google-site-verification: googled5cb964f606e7b2f.html மழை பருவத்தில் பருத்தி சாகுபடியில் மெக்னீசியம் ஊட்டச்சத்து மேலாண்மை ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 17 அக்டோபர், 2024

மழை பருவத்தில் பருத்தி சாகுபடியில் மெக்னீசியம் ஊட்டச்சத்து மேலாண்மை

முன்னுரை: 

  • பருத்தி சாகுபடியில் ஊட்டச்சத்து வேளாண்மை என்பது மிக இன்றியமையாதது ஏனெனில் பருத்தி தொடர்ச்சியான வளர்ச்சி, பூக்கள் மற்றும் மகசூலை தரவல்லது. தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் பருத்தி பெரும்பான்மையான மானாவரி முறையில் சாகுபடி செய்யப்படுவதால் மழை பருவத்தில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டில் முக்கியமானதாக மெக்னீசியம் சத்து கருதப்படுகிறது.
  • பொதுவாக மெக்னீசியம் சத்து குறைபாடு பயிர்களில் பெரிய அளவு மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவதில்லை ஆனால் இங்கு மெக்னீசியம் சத்து நேரடியாக பயிரின் வளர்ச்சி மற்றும் மகசூல் இழப்பீட்டில் பிரதான பங்கு வகிப்பதால் அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

பருத்தி சாகுபடியில் மெக்னீசியம் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம்:

  • இலைகளுக்கு போதுமான பச்சையத்தை கொடுத்து அதிக உணவு உற்பத்தியை மேற்கொள்ள உதவுகிறது.
  • மெக்னீசியம் ஊட்டச்சத்து முறையான அளவு பயிரில் பராமரிக்கப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ளக்கூடிய தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து பயிர்களுக்கு பயனுள்ள வடிவில் மாறும்.
  • பருத்தியில் நார்ச்சத்தை அதிகப்படுத்துவதில் இதன் பணி அளப்பரியது. 
  • சீரான மற்றும் ஒருமித்த தருணத்தில் மகசூல் பெற உதவி புரிகிறது.
  • பயிர்களுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்ய மெக்னீசியம் தூண்டுவதுடன், நோய் மற்றும் பூச்சி தாக்குதலின் போது செல் அழிவதை மீட்டு கொடுப்பதிலும், எதிர்ப்பு சக்தியையும் பயிர்களுக்கு தரக்கூடியது.
  • சரிவிகித முறையில் இதனை கொடுக்கும் பொழுது நல்ல விளைச்சலை எதிர்பார்க்கலாம். 

மெக்னீசியம் குறைபாட்டு அறிகுறிகள்:

  • மெக்னீசியம் ஊட்டச்சத்து குறைபாடு பிரதானமாக பயிரின் அடி இலைகளில் அதாவது முதிர்ந்த இலைகளில் தான் காணப்படுகிறது. 
  • அடி இலைகளில் உள்ள நரம்புகள் பச்சையானதாகவும் அதற்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும் மாறும்.
  • நாளடைவில் இந்த இலையின் விளிம்புகளில் இளஞ்சிவப்பு நிற சிறு சிறு புள்ளிகள் காணப்படும்.
  • ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கும் பொழுது இந்த இலையின் பெரும்பான்மையான பகுதி சிகப்பு நிறமாக காட்சியளிக்கும்.
  • இதனால் பயிரின் உணவு உற்பத்தி குறைந்து குன்றிய பயிர் வளர்ச்சி, சில நேரங்களில் வாடல் மற்றும் மகசூல் இழப்பீடு பெரிய அளவில் ஏற்படுகிறது. 

மெக்னீசியம் குறைபாட்டின் காரணங்கள்:

  • பருத்தி பிரதானமாக மானாவாரியில் சாகுபடி செய்வதால் மண்ணில் போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் இருத்தல். 
  • அதிகமான மண் இறுக்கம், மணற்பாங்கான மண் மற்றும் சீரற்ற கார அமிலத்தன்மை நிலை உடைய மண்ணில் இதை பிரதானமாக காணப்படுகிறது. 
  • பயிர்களுக்கு அதிக அளவு தழைச்சத்து, பொட்டாசியம் மற்றும் கால்சியம்  ஊட்டச்சத்து கொடுக்கும் பொழுது இது மெக்னீசியம் ஊட்டச்சத்து கிடைப்பதை தடை செய்கிறது. 
  • இது எல்லாம் தவிர தொடர்ச்சியான மண் ஈரப்பதம் அல்லது மழைப்பொழிவு திகழும் பொழுது மெக்னீஷியம் ஊட்டச்சத்து குறைபாடு அதிக அளவு தென்படுகிறது.

மேலாண்மை யுக்திகள்:

  • கடைசி உழவின் போது போதுமான அளவு மக்கிய தொழு அல்லது மண்புழு உரம் மற்றும் மெக்னீசியம் சல்பேட் 25 கிலோ ஆகியவற்றை ஒன்றாக கலந்து 24 மணி நேரம் கழித்து இடவேண்டும்.
  • மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு சுண்ணாம்பு இடுவதன் மூலம் மெக்னீசியம் கிடைப்பதை மேம்படுத்தலாம்.
  • மழைப் பருவத்தில் போதுமான வடிகால் வசதி ஏற்படுத்தி, ஊட்டச்சத்து மண்ணுக்கு அடியில் செல்வதை தடுக்க வேண்டும்.
  • முதல் மற்றும் இரண்டாவது களை எடுப்பின் போது சிஎம்எஸ் எனப்படும் உரத்தை ஏக்கருக்கு ஒரு மூட்டை என இடலாம். 
  • இதர ஊட்டச்சத்துக்களை சரிவிகித அடிப்படையில் மட்டுமே கொடுக்க வேண்டும் அதிகமாக கொடுக்கக் கூடாது குறிப்பாக தழைச்சத்து மற்றும் பொட்டாசியம். 
  • தேவையின் அடிப்படையில் நீரில் கரையக்கூடிய மெக்னீசியம் சல்பேட்டை இலை வழியாக அவ்வப்போது கொடுத்து வரலாம்.

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts