இயற்கை முறையில் கால்சியம் ஊட்டச்சத்தை பெரும் வழிமுறைகள்
|முன்னுரை:
- பயிரின் வளர்ச்சி மற்றும் பயிரின் பாகங்கள் திடமாக இருக்க கால்சியம் ஊட்டச்சத்து மிகவும் இன்றியமையாததாகும். பொதுவாக மண்ணின் கார அமிலத்தன்மை மண்ணில் இருக்கும் கால்சியம் ஊட்டச்சத்தை நிர்ணயிக்கிறது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 குறைவாக உள்ள அமைப்பில் கால்சியம் குறைபாடு காணப்படும்.
- மண்ணில் அதிக அளவு பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் இருந்தாலும் கால்சியம் ஊட்டச்சத்து குறைபாடு பயிர்களில் காணப்படும். அதே போன்று மண்ணில் அதிக அளவு பாஸ்பரஸ் இடும் பொழுது இது கால்சியத்துடன் வேதியல் வினைபுரிந்து கால்சியம் ஊட்டச்சத்தை செடிகளுக்கு கிடைக்காதவாறு செய்து விடுகிறது.
கால்சியம் பற்றாக்குறையினால் ஏற்படும் அறிகுறிகள்:
- குன்றிய பயிர் வளர்ச்சி
- இளம் இலைகள் மற்றும் தளிர்கள் உட்புறமாக சுருண்டு காணப்படுதல்.
- பூ மொட்டுக்கள் மற்றும் பூக்கள் வளர்ச்சி குறைதல்.
- போதிய வேர் வளர்ச்சி அல்லது வேர் நுனி பகுதிகள் இறந்து காணப்படுதல்.
- பயிரின் அடி இலைகள் மஞ்சள் நிறமாதல் மற்றும் உட்புறமாக சுருங்குதல்.
- இலை துணிகளில் கருகிய தோற்றம்.
- காய் மற்றும் பழங்களில் அழுகல் காணப்படுதல்.
- களர் அல்லது உவர் நிலங்களில் அதிகம் கால்சியம் சத்து இருக்கும்பொழுது மற்ற நுண்ணூட்ட சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறாது குறிப்பாக துத்தநாகம், இரும்பு மற்றும் தழைச்சத்து.
கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்த இயற்கை உரங்கள்:
ஜிப்சம்:
- கால்சியம் சல்பேட் எனப்படும் ஜிப்சம் நாம் அனைவரும் அறிந்த சிறந்த கால்சியம் மற்றும் சல்பர் சத்துகள் கொண்ட உரமாகும்.
- பொதுவாக இது மண்ணின் கார அமில தன்மையை சரி செய்ய மற்றும் மண் இறுக்கத்தை போக்க இடப்படுகிறது. அதிக கார அமிலத்தன்மை கொண்ட மண்ணில் இதை விடுவதை தவிர்க்கவும்.
- இதில் கால்சியம் 23 % மற்றும் சல்பர் 18 % நிறைந்துள்ளது. இந்த கால்சியம் கார்பனேட் மண்ணிலிருந்து எடுக்கப்படும் பாறைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுவதால் இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
முட்டை ஓடு:
- இயற்கை விவசாயம் பயிர்களுக்கு தேவையான கால்சியம் சத்தை கொடுப்பதில் முட்டை ஓடு மிக முக்கிய பங்கு வைக்கிறது. தேவையான அளவுக்கு முட்டை ஓட்டை சிறிதும் துண்டுகளாக நறுக்கி அல்லது பவுடர் வடிவில் தயார் செய்து பயிர்களுக்கு இலை வழியாகவும் வேர் பகுதியிலும் கொடுக்கலாம்.
- இதனை சரியான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும் அளவுக்கு அதிகமாக இடும் போது இது மண்ணின் கார அமில தன்மையை மாற்றும் தன்மை உடையது. எனவே இதனை கார அமிலத்தன்மை குறைவாக உள்ள மண்ணில் மட்டும் பயன்படுத்துவது சிறந்தது.
மீன் அமிலம்:
- பல்வேறு வகையான அமிலங்கள் நிறைந்திருக்கும் இயற்கை வழி தயாரிப்பு திரவமான மீன் அமிலத்தில் கால்சியம் ஊட்டச்சத்து நிறைந்திருக்க நாம் தயார் செய்யும் கரைசலை சுமார் ஆறு மாதம் வரை நொதிக்க விடும் பொழுது மீன் பாகத்தில் உள்ள எலும்புகள் சிதைந்து அதில் உள்ள கால்சியம் சத்து நமக்கு கிடைக்கப் பெறுகிறது.
- பொதுவாக மீன் அமிலம் 7 முதல் 10 நாட்களில் தயார் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது இதில் பெரிய அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்காது வளர்ச்சி ஊக்கிகள் மட்டும் நிறைந்ததாக இருக்கும்.
வேளாண்மை சுண்ணாம்பு:
- மண்ணில் புதையுண்டு இருக்கும் சுண்ணாம்பு பாறைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் கால்சியம் கார்பனேட் எனப்படும் இயற்கை பொருள் தான் வேளாண்மை சுண்ணாம்பு. இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஊட்டச்சத்து நிறைந்துள்ளதால் குறைந்த கார அமிலத்தன்மை கொண்ட மண்ணில் அதன் தன்மையை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
- இதை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இயற்கை வழி தயாரிப்பு பொருளாகும். மண் வளத்தை மேம்படுத்துவதால் இதர நுண்ணூட்ட சத்துக்களை பயிர்களுக்கு கிடைக்க செய்கிறது.
நீரில் கரையும் கால்சியம்:
நீரில் கரையும் கால்சியம் என்பது முட்டை ஓடு மற்றும் அசிட்டிக் அமிலம் ஆகியவற்றை பயன்படுத்தி தயாரிக்க கூடிய திரவமாகும். அதாவது முட்டையின் ஓட்டு பகுதியில் மிக அதிக அளவு கால்சியம் நிறைந்து இருப்பதால் இதை பிரித்து எடுத்து உடனடியாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக தயாரிக்கப்பட்டது தான் இந்த நீரில் கரையும் கால்சியம்.
முட்டை எலுமிச்சை கரைசல்:
- ஒரு ஏக்கர் நிலப்பரப்பிற்கு இலை வழியாக தெளிப்பதற்கு ஏதுவாக சுமார் 15 முதல் 20 முட்டைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அது மூழ்கும் படி எலுமிச்சை சாற்றை ஊற்ற வேண்டும்.
- இதனை மூடி வைத்து சுமார் பத்து நாட்களுக்கு பிறகு பார்க்கும் பொழுது மிகவும் மென்மையான அமைப்பாக இருக்கும் இதனை நன்றாக பிழிந்து அதனுடன் 250 கிராம் நாட்டு வெல்லம் சேர்த்து மீண்டும் 20 நாட்கள் மூடி வைக்க வேண்டும்.
- இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் திரவத்தை சுமார் ஒரு ஏக்கருக்கு 150 லிட்டர் தண்ணீரில் கலந்து இலை வழியாக தெளிக்கலாம்.
எலும்பு உரம்:
- எலும்பு உரம் என்பது விலங்கினங்களின் எலும்புகளை பொடியாக்கி அல்லது துகள்களாக மாற்றி கிடைக்கப்பெறும் இயற்கை உரமாகும். இதில் அதிக அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் தழைச்சத்து நிறைந்துள்ளது.
- மண்ணின் தன்மை மற்றும் அமைப்பை சரி செய்வதுடன் பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை எடுத்து தருவதால் இது சிறந்த பயனளிக்கிறது.
- தொடர்ச்சியாக வளர்ச்சியிலும் விளைச்சலிலும் செயல்படக்கூடிய பயிர்களுக்கு இதனை கொடுப்பதால் மண்ணின் தன்மை மாறாமல் இருக்கும்.
இது போன்ற தகவல் மற்றும் வேளாண் தொடர்பான சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/LticgC5MQchIrYCSzgkNqA
0 Comments:
கருத்துரையிடுக