தென்னையில் குரும்பை/காய்கள் உதிர்வதற்கான காரணங்கள் மற்றும் சரி செய்யும் வழிமுறைகள்:
முன்னுரை:
பொதுவாக இளம் தென்னை மரங்களில் குரும்பை மற்றும் காய்கள் உதிர்வது இயற்கையான ஆகும். ஆனால் வளர்ந்த மற்றும் நன்கு பராமரிக்க கூடிய மரங்களில் குரும்பை மற்றும் காய் உதிர்வு என்பது பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டதாகும். குரும்பை மற்றும் காய்கள் உதிர்வு காரணமாக சுமார் 25 சதவீதம் வரை மகசூல் இழப்பீடு ஏற்படுகிறது.
காரணங்கள்:
மண்ணின் கார அமிலத்தன்மை:
- மண்ணின் கார அமிலத்தன்மை 5 -க்கு குறைவாக இருந்தால் அதனை அமிலத்தன்மை உடைய மண் என்பார்கள். இதனை சரி செய்ய மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு சுண்ணாம்பு சத்து இடவேண்டும். அதேபோன்று மண்ணின் கார அமிலத்தன்மை 8-க்கு அதிகமாக இருந்தால் உவர்/களர் மண் என்பார்கள் இதனை சரி செய்ய தேவையான அளவு ஜிப்சம் இடவேண்டும்.
- மண்ணின் கார அமிலத்தன்மையை பொறுத்தே நாம் மண்ணில் இடும் ஊட்டச்சத்துக்கள் பயிர்களை சென்றடையும். நாம் எவ்வளவுதான் ஊட்டச்சத்துக் கொடுத்து பராமரித்தாலும் மண்ணின் கார அமிலத்தன்மை குறிப்பிட்ட நிலையை தாண்டும் பொழுது ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைப்பதில் கண்டிப்பாக பற்றாக்குறை ஏற்படும்.
ஊட்டச்சத்து பற்றாக்குறை:
- போரான் நுண்ணூட்ட சத்து குறைபாட்டால் குரும்பை மற்றும் காய்கள் உதிரும் என நாம் அறிந்ததே. ஆனால் சரிவிகித முறையில் மற்ற ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கொடுக்கவில்லை என்றாலும் குறும்பை உதிர்வு காணப்படும். எனவே பேருட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்களை சரிவிகித அடிப்படையில் மரங்களுக்கு கொடுக்க வேண்டும்.
- மரம் ஒன்று இருக்கு நன்கு மக்கிய தொழு உரம் 15 முதல் 25 கிலோ, தழைச்சத்து 1.5 கிலோ, மணிச்சத்து 2 கிலோ, சாம்பல் சத்து 2 கிலோ, நுண்ணூட்டச் சத்து 150-200 கிராம், Humic குருணை - 250 கிராம் மற்றும் VAM -100 கிராம் ஆகியவற்றை மரம் ஒன்றிற்கு என வருடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இடலாம்.
- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தென்னை டானிக் 40 மில்லியை 160 மில்லி தண்ணீருடன் கலந்து மரம் ஒன்றுக்கு வேர் வழியாக வருடத்திற்கு இரண்டு முறை கொடுத்தல் குறும்பை மற்றும் இளம் காய்கள் உதிர்வை தவிர்க்கலாம்.
நீர் மேலாண்மை:
- கடுமையான வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை தென்னையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். ஒருமுறை தென்னை மரங்கள் கடுமையான வறட்சியை சந்தித்து விட்டால் சுமார் 2 முதல் 3 வருடங்கள் வரை அதன் பாதிப்பு மறைமுகமாக இருக்கும். எனவே சராசரியாக மரம் ஒன்று இருக்கு சொட்டுநீர் பாசன வழியாக தினசரி 50 லிட்டர் எனவும் வாய்க்கால் வழி பாசன மரங்களுக்கு 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை 400 லிட்டர் என்ற முறையிலும் நீர் பாய்ச்ச வேண்டும்.
- மரத்தின் தண்டுப் பகுதியில் இருந்து சுமார் ஒரு மீட்டர் தள்ளி சொட்டுநீர் அளவு பட்ட பாதி அமைத்து நீர் விட வேண்டும். நீர் இழப்பீட்டை தவிர்க்க பசுந்தாள் பயிர்களை வளர்த்தல், மூடாக்கு இடுதல், தென்னை நார் கழிவு மற்றும் மண் புழு உரம் இடலாம். உப்பு/உவர் தண்ணீர் உடைய நிலங்களுக்கு மாதம் ஒருமுறை ஈயம் அல்லது வேஸ்ட் டீ கம்போசர் பயன்படுத்த வேண்டும். கோடை காலங்களில் அதிக அளவு குறும்பை/இளம் காய்கள் உதிர்வதால் அதற்கு ஏற்றவாறு நீர் மேலாண்மையை கடைபிடிக்க வேண்டும்.
மண் மேலாண்மை:
மரத்தை சுற்றி உள்ள மண் அதிக இறுக்கம் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். மரத்தைச் சுற்றி 1.5 மீட்டர் வரை வருடத்திற்கு நான்கு முறை கொத்தி விட்டு கலைகள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும். அதிக மழைப்பொழிவு நேரத்தில் சிறிதளவு உப்பு மற்றும் அம்மோனியம் சல்பேட் இடுவதால் ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். தொடர்ச்சியாக மண் இறுக்கமாக இருந்தால் கால்சியம், போரான் மாங்கனிசு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் செடிகளுக்கு கிடைப்பதில் பின்னடைவு ஏற்படும்.
போரான் ஊட்டச்சத்து குறைபாடு:
- பொதுவாக ஊட்டச்சத்து குறைபாடு காய் மற்றும் பூக்கள் உதிர காரணமாக இருந்தாலும் தென்னையில் போரான் நுண்ணூட்ட சத்து குறைபாட்டை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதைப் பற்றி விரிவாக ஏற்கனவே நமது வலைதளத்தில் பதிவு செய்துள்ளோம் அதனை கீழே காணவும்.
- போரான் ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்ய மரம் ஒன்று இருக்கு வருடம் 250 முதல் 500 கிராம் போராக்ஸ் இட வேண்டும்.
மகரந்த சேர்க்கை:
- தென்னை மரம் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக காய்களை உருவாக்குகிறது. அதாவது காற்று மற்றும் பூச்சிகளின் உதவியால் ஒரு பூக்களில் இருந்து மற்றொரு பூக்கள் மகரந்தம் சென்று இனப்பெருக்கம் அடைவதால் காய்கள் உருவாகிறது.
- அளவுக்கு அதிகமான மழை அல்லது வெப்பம் காரணமாக போதுமான அளவு மகரந்த சேர்க்கை நடைபெறாத காரணத்தினால் பல்வேறு நிலைகளில் பூ மற்றும் காய்கள் உதிர்கிறது. மகரந்த சேர்க்கையை ஊக்குவிக்க தேனீ பெட்டிகள் வைக்கலாம், மரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பூச்செடிகளை வளர்க்கலாம் என பல வழிமுறைகள் உள்ளது.
தேர்வு செய்யும் ரகத்தின் செயல்பாடுகள்:
- ஒவ்வொரு தென்னை ரகங்களும் தனக்கே உரித்தான பண்புகளை கொண்டிருக்கும் அதன்படி குட்டை ரகங்களில் அதிகப்படியான பூ மற்றும் காய் உதிர்வு காணப்படும். குட்டை வகை தென்னை ரகங்களில் 50 முதல் 95 சதவீதம் வரையிலும் நெட்டை ரகங்களில் 40 முதல் 75 சதவீதமும் குறும்பை மற்றும் இளம் காய்கள். எனவே நாம் தேர்வு செய்யும் ரகத்தின் பண்புகளை தெரிந்து கொண்டு பின்னர் சாகுபடி செய்ய வேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகளின் செயல்பாடு:
- இயற்கையாகவே எந்த ஒரு மரங்களும் தனக்கு தேவையான வளர்ச்சி ஊக்குகளை உற்பத்தி செய்யும். ஆனால் அசாதாரண சூழ்நிலை காரணமாக தன்னால் உற்பத்தி செய்ய இயலாத வளர்ச்சி ஊக்கியை நாம் செடிகளுக்கு வழங்க வேண்டும். அதன்படி தென்னை மரங்கள் பூக்கும் தருணத்தில் NAA எனப்படும் நாப்தலின் அசிட்டிக் ஆசிட்டை 10 லிட்டர் தண்ணீருக்கு இரண்டு முதல் மூன்று மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
நோய் மற்றும் பூச்சி மேலாண்மை:
எந்த ஒரு பயிரிலும் நோய் மற்றும் பூச்சியை முறையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மறைமுகமாக பயிர்களின் உற்பத்தி திறனை பாதித்து மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். தென்னையில் பூக்கள் வெடிக்கும் தருணத்தில் அதிக அளவு பூஞ்சாண மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் தாக்கும் அதை சரியாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://www.blogger.com/blog/post/edit/4214495925679616483/3870744730597550618
0 Comments:
கருத்துரையிடுக