சி

-

முதிர்ந்த பெண் பூச்சிகள் ஆரம்பத்தில் வெளிர் சிவப்பு நிறத்திலும் பின்னர் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆண் பூச்சியின் உடல் முதலில் பச்சை நிறத்திலும் பின்னர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். மிதமான வெப்பநிலையில் இதன் ஆயுட்காலம் சுமார் 25 முதல் 32 நாட்கள் வரை இருக்கும்.


அறிகுறிகள்  

  • பூச்சிகள் இலையின் அடிப்பாகத்தை துளைத்து தாவர செல் மற்றும் சாற்றை உறிஞ்சுவதால் இலையில் உள்ள பச்சையத்தின் அளவு குறைந்து வளர்ச்சி மட்டுப்படுத்தப்படுகிறது.

  • இலைகள் மட்டுமின்றி இளம்தண்டுகள் மற்றும் குருத்துகளையும் தாக்கும். 

  • இலையின் மேற்பரப்பில சிறு சிறு மஞ்சள் நிறத் திட்டுக்கள் காணப்படும். 

  • மஞ்சள் நிறத் திட்டுக்கள் இலைகள் முழுவதும் பரவுவதால் இலைகள் உருமாறியும், வளர்ச்சி குன்றியும் காணப்படும். 

  • தாக்குதல் தீவரமடையும் போது இலைகளில் சிலந்தி வலைகள் காணப்படும். 

  • நாளடைவில் இலைகள் இறந்து உதிர தொடங்குவதால் நுனிக் குருத்து மெழுவர்த்தி போன்ற தோற்றத்தை பிரதிபலிக்கும். 

  • மகசூல் குறைவதுடன் அடுத்த பருவத்திற்கு தேவையான விதைக்குச்சிகளின் தரமும் கேள்விக்குறியாகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • நோய்த்தொற்று இல்லாத விதை குச்சிகள், பண்ணை உபகரணங்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக் கொண்ட ரகங்களைப் பயன்படுத்த வேண்டும்.

  • செடிகளில் காணப்படும் புழுதிகளை நீரைக் கொண்டு அகற்றவும். இல்லையெனில், பூச்சித் தாக்குதலை ஊக்கப்படுத்தும்.

  • செஞ்சோளம் அல்லது முத்து சோளத்தை வயலைச் சுற்றி நடவு செய்வதால் பூச்சித் தாக்குதலை முன் கூட்டியே அறிய இயலும். 

  • போதுமான இடைவெளியில் நடுவதால் தாக்குதல் குறைக்கப்படும்.

  • குறைந்த வாழ்நாள் கொண்ட மலர் பயிர்கள் ஊடு பயிராக பயிரிடுவதால் பூச்சி விழுங்கிளான லேடி பேர்ட், கிரைசோபிட்ஸ் மற்றும் ஸ்டேதோரஸ் ஊக்குவித்து பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். 

  • தோட்டத்தை சுத்தமாகவும், களைகள் இல்லாமலும் பராமரிக்கப்படுவதால் பூச்சிகளின் வாழ்க்கைச் சுழற்சி பாதிக்கப்பட்டு தாக்குதல் குறைக்கப்படும். 

  • வேப்பஎண்ணெய் 1-2 மி.லி/ 1 லி தண்ணீர் 15 நாட்களுக்கு ஒருமுறை தௌிப்பதால் பூச்சித்தாக்குதல் தவிர்க்கப்படும்.

  • பசு கோமியம் மற்றும் தண்ணீர்  1:20 விகிதத்தில் தௌிப்பதால் பூச்சியின் ஆரம்ப கால தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

  • பூண்டு, மிளகாய் மற்றும் தண்ணீர் 1:5 விகிதத்தில் தௌிப்பதால் பூச்சியின் ஆரம்ப கால தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

  • பொரி பயிராக சாமந்தி நடவு செய்யவும்.

  • 200 கி கொத்தமல்லி விதையை அரைத்து 3 லிட்டர் தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து தெளிப்பதால் பூச்சுவிரட்டியாக செயல்படும்.

  • 20 கி மஞ்சள் தூள்  + 200 மி.லி. கோமியம்  3 லிட்டர் தண்ணீரில் கலந்து சிறிது சோப்புக்கரைசலுடன் தெளிப்பதால் பூச்சிக்களைக் கட்டுப்படுத்தும்.

  • கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லிகளை ஏதேனும் ஒன்றினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

  1. Spiromesifen -3 ml/ lit water

  2.  Abamectin - 7 ml/ lit water

  3. Hexythiazox  - 1 ml/ lit water

  4. Chlorfenapyr - 1 ml/ lit water

  5. Fenpropathrin - 5 ml/ lit water

  6. Spirotetramat - 1 ml/ lit water

  7. Propargite - 1 ml/ lit water

  8. Fenpyroximate - 3 ml/ lit water

                           

வியாழன், 7 டிசம்பர், 2023

வேர் புழு/ சாணி புழுவை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்

வேர் புழு (கோலோட்ரைக்கியா) (White/ root Grub):  

சுமார் ஒரு வருடம் ஆயுட்காலம் கொண்ட இப்புழுவானது முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் வண்டு ஆகிய நான்கு வளர்ச்சி நிலைகளைக் கொண்டுள்ளது. இவற்றின் புழு மற்றும் வண்டு நிலைகள் மட்டுமே பயிரைத் தாக்கக் கூடியது ஆகும்.

மற்ற வகை புழுக்களில் இருந்து வேர்புழுக்களை கண்டறிய புழுக்களின் அடிப்புறத்தில் இரண்டு வரிசைகளில் சிறிய முடி போன்ற வளர்ச்சி இருப்பதை கொண்டு உறுதி செய்யலாம். இதனால் 40-80% வரை மகசூல் இழப்பு ஏற்படும்.

வாழ்க்கைச் சுழற்சி :

முட்டை

-

பெண் வண்டானது மண்ணில் 5-15 செ.மீ ஆழப்பகுதியில் உருண்டை வடிவிலான 20 முதல் 27 முட்டைகள் வரை இடக்கூடியது. இதன் வாழ்நாள் 8-10 நாட்கள் இருக்கும்.

புழு

-

சதைப் பற்றுடன் ஆங்கில ‘C’ வடிவில் வெளிர் மஞ்சள் முதல் அடர் வெள்ளை நிறத்தில் இருக்கும். புழுக்கள் பயிர்களில் வேர்களுக்கு அருகில் இருக்கும். இதன் வாழ்நாள் 56-70 நாட்கள் ஆகும்

கூட்டுப்புழு

-

மண்ணுக்கடியில் மஞ்சள் முதல் பழுப்பு நிறமாக காணப்படும்.

வண்டு

-

வண்டுகள் கூட்டிலிருந்து வெளிவந்த உடன் சிகப்பு முதல் பழுப்பு நிறத்தில் காணப்படும். பின்பு கருமை நிறமாக மாறும். இதன் வாழ்நாள் 12-16 நாட்கள்  


உகந்த பயிர்கள் 

நிலக்கடலை, கொய்யா, எலுமிச்சை, கத்தரி, வெண்டை, மரவள்ளி, சர்க்கரை வள்ளிகிழங்கு, மா, மாதுளை, ஆப்பிள், திராட்சை, கரும்பு, பாக்கு, தென்னை, உருளைகிழங்கு மற்றும் பல எண்ணெய் வித்துகள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறி பயிர்கள் வேர்களைத் தாக்கும்.

அறிகுறிகள்  

  • பயிர்களின் வளர்ச்சி குன்றி காணப்படும்.

  • பயிர்களில் இலைகள் பரவலாக மஞ்சள் நிறத்தில் மாற்றமடையும்.

  • நாளடைவில் இவ்விலைகள் முதிர்வு அடையும் முன்னே உதிர ஆரம்பிக்கும். மரப் பயிர்களை குலுக்கும் போது பழுத்த இலைகள் சலசல வென கொட்டும்.

  • பயிர் வேர்ப் பகுதியை காணும் போது வேர்களின் நுனிப்பகுதி துண்டிக்கப் பட்டிருக்கும். 

  • மேலும் நிலத்தில் குழி போன்ற ஓட்டைகள் காணப்படும் (மண்ணிற்கு அடிப்பகுதியில் ஒரு வயலிலிருந்து மற்றொரு வயலுக்கு செல்லும் திறன் படைத்தவை).

  • பாதிக்கப்பட்ட பயிர்களை பிடுங்கினால் எளிதாக கைகளில் வந்துவிடும்.

