மழை தருணத்தில் தக்காளி சாகுபடியில் நடவு முதல் அறுவடை வரை கவனிக்கப்பட வேண்டியவை...
|முன்னுரை:
நெல் போன்ற ஒரு சில பயிர்களை தவிர நாம் சாகுபடி செய்யும் அநேக பயிர்களுக்கு மண் பகுதியில் ஈரப்பதமும் காற்றோட்டமும் சரிவிகித அடிப்படையில் கிடைக்கப் பெற வேண்டும். அப்பொழுதுதான் சீரான வளர்ச்சி மற்றும் மகசூல் பெற இயலும். இதேபோன்று பயிரின் மண் பகுதிக்கு மேல் இருக்கும் இலை பகுதியில் போதுமான அளவு வெப்பநிலையும் திகழ வேண்டும்.தொடர்ச்சியாக மழை பெய்யும் பொழுது தக்காளி சாகுபடியில் ஏற்படும் சில சவால்களை விரிவாக பார்ப்போம்.
நாற்றாங்காலில் ஏற்படும் சவால்கள்:
- பாத்தியில் விதைக்கப்பட்டுள்ள விதைகளில் முளைப்புத்திறன் குறைபாடு, வேர் அழுகல், தண்டு அழுகல், பேன் மற்றும் வண்டுகளால் ஏற்படும் அறிகுறிகள் காணப்படலாம்.
- நன்கு உயரமான மேட்டுப்பாத்தி அமைத்து அதில் போதுமான அளவு மக்கிய தொழு உரம், டிரைக்கோடெர்மா, பாஸ்போபாக்டீரியா மற்றும் ஹீயூமிக் அமிலம் இட வேண்டும்.
- விதைகளை சற்று ஆழமாக விதைக்க வேண்டும்.
- மேட்டுபபாத்தி மழையால் பாதிக்கப்படாத அளவு தார்ப்பாய் உரிய உயரத்தில் கட்ட வேண்டும். இல்லையெனில் மேட்டுப்பாத்தியில் மக்கிய வைக்கோல்கள் 1இன்ச் உயரத்திற்கு இட வேண்டும்.
- விதைகள் முளைக்கும் போதும் முளைத்த பிறகும் வேர் மற்றும் கழுத்து அழுகல் நோய் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளதால் வாரம் ஒருமுறை டிரைக்கோடெர்மா மற்றும் சூடோமோனாஸ் ஆகியவற்றை தலா 50 மில்லி நாற்றாங்காலில் ஊற்ற வேண்டும்.
- பேன் மற்றும் வண்டு தாக்குதல் காணப்படும் பொழுது மெட்டாரைசியம் நாற்றாங்காலில் ஊற்ற வேண்டும்.
வயலில் ஏற்படும் சவால்கள்:
பயிர் வளர்ச்சி:
- தொடர்ச்சியான மழை அல்லது மண் ஈரப்பதத்தினால் வேர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆக்ஸிஜன் தடைபடுவதால் ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள இயலாமல் குன்றிய பயிர் வளர்ச்சி காணப்படும்.
- போதுமான பகல் வெப்பநிலை இல்லாத காரணத்தால் இலைகளினால் உணவு உற்பத்தி செய்ய இயலாமல் துவண்டு காணப்படாலாம்.
- இதனால் தக்காளி பயிரில் பிரதானமாக தழைச்சத்து, இரும்பு சத்து, மெக்னீசியம், போரான் மற்றும் கால்சியம் பற்றாக்குறை காணப்படும்.
- எனவே, மழைத் தருணத்தில் கிடைக்கப்பெறும் வெப்பநிலையை பயன்படுத்தி இலை வழியாக பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை இட வேண்டும்.
- பயிர்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் அதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு நொதிகளால் நடைபெறுகிறது.
- வெப்பநிலை பற்றாக்குறை ஏற்படும் பொழுது பயிர்களில் வளர்ச்சி ஊக்கி உற்பத்தி தடைபடுவதால் அதனையும் நாம் இலை வழியாக கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
- மழைக்காலத்தில் வாரம் ஒரு முறை இலை வழியாக ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கி தெளிப்பது சிறந்தது.
பூ பூத்தல் மற்றும் காய் பிடித்தல்:
- தக்காளி வயலில் தொடர்ச்சியாக தண்ணீர் தேங்கி நின்றால் அல்லது தொடர்ச்சியான ஈரப்பதம் இருந்தால் வேர்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்க பெறாமல் ஊட்டச்சத்துக்களை கிரகித்து பயிர்களுக்கு எடுத்து தருவதில் சிரமம் ஏற்படும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு பூ பிடித்தல் 27 முதல் 25% வரை குறையும்.
- பகல் மற்றும் இரவு நேரத்தில் திகழும் குறைந்த வெப்பநிலை காரணமாக பூக்களில் மகரந்த சேர்க்கை நடைபெறாமல் பூ உதிர்வு அதிகம் காணப்படும்.
- பூக்கள் விரிந்த உடன் அதில் ஈரப்பதம் தொடர்ச்சியாக இருக்கும் தருணத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோயினால் பூக்கள் சற்று கருகி அதிக அளவு உதிரும்.
- இவை அனைத்தையும் தாங்கி வளரக்கூடிய பூக்கள் காயாக மாற வாய்ப்புகள் உள்ளது. தக்காளி பூக்கள் தன் மகரந்த சேர்க்கை மூலம் கருவுறுதல் நடைபெறுவதால் பூச்சி அல்லது காற்றுகள் பெரிய அளவு தேவைப்படாது.
- அதே போன்று வெப்பநிலை குறைபாடு பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி ஊக்கிகள் உற்பத்தி தடை படுவதால் அதை நாம் செயற்கையாக 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கொடுத்தால் மட்டுமே பூப்பிடித்தலை அதிகப்படுத்த இயலும்.
- மண்ணில் அதிக ஈரப்பதம் திகழும் பொழுது தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் அவ்வாறு நாம் இடம் குறைந்தபட்ச உரம் கூட பயிரின் இலை வளர்ச்சிக்கு தேவைப்படுவதால் பூ பூத்தலை தாமதப்படுத்தும்.
நோய்கள்:
வேர் மற்றும் கழுத்து அழுகல்:
- இறுக்கமான மற்றும் வடிகால் வசதி இல்லாத வயலில் இந்த நோய் தொடர்ச்சியாக காணப்படும்.
- மண்ணின் கிடைமட்டத்தில் உள்ள தண்டுப்பகுதியில் நீர்த்த புண்கள் தோன்றி நாளடைவில் செடிகள் முறிந்து இறந்து விடும்.
- இந்த நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் பயிர்கள் துவண்டும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதலையும் காண இயலும்.
பாக்டீரியா வாடல் நோய்:
- அதிக மழைப்பொழிவு மற்றும் காற்று ஈரப்பதம் திகழும் பொழுது இந்த பாக்டீரியா வாடல் நோய் அதிகம் தென்படும்.
- நன்கு வளர்ந்த பயிர்களில் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும் பின்னர் மொத்த பயிலும் துவண்டு காணப்படும்.
- இரண்டு மூன்று தினங்களில் பயிர்கள் பச்சையாக இருக்கும் பொழுது வாடி இறந்துவிடும்.
- இந்த நோய் நீர் வழியாக பரவும் அபாயம் உள்ளதால் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு தண்ணீர் செல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- தீவிரமாக பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றிவிட்டு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை பேசில்லஸ் சப்டில்லிஸ் வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
- வாடல் நோய்:
- பாக்டீரியா வாடல் நோய் போன்றே பூஞ்சைகளாலும் வாடல் நோய் தொடர்ச்சியான மண் ஈரப்பதம் இருக்கும் பொழுது ஏற்படும். இந்த நோய் தாக்குதல் பரவாமல் இருக்க ட்ரைகோடெர்மா விரிடி தெளிப்பு வாயிலாகவும் பாசன நீர் வாயிலாகவும் கொடுக்க வேண்டும்.
- இலைப்புள்ளி நோய்கள்:
- பருவ மழையின் போது இலை புள்ளி நோய்களும் உருவாக வாய்ப்புகள் உள்ளது. இதில் பல வகைகள் உள்ளதால் அதற்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- காய் அல்லது பழங்களில் ஏற்படும் மாற்றங்கள்:
- பழம் அல்லது காய்களில் மழைக்காலங்களில் பாக்டீரியா தாக்குதலால் புள்ளிகள் காணப்படும்.
- வேர்களுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காததாலும் அதனால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய்களால் காய்கள் ஒழுங்கற்ற முறையில் பழுக்கும்.
- ஒழுங்கற்ற வடிவில் காய்கள் தென்படும்.
- காய் அல்லது பழங்களில் வெடிப்புகள் கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் காணப்படும் இது தட்பவெட்ப சூழ்நிலை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பாதிப்பாகும்.இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் பயிர் சாகுபடி சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்..https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக