பயிர் சுழற்சியின் முக்கியத்துவம்-விரிவான தொகுப்பு
ஜனவரி 26, 2024
In மற்றவைகள் |
|
பயிர் சுழற்சி என்றால் என்ன...
- பயிர் சுழற்சி என்பது நமது விளை நிலத்தில் குறிப்பிட்ட வயலில் தொடர்ச்சியாக அல்லது அடுத்தடுத்த என்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே தீர்மானிப்பது ஆகும்.
- பயிர் சுழற்சி என்பது மிகவும் பழமையான சாகுபடி முறைகளில் ஒன்றாகும். ஆனால் தற்போது விவசாயிகள் இதை பெரிதளவில் கருத்தில் கொள்வதில்லை. ஆனால் இதை முறைப் படியாக பின்பற்றும் போது இதன் மூலம் நமக்கும் மண் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எண்ணற்ற பயன்களை தருகிறது.
- நமது வயலின் அமைப்பு, மண் தன்மை, கிடைக்க பெறும் நீரின் தன்மை மற்றும் அளவு, மண் வளம், நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை, பருவம், நமது வயலில் தொடர்ச்சியாக காணப்படும் களைகள், நோய் மற்றும் பூச்சி தாக்குதல், நுகர்வோர்களின் தேவை என பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டு தான் பயிர் சுழற்சி மேற்கொள்ள வேண்டும்.
பயிர் சுழற்சியின் பயன்கள்/ முக்கியத்துவம்:
1. ஊட்டச்சத்துக்கள் சுழற்சி அடைதல்:
- ஒவ்வொரு பயிரும் குறிப்பிட்ட சில வகை ஊட்டச்சத்துக்களை அதிகம் மண்ணில் இருந்து எடுத்துக் கொள்ளும். ஆனால் மண்ணிற்கும் பயிருக்கும் தேவையான உர அளவை அதற்குத் தேவையான விகிதத்தில் நாம் இடுவதில்லை.
- இதனால் குறிப்பிட்ட சில ஊட்டச்சத்துக்கள் குறிப்பிட்ட சில பயிர்களால் அதிகம் எடுத்துக் கொள்ளப்பட்டு அது மண்ணில் மிக குறைவான அளவில் காணப்படும்.
- ஒரே பயிரை தொடர்ச்சியாக ஒரே நிலத்தில் பயிர் செய்வதால் நாளடைவில் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுகிறது.
- உதாரணத்திற்கு வாழை சாகுபடி செய்யும் போது அது அதிக அளவிலான பொட்டாஸ் சத்தினை மண்ணில் இருந்து எடுத்துக் கொள்கிறது. ஒரே வயலில் மீண்டும் நாளை சாகுபடி செய்யும் போது அது மேலும் சத்துக்களை உறிஞ்சி கொண்டு மண்ணின் வளத்தை குறைத்து விடுகிறது.
2. களைகள் கட்டுப்பாடு:
- நாம் பயிர் சுழற்சி மேற்கொள்வதால் களைகளை எளிதில் கட்டுப்படுத்தலாம்.எப்படி என்றால் ஒவ்வொரு பயிரும் வெவ்வேறு அளவு நீர் தேவை, உர தேவை வேர் வளர்ச்சி, வளர்ச்சி தன்மை மற்றும் பல விஷயங்கள் மாறுபடுவதால் களைகளும் பயிருக்கு ஏற்றவாறு மாறுபடுகிறது.
- எனவே பயிற்சி மேற்கொள்வதாலும் தலைகளை கட்டுக்குள் வைக்கலாம்.
- உதாரணத்திற்கு வயலில் காணப்படும் சுனை புல்லை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக சிகப்பு சோளம் விதைப்பதால் அதன் வேரிலிருந்து வரக்கூடிய திரவம் குறிப்பிட்ட வகை புல் வகைகளை கட்டுப்படுத்தும்.
3. நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு:
- ஒரே விதமான நோய் அல்லது பூச்சிகள் நமது பயிரை தாக்குவதில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
- ஒவ்வொரு பயிரும் ஒரு சில வகையான நோய் மற்றும் பூச்சி தாக்குதல் மட்டும் கொண்டுள்ளது. அவ்வாறு இருக்கும் போது ஒரே பயிரை தொடர்ச்சியாக நாம் பயிரிடுவதால் நோய் அல்லது பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தா வண்ணம் எதிர்ப்பு திறன் பெற்று விடுகிறது இதனால் சாகுபடி செலவு மிக அதிகமாகிறது.
- பயிர் சுழற்சியை மேற்கொள்வதால் மண்ணில் குறிப்பிட்ட சில நோய் அல்லது பூச்சிகளின் வாழ்க்கை படிநிலைகள் அதிகமாவதை தவிர்க்கலாம்.
- உதாரணத்திற்கு சில பயிர் மற்றும் அதை தாக்கும் நோய்/ பூச்சிகள் கொண்டுள்ள எதிர்ப்பு திறன்.
- வாழை- பனாமா வாடல் நோய்
- மல்லிகை- மல்லிகை மலரில் மிட்ஜ் பூச்சி தாக்குதல்
- கத்தரி- குருத்து மற்றும் காய்ப்புழு
- தக்காளி- லீப் மைனர் எனப்படும் இலை துளைப்பான்
- சின்ன- வெங்காயம் திருகல்/ தவளை நோய்
- மிளகாய்- முரணை சிலந்தி பேன் தாக்குதல்
- அனைத்து விதமான கொடி காய்கறி பயிர்களில்- இலை சுரங்க பூச்சி தாக்குதல்
- மக்காச்சோளம்- படைப்புழு
- இது மட்டும் அன்றி பல்வேறு பயிர்களில் வைரஸ் நோய்கள் மற்றும் பல பூச்சி தாக்குதல்கள் கட்டுப்படுத்தா வண்ணம் காணப்படுகிறது இதற்கு முதன்மையான காரணம் தொடர்ச்சியாக ஒரே பயிரை ஒரே நிலத்தில் சாகுபடி செய்து வருவதால் தான்.
4. மண்ணின் தன்மை மற்றும் வளத்தை மேம்படுத்துதல்:
பயிர் சுழற்சி மேற்கொள்வதால் ஒவ்வொரு பயிரும் அதற்கே உரித்தான வேர் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் மாறுபடும். இதனால் மண்ணில் ஊட்டச்சத்துக்கள் குறைபாடுகள் இன்றி அனைத்து ஊட்டச் சத்துகளும் சராசரியாக காணப்படும் மேலும் வேர் வளர்ச்சி மண் கட்டிகளை உடைத்து மண்ணிற்கு காற்றோட்டம் ஏற்படுத்தி தருவதால் அதன் தன்மை மேம்படுகிறது.
5. மேம்பட்ட பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல்:
- பயிர் சுழற்சி செய்வதால் மண்ணில் ஊட்டச்சத்துக்கள் சராசரியான அளவில் காணப்படுகிறது மேலும் மண் தன்மை மற்றும் பயிர் வளர்ச்சி போதுமான அளவு காணப்படும் என்பதை நாம் ஏற்கனவே கண்டோம்.
- அதேபோன்று குறைந்த அளவு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுவதால் ஒட்டுமொத்தமாக நல்ல பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிப்பை நாம் காணலாம்.
6.சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவும்:
- தொடர்ச்சியாக ஒரே பயிரை பயிரிடுவதால் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு சற்று அதிகமாக காணப்படும். இதை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் நன்மை செய்யக்கூடிய பூச்சிகளின் வரவை தடை செய்கிறது.
- பயிர் சுழற்சி மேற்கொள்வதால் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைத்து நன்மை செய்யும் பூச்சிகளின் வரவை அதிகப்படுத்தலாம்.
இதர சில பயன்கள்:
- பயிர் சுழற்சி செய்வதால் மண் தன்மை மேம்படுவதுடன் மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது.
- பயிர் சுழற்சியில் பயிறு வகை பயிர்களை பயிரிடுவதால் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்தி தழைச்சத்து உர தேவையை குறைக்கிறது.
- சில பயிறு வகை பயிர்கள் நிலத்தை போர்வை போன்று மூடுவதால் களைகளை கட்டுப்படுத்துவதில் இது முக்கிய பங்கு வைக்கிறது.
- இயற்கை விவசாயத்தில் நீர் சுழற்சி என்பது ஒரு முக்கிய அங்கமாக திகழ்கிறது.
- நுகர்வோர் தேவை மற்றும் சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு பயிர் சுழற்சி மேற்கொள்ளும் போது விலை பொருட்களுக்கு நல்ல சந்தை மதிப்பை விவசாயிகள் பெறலாம்.
இது போன்ற தகவல் மற்றும் விவசாயம் சார்ந்த சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள வாட்ஸ் அப் குழுவில் இணைந்து பயன்பெறலாம்...
0 Comments:
கருத்துரையிடுக