சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த சில எளிமையான முறைகள்..,
|1.வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்திடவும் இலை பேன்களை கண்காணித்திடவும் மஞ்சள் ஒட்டு பொறி பயன்படுத்தப்படுகிறது... இந்த வகை ஒட்டு பொறிகளை சராசரியாக ஏக்கருக்கு 12 முதல் 15 எண்கள் பயன்படுத்தலாம். ஆனால் பசுமைகுடில் /நிழல் வலை கூடாரம் போன்ற பாதுகாப்பு முறையில் வளர்க்கப்படும் பயிர்களுக்கு ஐந்து மீட்டர்களுக்கு ஒரு மஞ்சள் விட்டு பொறி என்ற விகிதத்தில் பயன்படுத்தலாம்.
இந்தப் பொறிகளை செடிகளின் கிடை கிடைமட்ட அளவில் காற்று வீசும் திசைக்கு எதிராக இருக்கும்படி பொருத்த வேண்டும். இதை நாம் வீட்டிலே தயார் செய்யலாம் சிறிய செவ்வக வடிவ அட்டை/ பிளாஸ்டிக்/ இரும்பு போன்றவற்றில் மஞ்சள் நிற பெயிண்டை நன்றாக பூசி விட்டு அதன் மேல் கிரீஸ்/ஆமணக்கு எண்ணெயுடன் ஏதேனும் மருந்து கலந்து அதன் மேல் தடவி வயலில் ஆங்காங்கே வைப்பதால் இது வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கும்.
2. இதே போன்று நீல நிற ஒட்டு பொறிகள் Thrips எனப்படும் இலை பேன்களை கவர்ந்து அழிக்கும் வல்லமை கொண்டது. இதை சிறப்பாக பயன்படுத்திட ஒட்டுப்பொறிகளை நிலத்தில் நிலவிய பிறகு நீரை நன்றாக ஸ்பிரேயர் மூலம் தெளிக்க வேண்டும் அவ்வாறு தெளிக்கும்போது இந்த இலை பேன் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு தாவும் போது ஒட்டுப்பொறியில் சிக்கிக் கொண்டு இறந்து விடும்.
3. கொப்புள வண்டுகளை கவர்ந்திட நீல நிற பக்கெட்டில் நீர் மற்றும் துணி சோப்பு கரைசலை சரிபாதியா கலந்து வைப்பதால் இதில் கொப்புள வண்டுகள் கவர்ந்து அழிக்கப்படுகிறது.
4. வெள்ளை ஈக்கள், இலைப்பேன் மற்றும் சிலந்திப் பேன் போன்ற சாறு உறிஞ்சி பூச்சிகளை கட்டுப்படுத்திட பத்து லிட்டர் தண்ணீருக்கு 25 முதல் 30 ml பசு மாட்டு கோமியம் மற்றும் பத்து முதல் பதினைந்து கிராம் துணி சோப்பு கரைசல் ஆகியவற்றை கலந்து விசைத்தெளிப்பானில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால் பூச்சிகளின் மூச்சுக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு அவை மயக்கம் அடைந்து செடியில் இருந்து கீழே விழுந்து விடுகிறது.
5. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 200 முதல் 250 கிராம் கொத்தமல்லி விதைகளை பத்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி அதன் நீரை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து சிலந்திப் பேன் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
6. 5 கிலோ வேப்ப இலையை நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு மசித்த வேப்ப இலை மற்றும் அதன் சாறுடன் 5 கிலோ நாட்டு பசு கோமியம் மற்றும் 2 கிலோ நாட்டுப் பசு சாணம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு நாள் நொதிக்க விட வேண்டும். இதனை ஒரு ஏக்கருக்கு தேவையான நீரில் கலந்து தெளிப்பதனால் சாறு உறிஞ்சி பூச்சிகள் மற்றும் மாவு பூச்சி முதலியவற்றை கட்டுப்படுத்தலாம்.
7. தலா 2 கிலோ வேப்ப இலை, பப்பாளி இலை, சீதா, கொய்யா மற்றும் மாதுளை இலைகளை நன்றாக இடித்து10 லிட்டர் நாட்டு பசு கோமியத்துடன் கலந்து கொதிக்க வைக்க வேண்டும் பின்னர் இதை வடிகட்டி சாற்றை மட்டும் எடுத்துக் கொண்டு ஏக்கருக்கு ஒரு லிட்டர் விதம் பயன்படுத்தலாம். இது அனைத்து விதமான சாறு உறிஞ்சி பூச்சிகள் மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
8. கோடை காலங்களில் நிலத்தினை ஒற்றைக் களைப்பை கொண்டு ஆழமாக உழவு செய்வதால் அனைத்து விதமான பூச்சி மற்றும் நோய் காரணிகளை ஏதேனும் ஒரு வாழ் நிலையை ஒழிக்கலாம்.
9. பயிர்களின் மீதங்கள் அல்லது எச்சங்கள் நிலத்திலேயே இட்டு எரிப்பதால் தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சி மற்றும் நோய் காரணிகளை அழிக்கலாம்.
10. பூண்டு அல்லது சின்ன வெங்காயத்தில் இருந்து எடுக்கப்படும் சாற்றைக் கொண்டு அனைத்து விதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் பட்டாம் பூச்சி வகை பூச்சிகளையும் கட்டுப்படுத்தலாம். இதில் இருந்து வரும் வாசம் பூச்சிகளுக்கு உகந்ததல்ல.
0 Comments:
கருத்துரையிடுக