google-site-verification: googled5cb964f606e7b2f.html செப்டம்பர் 2024 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

தக்காளியில் பூ முனை அழுகல் நோய் மேலாண்மை...

இது ஒரு சில வகையான காலநிலை அழுத்தம் மற்றும் சத்து குறைபாடு காரணங்கள் ஒருங்கிணைந்து பயிர்களை தாக்குவதால் ஏற்படக்கூடிய அறிகுறி ஆகும். இது பூஞ்சான அல்லது பாக்டீரியா வகை நோய்கள் கிடையாது.

பிரதான காரணங்கள்: 

  • தக்காளி காய்களின் செல் சுவர்கள் மிகவும் கடுமையானது, இந்த செல் சுவர் அமைப்பு ஏற்படுத்துவதில் கால்சியம் ஊட்டச்சத்தின் பங்களிப்பு இன்றியமையாததாகும். 
  • காய்களில் குறிப்பிட்ட இடத்தில் கால்சியம் குறைபாடு ஏற்படுவதால் இந்த நோய் உருவாகலாம்.கால்சியம் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் போது அங்கு உற்பத்தி செய்யக்கூடிய புதிய செல்கள் பாதிப்படைந்து இருப்பதால் தான் இந்த அறிகுறி உருவாகிறது. 
  • வேர் மூலமாக உறிஞ்சப்பட்டு பயிரின் அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீருடன் செல்லும் கால்சியம் சத்து இலைகளினால் அதிகளவு உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதால் எளிதில் பற்றாக்குறை ஏற்படுகிறது. குறிப்பாக அதிக வெப்பநிலை திகழும் பொழுது. இதனால் பழத்தின் செல் சுவர் உற்பத்திக்கு தேவையான கால்சியம் சத்து கிடைப்பதில்லை. 
  • அதேபோன்று போதுமான அளவு மண் ஈரப்பதம் இல்லாமல் இருத்தல், அதிக வறட்சிக்கு பிறகு திடீரென மிகப்படியான ஈரப்பதம் உருவாதல், போதுமான அளவு மண்ணில் கால்சியம் சத்து இல்லாமல் இருத்தல் போன்ற பல காரணங்களால் இந்த நோய் உருவாகலாம்.

பூ முனை அழுகல் நோயின் அறிகுறிகள்:

  • தக்காளி பயிர்கள் காய் பிடிக்க தொடங்கியது முதல் இறுதி அறுவடை வரை கூட இதன் அறிகுறி காணப்படும்.
  • ஆரம்பத்தில் காய்களில் புள்ளிகள் தென்படும். 
  • பின்னர் புள்ளிகள் சற்று விரிவடைந்து பள்ளமான அமைப்புடன் பழுப்பு நிறத்தில் பிரதானமாக காய்களின் அடிப்புறத்தில் காணப்படும். எனவே தான் இதனை பூ முனை அழுகல் நோய் என குறிப்பிடுகிறோம்.
  • நாளடைவில் புள்ளிகள் பெரிதாகி காயின் மூன்றில் ஒரு பங்கு பகுதிக்குப் பரவி விடும். 
  • பழுப்பு நிறமாக இருந்த புள்ளிகள் விரைந்து கருப்பு நிறமாக மாறிவிடும்.

  • இதனால் பாதிக்கப்பட்ட தக்காளி காய்கள் விரைவில் பழுத்து விடும் மற்றும் அதன் உட்பகுதி பாதிப்படையும்.
  • கால்சியம் சத்து குறைபாட்டால் இலைகளில் பல்வேறு வகையான அறிகுறிகள் காணப்படும் உதாரணத்திற்கு இலை விளிம்புகள் பழுப்பு முதல் சிகப்பு நிறமாக மாறுதல், இலை சுருங்குதல் மற்றும் பல.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • அடி உரமாக போதுமான அளவு நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் கால்சியம் சல்பேட் இட வேண்டும்.
  • நிலத்தை வறட்சிக்கு உட்படுத்தாமல் மிதமான ஈரப்பதத்துடன் வைத்திருந்தால் இந்த நோய் தாக்குதலை தவிர்க்கலாம்.
  • நிலப் போர்வை பயன்படுத்தி சாகுபடி செய்தால் மண் வெப்பநிலையை பாதுகாப்புத்துடன் அனைத்து பகுதிகளிலும் சராசரி ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்யலாம்.
  • அதிக அளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்கவும் குறிப்பாக அம்மோனியா வகை ஏனெனில் இது கால்சியம் ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதை மட்டுப்படுத்தும். 
  • அதிக எண்ணிக்கையிலான  இலைகள் உருவாவதை தடை செய்ய வேண்டும் இல்லை எனில் கண்டிப்பாக கால்சியம் பற்றாக்குறை ஏற்படும். 
  • மண்ணில் போதுமான அளவு கால்சியம் கொடுக்க வேண்டும் ஏனெனில் இது நன்கு கரைந்து வேர் மூலமாக மட்டுமே பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. 
  • எனவே நாம் இலை வழியாக தெளிக்கும் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் குறைந்த அளவு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

இது போன்ற வேளாண் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


வெள்ளி, 27 செப்டம்பர், 2024

கத்தரியில் ஃபோமோப்சிஸ்(Phomopsis) கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

    நாம் பிரதானமாக சாகுபடி செய்யும் கத்தரி பயிரில் பல்வேறு வகையான நோய் மற்றும் பூச்சிகள் தாக்குகிறது. அதில் மிகவும் முக்கியமான பூஞ்சான நோயான ஃபோமோப்சிஸ் கருகல் நோய் மிகவும் ஆபத்தான ஒன்று. உலகம் முழுவதும் காணப்படும் இந்த நோய் சுமார் 70% வரை கூட மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்தும். இந்த நோய் பயிரின் அனைத்து நிலைகளிலும் பாதிக்கும் என்பதால் இதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை:

  • தொடர்ச்சியான மழை அல்லது பனிப்பொழிவு. 
  • அதிக காற்று ஈரப்பதம் மற்றும் மிதமான வெப்பநிலை. 
  • பிரதானமாக மழைப்பொழிவு மற்றும் பாதிக்கப்பட்ட பயிர் கழிவு மூலமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பரவுகிறது.

தாக்குதலின் அறிகுறிகள்: 

நாற்றங்கால் அறிகுறிகள்

  • இந்த நோய் விதை மூலம் பரவும் என்பதால் விதை முளைக்கும் போதே அறிகுறிகளை ஏற்படுத்தும். 
  • இந்த Phomopsis நோய் நாற்றுகளின் தண்டுப் பகுதியை பாதிப்பதால் தண்டுகளில் பழுப்பு நிற புண்கள் காணப்படும்.
  • இதனால் தரைக்கு மேலே உள்ள பகுதியில் நாற்றுகள் முறிந்து இறக்கும்.  
  • அதேபோன்று நாற்றுகளின் இலையில் சிறிய புள்ளிகள் தோன்றும். இது நாளடைவில் பெருக்கமடைந்து இலைகள் உதிரும்.

வயலில் காணப்படும் அறிகுறிகள்:

  • சிறிய கருப்பு முதல் பழுப்பு நிற பள்ளத்துடன் கூடிய புள்ளிகள் காய்களில் காணப்படும். 
  • இது நாளடைவில் பெருக்குமடைந்து புள்ளிகளின் ஓரங்கள் சற்று அழுகியது போன்று காணப்படும். 
  • இதனால் காய்கள் சுருக்கமாகவும் ஒழுங்கற்ற வடிவிலும் தோன்றலாம். 
  • இலை மற்றும் தண்டுப் பகுதியில் நீள் வட்ட வடிவ புள்ளிகள் காணப்படும். 
  • மிகவும் தீவிரமாக பாதிக்கப்பட்ட காய் அல்லது இலைகளில் கருப்பு நிற பூஞ்சானத்தை காண இயலும்.
  • கடைசி நிலையாக காய்களில் அழுகல் தென்படும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • இந்த பூஞ்சான நோய் விதை மூலம் பரவும் அபாயம் உள்ளதால், தரமான விதைகளை தேர்வு செய்து அதனை 50 டிகிரி வெப்ப நிலையில் உள்ள தண்ணீரில் 15 முதல் 25 நிமிடம் ஊறவைத்து பின்னர் விதைக்க வேண்டும்.
  • அல்லது Trichoderma மற்றும் Pseudomonas பயன்படுத்தி விதை அல்லது நாற்றுகளை நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும்.
  • இந்த பூஞ்சை பாதிக்கப்பட்ட பயிர் கழிவு மற்றும் மண்ணில் சுமார் ஒரு வருடம் கூட உயிர் வாழும் திறன் உடையதால், பயிர் கழிவுகளை முழுமையாக வயலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • தொடர்ச்சியாக ஒரே வயலில் கத்தரி சாகுபடி செய்வதை தவிர்ப்பது நல்லது. 
  • இந்த தாங்கி வளரக்கூடிய ரகங்கள் அல்லது வீரிய விட்டு ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யலாம்.
  • அதிக அளவு தழைச்சத்து உரத்தை பயன்படுத்துவதை தவிர்த்து பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களை சரிவிகித அடிப்படையில் கொடுத்தால் மகசூல் குறைவதை தவிர்க்கலாம்.
  • பயிரில் பாதிக்கப்பட்ட பகுதியில் உருவாகும் பூஞ்சைகளால், அந்த இடத்தில் வளவளப்பாக இருப்பதால் மருந்து தெளிக்கும் பொழுது பாதிக்கப்பட்ட பகுதியில் மருந்துகள் நிலைத்திருக்காமல் விலகிச் சென்று விடும். 
  • உயிர் பூஞ்சை கொல்லிகள் அல்லது ரசாயன மருந்துகள் பயன்படுத்தும் பொழுது குறைவான அளவு மருந்துடன் ஒட்டுப் பசை சேர்த்து செடி முழுவதும் நன்கு படும்படி தெளிக்க வேண்டும்.
  • நோயை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட பூஞ்சான கொல்லிகலில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தெளிக்கலாம்.
  • Carbendazim
  • Carbendazim + Mancozeb
  • Copper Oxychloride
  • Propiconazole
  • Carboxin + Thiram
  • Metalaxyl + Mancozeb
  • Zineb

இது போன்ற தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம். https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

வியாழன், 19 செப்டம்பர், 2024

பருத்தி சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை....

  • பருவ மழைக்கு முன்னதாக சட்டி கலப்பை பயன்படுத்தி ஆழமாக உழவு செய்வதன் மூலம் நிலத்தின் நீர் பிடிப்பு திறனை மேம்படுத்தலாம்.பின்னர் இரண்டு அல்லது மூன்று முறை கொத்து கலப்பை பயன்படுத்தி உழவு செய்து கட்டிகளை நன்றாக தூளாக்கி பின்னர் தேவையின் அடிப்படையில் ரோட்டாவேட்டர் பயன்படுத்தலாம்.
  • நீர்ப்பாசனம் மூலம் சாகுபடி செய்யும் பொழுது மேட்டுப்பாத்தி அல்லது தகுந்த இடைவெளியில் பார்கள் அமைத்து விதைப்பு மேற்கொள்ளலாம். 
  • கடைசி உழவுக்கு முன்னதாக ஏக்கருக்கு குறைந்தபட்சம் 4 டன் நன்கு மக்கிய தொழு உரம் /ஒரு டன் மண்புழு உரம், தேவையின் அடிப்படையில் அதனுடன் உயிர் உரங்கள் மற்றும் உயிர் பூஞ்சான கொல்லிகள் கலந்து கொள்ளலாம்.
  • ரசாயன உரங்கள் இடவேண்டும் என்றால் விதைப்புக்கு முன்னதாக ஏக்கருக்கு இரண்டு மூட்டை டி.ஏ.பி, பொட்டாஸ் 15 முதல் 20 கிலோ, பருத்தி நுண்ணூட்ட உரம் 5-8 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 50 கிலோ ஆகியவற்றை இடவேண்டும்.
  • நாம் பொதுவாக B.t வகை வீரிய ஒட்டு ரகங்களை சாகுபடி செய்வதால் பொதுவாகப் பரிந்துரை செய்யப்படும்  உர அளவான தழைச்சத்து 120 கிலோ, மணிச்சத்து 60 கிலோ மற்றும் சாம்பல் சத்து 60 கிலோ முதலியவற்றை ஒரு ஹெக்டர் நிலப்பரப்புக்கு  இடலாம். 
  • மண்ணில் நல்ல ஈரப்பதம் இருக்கும் பொழுது 60-90 X 30-45 சென்டிமீட்டர் இடைவெளியில் விதைப்பு மேற்கொள்ளலாம். பருத்தி ரகங்களின் முளைப்பு திறன் குறைவு என்பதால் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் இரண்டு விதைகளை விதைப்பு செய்ய வேண்டும். 
  • நீர் வசதி இல்லாமல் காய்ச்சலில் விதைப்பு மேற்கொள்ளும் பொழுது மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் கண்டிப்பாக இடவேண்டும். 
  • பருத்தியில் களை மேலாண்மை மிகவும் சவாலானதாக திகழ்வதால், இதில் அதிக கவனம் தேவை. விதைத்த மூன்று முதல் ஐந்து நாட்கள் இடைவெளியில் களை முளைப்பதற்கு முன்னதாக பயன்படுத்தப்படும் களைக்கொல்லியை போதுமான ஈரப்பதம் இருக்கும் பொழுது தெளித்து விடவும். உதாரணத்திற்கு Butachlor, Pendimethalin, Alachlor போன்றவற்றை பரிந்துரைக்கப்படும் அளவில் பயன்படுத்தலாம்.
  • விதைகள் முளைத்து 15 முதல் 20 நாட்கள் பயிரில் தெளிக்க கூடிய களைக்கொல்லிகள் பல இருந்தாலும் அதன் செயல்பாடுகள் குறிப்பிட்ட சில களைகளை மட்டுமே கட்டுப்படுத்துவதாக திகழ்கிறது எனவே அதனை முழுமையாக நம்பி இருக்க வேண்டாம். 
  • விதைத்த ஏழாம் நாள் முளைப்புத் தவறிய இடங்களில் மீண்டும் விதையை விதைக்கலாம். 
  • நீர் நிர்வாகத்தை பொறுத்தவரையில் உயிர் தண்ணீர், அதைத் தாண்டி பூக்கும் தருணத்திலும், காய்க்கும் மற்றும் காய்கள் பெருக்குமடையும் தருணத்தில் நல்ல ஈரப்பதம் வேர்களுக்கு கிடைத்தால் மகசூலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. எனவே நீரை பயன்படுத்தி சாகுபடி செய்பவர்கள் இதனை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு நீர் பாய்ச்சலாம். 
  • மண்ணின் அமைப்பு மற்றும் தன்மையை பொறுத்து 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை குறைந்தபட்ச நீர் பாய்ச்சினால் பருத்தியில் அதிக அளவு மகசூல் எதிர்பார்க்கலாம். 
  • பயிரின் 40 ஆம் நாள் நுனிப்பகுதியை கிள்ளிவிட்டு தேவையான வளர்ச்சி ஊக்கி கொடுத்தால் அதிக கிளை பிரிவதை காணலாம். வீரிய ஒட்டு ரகம் என்பதால் நல்ல கிளை பிரியும் திறன் எதிர்பார்க்கலாம் போதுமான அளவு ஊட்டச்சத்துக்கள் கொடுத்தால். 
  • நுனியை கிள்ளிவிட்டு NAA/Cytocyme போன்ற வளர்ச்சி ஊக்கியை பரிந்துரை செய்த அளவில் ஏழு நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளித்தால் அதிக காய்ப்பு திறன் எதிர்பார்க்கலாம் இதனால் 20 முதல் 30 சதவீதம் வரை மகசூல் அதிகரிக்கக்கூடும். 
  • பூக்கும் தருணத்தில் பயிரில் வளர்ச்சி ஊக்கி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாமல் பராமரிப்பது இன்றி அமையாததாகும். இந்த தருணத்தில் பொதுவாக மெக்னீசியம் குறைபாடு காணப்படும். இதனால் இலைகள் விறைப்புத் தன்மையுடனும், இலையின் விளிம்புகள் சிகப்பு நிறத்தில் மாற்றம் அடைவதையும் காண இயலும். பொதுவாக அதிக அளவு பொட்டாசியம் சத்து கொடுக்கும் பொழுது இதை நாம் எதிர்பார்க்கலாம். இது கடந்த சில வருடங்களாக தென்படுகிறது எனவே அடி உரமாகவோ அல்லது இடைவெளியாகவோ போதுமான அளவு மெக்னீசியம் தெளிக்கலாம். 

  • அதேபோன்று போரான் மற்றும் துத்தநாகம் பற்றாக்குறைகள் தென்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதையும் கவனத்தில் கொண்டு உரிய தருணத்தில் தெளிப்பு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நுண்ணூட்ட சத்துக்கள் இழை வழியாக நாம் தெளிக்கும் பொழுது வளர்ச்சி ஊகிகள் கலந்து தெளிப்பதால் பூ /சப்பைகள் உதிர்வதை வெகுவாக குறைக்கலாம். 
  • முதல் அடி உரம் 30 முதல் 40 நாட்கள் இடைவெளியில் செடிக்கு அருகில் வைத்து நீர் விட வேண்டும். அப்பொழுது மணிச்சத்தும் பொட்டாசியம் சத்தும் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் உதாரணத்திற்கு ஏக்கருக்கு தலா 40 கிலோ இடலாம். இடைப்பட்ட காலத்தில் நீர் வசதி இருந்தால் அல்லது மண் ஈரப்பதம் இருந்தால் NPK consortia வேர்ப்பகுதிகளுக்கு கொடுத்தால் அடியில் இடப்பட்ட உரங்கள் செடிகளுக்கு எளிதில் கிடைக்கும். 
  • அடுத்த கட்ட மேலூரம் 60 முதல் 80 நாட்கள் இடைவெளியில் கொடுக்கலாம்.அப்பொழுது தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து இடலாம். 
  • பூச்சி தாக்குதலை பொருத்தவரையில் தத்துப்பூச்சி, வெள்ளை ஈக்கள், காய்ப்புழு, அஸ்வினி போன்ற பூச்சிகள் பிரதானமாக பயிரை தாக்கும். 
  • நோயைப் பொருத்தமட்டில் வேர் வாடல் நோய், அழுகல் நோய், இலை கருகல் மற்றும் பாக்டீரிய கருங்கல் நோய் எதிர்பார்க்கலாம்.

மேலும் சந்தேகம் மற்றும் தகவல்களுக்கு இணைப்பில் கலந்துள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.. https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA


புதன், 4 செப்டம்பர், 2024

தென்னை சாகுபடியில் கரையான் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கரையான் தாக்குதலின் அறிகுறிகள்:

  • நாற்றுப் பண்ணைகளில் செடிகளின் குருத்துப் பகுதி மஞ்சள் நிறமாக மாறி பின்னல் வாடி விடும்.
  • சில நேரங்களில் பராமரிப்பு இல்லாத மாற்று வழி கரையான்கள் நெற்றுகளின் வெளிப்புறம் மற்றும் வேர் பகுதியை பாதிப்பதால் செடிகள் வாடி விடும்.
  • மரத்தின் தண்டு பகுதியில் மண்ணால் ஆன படலம் காணப்படும்.
  • அதேபோன்று மெல்லிய மண்ணால் ஆன பாதை போன்ற அறிகுறிகளும் தென்படும். 
  • தீவிர தாக்குதலின் போது தண்டுப் பகுதியில் உள்ள பட்டையை உண்டு பின் திசு பகுதியை சென்றடையும்.




கரையான் தாக்குதலுக்கான காரணங்கள்: 

  • தோப்புகளை சுத்தமாக பராமரிக்காதது. 
  • குறிப்பாக உதிர்ந்த இலை, சிறை, நெற்றுகள் முதலியவற்றை அகற்றாமல் இருத்தல். 
  • குப்பைகளை தோப்பிற்குள் சேமித்து வைத்தல். 
  • நீண்ட நாட்களுக்கு தொழு உரத்தினை தோப்பில் குவித்து வைத்திருத்தல்.
  • பண்ணை பணிகளின் போது தண்டு மற்றும் வேர் பகுதியை சேதப்படுத்துவதால் அதிலிருந்து வெளியேற்றப்படும் திரவம் கரையான்களை ஈர்க்கும்.
  • அதிக வறட்சி மற்றும் முறையற்ற வடிகால் வசதி கரையான் தாக்குதலை ஊக்குவிக்கும்.

