மரவள்ளி சாகுபடியில் இரும்பு சத்து பற்றாக்குறையும் அதன் மேலாண்மையும்
|முன்னுரை:
சாகுபடியில் உள்ள மரவள்ளி/குச்சி கிழங்கு, கரும்பு, கருவேப்பிலை, உளுந்து மற்றும் பல பயிர்களில் நுண்ணூட்ட சத்து, குறிப்பாக இரும்பு சத்து குறைபாடு தென்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு விவசாயிகளின் வயல்கள் கள ஆய்வு செய்யப்பட்டு இது தொடர்பாக விரிவான கட்டுரை கீழ்க்கண்டவாறு பதிவிடப்படுகிறது.
இரும்புச்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள்:
- குன்றிய பயிர் வளர்ச்சி
- குறிப்பாக நுனி இலைகளின் வளர்ச்சி குறைந்து காணப்படும் ஆனால் இலைகளில் உருமாற்றம் இருக்காது.
- நுனி/ தளிர் இலைகள் முழுவதுமாக மஞ்சள் நிறமாக மாறுதல். ஆனால் மாங்கனிசு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இலைகளில் திட்டு திட்டாக மஞ்சள் நிற மாற்றமடைந்து காணப்படும்.
- இரும்பு பற்றாக்குறையின் ஆரம்ப நிலையில் பாதிக்கப்பட்ட இலைகளின் நடு நரம்பு மற்றும் இதர நரம்புகள் பச்சை நிறமாகவே காட்சியளிக்கும்.
- நாளடைவில் தளிர் இலைகள் தீவிர வெளிர் மஞ்சள் நிறமாக மாறுதல் இலை நரம்புகள் பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறமாக மாற்றமடையும்.
- இதற்கு அடுத்தப்படியாக இலையின் ஓரங்களில் இருந்து கருகல் தென்படும் தீவிரமடையும் பொழுது இலை முழுவதும் பரவுகிறது. மேலும் இலை காம்புகள் வெளிர் மஞ்சள் முதல் வெள்ளை நிறத்தில் மாற்றம் அடையும்.
- தடுப்பு நடவடிக்கை எடுக்காத வயல்களில் கருகல் அதிகரித்து மற்ற இலைகளுக்கு பரவுகிறது இதனால் கண்டிப்பாக மகசூல் இழப்பு ஏற்படும்.
ஏன் இரும்பு பற்றாக்குறை ஏற்படுகிறது:
- அதிக அளவு ரசாயன உரங்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் ஏற்பட்ட உப்பு படிதல் காரணமாக இரும்பு சத்து பற்றாக்குறை ஏற்படும்.
- பொதுவாகவே அமில தன்மை கொண்ட மண் மற்றும் களர் நிலங்களில் அதிக அளவு உப்பு மற்றும் கால்சியம் சத்து இருப்பதால் இரும்புச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
- இது மட்டுமின்றி மண்ணில் அதிக அளவு மாங்கனிசு துத்தநாகம் மற்றும் காப்பர் ஊட்டச்சத்து இருப்பதாலும் இரும்புச்சத்து பற்றாக்குறையின் அறிகுறிகள் ஏற்படும்.
- பயிர்களில் போதுமான வேர் வளர்ச்சி இல்லாததாலும்
- தொடர்ச்சியான மண் ஈரப்பதம் மற்றும் இறுக்கமான மண் அமைப்பு
- மண்ணின் அதிக கார அமிலத்தன்மை மற்றும் அதன் இறுக்கத்தினால் மண்ணில் உள்ள இரும்பு சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்காத வண்ணம் நிலை நிறுத்தப்படுவதால்
- அதிகமாக பாஸ்பரஸ் எனப்படும் மணிச்சத்து உரத்தை பயன்படுத்துவது குறிப்பாக டிஏபி (DAP). இது போன்று பல்வேறு காரணங்கள் உள்ளது.
தற்போது இதை எவ்வாறு சரி செய்யலாம்:
- பயிரின் வேர் வளர்ச்சிக்கு ஏற்ப நிலத்தில் இருக்கக்கூடிய மண்ணை மாற்றியோ அல்லது புதிதாக மண்ணை சேர்த்து பயிரிடலாம்.
- போதுமான அளவு மண் மற்றும் மர துகள்களை அவ்வப்போது பயன்படுத்துவதால் வெகுவாக உப்பு தன்மையை குறைக்க முயற்சிக்கலாம்.
- உப்பு தண்ணீருக்கு பதிலாக நல்ல தண்ணீரை அல்லது மழை நீரை சேகரித்து பயன்படுத்துவதால் பயிர் வளர்ச்சி ஊக்கப்படுத்துவதுடன் மண்ணில் உள்ள உப்பை குறைக்கலாம்.
- பயிரிடும் போது மேட்டுப்பாத்திகளை தயார் செய்து நடவு மேற்கொள்வதால் உப்பு நீர் நேரடியாக வேர் வளர்ச்சியை பாதிப்பதை தவிர்க்கலாம்.
- அதிகளவு நன்கு மக்கிய தொழு உரம் இட வேண்டும். இதனை உயிர் உரங்களுடன் ஊட்டமேற்றி பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
- Chelated வடிவத்தில் இரும்பு சத்தை இலை வலியாக தெளிக்கலாம். பத்து நாட்களுக்கு ஒரு முறை என இரண்டு அல்லது மூன்று முறை
- ஏக்கருக்கு 200 லிட்டர் வீதம் ஈயம் கரைசல் அல்லது வேஸ்ட் டி கம்போசர்(Waste decomposer) நீரில் விட வேண்டும். மாதம் ஒரு முறை என இரண்டு முறை.
- இது மண்ணின் கார அமிலத்தன்மையை குறைக்க உதவி புரிகிறது இதனால் இதர ஊட்டச்சத்துக்களும் செடிகளுக்கு எளிதில் கிடைக்கும்
- ரசாயன உரங்களை இடுவதற்கு முன்பதாக இதனை தொழு உரம் அல்லது மன் புழு உரம் பயன்படுத்தி 15 முதல் 30 நாட்கள் ஊட்டமேற்றி இடுவதால் ரசாயன உரங்கள் இடுவதால் இவை செடிகளுக்கு எளிதில் கிடைக்க பெறுவதுடன் மண்ணில் நிலை நிறுத்தப்படுவதில்லை.
- வடிகால் வசதி ஏற்படுத்தி உப்பு தண்ணீரை நிலத்திலிருந்து வெளியேற்ற முயற்சிக்கலாம்.
- இயற்கை வழி தயாரிப்பான பஞ்சகாவியா, மீன் அமிலம், ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் தண்ணீரில் ஊற்றி விடலாம்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன் பெறலாம்.
0 Comments:
கருத்துரையிடுக