google-site-verification: googled5cb964f606e7b2f.html வாழையில் மஞ்சள் மற்றும் கருப்பு இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

ஞாயிறு, 7 ஜூலை, 2024

வாழையில் மஞ்சள் மற்றும் கருப்பு இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

முன்னுரை:

  • வாழை சாகுபடியில் இலைப் பகுதியை பாதிக்க கூடிய பல்வேறு நோய்களில் பிரதான நோயாக சிகடோகா இலைப்புள்ளி நோய் திகழ்கிறது. இந்த நோய் பூஞ்சானம் இரண்டு வகையான அறிகுறிகளை பயிர்களில் தோற்றுவிக்கிறது. 
  • நோய் அறிகுறியை அடிப்படையாகக் கொண்டு இதனை மஞ்சள் மற்றும் கருப்பு சிகடோகா என்று கூறுவார்கள். பாதிப்பின் தன்மையை பொறுத்து சராசரியாக 50% மகசூல் இழப்பீட்டை ஏற்படுத்துகிறது. இது மட்டும் இன்றி வாழைத் தார்களின் தரத்தில் குறைபாடு ஏற்படுகிறது.

நோயின் அறிகுறிகள்: 
மஞ்சள் சிகடோகா:

  • வெளிர் மஞ்சள் முதல் பச்சை நிற புள்ளி அல்லது கோடுகள் இலையின் மேற்புறத்தில் காணப்படும். 
  • படிப்படியாக இந்தப் புள்ளி அல்லது கோடுகளின் அகலம் மற்றும் நீளம் பெரிதாகி புண்கள் போன்று கருப்பு முதல் பழுப்பு நிற நடுப்பகுதியை கொண்டிருக்கும் அதனைச் சுற்றி மஞ்சள் வளையம் காணப்படும்.
  • பின்பு புண்களின் நடுப்பகுதியில் உள்ள திசுக்கள் காய்ந்து பழுப்பு நிறத்தில் மாற்றம் அடைந்து கருப்பு நிற வளையத்துடன் காணப்படும்.

கருப்பு சிகடோகா:

  • வெள்ளை அல்லது வெளிர் பழுப்பு நிற புள்ளிகள் அல்லது கோடுகள் இலையின் அடிப்புறத்தில் காணப்படும். 
  • நாளடைவில் இதன் நிலம் மற்றும் அகலம் அதிகரித்து புண்களாக மாறும். 
  • பின்னர் புண்களின் நடுப்பகுதி கருப்பு நிறத்துடனும் அதனைச் சுற்றி மஞ்சள் நிற வளையம் காணப்படும்.
  • தீவிர நிலையில் புண்களின் நடுப்பகுதி வெள்ளை முதல் வெளிர் நிறத்திலும் அதனை சுற்றி மஞ்சள் நிறமும் காணப்படும்.

அனைத்து அறிகுறிகளும் ஆரம்பத்தில் இளம் இலைகளில் இருந்து பின்னர் முதிர்ந்த இலைகளுக்கு பரவும்.மஞ்சள் நிற சிகடோகா இலைப்புள்ளி நோயை விட கருப்பு நிற சிகடோகா நோய் மிக தீவிரமானது. இதனால் செடிகளின் உணவு உற்பத்தி தரும் குறைந்து மகசூல் இழப்பீடு கண்டிப்பாக ஏற்படும்.

காய்கள் முதிர்ச்சி அடையும் முன்னரே பழுக்க ஆரம்பிக்கும் இதனால் காய்களின் தரம் குறைகிறது. வாழை தார்களில் உள்ள காய்கள் சீரற்ற முறையில் பழுப்பதால் தாரை விற்பனை செய்வதில் பின்னடைவு ஏற்படும்.

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை: 

  • தொடர்ச்சியான ஈரப்பதம் பனிப்பொழிவு, அதிக வெப்பநிலை மற்றும் காற்று ஈரப்பதம், இலைகளில் தொடர்ச்சியான ஈரப்பதம் இருத்தல்.
  • முறையான பராமரிப்பு இல்லாதது 
  • போதுமான வடிகால் வசதி இன்மை 
  • ஊட்டச்சத்தை பற்றாக்குறை குறிப்பாக பொட்டாசியம் 
  • நோய் தாக்குதலுக்கு உகந்த ரகங்களை சாகுபடி செய்தல் உதாரணத்திற்கு கேவண்டிஸ் மற்றும் ரோபஸ்டா

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • நோய் எதிர்ப்பு திறன் உடைய ரகம் அல்லது வீரிய ஓட்டு ரகங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
  • நல்ல வடிகால் வசதி உடைய மண் மற்றும் நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். 
  • அடர் நடவு மேற்கொள்வதை தவிர்க்கவும் ஏனெனில் இது நோய் தாக்குதலுக்கு சாதகமான தட்பவெட்ப சூழ்நிலையை உருவாக்கும். 
  • பக்கக் கன்றுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும் ஒன்று அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பக்கக் கன்றுகள் இருந்தால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு நோய் தாக்குதல் எளிதில் ஏற்படும்.
  • வயலில் முந்தைய பயிர்களின் எச்சம் மற்றும் களைகள் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும்.
  • சரிவிகித ஊட்டச்சத்து மேலாண்மை இன்றியமையாததாகும். குறிப்பாக தழைச்சத்து, பொட்டாசியம், போரான், மாங்கனீஸ் மற்றும் இரும்பு.
  • நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட இலைகளை அப்புறப் படுத்தலாம். அதாவது 20 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட இலையை முழுமையாக அகற்றலாம்.
  • அதற்கும் குறைவான தாக்குதல் இருக்கும் குறிப்பிட்ட இலை பகுதியை மட்டும் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • காற்று ஈரப்பதம் நோய் தாக்குதல் மற்றும் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதால் அதனை குறைக்க சொட்டு நீர் பாசனம் அமைத்தல், இரு வரிசைகளில் உள்ள மரத்தின் இலைகள் ஒன்றுடன் ஒன்று தொடாமல் இருக்கும்படி இலைகளை அறுத்து விடுதல் மற்றும் களைகள் இல்லாமல் பராமரித்தல் அவசியமாகும்.
  • ஆரம்ப நிலை தாக்குதலின் போது 10 லிட்டர் தண்ணீருக்கு Pseudomonas fluorescence மற்றும் bacillus subtillis ஆகியவற்றைத் தலா 50 மில்லி கலந்து இலை வழியாக தெளிக்கலாம்.
  • அதே போன்று 10 லிட்டர் தண்ணீருக்கு தலா 75 மில்லி Trichoderma viride மற்றும் bacillus subtillis கலந்து வேர்ப்பகுதியில் நன்கு ஊற்ற வேண்டும். 
  • இயற்கை முறையில் சாகுபடி செய்பவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறையை வாரம் ஒரு முறை என நோயின் தீவிரம் குறையும் வரை பின்பற்ற வேண்டும்.
  • ரசாயன முறையில் நோயை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம். 

  • Copper oxychloride -25 கிராம் 
  • Copper hydroxide- 10 கிராம் 
  • Chlorothaonil- 25 கிராம்
  • Propiconazole - 10 மில்லி
  • Merriam+ pyroclostrobin - 30-40 கிராம் 
  • Hexaconazole+ captan- 20 கிராம்
  • Tebuconazole Trifloxystrobin - 10 கிராம் 
  • Tebuconazole+sulphur -25 கிராம்
  • Fluopyram+Tebuconazole - 10-12 மில்லி
  • Fluxapyraxad + pyroclostrobin - 4 மில்லி

இது போன்ற வேளாண் தொடர்பான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்.



0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts