google-site-verification: googled5cb964f606e7b2f.html பிப்ரவரி 2026 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

தக்காளி பயிரில் ஊசித்துளைப்பான் புழு மேலாண்மை

1. சமீப காலமாக தக்காளி பயிரில் ஊசித்துளைப்பான் புழு தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. 

2. இந்த புழு தக்காளி பயிரில் பிரதானமாகவும், அப்போது கத்திரி தாக்கு திறன் உடையது. 

🦋பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

1. மாலை மற்றும் இரவு நேரத்தில் தாய் அந்து பூச்சிகள் இலையின் அடி புறத்தில் முட்டைகளை இடும்.

2. இந்த அந்து பூச்சிகள் வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும். 

3. முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழுக்கள், இலை, தண்டு மற்றும் காய்களில் சேதத்தை ஏற்படுத்தும். 

4. கூட்டுப் புழுக்கள் பெரும்பான்மையாக மண்ணில் காணப்படும்.

5. மிக வேகமாக இனப்பெருக்கம் அடைந்து புழுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் இதை கட்டுப்படுத்துவது சற்று சிரமமாக இருக்கும்.

🍃தாக்குதலின் அறிகுறிகள்:

1. இளம் புழுக்கள், இலை சுரங்க ஈக்களின் தாக்குதலை போலவே இலைகளின் பச்சையத்தை சுரண்டி பாதிப்பை ஏற்படுத்தும். 

2. பாதித்த இலைகள் கருகி காட்சியளிக்கும். 

3. பயிர் வளர்ச்சி குன்றி மகசூலும் இழப்பீடும் ஏற்படும். 

4. சற்று முதிர்ந்த புழுக்கள் பெரும்பான்மையாக காயை துளைத்து உண்ணும்.

5. காய்களில் புழுக்கள் சாப்பிட்ட எச்சங்கள் காணப்படும் சில நேரங்களில் தண்டு பகுதியையும் துளைக்கும். 

6. காய்கள் உதிர்வு மற்றும் காய்களின் தரம் பாதிப்பதால் நேரடியாக மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.

🍅கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

1. பூச்சி தாக்குதல் உள்ளதா என்பதை தொடர்ச்சியாக ஆய்வு செய்து வர வேண்டும். 

2. முன் எச்சரிக்கைக்காக பூச்சி விரட்டி திரவங்கள் அல்லது வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் தெளித்து வரலாம். 

3. ஏக்கருக்கு ஒரு எண் விளக்கு பொறி மாலை நேரத்தில் சுமார் 2 மணி நேரம் எரிய விட வேண்டும். 

4. ஒரே வயலில் தொடர்ச்சியாக தக்காளி சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.

5. தரமான நாற்றுகளை பயன்படுத்த வேண்டும்.

6. இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 12-16 எண்கள் நிறுவி பராமரிக்க வேண்டும்.

7. தக்காளி மற்றும் கத்தரி அல்லது தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்களை ஊடு பயிராகவோ அல்லது பக்கத்திலோ சாகுபடி செய்ய வேண்டும்.

8. போதுமான அளவு கால்சியம் ஊட்டச்சத்து கொடுக்கும் பொழுது பயிர்கள் புழு தாக்குதலை தாங்கி வளரும் தன்மை பெறுகிறது. 

9. உயிரியல் முறையில் கட்டுப்படுத்த Bacillus மற்றும் Beauveria போன்றவற்றை தனித்தனியாக தெளிக்க வேண்டும்.

10. களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

11. ரசாயன முறையில் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கலாம். Emammectin/ indocaxrb/ Chlortraniliprole/ Tetraniprole / Cyantraniliprole / Flubendamide 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE?mode=gi_t


புதன், 11 பிப்ரவரி, 2026

தற்சமயம் மா சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை

தற்சமயம் சாகுபடியில் உள்ள மா மரங்களில் சுமார் 40 சதவீதம் (பகுதிக்கு ஏற்ப மாறுபடும்) வரை பூக்கள் எடுத்துள்ளதை நாம் அறிவோம். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். 

💧நீர் மேலாண்மை:

1. மிக காய்ச்சலும் பாய்ச்சலமாக நீர் விட வேண்டும். 

2. அதிக நீர்ப்பாசனம் இளம் இலைகளை ஊக்குவிக்கும் இதனால் பூ பிடிக்கும் திறன் குறையும்.

3. பெரும்பான்மையான மரங்கள் காய் பிடிக்கும் தொடங்கும் தொடங்கும் தருணத்தில் நீர் விடலாம்.

4. அதிக வெப்பநிலை காரணமாக மரங்கள் சோர்வடையும் நேரத்தில் சிறிதளவு நீர் பாய்ச்சலாம். 

5. அளவுக்கு அதிகமான நீர் பற்றாக்குறை ஏற்பட்டால்  மகரந்த சேர்க்கையில் பாதிப்பு ஏற்படும்.

6. நீண்ட இடைவெளிக்கு பிறகு திடீரென அளவுக்கு அதிகமாக  நீர் பாய்ச்சினால் பூக்கள்  உதிர வாய்ப்புகள் உள்ளது. 

🥭ஊட்டச்சத்து மேலாண்மை:

1. தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். அல்லது மிக மிக குறைவாக கொடுக்கலாம்.

2. அதிக தழைச்சத்துக் கொடுத்தால் சுமார் 40% வரை பூக்கள் உருவாவதை குறைக்கும்.

3. கால்சியம் மற்றும் போரான் ஊட்டச்சத்துக்களை இழை வழியாக தெளிக்கலாம்.

4. இவை இரண்டும் பூக்களின் ஆரோக்கியத்தை   உறுதிப்படுத்தும். 

5. இதனால் பூ மற்றும் காய்  உதிர்வு குறையும், மகரந்த சேர்க்கை அடைந்த  பூக்கள் காயாக மாறும். 

🌺பூப்பிடித்தலை ஊக்குவித்தல்:

1. பூ பிடித்தலை ஊக்குவிக்க இயற்கையாகவே பயிரில் வளர்ச்சி ஊக்கிகள் உற்பத்தியாகும்.

2. மா போன்ற அதிக பூக்கும் திறன் உடைய மரங்களில்  இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படும் வளர்ச்சி ஊக்கி போதுமானதாக இருக்காது. 

3. இந்த தருணத்தில் நாம் இடைவெளியாக தேவையான வளர்ச்சிக்கு கொடுக்க வேண்டும்.

4. இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் பஞ்சகவ்யா அல்லது தேமோர் கரைசல் தெளிக்க வேண்டும். 

5. இரசாயன முறையில் தெளிக்க NAA பத்து லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி + போரான் + ஒட்டும் திரவம் ஆகியவற்றை கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

6. Cytocyme அல்லது Homobrassinolide அல்லது  கடல்பாசி உரம் அல்லது humic அமிலம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றையும்   தெளிக்கலாம்.

🥭காய் பிடிப்பு திறனை மேம்படுத்துதல்:

1. தேனீக்களின் நடமாட்டத்தை அதிகரிக்க ரசாயன மருந்துகள் தெளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

2. வயலில் களைகள் இருந்தால்  அதை அழிக்க ரசாயன மருந்துகள் எதுவும் தெளிக்க வேண்டாம். 

3. களைச் செடிகளில் பூக்கள் இருந்தால் நன்மை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் தேனீக்களின் வருகை  அதிகரிக்கும்.

4. ஏக்கருக்கு நான்கு எண் தேனீ பெட்டிகள் ஆங்காங்கே வைக்க வேண்டும். 

5. போரான் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் தெளிக்க வேண்டும்.

6. மேலும் பூச்சி நோய் கட்டுப்பாடு மிக அவசியம். 

🪰பூச்சி மேலாண்மை: 

1. தற்சமயம் தத்துப்பூச்சி தாக்குதல் அதிகம் காணப்படுகிறது. 

2. இவை  பூங்கொத்துகளில் சாற்றை உறிஞ்சுவதால் கருகல் ஏற்படுகிறது.

3. மேலும்  கரும்பூஞ்சன நோய் தொற்றும் ஏற்படும்.

4. மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்ட பூங்கொத்துகளை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும். 

5. தத்துப்பூச்சியை கட்டுப்படுத்த பூச்சி விரட்டி திரவம் அல்லது உயிரில்  பூச்சிக்கொல்லியை பயன்படுத்தலாம்.

6. இதர புழு பூச்சிகளை கண்டறிந்து கட்டுப்படுத்த வேண்டும்.

🌳நோய் மேலாண்மை:

1. பூங்கொத்து உருக்குலைவு மற்றும் பூங்கொத்து கருகல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. 

