google-site-verification: googled5cb964f606e7b2f.html தென்னை டானிக் (Coconut Tonic) பயன்படுத்தும் முறையும் பயன்களும்... ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வியாழன், 28 நவம்பர், 2024

தென்னை டானிக் (Coconut Tonic) பயன்படுத்தும் முறையும் பயன்களும்...

தென்னை டானிக்:

  • தென்னை பல்லாண்டு பயிர் என்பதால் ஊட்டத்து மேலாண்மையில் தனி கவனம் செலுத்த வேண்டும். மண் வளம் மற்றும் பயிரின் வயதிற்கு ஏற்றவாறு தேவையான ஊட்டச்சத்துககளை தேவையான நேரத்தில் கொடுத்து வர வேண்டும். காய்க்கும் பருவம் அல்லது காய்ப்பில் உள்ள தென்னை மரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை ஒரு வருடம் கொடுக்கவில்லை எனில் அதனால் ஏற்படும் மகசூல் இழப்பீட்டை அடுத்து வரும் 2-3 வருடங்களுக்கு காண இயலும்.தென்னையில் குரும்பை உதிர்வு என்பது இயற்கையானதாகவே கருதப்படுகிறது. 
  • தென்னை மரத்தின் பாளையில் உற்பத்தி செய்யப்படும் பலநூறு பூக்கள் தென்னங்காயாக மாறுதல் அடைதல் என்பது இயற்கைக்கு மாறானது. இதனால் தென்னை மரங்கள் தனது சக்திக்கு/திறனுக்கு ஏற்றவாறு குரும்பைகளை தக்கவைத்துக் கொண்டு, இதர குரும்பைகளை உதிர செய்கிறது. உதிரக் கூடிய குரும்பைகளின் அளவை பொறுத்து இது இயற்கையானதா அல்லது ஊட்டச்சத்து பற்றாக்குறையா என்பதை கணிக்க இயலும். அதாவது சிறிய குரும்பைகள் உதிர்வதை அனுமதிக்கலாம். சற்று பெரிய குரும்பைகள் உதிர்வு என்பது ஊட்டச்சத்து பற்றாக்குறையே ஆகும்.
  • இதனை எதிர்கொள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், தென்னை டானிக்கை உற்பத்தி செய்து தென்னை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் 2002-ஆம் ஆண்டு முதல் விற்பனை செய்து வருகிறது. பரிந்துரைக்கப்பட்ட உரங்களுடன் இந்த தென்னை டானிக்கை ஆறு மாதத்திற்கு ஒருமுறை என வருடத்திற்கு இரண்டு முறை வேர் வழியாக செலுத்த வேண்டும்.தென்னை டானிக் என்பது தென்னை பயிருக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகளையும் உள்ளடக்கியதாகும். இதில் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், இரும்பு, போரான், மாலிப்டீனம் போன்ற ஊட்டச்சத்துக்களும், சாலிசிலிக் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்ற வளர்ச்சி ஊக்கிகளும் நிறைந்துள்ளது.

தென்னை டானிக் வேர்வழி செலுத்தும் முறை:



    தென்னை மரத்தின் தண்டுப்பகுதியிலிருந்து சுமார் 2.5 முதல் 4 அடி தூரத்தில் 15-20 செ.மீ ஆழத்தில் உள்ள வெள்ளை அல்லது இளஞ்சிகப்பு நிற பென்சில் தடிமனுடைய ஊட்டச்சத்து வேர்களை தேர்வு செய்தல் வேண்டும்.தேர்வு செய்த வேரின் நுனி பகுதியை கத்தி அல்லது பிளேடு பயன்படுத்தி சாய்வாக சீவி எடுத்து விட்டு அதில் 200 மி.லி அளவுள்ள தென்னை டானிக் பாக்கெட்டினை இறுக்கமாக கட்டி விட வேண்டும்.அல்லது 40 மி.லி அளவு அடர் தென்னை டானிக் உடன் 160 மி.லி தண்ணீர் கலந்து மெல்லிய பாலிதின் பையில் நிரப்பி அதை வேரில் கட்டி விட வேண்டும்.தென்னை டானிக்கை வேர் வழியே உட்செலுத்தும் பொழுது மண்ணில் மிதமான ஈரப்பதமும், மரங்கள் அதிக நீர்த்தேவையுடனும் இருத்தல் வேண்டும்.தென்னை டானிக் அதிகபட்சமாக 48 மணி நேரத்தில் வேர்களால் முற்றிலுமாக உறிஞ்சிக்கொள்ளப்படும். ஒருவேளை டானிக் உறிஞ்சப்படவில்லை எனில் மாற்று வேரை தேர்வு செய்து கட்ட வேண்டும்.

பயன்கள்: 

  • இலைகளில் பச்சையத்தின் அளவு அதிகரிக்கிறது.
  • இதனால் ஒளிச்சேர்க்கை மற்றும் உணவு உற்பத்தியின் திறன் அதிகரிக்கிறது.
  • வறட்சியை தாங்கி வளரும் தன்மையை பெறுகிறது.
  • பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
  • குரும்பை உதிர்தல் குறையும்.
  • காய்கள் பெரிதாகி பருப்பு நல்ல எடை உடையதாக இருக்கும்.
  • விளைச்சல் 20 சதவீதம் அளவு அதிகமாகும்.
  • பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாக இருக்காது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts