google-site-verification: googled5cb964f606e7b2f.html 🌞கோடை பயிரும் 🥀பாக்டீரியா வாடல் நோயும் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

செவ்வாய், 21 ஏப்ரல், 2026

🌞கோடை பயிரும் 🥀பாக்டீரியா வாடல் நோயும்

முன்னுரை:

  • கோடைகாலத்தில் சாகுபடி செய்யப்படும் கத்தரி, தக்காளி, மிளகாய், உருளை மற்றும் வெள்ளரி குடும்பத்தைச் சார்ந்த பல்வேறு காய்கறி பயிர்களில் பாக்டீரியா வாடல் நோய் தாக்குதல் அதிகம் காணப்படும். நோயால் பாதிக்கப்பட்ட பயிர்கள் திடீரென வாடி இறந்துவிடும்.
  • இதனால் பெரிய அளவில் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது. சராசரியாக 30 லிருந்து 70% வரை கூட இந்நோய் தாக்கதால் மகசூல் இழப்பீடு ஏற்படும்.
  • இந்த நோயானது _Ralstonia solanacearum_என்று அழைக்கப்படும் பாக்டீரியா தொற்றால் ஏற்படுகிறது. மண் மற்றும் பயிர் கழிவுகளில் இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை அமையும் பொழுது பல்கிப் பெருகி சாகுபடி பயிரில் நோய் தாக்குதலை ஏற்படுகிறது. 

கோடைகாலத்தில் ஏன் அதிகம்? 

  • கோடைகாலத்தில் பயிர்களுக்கு ஏற்படக்கூடிய அழுத்தம், அதிக சுற்று சூழல் வெப்பநிலை மற்றும் மண் வெப்ப நிலையில் ஏற்படும் அதீத மாற்றங்கள் ஆகிய காரணங்களினால் கோடைகாலத்தில் பாக்டீரியா வாடல் நோய் அதிகம் காணப்படுகிறது. 
  • கோடைகாலத்தில் மண் வெப்பநிலை அதிகமாக (30-40 டிகிரி செல்சியஸ்) உயரும் தருணத்தில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நாம் தண்ணீர் பாச்சும் பொழுது திடீரென மண் வெப்பநிலை குறையும் சூழலில் விரும்பி விரும்பி வாழும். இதன் காரணமாக தீமை செய்யும் பாக்டீரியாக்கள் வேகமாக பெருக்கமடைந்து பயிரை தாக்கும். 
  • கூடுதலாக தொடர்ச்சியாக ஒரே பயிரை சாகுபடி செய்வது, முந்தைய பயிர் கழிவு எச்சங்கள் முழுமையாக அகற்றாமல் இருப்பது மற்றும் நோய் தாக்குதலுக்கு உட்பட்ட நாற்றுகளை பயன்படுத்துவது நோய் தாக்குதலை அதிகரிக்கும். 

🪾நோய் தாக்கம்: 

  1. மண்ணில் மிக நீண்ட நாட்களுக்கு உறக்க நிலையில் இருக்கும் பாக்டீரியாக்கள் சாதகமான நேரத்தில் பயிரின் வேர்களை தாக்கும். 
  1. மண்ணிலிருந்து வேர் வழியாக தாவரங்களின் வாஸ்குலார் திசுக்களை சென்றடைவதால் போதிய தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்காமல் திடீரென வாடி இறந்துவிடும். 

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 


  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது பகல் நேரங்களில் இலைகள் சற்று வாடி காட்சியளிக்கும். 
  • மாலை மற்றும் இரவு நேரத்தில் தற்காலிகமாக பயிர்கள் நன்றாக இருப்பது போன்ற தோன்றும். 
  • ஆனால் நோய் தாக்குதல் சற்று தீவிரம் அடையும் பொழுது திடீரென பயிர்கள் வாடி இறந்துவிடும். 
  • பயிர் மற்றும் இலைகள் அனைத்தும் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும். பூஞ்சை வாடல் நோயால் ஏற்படும் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இங்கு முற்றிலும் இருக்காது. 
  • பாதிக்கப்பட்ட பயிரின் தண்டு பகுதியை பிளந்து பார்த்தால் நிறமாற்றம் காணப்படும். 
  • வயலில் அங்கு இங்குமாக திட்டாக காணப்படும் இது போன்ற அறிகுறிகள் நாளடைவில் பரவ ஆரம்பிக்கும். 
  • முறையாக கட்டுப்படுத்தவில்லை எனில் பயிர் இழப்பீடு பெரிய அளவில் ஏற்படும். 

🌱கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஒரே பயிரை மீண்டும் மீண்டும் சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும். மாற்று பயிராக பயிறு வகை பயிர்களை பயிரிடலாம். 
  • தரமான விதை அல்லது நாற்றுகளை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். கோடை பருவத்திற்கென பரிந்துரைக்கப்படும் ரகங்களை தேர்வு செய்து சாகுபடி மேற்கொண்டால் சிறந்தது. 
  • அடி உரமாக நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு திரவங்களை பயன்படுத்தி ஊட்டமேற்றி இட வேண்டும். 
  • இயற்கை இடு பொருட்களை பயன்படுத்தி சாகுபடி செய்யும் பொழுது அதிக வெப்பநிலையை தாங்கி வளருவதுடன் நோய் எதிர்ப்பு திறனுடன் காணப்படும். 
  • மூடாக்கு அமைத்து பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மண் அதிகம் வெப்பமடைவதை தவிர்க்கலாம் மேலும் மண் ஈரப்பதம் பாதுகாக்கப்படும். 
  • கோடைப் பருவத்தில் முன்னெச்சரிக்கையாக 15 நாட்களுக்கு ஒரு முறை trichoderma அல்லது bacillus உயிரியல் திரவம் மற்றும் ஈயம் கரைசல் ஏக்கருக்கு தலா மூன்று லிட்டர் என்ற அளவில் தரை வழியாக கொடுக்கவும். 
  • காலை அல்லது மதிய நேரத்தில் நீர் பாய்ச்சுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாலை ஐந்து மணிக்கு மேல் அல்லது இரவு நேரங்களில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவது மிகவும் உகந்தது.
  • நோய் தாக்குதல் தென்பட்டால் உடனடியாக பாதித்த செடிகளை வேரோடு அப்புறப்படுத்தி அகற்றவும். 
  • பாதித்த செடிகள் இருந்த இடம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள செடிகளுக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி என்ற அளவில் trichoderma/ bacillus, 200 மில்லி ஈயம் கரைசல் மற்றும் 100 மில்லி ஹியூமிக் அமிலம் கலந்து வேர் மண்டலம் நனையும்படி ஊற்றவும். 
  • வயலில் எப்போதும் மிதமான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்யவும். மண் அதிக வெப்பமடைந்தால் பாக்டீரியாக்கள் பெருக்கம் அதிகமாகும். 
  • தட்பவெப்ப சூழ்நிலை, பயிர் மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப உரிய இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். 
  • இரசாயன முறையில் கட்டுப்படுத்த காப்பர் ஆக்சி குளோரைடு அல்லது காப்பர் ஹைட்ராக்சைடு மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை பரிந்துரைக்கப்பட்ட அளவில் வேர் மண்டலத்தில் ஊற்ற வேண்டும். 

  • மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX

0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts