google-site-verification: googled5cb964f606e7b2f.html ஆகஸ்ட் 2025 ~ உழவன் நண்பன்

உழவன் நண்பன் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் சேவை தளம்...

சனி, 30 ஆகஸ்ட், 2025

வாழை மரங்களில் வாழைத்தார் தண்டு பகுதியில் வெளி வருவதற்கான காரணங்களும் அதை சரி செய்யும் வழிமுறையும்

    வாழை சாகுபடியில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல், விவசாயிகளுக்கு மிக சவாலாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  பூச்சி நோய் தாக்குதல்,  ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்,  நிலவும் அசாதாரண தட்பவெப்ப சூழ்நிலை, தவறான பருவத்தை தேர்வு செய்து நடவு செய்தல், ஊட்டச்சத்து சரிவிகித இன்மை,  பயிர்களில் உற்பத்தியாகும் வளர்ச்சி ஊக்கியில் மாறுதல் மற்றும் சில காரணங்களால் சில பயிர் வினையியல் மாறுபாட்டின் அறிகுறிகள் ஏற்படுகிறது. 

    இதனை ஆங்கிலத்தில் Physiological Disorder என அழைப்பார்கள். வாழை பயிரில் தோன்றும் ஒரு வகையான பயிர் வினையியல் அறிகுறிதான் மேற்கண்ட புகைப்படத்தில் காணப்படுவது. இதனை ஆங்கிலத்தில் Choke throat என்று அழைப்பார்கள். வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் கண்டிப்பாக இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். 

Choke throat பயிர் வினையியல் மாறுபாட்டின் அறிகுறிகள்:

  • வாழை மரத்தில் பூக்கள் வெளிவர இருக்கும் தருணத்தில் கணு இடைவெளி குறைந்து காணப்படும். 
  • இதனால் பயிரின் கழுத்துப் பகுதியில் திசுக்கள் மிக இறுகி காணப்படும்.
  • இலை காம்புகளின் நீளம் குறைந்தும், அது தண்டுடன் இணையும் இடத்தில் சற்று அகலமாகவும் இருப்பதால் மேலும் கழுத்துப் பகுதியில் திசுக்கள் இறுகி காணப்படும். 
  • அதன் காரணமாக கழுத்து அல்லது உச்சிப் பகுதியில் இருந்து வெளிவர இருக்கும் பூ காம்பு வெளிவர இயலாத சூழ்நிலை ஏற்படும். 
  • இதன் காரணமாக பூ காம்பு தண்டுப் பகுதியின் ஏதேனும் ஒரு இடத்தில் இலை உறைகளை கிழித்து வெளியே வரும்.
  • இவ்வாறு வெளிவரும் பூக்காம்பில் குறைந்த அளவு காய் பிடிப்பு மட்டுமே காணப்படும். சில நேரங்களில் முற்றிலும் காய் பிடிப்பதில்லை. 
  • பயிர் வளர்ச்சிக்கு ஏற்றவாறு மற்றும் சில அறிகுறிகள் பயிரின் குருத்துப் பகுதியில் காணப்படும். மேலும் ஒழுங்கற்ற வடிவில் காய்கள் உருவாகும். 
  • இவ்வாறு வெளிவரும் வாழைத்தார், தலைப்பகுதியில் இருந்து சற்று விலகி இருப்பதால் எளிதில் அதிக வெப்ப நிலைக்கு உட்பட்டு பாதிப்படையும். 

பயிர் வினையியல் மாறுபாடு ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • பூ காம்பு வெளிவரும் நேரத்தில் காணப்படும் குறைந்த வெப்பநிலை.
  • அதிக காற்று ஈரப்பதம் 
  • நீண்ட நாட்களுக்கு மேகமூட்டமான சூழ்நிலை அல்லது மிதமான மழைப்பொழிவு காணப்படுதல். 
  • பயிர்களுக்கு போதிய வெப்பநிலை கிடைக்காமல் நிழற்ப்பாங்கான இடத்தில் வளருதல். 
  • ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் அதிகம் காணப்படும். 
  • அதிக மற்றும் தொடர்ச்சியான மண் ஈரப்பதம், வயலில் நீர் தேங்கி காணப்படுதல் மற்றும் போதிய வடிகால் வசதியின்மை.
  • பராமரிப்பு குறைபாடு 
  • போதுமான அளவு ஊட்டச்சத்து கொடுக்காதது.

இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்: 

  • சரியான நடவு பருவத்தை தேர்வு செய்ய வேண்டும். 
  • அதாவது பூ காம்பு வெளிவரும் நேரத்தில் சாதகமான தட்பவெப்ப சூழ்நிலை திகழ கூடாது. 
  • போதுமான அளவு சூரிய ஒளி மற்றும் வெப்ப கால அளவு கிடைக்கப் பெற வேண்டும்.
  • உகந்த ரகங்களை தேர்வு செய்ய வேண்டும் அதாவது சற்று உயரமாக வளரக்கூடிய ரகங்கள்.
  • வடிகால் வசதியை மேம்படுத்துதல்.
  • நீண்டகால வறட்சி மற்றும் அதற்குப் பிறகு நீர் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 
  • சரிவிகித முறையில் ஊட்டச்சத்துக்களை கொடுத்து வர வேண்டும். 

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

கத்தரி பயிரில் தேமல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

    தற்சமயம் சாகுபடிகள் உள்ள கத்தரி பயிரில் பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. குறிப்பாக இலை உண்ணும் வண்டு,  பூ வண்டு, கொப்புள வண்டு, அஸ்வினி, குருத்து மற்றும் காய் புழு, தத்துப்பூச்சி மற்றும் தேமல் வைரஸ் நோய் காணப்படுகிறது. 

    தற்சமயம் கத்தரி மற்றும் இதர காய்கறி பயிர்களுக்கு சராசரி விலை கிடைப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை குறைந்த செலவில் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்துவதன் மூலம் செலவினத்தை குறைத்து வருமானத்தை அதிகரிக்கலாம். இந்த பதிவில் வைரஸ் தாக்குதலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

நோய் தாக்குதலின் அறிகுறிகள்: 

  • இலைகளில் பச்சை மற்றும் வெளிர் மஞ்சள் நிற திட்டுக்கள் காணப்படும். 
  • இலைகள் சிதைந்து ஒழுங்கற்ற வடிவிலும், பார்ப்பதற்கு தோல் போன்று காணப்படும். 
  • குருத்துப் பகுதியில் இருந்து வெளியேறும் இளம் இலைகள் சிறுத்து காணப்படும். 
  • இதனால் பயிர்களில் பச்சையத்தின் அளவு குறைந்து, பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும். 
  • பாதிக்கப்பட்ட பயிர்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பூக்கள் மற்றும் காய் பிடிப்பதை காண இயலும்.
  • இந்த தேமல் நச்சுயிரி நோய் அஸ்வினி மூலம் பாதிக்கப்பட்ட செடிகளிலிருந்து மற்ற செடிகளுக்கு பரவுகிறது.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: 

  • ஒரே வயலில் மீண்டும் மீண்டும் கத்தரி சாகுபடி செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • தங்களது பகுதிக்கு ஏற்ற உகந்த ரகத்தினை தேர்வு செய்தல் அல்லது நோய் தொற்று இல்லாத நாட்களை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
  • தேமல் நோயால் பாதிக்கப்பட்ட வயலுக்கு அருகில் மீண்டும் கத்தரி நடவு செய்யாமல் இருக்கலாம்.
  • இந்த வைரஸ் தொற்று கத்தரி, உருளை, வெள்ளரி போன்ற சில பயிர்களில் பிரதானமாக காணப்போவதால், சாகுபடி பயலுக்கு அருகாமையில் இந்த பயிர்கள் இல்லாமல் இருந்தால் நல்லது.
  • வயலை களைகள் இன்றி பராமரிக்க வேண்டும். ஏனெனில் சார் உறிஞ்சும் பூச்சான அஸ்வினி களை செடியில் இருந்து கொண்டு நோயை பரப்பும்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட பயிரை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல், பத்திலை அல்லது ஐந்திலை கசாயம், நீம் அஸ்திரம், அக்னி அஸ்திரம் போன்ற இயற்கை வழியில் தயாரித்த இடுபொருட்களை தொடர்ச்சியாக தெளித்து வரலாம்.
  • உயிரியல் முறையில் அஸ்வினி பூச்சியை கட்டுப்படுத்த 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை Verticillium lecanii திரவத்தை இலை வழியாக தெளித்து வரலாம்.
  • ரசாயன முறையில் அஸ்வினி பூச்சியை கட்டுப்படுத்த பத்து லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி Imidacloprid கலந்து தெளிக்க வேண்டும். அல்லது Fibronil/ Thiamethoxam/ Flonicamid போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை பரிந்துரை செய்யப்படும் அளவில் பயன்படுத்தலாம்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy


நெல் சாகுபடியில் பாக்டீரியா கதிர் கருகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

    நெல் சாகுபடியில் தற்போது நிலவு சாதகமான தட்பவெட்ப சூழ்நிலை காரணமாக நெல் கதிர் அல்லது மணிகளில் நிற மாற்றம் காணப்படுகிறது. இது பாக்டீரியா நோய் தொற்றால் ஏற்படும் ஒரு விதமான அறிகுறி ஆகும். இதனை பாக்டீரியா கதிர் கருகல் நோய் என கூறலாம். இதைப் பற்றி சற்று விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.

    நெல் பயிரில் தற்போது நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக இரண்டு விதமான பாக்டீரியா நோய்கள் காணப்படுகிறது. அதில் ஒன்று பாக்டீரியா இலை கருகல் மற்றொன்று பாக்டீரியா கதிர் கருகல் நோயாகும்.

  • பாக்டீரியா இலை கருகல் நோய் Xanthomonas எனப்படும் பாக்டீரியா நோய் தொற்று காரணமாகவும், கதிர் கருகல் Burkholderia எனப்படும் பாக்டீரியா காரணமாகவும் ஏற்படுகிறது. 
  • பாக்டீரியா இலை கருகல் நோயின் பிரதான அறிகுறி- இலையின் நுனி மற்றும் விளிம்புகளில் இருந்து பச்சை முதல் மஞ்சள் நிற மாற்றம் காணப்படும் பின்பு இந்த பகுதி கருகியது போன்ற காட்சி அளிக்கும். 

நோய் தாக்குதலுக்கான சாதகமான சூழ்நிலை: 

  • மிதமான பகல் வெப்பநிலை 

  • பகல் மற்றும் இரவு நேரத்தில் காற்று ஈரப்பதம் அதிகமாக காணப்படுதல் 
  • நெருங்கிய பயிர் நடவு 
  • அதிக அளவிலான தழைச்சத்து உர பயன்பாடு 
  • மேக மூட்டமான சூழ்நிலை மற்றும் பயிர்கள் நிழற்பாங்கான இடத்தில் வளருதல்.

பாக்டீரியா கதிர் கருகல் நோயின் அறிகுறிகள்:

  • தானியங்களில் மிதமான பழுப்பு நிற மாற்றம் காணப்படும். 
  • ஆரம்பத்தில் வயலின் ஏதேனும் ஒரு பகுதியில் மட்டுமே காணப்படும். 
  • பின்பு தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப வேகமாக பரவும். 
  • நெல் மணியில் நிற மாற்றம் காணப்படுவதால், இதில் பல்வேறு பூஞ்சைகள் இரண்டாம் நிலை நோய் தொற்றாக காணப்படும். 
  • நோய் தொற்று காரணமாக கதிர்கள் அனைத்தும் கருப்பு நிறமாக காணப்படும். 
  • பாதிக்கப்பட்ட கதிர்களில் உள்ள நெல் மணிகள் முழுமையாக பால் பிடிக்காமல் இருப்பதால், நெல் கதிர் செங்குத்தாகவே நிற்கும்.
  • நெல் மணியில் கதிர் நாவாய் பூச்சி சாற்றை உறிஞ்சுவதாலும் நிறமாற்றம் காணப்படும். ஆனால் அவற்றை நெல் கதிரில் உள்ள ஏதேனும் ஒரு சில மணிகளில் மட்டுமே நிறமாற்றம் காணப்படும். 
  • மேலும் கதிர் நாவாய் பூச்சி தாக்கிய வயலில் அதிக அளவு வெண்ணிற நெல் பணிகள் காணப்படும்.
  • சரியாக கவனிக்கப்படவில்லை எனில் இந்த நோய் தொற்று காரணமாக சுமார் 70% வரை மகசூல் இழப்பீடு ஏற்படும் அபாயம் உள்ளது. 
  • இந்த நோய் தாக்கப்பட்ட வயலில் இருந்து பயன்படுத்தப்படும் நெல்லின் முளைப்பு திறன் மிக மிக குறைவாக இருக்கும்.

கட்டுப்படுத்தும் வழிமுறை: 

  • நோய் எதிர்ப்பு திறன் அல்லது நோயை தாங்கி வளரக்கூடிய ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். 
  • நோய் தாக்கப்பட்ட வயலில் இருந்து விதைகளை தேர்வு செய்யாமல் தரமான விதையை தேர்வு செய்ய வேண்டும். 
  • பருவத்திற்கு ஏற்றவாறு போதுமான அளவு பயிர் இடைவெளி அவசியம். 
  • குறிப்பாக பருவ மழை மற்றும் பனிப்பொழிவு காலங்களில் சற்று கூடுதலாக இடைவெளி விடுவது சால சிறந்தது. 
  • நெல் வயலில் இதர பயிர்களின் நிழல் நிழல் விழுகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • அதிக அளவு தழைச்சத்து உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். கூடுதலாக பொட்டாசியம் சத்து இடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும். 

  • வயல் மற்றும் வரப்புகளில் களைகள் இன்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
  • நெல் கதிர் வெளிவரும் நேரத்தில் நோய் தாக்குதல் உள்ளதா என்பதை தொடர்ந்து ஆய்வு செய்து வர வேண்டும்.
  • நெல் கதிர்கள் வெளிவரும்  பேசில்லஸ் சப்டிலிஸ் உயிரியல் திரவத்தை வாரம் ஒரு முறை தெளித்து வருவது மிக சிறந்தது.
  • ரசாயன முறையில் சாகுபடி செய்பவர்கள் காப்பர் ஹைட்ராக்சைடு நோய் தாக்குதலின் ஆரம்ப நிலையில் தெளிக்கலாம்.
  • தீவிரமாக பாதிக்கப்பட்ட வயலில் நோயை கட்டுப்படுத்துவது சற்று கடினமாகும்.

மேலும் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு இணைப்பில் கண்டுள்ள WhatsApp whatsapp குழுவில் இணைந்து பயன்பெறலாம்.
https://chat.whatsapp.com/K6IGcj6Pvfk1dhAo1v1nZy

Recent Posts

Popular Posts