google-site-verification: googled5cb964f606e7b2f.html அக்டோபர் 2024 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 26 அக்டோபர், 2024

கொடி காய்கறி பயிர்களில் பழ ஈ மேலாண்மை...

முன்னுரை:

  • கொடி காய்கறி பயிர்களான பாகல், பீர்க்கன், புடல், சுரைக்காய், வெள்ளரி, தர்பூசணி, முலாம்பழம் போன்ற பயிர்களில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் ஆண்டு முழுவதும் பயிர்களில் சேதத்தை விளைவித்து சுமார் 60 முதல் 65 சதவீதம் வரை மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவது இந்த பழ ஈக்கள் தான்.
  • இந்தப் பழ ஈக்களின் தாக்குதல் கோடை பருவங்களில் அதிகம் தென்பட்டாலும் ஆண்டு முழுவதும் பயிர்களை பாதிக்கும் திறன் படைத்தது. இதை கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதான செயல் அல்ல.
  • காய்கறி பயிர்கள் மட்டுமின்றி பல்வேறு பழ வகை பயிர்களிலும் சேதத்தை ஏற்படுத்துகிறது.  உதாரணத்திற்கு மா, பப்பாளி, கொய்யா.இதனை கட்டுப்படுத்த விவசாயிகள் தொடர்ச்சியாக மருந்துகளை தெளித்தாலும் பூச்சி தாக்குதல் குறைவதில்லை. எனவே ஒருங்கிணைந்த முறையில் இதனை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 

பூச்சியின் வாழ்க்கை சுழற்சி:

  • முதிர்ந்த ஈக்கள் காய்களின் மீது மிக சிறிய துளை இட்டு சதைப் பகுதியில் சுமார் 6 முதல் 10 முட்டையை இடுகிறது. 
  • இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த முட்டைகள் இளம் புழுக்களாக மாறும் இதுதான் காய்களில் சேதாரத்தை ஏற்படுத்தும்.
  • சுமார் ஒரு வாரம் கழித்து இந்த இளம் புழுக்கள் கூட்டுப்புழுவாக மாறி காய்கறிகளில் இருந்து கீழே விழுந்து தரையில் காணப்படும். 
  • சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு கூட்டுப் புழுவில் இருந்து முதிர்ந்த ஈக்கள் வெளிவந்து சுமார் ஒரு மாத காலம் வரை வாழும்.

பூச்சி தாக்குதலின் அறிகுறிகள்:


  • பாதிக்கப்பட்ட காய்களின் மேற்பரப்பில் சிறிய புள்ளி போன்ற சொரசொரப்பான அமைப்பு காணப்படும். 
  • காய்கள் நன்கு முதிர்ச்சி அடையும் முன்னதாக உதிரும் நிலை ஏற்படலாம். 
  • காய்கள் அழுகுதல் சில நேரங்களில் தென்படும். 
  • பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அதனை உடைத்து பார்த்தால் அதன் உட்பகுதியில் புழுக்கள் இருப்பதை காணலாம். 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • சேதாரத்தை விளைவிக்கும் இளம் புழுக்கள் மற்றும் முட்டையிடும் அந்து பூச்சிகளை கட்டுப்படுத்தினால் சேதாரத்தை தவிர்க்கலாம் அதற்கான ஒருங்கிணைந்த முறையில் பார்ப்போம்.
  • வயலை சுத்தமாக பராமரிக்க வேண்டும் மேலும் உதிர்ந்த காய்களை உடனடியாக சேகரித்து வயலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
  • கூட்டுப் புழுக்களை அழிக்க ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு அல்லது வெப்பம் கொட்டை இடலாம் ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் குருணை வடிவில் கிடைக்க பெறும் Chlorpyriphos மருந்தை மணலுடன் கலந்து பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தெளித்து பின்னர் நீர் பாய்ச்சுவதால் கூட்டுப்புழுவை அழிக்கலாம்.
  • மஞ்சள் நிற ஒட்டுப்பொறி பயன்படுத்தி முதிர்ந்த பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

  • ஊடுபயிர் சாகுபடி செய்தல், வரப்பு பயிராக பீர்கன் சாகுபடி செய்தல், நச்சு தீனி தயாரிப்பு செய்து வைத்தல், இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்துதல், கருவாட்டு பொறி தயார் செய்து வைத்தல் போன்ற பல்வேறு பொறிகளை பயன்படுத்தி கவர்ந்து அழிக்கலாம்.
  • இனக்கவர்ச்சி பொறி என்பது ரசாயனத்தால் உருவாக்கப்பட்ட மாத்திரையை பயன்படுத்தி ஆண் ஈக்களை கவர்ந்து அழிப்பதாகும்.தரையில் இருக்கும் கூட்டு புழுக்களை அழிக்க Mettarhizum உயிர் பூச்சிக்கொல்லியையும் பயன்படுத்தலாம்.

    • இயற்கை வழியில் தயார் செய்யப்படும் பூச்சி விரட்டி திரவங்கள் உதாரணத்திற்கு 3g கரைசல், புகையிலை கரைசல், பத்திலை கசாயம் போன்றவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம் அல்லது இயற்கை வழி உயிர் பூச்சி கொல்லிகளான Beaveria bassiana மற்றும் Bacillus thuringiensis கலந்து தொடர்ச்சியாக தெளித்து வரலாம்.

    • பழ ஈக்களை கட்டுப்படுத்தும் திறன் படைத்த ஒரு சில ரசாயன மருந்துகள் உள்ளது அதனை தேர்வு செய்து தேவை இருப்பின் தெளிக்கலாம். 
    • Spinosad / Spirotetramet + imidacloprid / Deltamethrin/ Thiamethoaxam + Lambda cyclothrin / Fibronil + imidacloprid

    *மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு... https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


    புதன், 23 அக்டோபர், 2024

    நெல் பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோய் மேலாண்மை...

    முன்னுரை:

    • நெல் சாகுபடியில்  பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும் அந்தந்த பருவத்திற்கு பிரதானமாக பயிர்களை தாக்கக்கூடிய நோய் மற்றும் பூச்சிகளை அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கை செயல்படுவது சிறந்தது. 
    • அந்த வகையில் பாக்டீரியா இலை கருகல் நோய் சாகுபடியில் உள்ள பயிர்களை தாக்க பிரதானமான தருணம். இந்த நோய் தாக்குதலால் சுமார் 60% வரை கூட மகசூல் இழப்பீடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பராமரிக்கும் விதம், ரகத்தின் தன்மை மற்றும் தட்பவெப்ப நிலை சூழ்நிலையை பொறுத்து மகசூல் இழப்பீடு ஏற்படும். 

    நோய் தாக்குதலுக்கான உகந்த சூழ்நிலைகள்: 

    • மிதமான வெப்பம் மற்றும் அதிக காற்று ஈரப்பதம் 
    • அடர் நடவு அதனால் ஏற்படும் கதகதப்பு தன்மை 
    • முந்தைய பயிர் கழிவுகளை முழுமையாக அகற்றாமல் அல்லது மக்காமல் இருத்தல் 
    • தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு 
    • முறையற்ற களை மேலாண்மை 

    பரவும் விதம்:

    • மழை அல்லது நீர்ப்பாசன மூலம் எளிதில் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு பரவுகிறது.
    • காலை நேரத்தில் வயலில் இறங்கி பணிகளை செய்வதன் மூலம் எளிதில் பரவுகிறது.

    தாக்குதலின் அறிகுறிகள்: 


    • பொதுவாக 15 முதல் 50 நாட்கள் வயதுடைய பயிர்கள் இந்த பாக்டீரியா தாக்குதலுக்கு மிகவும் உகந்தது.
    • தாக்குதலின் ஆரம்ப நிலையில் இலையின் விளிம்பு மற்றும் நுனியில் மஞ்சள் நிற மாற்றம் அடைவதை காண இயலும்.
    • இந்த நிற மாற்றம் படிப்படியாக இலையின் அடிப்பகுதியை நோக்கி பரவும். 
    • நாளடைவில் பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறத்தில் இருந்து வெளிர் பழுப்பு நிறம் மாற்றம் அடைந்து உதிர நேரிடும். 
    • ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட இடத்தை பார்க்கும் பொழுது பெரும்பான்மையான இலைகளின் நுனி பகுதி மஞ்சள் நிறமாக இருப்பதை பார்க்கும் பொழுது பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாடு  போன்று காணப்படும்.
    • பாதிக்கப்பட்ட பகுதியை சற்று உற்று நோக்கும் போது இதிலிருந்து மிக மிக சிறிய அளவில் திரவம் வெளியேறுவதை காண இயலும் இதை அடிப்படையாக வைத்து இதனை பாக்டீரியா இலை கருகல் நோய் என தீர்மானிக்கலாம்.

    கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

    • பாக்டீரியா நோய்களுக்கு எதிர்ப்பு திறன் உடைய ரகங்களை தேர்வு செய்ய வேண்டும்.
    • கரிப் பருவத்தில் நெல் நடவு மேற்கொள்ளும் பொழுது சற்று இடைவெளி அதிகமாக விட வேண்டும். 
    • மழை அல்லது பனிப்பொழிவு காணப்படும் பொழுது காலை நேரத்தில் வயலில் இறங்கி பணிகள் எதுவும் செய்ய வேண்டாம். 
    • தாக்குதலின் அறிகுறி தென்படும் பொழுது உடனடியாக அந்த இலைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
    • இந்த நோய் பிரதானமாக நீர் மூலம் பரவுவதால் பாசன நீர் வழியாக ஏக்கருக்கு 3 லிட்டர் வீதம் Bacillus subtilis திரவ உயிர் பூஞ்சானம் கொடுக்க வேண்டும். இதனை 15 நாட்களுக்கு ஒரு முறை என குறைந்தபட்சம் இரண்டு முறை கொடுப்பது நோய் பரவுதலை கட்டுப்படுத்த உதவி புரியும். 
    • அதிக அளவு தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும்.
    • பொட்டாசியம் மற்றும் நுண்ணூட்ட உரங்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்து வர வேண்டும்.
    • களைகளை அவ்வப்போது அகற்றி வர வேண்டும் மற்றும் முந்தைய பயிர் கழிவுகள் நன்கு மக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் இல்லையெனில் நடவுக்கு முன்னதாக 200 லிட்டர் WDC வயலில் விடலாம். 
    • இயற்கை முறையில் நோய் பரவுதலை கட்டுப்படுத்த pseudomonas மற்றும் bacillus ஆகியவற்றை ஆகியவற்றை குறிப்பிட்ட இடைவெளியில் கொடுக்கலாம். 
    • ரசாயன முறையில் கட்டுப்படுத்த காப்பர் ஆக்சி குளோரைடு, காப்பர் ஹைட்ராக்சைடு, ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற பாக்டீரியாவை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்களை இலை வழியாக தெளிக்கலாம். 

    இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்துபயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


    வியாழன், 17 அக்டோபர், 2024

    மழை பருவத்தில் பருத்தி சாகுபடியில் மெக்னீசியம் ஊட்டச்சத்து மேலாண்மை

    முன்னுரை: 

    • பருத்தி சாகுபடியில் ஊட்டச்சத்து வேளாண்மை என்பது மிக இன்றியமையாதது ஏனெனில் பருத்தி தொடர்ச்சியான வளர்ச்சி, பூக்கள் மற்றும் மகசூலை தரவல்லது. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பருத்தி பெரும்பான்மையான மானாவரி முறையில் சாகுபடி செய்யப்படுவதால் மழை பருவத்தில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டில் முக்கியமானதாக மெக்னீசியம் சத்து கருதப்படுகிறது.
    • பொதுவாக மெக்னீசியம் சத்து குறைபாடு பயிர்களில் பெரிய அளவு மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவதில்லை ஆனால் இங்கு மெக்னீசியம் சத்து நேரடியாக பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் இழப்பீட்டில் பிரதான பங்கு வகிப்பதால் அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

    பருத்தி சாகுபடியில் மெக்னீசியம் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்:

    • இலைகளுக்கு போதுமான பச்சையத்தை கொடுத்து அதிக உணவு உற்பத்தியை மேற்கொள்ள உதவுகிறது.
    • மெக்னீசியம் ஊட்டச்சத்து முறையான அளவு பயிரில் பராமரிக்கப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ளக்கூடிய தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து பயிர்களுக்கு பயனுள்ள வடிவில் மாறும்.
    • பருத்தியில் நார்ச்சத்தை அதிகப்படுத்துவதில் இதன் பணி அளப்பரியது. 
    • சீரான மற்றும் ஒருமித்த தருணத்தில் மகசூல் பெற உதவி புரிகிறது.
    • பயிர்களுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்ய மெக்னீசியம் தூண்டுவதுடன், நோய் மற்றும் பூச்சி தாக்குதலின் போது செல் அழிவதை மீட்டு கொடுப்பதிலும், எதிர்ப்பு சக்தியையும் பயிர்களுக்கு தரக்கூடியது.
    • சரிவிகித முறையில் இதனை கொடுக்கும் பொழுது நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். 

    மெக்னீசியம் குறைபாட்டு அறிகுறிகள்:

    • மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாடு பிரதானமாக பயிரின் அடி இலைகளில் அதாவது முதிர்ந்த இலைகளில் தான் காணப்படுகிறது. 
    • அடி இலைகளில் உள்ள நரம்புகள் பச்சையானதாகவும் அதற்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும் மாறும்.
    • நாளடைவில் இந்த இலையின் விளிம்புகளில் இளஞ்சிவப்பு நிற சிறு சிறு புள்ளிகள் காணப்படும்.
    • ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் பொழுது இந்த இலையின் பெரும்பான்மையான பகுதி சிகப்பு நிறமாக காட்சியளிக்கும்.
    • இதனால் பயிரின் உணவு உற்பத்தி குறைந்து குன்றிய பயிர் வளர்ச்சி, சில நேரங்களில் வாடல் மற்றும் மகசூல் இழப்பீடு பெரிய அளவில் ஏற்படுகிறது. 

    மெக்னீசியம் குறைபாட்டின் காரணங்கள்:

    • பருத்தி பிரதானமாக மானாவாரியில் சாகுபடி செய்வதால் மண்ணில் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருத்தல். 
    • அதிகமான மண் இறுக்கம், மணற்பாங்கான மண் மற்றும் சீரற்ற கார அமிலத்தன்மை நிலை உடைய மண்ணில் இதை பிரதானமாக காணப்படுகிறது. 
    • பயிர்களுக்கு அதிக அளவு தழைச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம்  ஊட்டச்சத்து கொடுக்கும் பொழுது இது மெக்னீசியம் ஊட்டச்சத்து கிடைப்பதை தடை செய்கிறது. 
    • இது எல்லாம் தவிர தொடர்ச்சியான மண் ஈரப்பதம் அல்லது மழைப்பொழிவு திகழும் பொழுது மெக்னீஷியம் ஊட்டச்சத்து குறைபாடு அதிக அளவு தென்படுகிறது.

    மேலாண்மை யுக்திகள்:

    • கடைசி உழவின் போது போதுமான அளவு மக்கிய தொழு அல்லது மண்புழு உரம் மற்றும் மெக்னீசியம் சல்பேட் 25 கிலோ ஆகியவற்றை ஒன்றாக கலந்து 24 மணி நேரம் கழித்து இடவேண்டும்.
    • மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு சுண்ணாம்பு இடுவதன் மூலம் மெக்னீசியம் கிடைப்பதை மேம்படுத்தலாம்.
    • மழைப் பருவத்தில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்தி, ஊட்டச்சத்து மண்ணுக்கு அடியில் செல்வதை தடுக்க வேண்டும்.
    • முதல் மற்றும் இரண்டாவது களை எடுப்பின் போது சிஎம்எஸ் எனப்படும் உரத்தை ஏக்கருக்கு ஒரு மூட்டை என இடலாம். 
    • இதர ஊட்டச்சத்துக்களை சரிவிகித அடிப்படையில் மட்டுமே கொடுக்க வேண்டும் அதிகமாக கொடுக்கக் கூடாது குறிப்பாக தழைச்சத்து மற்றும் பொட்டாசியம். 
    • தேவையின் அடிப்படையில் நீரில் கரையக்கூடிய மெக்னீசியம் சல்பேட்டை இலை வழியாக அவ்வப்போது கொடுத்து வரலாம்.

    இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


    செவ்வாய், 15 அக்டோபர், 2024

    மழை தருணத்தில் தக்காளி சாகுபடியில் நடவு முதல் அறுவடை வரை கவனிக்கப்பட வேண்டியவை...

    முன்னுரை: 

    நெல் போன்ற ஒரு சில பயிர்களை தவிர நாம் சாகுபடி செய்யும் அநேக  பயிர்களுக்கு மண் பகுதியில் ஈரப்பதமும் காற்றோட்டமும் சரிவிகித அடிப்படையில் கிடைக்கப் பெற வேண்டும். அப்பொழுதுதான் சீரான வளர்ச்சி மற்றும் மகசூல் பெற இயலும். இதேபோன்று பயிரின் மண் பகுதிக்கு மேல் இருக்கும் இலை பகுதியில் போதுமான அளவு வெப்பநிலையும் திகழ வேண்டும்.தொடர்ச்சியாக மழை பெய்யும் பொழுது தக்காளி சாகுபடியில் ஏற்படும் சில சவால்களை விரிவாக பார்ப்போம். 

    நாற்றாங்காலில் ஏற்படும் சவால்கள்:

    • பாத்தியில் விதைக்கப்பட்டுள்ள விதைகளில் முளைப்புத்திறன் குறைபாடு, வேர் அழுகல், தண்டு அழுகல், பேன் மற்றும் வண்டுகளால் ஏற்படும் அறிகுறிகள் காணப்படலாம். 
    • நன்கு உயரமான மேட்டுப்பாத்தி அமைத்து அதில் போதுமான அளவு மக்கிய தொழு உரம், டிரைக்கோடெர்மா, பாஸ்போபாக்டீரியா மற்றும்   ஹீயூமிக் அமிலம் இட வேண்டும்.
    • விதைகளை சற்று ஆழமாக விதைக்க  வேண்டும். 
    • மேட்டுபபாத்தி மழையால் பாதிக்கப்படாத அளவு தார்ப்பாய் உரிய உயரத்தில் கட்ட வேண்டும். இல்லையெனில் மேட்டுப்பாத்தியில் மக்கிய வைக்கோல்கள் 1இன்ச்  உயரத்திற்கு இட வேண்டும்.
    • விதைகள் முளைக்கும் போதும் முளைத்த பிறகும் வேர் மற்றும் கழுத்து அழுகல் நோய் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளதால் வாரம் ஒருமுறை  டிரைக்கோடெர்மா மற்றும் சூடோமோனாஸ் ஆகியவற்றை தலா 50 மில்லி நாற்றாங்காலில் ஊற்ற வேண்டும்.
    • பேன் மற்றும் வண்டு தாக்குதல் காணப்படும் பொழுது மெட்டாரைசியம் நாற்றாங்காலில் ஊற்ற வேண்டும்.

    வயலில் ஏற்படும் சவால்கள்:
    பயிர் வளர்ச்சி: 

    • தொடர்ச்சியான மழை அல்லது மண் ஈரப்பதத்தினால் வேர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆக்ஸிஜன் தடைபடுவதால் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள இயலாமல் குன்றிய பயிர் வளர்ச்சி காணப்படும்.
    • போதுமான பகல் வெப்பநிலை இல்லாத காரணத்தால் இலைகளினால் உணவு உற்பத்தி செய்ய இயலாமல் துவண்டு காணப்படாலாம்.
    • இதனால் தக்காளி பயிரில் பிரதானமாக தழைச்சத்து, இரும்பு சத்து, மெக்னீசியம், போரான் மற்றும் கால்சியம் பற்றாக்குறை காணப்படும்.
    • எனவே, மழைத் தருணத்தில் கிடைக்கப்பெறும் வெப்பநிலையை பயன்படுத்தி இலை வழியாக பேரூட்ட  மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை இட வேண்டும்.
    • பயிர்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு நொதிகளால் நடைபெறுகிறது.
    • வெப்பநிலை பற்றாக்குறை ஏற்படும் பொழுது பயிர்களில் வளர்ச்சி ஊக்கி உற்பத்தி தடைபடுவதால் அதனையும் நாம் இலை வழியாக கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
    • மழைக்காலத்தில் வாரம் ஒரு முறை இலை வழியாக ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கி  தெளிப்பது சிறந்தது.

    பூ பூத்தல் மற்றும் காய் பிடித்தல்:
    • தக்காளி வயலில் தொடர்ச்சியாக தண்ணீர் தேங்கி நின்றால் அல்லது தொடர்ச்சியான ஈரப்பதம்  இருந்தால் வேர்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்க பெறாமல் ஊட்டச்சத்துக்களை கிரகித்து பயிர்களுக்கு எடுத்து தருவதில் சிரமம் ஏற்படும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு பூ பிடித்தல் 27 முதல் 25% வரை குறையும். 
    • பகல் மற்றும் இரவு நேரத்தில் திகழும் குறைந்த வெப்பநிலை காரணமாக பூக்களில் மகரந்த சேர்க்கை நடைபெறாமல் பூ உதிர்வு அதிகம் காணப்படும். 
    • பூக்கள் விரிந்த உடன் அதில் ஈரப்பதம் தொடர்ச்சியாக இருக்கும் தருணத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோயினால் பூக்கள் சற்று கருகி அதிக அளவு உதிரும்.
    • இவை அனைத்தையும் தாங்கி வளரக்கூடிய பூக்கள் காயாக மாற வாய்ப்புகள் உள்ளது. தக்காளி பூக்கள் தன் மகரந்த சேர்க்கை மூலம் கருவுறுதல் நடைபெறுவதால் பூச்சி அல்லது காற்றுகள் பெரிய அளவு தேவைப்படாது.
    • அதே போன்று வெப்பநிலை குறைபாடு பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகள் உற்பத்தி தடை படுவதால் அதை நாம் செயற்கையாக 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கொடுத்தால் மட்டுமே பூப்பிடித்தலை அதிகப்படுத்த இயலும்.
    • மண்ணில் அதிக ஈரப்பதம் திகழும் பொழுது தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அவ்வாறு நாம் இடம் குறைந்தபட்ச உரம் கூட பயிரின் இலை வளர்ச்சிக்கு தேவைப்படுவதால் பூ பூத்தலை தாமதப்படுத்தும்.

    நோய்கள்:
    வேர் மற்றும் கழுத்து அழுகல்:

    • இறுக்கமான மற்றும் வடிகால் வசதி இல்லாத வயலில் இந்த நோய் தொடர்ச்சியாக காணப்படும்.
    • மண்ணின் கிடைமட்டத்தில் உள்ள தண்டுப்பகுதியில் நீர்த்த புண்கள் தோன்றி நாளடைவில் செடிகள் முறிந்து இறந்து விடும்.
    • இந்த நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் பயிர்கள் துவண்டும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதலையும் காண இயலும்.

    பாக்டீரியா வாடல் நோய்:

    • அதிக மழைப்பொழிவு மற்றும் காற்று ஈரப்பதம் திகழும் பொழுது இந்த பாக்டீரியா வாடல் நோய் அதிகம் தென்படும்.
    • நன்கு வளர்ந்த பயிர்களில் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும் பின்னர் மொத்த பயிலும் துவண்டு காணப்படும். 

    • இரண்டு மூன்று தினங்களில் பயிர்கள் பச்சையாக இருக்கும் பொழுது வாடி இறந்துவிடும். 
    • இந்த நோய் நீர் வழியாக பரவும் அபாயம் உள்ளதால் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு தண்ணீர் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 
    • தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றிவிட்டு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பேசில்லஸ் சப்டில்லிஸ் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.

    • வாடல் நோய்: 

    • பாக்டீரியா வாடல் நோய் போன்றே பூஞ்சைகளாலும் வாடல் நோய் தொடர்ச்சியான மண் ஈரப்பதம் இருக்கும் பொழுது ஏற்படும். இந்த நோய் தாக்குதல் பரவாமல் இருக்க ட்ரைகோடெர்மா விரிடி தெளிப்பு வாயிலாகவும் பாசன நீர் வாயிலாகவும் கொடுக்க வேண்டும். 

    • இலைப்புள்ளி நோய்கள்: 

    • பருவ மழையின் போது இலை புள்ளி நோய்களும் உருவாக வாய்ப்புகள் உள்ளது. இதில் பல வகைகள் உள்ளதால் அதற்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    • காய் அல்லது பழங்களில் ஏற்படும் மாற்றங்கள்:

    • பழம் அல்லது காய்களில் மழைக்காலங்களில் பாக்டீரியா தாக்குதலால்  புள்ளிகள் காணப்படும்.

    • வேர்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காததாலும் அதனால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்களால் காய்கள் ஒழுங்கற்ற முறையில் பழுக்கும். 

    • ஒழுங்கற்ற வடிவில் காய்கள் தென்படும். 

    • காய் அல்லது பழங்களில் வெடிப்புகள் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் காணப்படும் இது தட்பவெட்ப சூழ்நிலை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பாகும். 
      இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் பயிர் சாகுபடி சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்..https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

    Recent Posts

    Popular Posts