தென்னையில் கரையானை தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  • தோப்புகள் அல்லது நாற்றுப் பண்ணைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக உதிர்ந்த மட்டைகள், காய்கள், இறந்த மரத்தின் பாகங்கள் மற்றும் சிறைகளை அப்போது சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். 
  • தென்னை தோப்பு அல்லது அதற்கு அருகில் கரையான் புற்றுகள் தென்பட்டால் அதை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற மழைகாலங்களில் புற்றுக்களின் மேல் பகுதியை மட்டும் சற்று அகற்றிவிட்டு பள்ளம் போன்ற அமைப்பை ஏற்படுத்தினால் தொடர்ச்சியாக நீர் தேங்கி மொத்த புற்றும் அழியும். 
  • இதைத் தவிர பல்வேறு ரசாயன மருந்துகள் உள்ளது அதனை பயன்படுத்தியும் புற்றில் உள்ள கரையான்களை முற்றிலும் அழிக்கலாம். அவ்வாறு செய்யும்போது ராணி கரையான் பூச்சியை கண்டறிந்து அழிக்க வேண்டும்.
  • நெற்றுகளை நாற்று விடும் பொழுது அதன் கழுத்துப் பகுதி தரைமட்டத்திற்கு மேல் இருக்கும்படி உதவி செய்ய வேண்டும். 
  • நாற்றுப் பண்ணையில் நாம் அதிக அளவு மணல் பயன்படுத்துவதால் அதில் கரையான் தாக்குதல் அதிகம் காணப்படும் அதை உடனுக்குடன் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். 
  • நாற்றுப் பண்ணையில் இயற்கை பொருட்களை வைத்து மூடாக்கு அமைத்திருந்தால் மூடாக்கில் கரையான் தாக்குதல் உள்ளதா என அவ்வப்போது கண்டறிய வேண்டும். 
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரத்தின் தண்டுப் பகுதியில் அதாவது தரையில் இருந்து 2-3 மீட்டர் உயரத்திற்கு வேப்ப எண்ணையை தடவி விடலாம். அல்லது முந்திரி கொட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் கரையான்களுக்கு எதிராக திறம்பட செயல்படுகிறது. 
  • Copper sulphate அல்லது Chlorpyriphos போன்ற ரசாயனங்களை பயன்படுத்தியும் கரையான்களை கட்டுப்படுத்தலாம்.
  • நாற்றுப்பண்ணை அல்லது நிலத்தில் நடவு செய்வதற்கு முன்னதாக மெட்டாரைசியம் அல்லது இரசாயன குருணை வடிவில் கிடைக்கக்கூடிய மருந்துகளான Chlorpyriphos/Fibronil தேவையான அளவு இட்டு பின்பு நடவு செய்ய வேண்டும். 
  • நடவு செய்த பிறகு செடிகளின் கழுத்து பகுதியில் அல்லது தரையில் கரையான் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக imidacloprid /Chlorpyriphos பரிந்துரைக்கப்பட்ட அளவில் மேற்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும்.
  • வேர்ப்பகுதியில் நல்ல காற்றோட்டம் கிடைக்க வேண்டும் அதற்கு ஏற்றவாறு நடவு செய்வதற்கு முன்னதாக இடு பொருட்கள்  பயன்படுத்த வேண்டும்.
  • நடவு செய்வதற்கு முன்னதாக தேவையான அளவு மணல், சாம்பல் மற்றும் உப்பு கலந்து இடவேண்டும். இதில் மணல் நல்ல காற்றோட்டத்தை ஏற்படுத்தி வேர் வளர்ச்சி ஊக்கப்படுத்துகிறது. உப்பு மண்ணின் தன்மையை மாற்றி அமைத்து ஊட்டச்சத்து கிடைக்க வழிவகை செய்கிறது. சாம்பல் ஆரம்ப காலத்தில் தேவைப்படும் பொட்டாசியம் சத்தை கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை பயிர்களுக்கு தருகிறது.

இது போன்ற வேளாண் தகவல் மற்றும் பயிர் சாகுபடி சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன் பெறலாம். 

https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA

Recent Posts

Popular Posts