google-site-verification: googled5cb964f606e7b2f.html இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

வெள்ளி, 7 ஜூன், 2024

இயற்கை முறையில் களைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

களை என்பது என்ன: 

  • களைச் செடிகள் தேவையற்ற செடிகள் அல்ல. தேவையற்ற இடத்தில் வளர்வதால் அதனை நாம் களைகள் என்று கூறுகிறோம். மற்றபடி இந்த செடிகள் எண்ணற்ற பலன்களையும் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.
  • பயிர் சாகுபடியில் களைகளை கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக திகழ்கிறது. குறிப்பாக இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்கள் களைகளை கட்டுப்படுத்த முடியாமல்  அதிக செலவினம் மற்றும் மகசூல் இழப்பீடு சந்திக்க நேரிடுகிறது.

களைகள் எவ்வாறு பரவுகிறது:

  • மக்காத தொழு உரத்தை பயன்படுத்துவதால்.
  • வேறு வயல்களில் இருந்து தண்ணீர் நம் வயலுக்குள் செல்வதாலும்.
  • புதிதாக நம் வயலுக்கு மண் அடிக்கும் பொழுது அதன் வழியாகவும். 
  • தொடர்ச்சியாக கால்நடைகளை வயலில் மேச்சலுக்கு விடுவதாலும். 
  • முறையான பண்ணை வழிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதாலும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • 18 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை கோடை பருவத்தில் ஆழமான உழவு செய்வதால் களைகள் அதிக வெப்ப நிலைக்கு உட்பட்டு அதில் உள்ள ஈரப்பதம் முழுமையாக வெளியேறுவதால் களைகள் இறந்து விடுகிறது. இதனால் மீண்டும் முளைத்து வரும் களைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைகிறது. 
  • வயலை சுற்றி உயரமான வரப்பு அமைப்பதால் அருகில் உள்ள வயல்களில் இருந்து மழை நீர் உள்ளே வராமல் இருப்பதால் களைகள் பரவுவதை தவிர்க்கலாம்.
  • நமது வயல்களுக்கு புதிதாக மண் அடிக்கும் பொழுது தேர்வு செய்து கொண்டு வரப்படும் மண்ணில் களைகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • அடி உரமாக நன்கு மக்கிய தொழு உரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் இதில் இருக்கக்கூடிய விதைகள் முளைத்து வயலில் களைகள் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
  • அதிகம் களைகள் வளரக்கூடிய நிலத்தில் தொடர்ச்சியாக பயிர் சுழற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது நம் தேர்வு செய்யும் பயிர் நல்ல வேர் அமைப்பு மற்றும் அதிக இலை பகுதியை கொண்டுள்ளதாகவும் தேர்வு செய்யப்படுவதால் களைகளின் வளர்ச்சி வெகுவாக மட்டுப்படுத்தப்படுகிறது.
  • அதேபோன்று ஊடு பயிரிடுதல், வரப்பு பயிர் சாகுபடி செய்தல் மற்றும் தொடர் பயிர் சாகுபடி போன்றவற்றை பின்பற்றுவதாலும் களைகள் வளர்ச்சி மற்றும் எண்ணிக்கையை குறைக்கலாம்.
  • நிலத்தில் பயிர்கள் இல்லாத காலத்தில் அல்லது பயிர் இடைவெளியில் மாடு/ஆடுகள் மேய்ப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இதன் மூலம் இடப்படும் சாணம் மீண்டும் களை வளர்ச்சியை நிலத்தில் அதிகப்படுத்தும்.