  • பாதிக்கப்பட்ட மரப்பயிர்கள் மிதமான காற்று வீசும் போது கூட சாய்ந்து விடும்.

  • பூ மற்றும் பழங்கள் உதிர ஆரம்பிக்கும்.

  • வண்டுகள் இலைப் பாகங்களையும் கூட்டுப் புழு வேர் அல்லது கிழங்கு பகுதிகளை உண்ணக் கூடியது.

  • எனவே, கூட்டுப் புழுக்களின் தாக்குதல் மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • இவ்வகை புழுக்கள் வசிக்கக் கூடிய குப்பைகள் மற்றும் செடிகளை வயல்களிலிருந்து அகற்றுதல்.

  • பூச்சிகளை சேகரித்து அழித்தல், பொறி பயிரான வேம்பு, ஆய்லாந்தஸ் மற்றும் அகேஸியா பயன்படுத்தலாம்.

  • விளக்கு பொறி ஏக்கருக்கு 1 முதல் 2 வைப்பதால் வண்டுகளின் நடமாட்டத்தை குறைக்கலாம்.

  • பூச்சிக்கொல்லி தௌித்த வேம்பு இலைகளின் பாகங்களை வயல்களில் ஆங்காங்கே நட்டு வைப்பதால் வண்டுகள் இதை உண்டு இறந்துவிடும்.

  • கோடைப்பருவத்தில் ஆழமான உழவின் மூலம் நிலத்திற்கு அடியில் உள்ள கூட்டுப்புழு மற்றும் வண்டுகளை வெளிக்கொண்டு வந்து பறவைகள் மற்றும் நாள்களுக்கு இரையாக்கலாம்.

  • மண்புழு உரங்களை மெட்டாரைசியம் அனிசோபிளே பயன்படுத்தி ஊட்டமேற்றி விடுவதால் பயிர்கள் இறப்பதை தடுக்கலாம்.

  • தழைச்சத்து உரப்பயன்பாடுகளை குறைத்து பொட்டாஷ் மற்றும் பாஸ்பேட் உரங்களை அதிகம் பயன்படுத்தும் போது வேர் வளர்ச்சி மிகுந்து காணப்படும். எனவே, இவை புழுக்களின் பாதிப்பிலிருந்து தாங்கி வளரும்.

  • பருவ மழை தருணங்களில் உழவிற்கு முன்பு எக்டருக்கு 25 கிலோ போரேட் அல்லது 33 கிலோ கார்போபியுரான் குருணைகளை தௌித்து விட்டு உழவு செய்வதால் பருவ மழையின்போது கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.

  • நன்கு மக்கிய தொழு உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  • செஞ்சோளம் மற்றும் கம்பு போன்ற பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்வது நல்லது.

  • தீவிரமாக தாக்கப்பட்ட வயல்களில் நீரை தாங்கி வளரக்கூடிய பயிர்களை சாகுபடி செய்யலாம். (நெல், வாழை)

  • பேவேரியா ப்ராங்காரியார்டி எனும் பூச்சிக்கொல்லி பூஞ்சாணத்தை ஏக்கருக்கு 1000 எண்கள் எனும் விதத்தில் நிலத்திலிட்டு நீர் பாய்ச்சுவதால் பூச்சித் தாக்குதல் குறையும்.

  • கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

  1. Imidacloprid - 1 ml / 1 lit. 

  2. Clothianidin - 120g/hac. 

  3. Fibronil + Imidacloprid - 300 g / hac.

               

செவ்வாய், 5 டிசம்பர், 2023

மிளகாய் பயிரை தாக்கும் சிலந்திப்பேனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்...

மஞ்சள் முரணைச் சிலந்தி / அகண்ட சிலந்தி பேன் :

தமிழகத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் சுமார் 50,000 எக்டர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வரும் மிளகாய் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதலால் 25 முதல் 70% வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது.
அவற்றில் மிகவும் சவாலான ஒன்றாக மஞ்சள் முரணைச் சிலந்தி அல்லது அகண்ட சிலந்தி பேன் திகழ்கிறது. சரியான பராமரிப்பு மற்றும் கவனிப்பற்ற பயிர்கள் 70-90% வரை பாதிப்படையும்.

பூச்சியின் விபரம் :

முட்டை

-

நீள்வட்ட வடிவில் பழுப்பு முதல் வெண்மை நிறத்தில் காணப்படும். முட்டைகள் தாய் பூச்சியினால் இலையின் அடிப்பாகத்தில் ஒரு ஒரு முட்டையாக பரவலாக இடப்படுகிறது. இதன் ஆயுட்காலம் 1-3 நாட்கள் ஆகும்.

இளம்குஞ்சு

-

வெண்ணிறத்தில் காணப்படும் இதனுடைய ஆயுட்காலம் 3-5 நாட்கள் ஆகும்.

பூச்சி

-

நீள்வட்ட வடிவில் அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். முதிர் பூச்சிகள் இளம் குஞ்சுகளை விட சற்று பெரியதாக காணப்படும். இதன் ஆயுட்காலம் 8-10 நாட்கள் ஆகும்.

அறிகுறிகள் :

  • இலைகள், இலைமொட்டுகள், பூ மற்றும் காய்களின் உருவம் மாற்றம் அடைவதுடன் நிறமும் சற்று அடர் பச்சையில் காணப்படும்.

  • தளிர்கள் மற்றும் இலைகள் சற்று நீள்வடிவில் வளர்வதுடன் காம்புகளின் வளர்ச்சி சற்று அதிகமாக காணப்படுவதால் இதனை ”எலி வால்” அறிகுறி என்றழைக்கப்படுகிறது.

  • சிலந்திகள் இலையின் அடிப்பகுதியில் சாற்றை உறிஞ்சுவதால் இலைகள் கீழ்நோக்கு சுருண்டு பார்ப்பதற்கு கப்பலை தலைகீழாக கவிழ்க்கப்பட்டது போன்று தோன்றும்.

  • இலையின் அடிப்புறத்தில் மைய நரம்புகளுக்கு இடையில் பழுப்பு நிற பகுதிகள்/ திட்டுக்கள் தோன்றும்.

  • நாளடைவில் தளிர்கள் கருகுதல், பூ மற்றும் காய்ப்பிடிப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.

  • கன்று இடைவெளிகள் குறைந்து காணப்படுவதால், பக்கவாட்டு தளிர்கள் மொட்டுகளின் (Center shoots bond) உற்பத்தி அளவுக்கு அதிகமாக காணப்படும்.

  • இளம் சிலந்திகள் காய்களின் சாற்றை உறிஞ்சுவதால் காய்கள் நிறமாறி உதிர ஆரம்பிக்கும்.

  • இதன் சேதங்களானது களைக்கொல்லிகளின் தவறான பயன்பாடு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றுடன் ஒத்திருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • பாதிக்கப்பட்ட வயல்களுக்கு அருகில் நடவு செய்வதை தவிர்க்கவும்.

  • பாதிக்கப்பட்ட பயிர்களை அகற்றி அப்புறப்படுத்துவது மிகவும் அவசியம்.

  • பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாட்டை குறைப்பதுடன் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உத்திகளை மேற்கொள்ளுதல் அவசியம்.

  • ஒரே வயலில் மீண்டும் மீண்டும் மிளகாய் சாகுபடி செய்வதை தவிர்க்கவும்.

  • இயற்கை பூச்சி விழுங்கிகளான ஆம்ப்லிசியஸ் மாண்ட்டோரென்சிஸ் மற்றும் நியோசியூலஸ் ருக்குபேரிஸ் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.

  • பூண்டு சாறு +சோப்புத்தண்ணீர் சேர்த்து தெளிப்பதால் பரவுதல் கட்டுப்படுத்தப்படும்.

  • இவ்வகை பூச்சிகளை தாங்கி வளரக் கூடிய குண்டு இரக மிளகாய்களை பயிரிடலாம்.

  • சரியான நீர் மற்றும் உர மேலாண்மை சிலந்தி பேன்களின் இனப்பெருக்கத்தை குறைத்திட உதவிடும்.

  • இமிடோகுளோபிரிட் 10 கி/ கிலோ விதைகளுடன் விதை நேர்த்தி அல்லது சூடோமோனஸ் புளுரோசன்ஸ் 10 கி/ கிலோ விதைகளுடன் விதை நேர்த்தி செய்வதால் சாறு உறிஞ்சு பூச்சிகளின் தாக்குதல் மட்டுப்படுத்தப்படும்.

  • பூண்டு, மிளகாய், மண்ணெண்ணெய் கரைசல் (GCK) 0.5% +நிம்பிசிடின் 2.50 மி.லி. /லி தெளிப்பதால் 40% வரை தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.

  • கீழ்க்கண்ட ஏதேனும் இரண்டை 10-15 நாட்கள் பயன்படுத்துவதால் பரவுதல் தடுக்கப்படுகிறது.

1.Verticilium Lecani -1%
2. Bacillus aalbus – 2%
3.Beaureria bassiana – 0.4%
  • தக்காளி அல்லது சாமந்தி பொரி பயிராக பயிரிடலாம்.

  • கீழ்க்கண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்றை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

1.Diafenthiuron – 1g/ lit. water
2.Vertimec – 0.5 ml/ lit. water 
3.Spinosad – 0.25 ml/ lit. water
4.Spiromesifen – 2 ml/ lit. water
5.Propargite - 2 ml/lit water 6.Cyflumetofen- 2.5 ml/lit water 7.Diafenthiuron+cyantraniliprole- 2 ml/ lit water 8.Etoxazole-0.3 ml / lit water 9.Etofenprox+Diafenthiuron- 0.5 ml/lit water
10. Fluxametamide- 1-1.5ml/lit water
  • கோடை உழவு மேற்கொள்வதுடன் எக்டருக்கு 600 கி. வேப்பம்புண்ணாக்கு இடுவதால் தாக்குதலின் சதவீதம் குறைக்கப்படுகிறது.


 

திங்கள், 4 டிசம்பர், 2023

கத்தரியில் குருத்து மற்றும் காய் துளைப்பானை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்


கத்தரியில் குருத்து மற்றும் காய் துளைப்பான் :

காய்கறி பயிர்களின் அரசன் என அழைக்கப்படும் கத்தரியானது தெற்காசிய நாடுகளில் மிகவும் முக்கியமான காய்கறி பயிராக கருதப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 5 இலட்சம் எக்டர் நிலப்பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வரும் கத்தரியில் ஏற்படும் பல்வேறு பூச்சி தாக்குதல்களில் மிகவும் முக்கியமானதாகவும் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இது திகழ்கிறது. இப்புழுத் தாக்குதலால் மகசூல் இழப்பு சுமார் 30 முதல் 80% வரை ஏற்படுகிறது.

உகந்த பயிர்கள்:

இந்த வகை புழுக்கள் தக்காளி, மிளகாய், உருளைக் கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணி பயிர்களில் பரவலாக காணப்படுகிறது. 

வாழ்க்கைச் சுழற்சி:

முட்டை

-

பாலாடை வெள்ளை நிற முட்டைகளை  இலையின் அடிப்புறத்தில் தனித்தனியாகவோ அல்லது கொத்தாகவோ இடப்படுகிறது. ஒரு பெண் அந்துப்பூச்சி அதன் வாழ்நாளில்  சுமார் 250 முட்டைகள் வரை இடும்.  

லார்வா

-

3 முதல் 5 நாட்களுக்குள் முட்டையிலிருந்து வெளிவருகிறது. ஆரம்பத்தில் இப்புழுக்கள் பாலாடை வெள்ளை நிறத்திலும் பின்னர் இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். இளம் இலைகள், காம்புகள், மொட்டுகள் மற்றும் தளிர்களில் துளையிடும். பின்னர் செடிகளின் குருத்து மற்றும் பழங்களைத் துளையிட்டு சேதம் ஏற்படுத்தும். 4 முதல் 6 நாட்கள் வரை நீடித்து இருக்கும்.

கூட்டுப்புழு

-

இதன் வாழ்நாள் 7 முதல் 10 நாட்கள் மண் அல்லது செடிகளில் காணப்படும்.

முதிர்ந்த பூச்சி

-

முதிர்ந்த பூச்சிகள் வெள்ளை நிறத்தில் கருப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும். முன் இறக்கைகள் முக்கோண வடிவில் பழுப்பு மற்றும் சிவப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும். இதன் வாழ்நாள் சுமார் 3 முதல் 5 நாட்கள் வரை இருக்கும்.

அறிகுறிகள் 

  • லார்வாக்கள் இளம் இலைகள், காம்புகள், மொட்டுகள் தளிர் மற்றும் காய்களில் துளையிடும்.

  • ஆரம்பத்தில் இளம் குருத்துகள் வாடி காணப்படும்.

  • துளையிடப்பட்ட குருத்து மற்றும் காய்கள் கருப்பு நிற கழிவை வெளித்தள்ளும்.

  • நாளடைவில் வாடி உதிர்வதால் இறந்த இதயம் போன்று வளர்ச்சி குன்றி காணப்படும்.

  • பூ மற்றும் காய்கள் உதிர்தல்

  • குருத்து தண்டை பிளந்து பார்த்தால் திசுக்களின்றி கருப்பு நிறத்தில் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள் 

  • பாதிக்கப்பட்ட தளிர்கள், குருத்துகள் மற்றும் பழங்களை சேகரித்து அழிப்பதால் லார்வா / முட்டைப் புழுக்கள் மற்றும் கூட்டுப் புழுக்களை அழிக்கலாம்.

  • இவற்றை எரித்து பயிர் அங்கங்களை உரமாக்கிடுவதால் தாய் அந்துப் பூச்சிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கலாம்.

  • இறுதி அறுவடைக்கு பிறகு பழைய செடிகள் மற்றும் களைகளை வேருடன் பிடுங்கி அழிப்பதால் இப்பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி பாதிப்படைவதால் எதிர் வரும் பயிர்களில் தாக்குதல் மட்டுப்படுத்தப்படும்.

  • கொத்தமல்லி, சோளம் மற்றும் தட்டைப்பயறு போன்ற பயிர்களைக் கொண்டு பயிற் சுழற்சி மேற்கொள்வதால் நன்மை பயக்கும் பூச்சிகளான சிலந்தி, கண்ணாடி இறக்கைப்பூச்சி, லேடி பேர்ட் மற்றும் செவ்வண்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

  • வயலைச் சுற்றி 2 முதல் 4 மீ உயரத்திற்கு வலைகளை தடுப்பானாக பயன்படுத்துவதுடன் வயலை சுத்தமாக பராமரிப்பதால் 60% வரை பூச்சித் தாக்குதலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

  • எதிர்ப்பு சக்தி ரகங்களை பயிரிடுதல். (நீளமான காய்கள் கொண்ட ரகம்).

  • இனக்கவர்ச்சி பொறி 12 எண்கள்/ எக்டர் என்ற எண்ணிற்கு வைத்து தாய் அந்துப்பூச்சி நடமாட்டத்தை குறைக்கலாம்.

  • பேசில்லஸ்  துருஞ்சியன்ஸ் 2 கி/ லி தண்ணீரில் கலந்து தெளிப்பதால் ஆரம்பகால பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

  • டிரைக்கோகிராம சிலோனிஸ் ஒட்டுண்ணியை எக்டருக்கு 50000 எண்கள் விடுவிப்பதால் 50 % வரை  பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

  • வேப்பங்கொட்டை 5% கரைசல் 1-2 மி.லி/ 1 லி தண்ணீர் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிப்பதால் பூச்சித்தாக்குதல் தவிர்க்கப்படும்.

  • ப்ரைஸ்டோமரஸ் மற்றும் செராமஸ்டஸ் ஒட்டுண்ணியை பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.

  • கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம்.

Azadiractin 10000 ppm – 3-5ml/liter water

 https://amzn.to/4c4jkFM

https://amzn.to/431RMg2

Spinosad – 0.5-1 ml/10 liter water

 https://amzn.to/3Iodb9v

Chlorantraniliprole – 0.4-0.6 ml/liter water


 https://amzn.to/3TnjCQI


Novaluron+ Emamectin benzoate - 4 ml/ liter water

https://amzn.to/3V1o8FC

Flubendiamide -0.5-0.75 ml/liter water

https://amzn.to/49YPsIN

Quinalphos – 1.5-2 ml/liter water


https://amzn.to/3wDnfJg

Imidacloprid+Betacyfluthrin – 0.4-0.6 ml/liter water

 https://www.badikheti.com/insecticide/pdp/solomon-insecticide/yuj18cv5

Isocycloseram – 0.1-0.2 ml/liter water

 https://cultree.in/products/syngenta-simodis-isocycloseram-9-2-w-w-dc-insecticide

Broflanilide – 0.2-0.3 ml/liter water

 https://agribegri.com/products/buy-basf-exponus-broflanilide-300-gl-sc-insecticdes.php


 

Recent Posts

Popular Posts