2. இந்த இரண்டு நோய்க்குமே மிக தீவிரமாக பாதிக்கப்பட்ட பகுதியை அப்புறப்படுத்திவிட்டு சூடோமோனஸ் தெளிக்க வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு  இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE?mode=gi_t


செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

பார்த்தீனியம் களையும் அதன் மேலாண்மையும்...

  • பார்த்தீனியம் செடிகளின் விதைகள் மண்ணில் பல வருடங்கள் கெடாமல் இருக்கும். சாதகமான சூழ்நிலை அமையும் போது விதைகள் முளைத்து வருகிறது. 
  • சராசரியாக 40 முதல் 45 நாட்களில் செடிகள் பூ பிடிக்கிறது. ராபி பருவத்தில் மட்டும் 30 முதல் 35 நாட்களில் பூ பூக்கிறது. 
  • ஒரு பார்த்தீனியம் செடி சராசரியாக அதன் வாழ்நாளில் 15000 முதல் 18000 வரை விதைகளை உற்பத்தி செய்கிறது.
  • இந்த விதைகள் வெடித்து காற்றின் மூலமாகவும் கால்நடை மூலமாகவும் மனிதர்களின் செயல்பாடு காரணமாகவும் மிக எளிதாக பரவுகிறது. 
  • இதனை பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள் உதாரணத்திற்கு கேரட் புல், காங்கிரஸ் களை.
  • பார்த்தீனியம் செடிகளின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. எனவே இதை அப்புறப்படுத்தும் போது செடிகளை தொடாமல் இருப்பது நல்லது. 
  • இதன் விரைந்து வளரும் தன்மை, அதிக வறட்சி அதிக மழை போன்ற சாதாரண சூழ்நிலைகளையும் தாங்கி வளரும் திறன், இதன் இனப்பெருக்க வேகம் போன்ற காரணத்தினால் மண்ணில் இருக்கக் கூடிய ஊட்டச்சத்துக்களை விரைந்து எடுத்துக்க கூடியது இதனால் செடிகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கப் பெறுவதில்லை.
  • இச்செடிகளில் இருந்து சுரக்கப்படும் வேதியல் பொருட்கள் பயிரின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது. 
  • பயிர்களுக்கு தேவைப்படும் மிக முக்கிய ஊட்டச்சத்துக்கான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் இந்த பார்த்தீனியம் செடியில் இருப்பதால் இதனை மக்க வைத்து பயன்படுத்துவதால் உரப் பயன்பாட்டை குறைக்கலாம். 
  • பல்வேறு ஆய்வு அறிக்கையின்படி பார்க்கும் பொழுது பார்த்தீனியம் செடிகளை மக்க வைத்து பயன்படுத்துவதால் இது மண்புழு உரத்திற்கு ஈடான ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பது தெரிய வருகிறது. 
  • பார்த்தீனியம் களையை கட்டுப்படுத்த மிதமான ஈரப்பதம் இருக்கும் பொழுது களை முளைப்பதற்கு முன்னதாக தெளிக்க கூடிய களை கொல்லிகளை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு Atrazine, Oxyflurofen, Pendimethlin, Metolachlor ஏதேனும் ஒன்றை தேவையான அளவு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து களைகள் முளைப்பதற்கு முன்பதாக தெளிக்கலாம்.
  • செடிகள் பூ பூப்பதற்கு முன்பதாக வேரோடு பிடுங்கி எடுப்பதால் வெகுவாக அதன் எண்ணிக்கையை வயலில் இருந்து குறைக்கலாம். 
  • 10 லிட்டர் தண்ணீருக்கு 200 முதல் 250 கிராம் உப்பு மற்றும் சிறிதளவு சோப்பு துண்டு ஆகியவற்றை கலந்து செடிகள் பூ பூப்பதற்கு முன்பு தெளிப்பதால் ஓரளவிற்கு கட்டுப்படுத்தலாம். 
  • களைகள் முளைத்த பிறகு தெளிப்பதற்கு பல்வேறு களை கொல்லிகள் உள்ளது. உதாரணத்திற்கு Glyphosate, Gulfosinate ammonium, Metribuzine, 2,4-D முதலியவற்றை பயன்படுத்தலாம் பயிர்கள் இல்லாத நிலத்திற்கு மட்டும். 
  • பார்த்தீனியம் அதிகம் வளரும் நிலத்தில் தொடர்ச்சியாக இது பூ பூப்பதற்கு முன்பாக வேரோடு பிடுங்கி மண்ணில் இட்டு உழவு செய்வதால் நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும். அவ்வாறு 20 நாட்களுக்கு ஒரு முறை பின்பற்ற வேண்டும். 
  • சோளம், தட்ட பயிறு, பசுந்தாள் பயிர்களை சாகுபடி செய்வதால் இதனை நிலத்திலிருந்து வெகுவாக குறைக்கலாம். மாற்று பயிராக சாமந்தி பயிரிடும்போது இதனால் சுரக்கப்படும் திரவத்தால் இதன் விதைகள் மற்றும் செடிகள் பாதிக்கப்படுகிறது.

  • மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கொண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/B6U5sXs9mvqJM991JHXljE?mode=gi_t

மா சாகுபடியில் தத்துப்பூச்சி மேலாண்மை

தத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

1. சரியான நேரத்தில் நமது மா பயிரை தாக்கி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மிகப் பெரிய அளவில் மகசூல் இழப்பீட்டை  ஏற்படுத்துவது தான்  இந்த தத்துப்பூச்சி. 

2. இது ஒரு வகை சாறு   உறிஞ்சும் பூச்சி வகையை சார்ந்தது ஆகும்.

3. எப்போதெல்லாம் நமது மா மரங்களில் இளம் இலைகள், பூங்கொத்துகள் மற்றும் இளம் காய்கள் காணப்படுகிறதோ அப்போதெல்லாம் நமது பயிரை  வெகுவாக பாதிக்கும்.

4. பூங்கொத்துகள் தோன்றும் நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்தினால் சுமார் 60 முதல் 70% வரை கூட மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். 

5. இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த தத்துப்பூச்சிகள் பூங்கொத்துகளில் சாற்றை தொடர்ச்சியாக உறிஞ்சும். 

6. இதனால் பூக்கள் கருகி ஒன்றன் பின் ஒன்றாக உதிர ஆரம்பிக்கும். இதனால் அதிக அளவில் மகசூல் இழப்பீடு ஏற்படும்.

7. இவை சுரக்கும் இனிப்பு  திரவக்கழிவு இலை மற்றும் பூங்கொத்து பகுதிகளில் படும் பொழுது அங்கு  கரும்பூஞ்சை நோய் தொற்று ஏற்படுகிறது. 

8. இதனால் பயிர்கள் உணவு உற்பத்தி செய்யும் திறன் குறையும் அது மேலும் பயிர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும். 

9. வருடம் முழுவதும் நமது மாமரங்களில் இந்த பூச்சிகள் காணப்பட்டாலும் பிப்ரவரி முதல் ஏப்ரல் மற்றும் ஜூன் ஜூலை மாதத்தில் அதிகம் காணப்படும். 

10. மிதமான வெப்பம், அதிக காற்று  ஈரப்பதம், அதிக அளவு நிழல் போன்ற சூழ்நிலைகள் தகுந்த சீதோசன நிலையை ஏற்படுத்தி பூச்சியின் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்துகிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

1. முறையான கவாத்து செய்தல். அக்டோபர் மாதத்தில். 

2. மரங்களுக்கு இடைப்பட்ட இடைவெளி மிக முக்கியம். 

3. மிதமான அளவு தழைச்சத்து உரத்தை இட வேண்டும். 

4. தோப்பில் களைகள் அதிகம் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

5. ஊடுபயிராக பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்யலாம் இது நன்மை செய்யும் பூச்சிகளை  வரவேற்கும். 

6. பொட்டாசியம் ஊட்டச்சத்தை சற்று கூடுதலாக பூங்கொத்து வரும் முன் கொடுக்க வேண்டும். மாமரங்கள் சற்று பூச்சிகளை தாங்கி வளரும் தன்மை  பெரும். 

7. பூச்சி தாக்குதல் ஏற்படுவதற்கு முன்னதாக தொடர்ச்சியாக பூச்சி விரட்டு திரவங்களை தெளித்து வர வேண்டும். 

8. ஆரம்ப நிலை பூச்சி  தாக்குதலின் பொழுது Verticillium மற்றும் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பங்கொட்டை விதை கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 

9. பஞ்சகாவியா, Verticillium மற்றும் வேப்ப எண்ணெய் கலந்து தெளிப்பது நல்ல பயனளிக்கும். 

10. கண்டிப்பாக ரசாயன மருந்துகளை பயன்படுத்தக் கூடாது இது மகரந்தச் சேர்க்கையை பாதிக்கும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...



Recent Posts

Popular Posts