பாக்கு பயிர் சாகுபடியில் கவனிக்கப்பட வேண்டியவை...
|நடவு செய்தல்:
- பொதுவாக பாக்கு அதிக வறட்சி அல்லது தொடர்ச்சியாக நீர் தேங்கும் பகுதியில் சாகுபடி செய்ய உகந்த பயிர் அல்ல. அவ்வாறு சாகுபடி செய்தால் சரியான மகசூல் கிடைக்காது.
- மேலும் இதற்கு 50% ஆவது நிழல் தேவைப்படுகிறது. எனவே நடவு செய்வதற்கு முன்பதாக இதனை பற்றி யோசிக்கலாம். நிழல் தரக்கூடிய பயிர்களில் ஊடுபயிராகவோ அல்லது வரப்பு பயிராகவும் பாக்கு கன்றுகளை நடவு செய்வதற்கு முன்பு தயார் படுத்த வேண்டும்.
- மண்ணின் தன்மை நில அமைப்பை பொறுத்து வேர் வளர்ச்சி மாறுபடும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மணல் பாங்கான மண் அமைப்பில் நல்ல வேர் மற்றும் பயிர் வளர்ச்சி காணப்படும்.
- பொதுவாக பாக்கு மரத்தின் வேர்கள் 70% வரை முப்பது சென்டிமீட்டர் ஆழத்தில் தான் இருக்கும். அதுமட்டுமின்றி தண்டுப் பகுதியிலிருந்து பக்கவாட்டில் சுமார் ஒரு மீட்டர் வரை வளரும் தன்மையுடையது.
- எனவே மண்ணின் தன்மையை பொறுத்து ஒரு மீட்டர் நீளம், அகலம், ஆழம் உடைய குழிகளை எடுத்து சுமார் 15 முதல் 30 நாட்கள் வரை நன்கு காய விடவும்.
- நடவு செய்வதற்கு மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு முன்பாக தலா 100 கிராம் Trichoderma மற்றும் Metarhizium ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து. குழிக்கு ஒரு லிட்டர் வீதம் பொறுமையாக தெளிக்க வேண்டும்.
- குழி ஒன்றுக்கு ஐந்து கிலோ மண்புழு உரம், தலா 50 கிராம் Trichoderma/Pseudomonas, உயிர் உரம், VAM, 100 கிராம் இடித்த வேப்பங்கொட்டை மற்றும் Humic குருணை ஆகியவற்றை மேல் மணலுடன் கலந்து மூன்றில் ஒரு பங்கு குழி நிரம்பும் வரை கொட்டவும்.
- பிறகு இதில் செடிகளை நட்டு மீண்டும் சிறிதளவு மண் கலவையை இட்டு நீர் விட வேண்டும்.
- கன்றுகள் வளர வளர மண் அணைத்துக் கொண்டே வரவேண்டும் குழிகள் நிரம்பும் வரை.
- நல்ல வளர்ச்சி மற்றும் அதிக இலைகள் உடைய குறைந்தது ஒரு வருடம் ஆன பாக்கு நாற்றுகளை நடவுக்காக பயன்படுத்தலாம்.
உர /ஊட்டச்சத்து மேலாண்மை:
- பாக்கு பயிர் தொடர்ச்சியாக வளரும் தன்மை உடையதாகவும் காய்க்கும் திறன் படைத்ததாகவும் இருப்பதால் தொடர்ச்சியாக ஊட்டச்சத்து கொடுக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும்.
- பொதுவாக பாக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஊட்டச்சத்துக்களை வரிசைப்படுத்தி பார்த்தால் தழைச்சத்து, சாம்பல் சத்து, கால்சியம், மணிச்சத்து, மெக்னீசியம், மாங்கனிசு, காப்பர், போரான் மற்றும் மிகக் குறைந்த அளவில் இதர நுண்ணூட்ட சத்துக்கள்.
- எனவே இந்த ஊட்டச்சத்துக்களை சரிவிகித அடிப்படையில் பயிர்களுக்கு வழங்க வேண்டும்.
- வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பரிந்துரைக்கப்படும் உரங்களை பிரித்து போதுமான மண் ஈரப்பதம் இருக்கும் போது இட வேண்டும்.
- பயிரின் தண்டு பகுதியில் இருந்து சுமார் 50 முதல் 60 சென்டிமீட்டர் தள்ளி 25 முதல் 50 சென்டி மீட்டர் ஆழத்தில் இட வேண்டும். ஏனெனில் இங்கு தான் பெரும்பான்மையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளக்கூடிய வேர்கள் அமைந்துள்ளது.
- முதல் ஒரு வருடம் முதல் ஒன்றரை வருடம் வரை ரசாயன உரங்களை தவிர்த்து அதிக அளவு இயற்கை உரங்களை மண்புழு உரம்/தொழு உரம்/பசுந்தாள் பசுந்தலை உரங்கள்/புண்ணாக்கு வகைகள் அல்லது கிடைக்கப்பெறும் அல்லது கிடைக்க பெறும் இயற்கை பயன்படுத்தி பயிர் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். இதனால் ஆரோக்கியமான பயிர் வளர்ச்சி, மண் வளமாக மாறுதல் மற்றும் வேர்களுக்கு நல்ல காற்றோட்ட வசதி கிடைக்கப்பெறும்.ஒரு வருடங்களுக்குப் பிறகு சிறிது சிறிதாக ரசாயன உரங்களை பயன்படுத்தலாம்.
- ஒரு மரத்திற்கு தலா 15 கிலோ தொழு உரம்,100 கிராம் தழைச்சத்து, 50 கிராம் மணிச்சத்து, 150 கிராம் சாம்பல் சத்து மற்றும் ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்டச் சத்து ஆகியவற்றை பருவ மழையின் போது இடலாம். மண்ணின் கார அமிலத்தன்மை, பயிர் வளர்ச்சி, ஊடு பயிர் இடுதல் முதலியவற்றை கருத்தில் கொண்டு மேற்கண்ட வழி முறையை வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பின்பற்றலாம்.
- இதைத் தவிர மண்ணின் தன்மையை மாற்றவும் கால்சியம் ஊட்டச்சத்து போதுமான அளவு கிடைக்கப் பெறவும் பருவ மழையின் போது சுண்ணாம்பு இட வேண்டும். அதேபோன்று நுண்ணூட்டச் சத்துக்கள் குறைபாடு ஏதேனும் தென்படும் தருணத்தில் இலை வழியாக தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்க வேண்டும்.
- நாம் கொடுத்த ஊட்டச்சத்துக்கள் மண்ணில் நிலை நிறுத்தப்படாமல் பயிர்களுக்கு கிடைக்க ஏதுவாக மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஹுமிக் அமிலம்/வேஸ்ட் டீ கம்போசர்/ஈயம் கரைசல்/உயிர் உரங்கள் அல்லது இயற்கை தயாரிப்பு இடுபொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான பயிர் மற்றும் மண்ணை உருவாக்கலாம்.
பூச்சி மேலாண்மை:
பாக்கு சாகுபடியில் பல்வேறு பூச்சி தாக்குதல்கள் காணப்பட்டாலும் கடந்த ஒரு வருடங்களில் நமது குழுவில் பகிரப்பட்ட முக்கியமான சில பூச்சி தாக்குதல் மற்றும் அவற்றின் மேலாண்மையை பற்றி பார்ப்போம்.
சிகப்பு கூன் உண்டு:
- இளம் பயிர்களின் தண்டு மற்றும் குருத்துப் பகுதியை துளைத்து உண்பதால் பயிர்கள் படிப்படியாக மஞ்சள் நிறமாக மாறி கருகி பின்னர் இறந்துவிடும். தண்டுப் பகுதியில் சிறிய துளைகள், சாறு வடிதல், மரங்கள் சாய்தல், குருத்துப் பகுதியில் அழுகல், நுனி இலைகள் நிறம் மாறுதல் முதலியவை இவற்றின் பிரதான அறிகுறியாகும்.
- இதனைக் கட்டுப்படுத்த சுத்தமாக பராமரித்தல், பாதிக்கப்பட்ட பகுதியை அகற்றுதல், தொடர்ச்சியாக வயலில் இதன் அறிகுறிகள் தென்படுகிறதா என பார்த்தல், இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்துதல் என பல வழிமுறைகள் உள்ளது.
சிகப்பு மற்றும் வெள்ளை பேன்:
- பொதுவாக பேன் தாக்குதல் ஆரோக்கியம் குறைந்த பயிர்களை எளிதில் தாக்குகிறது. இளம் மற்றும் முதிர்ந்த பொருட்கள் இலைகளின் அடிப்புரத்தில் சாற்றை உறிஞ்சுவதால் மேல் புறத்தில் மஞ்சள் நிற திட்டுக்கள் உருவாகி நாளடைவில் இலை கருகி விடுகிறது. இலையின் அடி புறத்தில் சிகப்பு நிற பூச்சி மற்றும் அதன் வலைகளை எளிதில் காண இயலும்.
- இதனை கட்டுப்படுத்த வயதை சுத்தமாக வைத்திருத்தல், பயிர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்கப் பெறுதல், அதிக வறட்சி அல்லது நீர்த்தேக்கம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுதல், கோடை பருவத்தில் மாதம் இரண்டு அல்லது மூன்று முறை Verticillum lecanii தெளித்து வருதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தாக்குதலின் தீவிரம் அதிகமாகும் பொழுது இரசாயன மருந்தான spiromesifen 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி தெளிக்கலாம்.
நோய் மேலாண்மை:
அடித்தண்டு அழுகல் நோய்:
- பராமரிப்பு அற்ற, அடர் நடவு மற்றும் போதுமான வடிகால் வசதி இல்லாத பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பாக்கு பயிரில் இந்த நோய் பொதுவாக காணப்படுகிறது. அடி இலைகள் மஞ்சள் நிறமாதல் நாளடைவில் நுனி இலைகளுக்கும் பரவுதல், தரை மட்டத்திற்கு அருகில் உள்ள தண்டுப் பகுதியில் புள்ளிகள் உருவாகி நாளடைவில் பெரிதாகும். இந்த இடங்களில் சாறு வடிதல் மற்றும் அழுகல் இதன் பிரதான அறிகுறிகள் ஆகும்.
- எனவே முறையான பராமரிப்பு, ஊட்டச்சத்து மேலாண்மை மிக அவசியம். ஆரம்ப நிலையில் Trichoderma vridae இயற்கை உயிர் பூஞ்சான கொல்லியையும் தீவிர நிலையின் போது Hexaconazole, Fosetyl aluminium, Metalaxyl மற்றும் COC போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை வேர்ப்பகுதியில் ஊற்றலாம்.
மஞ்சள் இலை நோய்:
- முதிர்ந்த இலைகளின் நுனிப்பகுதியில் மஞ்சள் நிற மாற்றத்தை ஆரம்ப நிலையில் காண இயலும். நாளடைவில் இது இலையின் மையப் பகுதியை நோக்கி நகரும். தீவிரமடையும் பொழுது பயிரின் அனைத்து இலைகளிலும் அறிகுறிகள் பரவி இலைகள் கருகி விடும்.
- வயலை சுத்தமாக பராமரித்தல், நன்கு இயற்கை வழி ஊட்டச்சத்து கொடுத்தல் மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துதல் போன்றவற்றின் இந்த நோய் பரவுதலை தவிர்க்கலாம்.
0 Comments:
கருத்துரையிடுக