தென்னை சாகுபடியில் கோகோகான் உயிரியல் திரவத்தின் முக்கியத்துவமும் தயாரிப்பு முறையும்
தென்னை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்பட்டாலும், பிரதான நோய்களாக வேர் வாடல் மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய் காணப்படுகிறது. இந்த இரண்டு நோய்களும் மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துவதுடன் பயிர் இறந்து விடுவதால் ஒட்டுமொத்த உற்பத்தியும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இந்த நோய்களை கட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டாலும் முன்னெச்சரிக்கையாக அல்லது ஆரம்ப நிலை அறிகுறிகள் காணப்படும் பொழுது தென்னை மரங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் கோகோகான் (Cococon) பயன்படுத்துவதன் மூலம் ஆரம்ப நிலையில் காணப்படும் நோய்களை கட்டுப்படுத்துவதுடன் பயிர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து அளித்து நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கும்.
கோகோகான் உயிரியல் திரவத்தை தயார் செய்யும் வழிமுறைகள்:
- 200 லிட்டர் கொள்ளளவு உடைய ட்ரம்மில் 150 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதில் 10 கிலோ நாட்டுச் சர்க்கரை, 5 லிட்டர் தயிர் மற்றும் 500 கிராம் சமையல் உப்பு ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி விட வேண்டும்.
- இந்த கலவையில் 5 லிட்டர் தாய் கோகோகான் கலவையை கலந்து நன்கு கலக்கி விட வேண்டும்.
- இந்தக் ட்ரம்மை சாக்கு பை பயன்படுத்தி மூடி நிழலில் வைக்க வேண்டும்.
- தினசரி குறைந்தது இரண்டு முதல் மூன்று முறை சுத்தமான மூங்கில் கழியை பயன்படுத்தி நன்கு கலக்கி விட வேண்டும்.
- 7 நாட்களுக்கு பிறகு இதில் இருக்கக்கூடிய நுண்ணுயிர் கலவை நன்கு வளர்ந்து விடும் பிறகு இதனை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
- தயார் செய்த கலவையில் இருந்து இரண்டு லிட்டர் எடுத்து 8 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு மரத்திற்கு 10 லிட்டர் வீதம் மிதமான ஈரப்பதம் இருக்கும் பொழுது வேர் பகுதியில் ஊற்ற வேண்டும்.
- இந்த நுண்ணுயிர் கலவையை இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.
- இந்த நுண்ணுயிர் கலவையை பயன்படுத்தும் போது ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
பயன்கள்:
- பயிர்களுக்கு தேவையான சத்துக்களை எளிதில் கிடைக்கச் செய்கிறது.
- மரங்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை கொடுக்கும்.
- நல்ல பயிர் வளர்ச்சி காணப்படும்.
- காய் பிடிப்பு திறன் மேம்பட்டு காணப்படும்.
- மண்ணில் நன்மை செய்யக்கூடிய உயிரினங்களின் எண்ணிக்கை மேம்பட்டு காணப்படும்.
- நீண்ட கால அடிப்படையில் பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை அளிக்கும்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX