google-site-verification: googled5cb964f606e7b2f.html தென்னையில் பென்சில் முனை சீர்குலைவிற்கான காரணங்களும் சரி செய்யும் வழிமுறைகளும் ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

புதன், 27 நவம்பர், 2024

தென்னையில் பென்சில் முனை சீர்குலைவிற்கான காரணங்களும் சரி செய்யும் வழிமுறைகளும்

     தென்னையில் பென்சில்முனை சீர்குலைவு என்பது  பல்வேறு காரணங்கள் ஒருங்கிணைந்து காணப்படுவதால் ஏற்படும் அறிகுறியாகும்.  இந்த வகை குறைபாடு 1970ஆண்டுகளிலிருந்து பல்வேறு நாடுகளில் பரவலாக காணப்பட்டு வந்தது. மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலை, இயற்கை இடர்பாடுகள் மற்றும் பராமரிப்புக் குறைபாட்டினால் பென்சில்முனை சீர்குலை பாதிப்பு அதிகரித்த வண்ணமாகவே திகழ்கிறது.

    பென்சில்முனை சீர்குலைவிற்கான காரணங்கள்

  • நாட்பட்ட ஊட்டச்சத்து பற்றாக்குறை குறிப்பாக மாங்கனீசு, துத்தநாகம், மெக்னீசியம், போரான், காப்பர், பொட்டாசியம் மற்றும் நைட்ரஜன்.
  • பராமரிப்பற்ற வயதான மரங்கள் குறிப்பாக 60 வருடங்களுக்கு மேல் வயதுடைய மரங்கள். 
  • தொடர்ச்சியான வறட்சி/நீர்பற்றாக்குறை
  • நீண்ட நாட்களுக்கு வயலில் நீர் தேங்குதல்.
  • மண்ணில் உயிர் கரிம கார்பன் பற்றாக்குறை.
  • நுண்ணூட்ட சத்து பற்றாக்குறை.
  • சமச்சீர் அற்ற முறையில் இரசாயன உரம் இடுதல்.
  • முறையற்ற களை மேலாண்மை.
  • தீவிர பயிர் சாகுபடி முறையை மேற்கொள்ளுதல், உதாரணத்திற்கு அடர் நடவு, ஊடுபயிர் இடுதல், கலப்பு பயிரிடுதல் மற்றும் இதர.
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதல் .

    தென்னை மரங்களில் பென்சில் முனை சீர்குலைவானது மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களில் ஒன்றிற்கு  மேற்பட்ட காரணிகள் ஒருங்கிணைந்து நீண்ட நாட்களுக்கு காணப்படுவதால் உருவாகிறது.

பென்சில்முனை சீர்குலைவின் அறிகுறிகள்

  • பாதிப்படைந்த மரங்களின் தண்டுப்பகுதி மேலே செல்ல  செல்ல தடிமன் குறைந்து நுனி சிறுத்தும் காணப்படுதல்.
  • கொண்டைப்பகுதியில் பதினைந்திற்கும் குறைவான ஓலைகள்/இலைகள்  மட்டுமே  காணப்படுதல்.
  • ஓலைகள் சிறுத்தும் பச்சை நிறத்திலிருந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் மாற்றமடைந்து காணப்படும்.
  • நாளடைவில் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி உதிர்வடையும்.
  • மரங்கள் காய்ப்புகள் இன்றி அல்லது ஒருசில காய்களுடன் மட்டுமே காணப்படும்/
  • அதிகளவிலான குரும்பை உதிர்தல் மற்றும் ஒல்லிக்காய்கள் காணப்படுதல்.
  • தீவிர நிலையின் போது  தண்டுப்பகுதியின் நுனி முறிந்து செடிகள் இறந்து விடும். 

பென்சில்முனை சீர்குலைவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

  • பரிந்துரைக்கப்பட்ட அளவில் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • முறையான களை மேலாண்மை.
  • நோய் மற்றும் பூச்சி தாக்குதல் இன்றி பராமரித்தல்.
  • முறையான வடிகால் வசதிகளை ஏற்படுத்துதல்.
  • பயிர்சாகுபடி முறைக்கு ஏற்றவாறு ஊட்டச்சத்துக்களை கூடுதலாக இடுதல்.
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை இடுதல்.
  • தென்னை நுண்ணூட்ட கலவையை மரத்திற்கு 500 கிராம் வீதம் வருடத்திற்கு இரண்டு முறை இட வேண்டும்.
  • கூடுதலாக மரம் ஒன்றுக்கு துத்தநாக சல்பேட் 225 கிராம், தாமிர சல்பேட் 225 கிராம், மாங்கனீசு சல்பேட் 225 கிராம், இரும்பு சல்பேட் 225 கிராம், போராக்ஸ் 225 கிராம், சோடியம் மாலிப்பிடேட் 10 கிராம் என்ற அளவில் 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து மரத்தின் வேர் பகுதியில் 6 மாதத்திற்கு ஒரு முறை ஊற்ற வேண்டும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.      https://chat.whatsapp.com/Ijj6PLZ6L5a1lJJyhTc5jX 


0 Comments:

கருத்துரையிடுக

Recent Posts

Popular Posts