  • வருடத்திற்கு ஒரு முறை வேகமான வளர்ச்சி மற்றும் அதிக வேர் அமைப்பு கொண்ட குறைந்த வாழ்நாள் பயிர் அல்லது பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்வதால் களைகளின் வளர்ச்சி மற்றும் வேர் அமைப்பு இந்தப் பயிர்களால் சிதைக்கப்பட்டு வளர்ச்சி தடைபடுகிறது. மேலும் இது மண்ணிற்கு வளத்தையும் தன்மையையும் மாற்றுகிறது. 
  • நிலத்தில் தோன்றும் களைகளை அவ்வப்போது பிடுங்கி எடுக்க வேண்டும். குறிப்பாக களை செடிகள் பூ பூப்பதற்கு முன்னதாக இதனை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும்.
  • உழவு அல்லது கைகளை எடுக்கும் பொழுது களைகள் நன்கு காய்ந்த பிறகு மட்டுமே நீர் பாய்ச்ச வேண்டும். இல்லையெனில் இதன் வளர்ச்சி மற்றும் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அல்லது களைகளை வயலில் இருந்து சேகரித்து வெளியே அகற்றலாம்.
  • பல்லாண்டு பயிர் அல்லது உயர் தொழில்நுட்ப முறையில் பயிர் சாகுபடி செய்யும் பொழுது இடைப்பட்ட பகுதியில் Weed mat எனப்படும் மக்காத தார் பாய்களை விரித்து விடுவதால் அந்த பகுதியில் களை வளர்ச்சி முற்றிலும் தடைபடுகிறது. ஆனால் இது அதிக செலவீனத்தை ஏற்படுத்தும். 
  • நாம் தேர்வு செய்து பயிரிடும் பயிரை பொறுத்து நெகிழி நிலப் போர்வை அல்லது பண்ணை கழிவுகள், தேங்காய் நார் கழிவு, மரத்தூள்கள், மக்கிய இலைகள் போன்றவற்றை பயன்படுத்தியும் தற்காலிக முறையில் மண் மூடாக்கு இடலாம். ஆனால் இது எளிதில் தீப்பற்றக் கூடியது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • புல் வகைக் களைகள் உதாரணத்திற்கு அருகம் புல், கோரை, சுனைப்புல் போன்றவை அதிக அளவு நம் வயலில் இருக்கும் பொழுது அந்த வயலில் நெல் வாழை போன்ற அதிக நீர் தேவை உள்ள பயிர்களை சாகுபடி செய்யும் பொழுது களைகளின் கிழக்குகளை அழுகச் செய்து வெகுவாக புல் வகைகளை கட்டுப்படுத்தலாம். 
  • சில வகை பயிர்களின் வேர்களில் இருந்து சுரக்கப்படும் திரவங்கள் மற்ற பயிர்கள் வளர்வதை தடை செய்கிறது இது போன்ற பயிர்களை தேர்வு செய்து பயிரிடலாம். உதாரணத்திற்கு சோளம், தட்டைப்பயிறு நரி பயிர், பசுந்தாள் பயிர்கள், மொச்சை, குதிரைவாலி, சூரியகாந்தி மற்றும் பல பயிர்கள்.
  • மாமரத்தின் அடிப்பகுதியில் பொதுவாக களைகள் அதிகம் வளர்வதில்லை. ஏனெனில் மரத்தின் நிழல் மற்றும் மா இலை, பட்டை மற்றும் தண்டுப் பகுதியில் உள்ள வேதிப்பொருட்கள் களைகள் வளர்வதை தடை செய்வதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் நமக்கு கூறுகிறது. 
  • எலுமிச்சை புல் எண்ணெய், தைல புல் எண்ணெய் மற்றும் கற்பூரம் போன்றவைகளும் களைகளை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகிறது. 
  • பல்வேறு வகையான களைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் மத்தியில் மாட்டு கோமியம், கல் உப்பு கரைசல், சோப்பு கரைசல், எலுமிச்சை சாறு என பல்வேறு இயற்கை வழி பொருட்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றை நாம் எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இதில் உள்ள சவால்கள். 
  • இதைத் தாண்டி இயற்கை வழி களைக்கொல்லிகள் உதாரணத்திற்கு Gluten meal எனப்படும் ஒரு வகை பசை போன்ற திரவத்தை களைகள் முளைப்பதற்கு முன்பதாக பயன்படுத்துவதால் நல்ல பயன் அளிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்...


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts