இயற்கை முறையில் பொட்டாசியம் ஊட்டச்சத்தை பெறும் வழிமுறைகள்
|முன்னுரை:
- பயிர்களுக்கு தேவையான பல்வேறு ஊட்டச் சத்துக்களில் சாம்பல் சத்து எனப்படும் பொட்டாசியம் பிரதான பங்கு வகிக்கிறது. பயிர்களில் பல்வேறு வகையான நொதிகளை உற்பத்தி செய்தல் மற்றும் செயல்பட தூண்டுதல், பயிர்கள் அசாதாரண சூழ்நிலையை தாங்கி வளரக்கூடிய சக்தியை கொடுத்தல், மகசூலின் அளவு மற்றும் தரத்தை மேம்படுத்துதல், தழைச்சத்து மற்றும் மணிச்சத்து பயன்பாட்டை மேம்படுத்துதல் என பல்வேறு வகையான பணிகளை இது செய்கிறது.
- ரசாயன உரங்களின் விலை அதிகரிப்பு குறிப்பாக பொட்டாசியம் மற்றும் சரியான தருணத்தில் உரங்கள் கிடைக்காமல் இருத்தல் என பல காரணங்களால் பொட்டாசியம் உரத்தின் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது.
- ஒருபுறம் ரசாயன உரத்தின் பயன்பாடு குறைந்தாலும் அதற்கு மாற்றாக இயற்கை வழியில் ஊட்டச்சத்துக்களை கொடுத்தால் மட்டுமே பயிர்களில் இருந்து சராசரி மகசூல் பெற முடியும்.
பொட்டாசியம் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:
- குன்றிய பயிர் வளர்ச்சி.
- இலையின் விளிம்புகள் மஞ்சள் நிறமாதல், நாளடைவில் கருகுதல்.
- இலை நரம்புகளுக்கு இடைப்பட்ட பகுதி வெளிர் மஞ்சள் நிறமாக மாறுதல்.
- தீவிரமான பற்றாகுறையின் போது மேல் நோக்கி சுருங்குதல் மற்றும் இலை உதிர்வு காணப்படுதல்.
- பயிர்களின் நோய் எதிர்ப்பு திறன் குறைதல்.
- தண்டு வளர்ச்சி போதுமானதாக இருக்காது.
- மகசூல் இழப்பீடு ஏற்படும்.
இயற்கை முறையில் பொட்டாசியம் ஊட்டச்சத்தை பெரும் வழிமுறைகள்:
- அடி உரங்களாக பொட்டாசியம் சத்து நிறைந்த இடு பொருட்களை குறிப்பாக புண்ணாக்கு வகைகள் அதிகம் கொடுக்க வேண்டும். சில உதாரணங்கள் மற்றும் அதில் உள்ள ஊட்டச்சத்தின் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- பிரஸ்மட் - 3.0 -8.0%, தேங்காய் புண்ணாக்கு- 1.5-2.0%, பருத்தி கொட்டை புண்ணாக்கு- 2.0-2.5%
- பிரஸ்மட் பயன்படுத்தும் போது அது நன்கு சிதைந்து இருக்க வேண்டும். புண்ணாக்கு வகைகளை பயன்படுத்தும் போது அதனுடன் வேப்பம் புண்ணாக்கு அல்லது உயிர் பூச்சிக் கொல்லிகளை கலந்து இடுவது சிறந்தது.
- இயற்கை வழி தயாரிப்பு திரவங்களில் பொட்டாசியம் ஊட்டச்சத்து மிகுந்த திரவங்களை தொடர் இடைவெளியில் பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு பஞ்சகாவியா மற்றும் அமிர்த கரைசல். இதில் சுமார் 1 -1.5 % வரை பொட்டாசியம் உள்ளது.
- அதேபோல் பசு மாட்டு மற்றும் ஆட்டு கோமியத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது அவற்றை நீரில் கரைத்து விடலாம். பசு மட்டு கோமியம்- 1-1.5%, ஆட்டு கோமியம் - 2-2.5%
- அடி உரமாக அல்லது பயிர்கள் பூ எடுப்பதற்கு முன்னதாக சாம்பல் இடலாம். சாம்பல் பெறப்படும் பொருள் மற்றும் தரத்தை பொறுத்து அதில் உள்ள ஊட்டச்சத்து வேறுபடும். உதாரணத்திற்கு கட்டைகள்- 2.0-35.0%, மக்காச்சோள தட்டை- 1.5-2.5%
- மண்ணில் நிறைய பொட்டாசியம் சத்து செடிகளுக்கு கிடைக்கப் பெறாத வண்ணம் உள்ளது அதனை கிடைக்கச் செய்ய தொடர்ச்சியாக பொட்டாஸ் பாக்டீரியா திரவத்தை நீர் வழியாக கொடுக்க வேண்டும். இது மண் மற்றும் நாம் கொடுக்கும் இடு பொருட்களில் உள்ள பொட்டாசியத்தை செடிகளுக்கு கிடைக்க செய்கிறது.
- புங்கம், வேங்கை, தேக்கு, நாய் தேக்கு போன்ற மரங்களின் இலைகளில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது. இவற்றை மக்க வைத்தோ அல்லது அடி உரம் ஆகவோ பயன்படுத்தலாம் உதாரணத்திற்கு புங்கம்- 2.5-3.0%, வேங்கை- 3.0-3.5%
- பொட்டாசியம் சத்து மிகுந்த பசுந்தாள் மற்றும் பசுந்தலை பயிர்களை பயிரிட்டு மடக்கி உழவு செய்யலாம். உதாரணத்திற்கு தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு, உளுந்து...
- நமது பண்ணையில் கிடைக்கக்கூடிய கழிவுகளை பயன்படுத்தி இயற்கை பொட்டாஸ் தயார் செய்யலாம். இதற்கு பண்ணை கழிவுகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நிழற் பகுதி இடத்தில் குழி வெட்டி அதில் வேஸ்ட் டீ கம்போசர் மற்றும் பொட்டாஸ் பாக்டீரியா பயன்படுத்தி தயார் செய்யலாம். பயன்படுத்தப்படும் இடுபொருட்களை பொறுத்து மூன்று முதல் ஆறு மாதங்கள் மக்குவதற்கு தேவைப்படும்.
- ஈயம் மற்றும் வேஸ்ட் டீ கம்போசர் கரைசல் பயன்படுத்தி நுண்ணூட்ட கலவை தயார் செய்யலாம். தயார் செய்யும் போது பொட்டாசியம் மிகுந்த பொருட்களை எங்கு பயன்படுத்தினால் போதும்.
- கடல் வாழ் உயிரினங்களில் இருந்து தயாரிக்கப்படும் இயற்கை பொட்டாஸ் வாங்கியும் பயன்படுத்தலாம்.
மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/IXoGNNJtURG5WmzJTDP6vD
0 Comments:
கருத்துரையிடுக